புனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-29) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி

குத்பா - (2020/05/29) 

இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்) 

குத்பா நிகழ்த்தியவர்: கலாநிதி அஷ்ஷைக் மாஹிர் இப்னு ஹமத் அல்முஅய்கலி 

குத்பாவின் தலைப்பு: அல்லாஹ்வின் அருட்கொடைகள் 


இன்றயை குத்பாவிலிருந்து... 

ஆரம்பமாக அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுமாறும் நபிகளாரின் சுன்னாவை கடைப்பிடிக்குமாறும் உபதேசம் செய்தார். 

அல்லாஹ் கூறுகிறான்: மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு தயார் செய்து வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது (நன்மையானது), தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 2:197) 

அனைத்து இடங்களிலும் வாழும் முஸ்லீம்களே பெருநாள் என்பது இஸ்லாத்தின் அடையாளமாகும். உறவுகளையும், அன்பையும் புதுப்பிக்கும் நாளாகும். அல்லாஹ் உங்கள் பெருநாள் தினங்களை மட்டில்லா மகிழ்ச்சியானதாகவும் அதிலே ஈமானையும் அமைதியையும் சாந்தி, சமாதானத்தையும் நல்ல தேகாரோக்கியத்தையும் ஏற்படுத்தி கொரோனா எனும் நோய்த்தொற்றை அகற்றி விடுவானாக. 

நிச்சயமாக அல்லாஹ்வின் அருட்கொடைகள் மட்டிட முடியாததாகும். அவை உள்ரங்கமாகவும் வெளிரங்கமாகவும் காணப்படுகின்றன. உள்ரங்கமான மறைவான சிறிய அருட்கொடைகள் வெளிப்படையான பாரிய அருட்கொடைகளை விடவும் மகத்தானதாக காணப்படுகின்றன. 

அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் அல்லாஹ்வின் அரு(ட் கொடைக)ளை நீங்கள் கணக்கிட்டால், அவற்றை (வரையறை செய்து) நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 16:18) 

நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? (அல்குர்ஆன்: 31:20) 

அடியார்கள் அதனை எண்ணி மட்டிட முடியாமல் இருக்கிறார்கள். அதைவிட அவனுக்கு அதற்காக வேண்டி நன்றி செலுத்தாமல் இருக்கிறார்கள். நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் (உணவுத் தட்டில் இருந்து கையை எடுத்தால்) அதிகமாக, தூய்மையான புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அதில் அவனே தொடராகவும், போதுமானதாகவும் அதை விட்டும் இறைவனை தேவையற்று இருக்க முடியாதவாறும் அருள் புரிந்தான். என்று பிரார்த்திப்பவராக இருந்தார்கள். (புஹாரி: 5458) 

அந்த பிரார்த்தனையின் அரபு வாசகம் 

الحَمْدُ لِلهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ، وَلاَ مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا 

தல்க் இப்னு ஹபீப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்யும் காரியங்களை விட அல்லாஹ் அவர்களுக்கு மேற்கொள்ளும் காரியங்கள் மகத்தானது. நிச்சயமாக அல்லாஹ்வின் அருட்கொடைகள் அடியார்கள் மட்டிட முடியாதவாறு அதிகமானது. என்றாலும் நீங்கள் பாவமீட்சி பெற்றவர்களாக காலைப் பொழுதையும் மாலைப் பொழுதையும் அடைந்து கொள்ளுங்கள். (பைஹகீ) 

நிச்சயமாக மனிதர்கள் கொரோனா நோய்த்தொற்றின் மூலம் அருட்கொடைகளின் மூன்று அடிப்படைகளை உணர்ந்து கொண்டார்கள். அவை இல்லாமல் மனிதன் ஒரு போதும் வாழமுடியாது. 

நபியவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் தான் தூங்கும் விரிப்பில் இருந்து பயமற்று சுகதேகியாக காலைப்பொழுதை அடைந்து அன்றைய நாளின் உணவும் அவரின் கைவசம் இருக்கிறதோ அவருக்கு உலகமே வசப்பட்டுள்ளதை போன்றதாகும். (திர்மிதி: 2346) 

இந்த நபிமொழியில் மனிதர்களில் அதிகமானவர்களிடம் காணப்படும் அருட்கொடைகள் நினைவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதன் பெறுமதியை உணராதவர்களாக இருக்கிறார்கள். 

அருட்கொடைகளின் முதல் அடிப்படை: தன்னை, தன் குடும்பம், தன் நாடு, தன் பொருளாதாரம் பற்றிய அச்சமின்மை. இதனைக் கொண்டுதான் நபியவர்கள் மேலுள்ள ஹதீஸை ஆரம்பித்திருக்கிறார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களும் இதற்காக பிரார்த்தித்திருக்கிறார்கள். 

அல்லாஹ் கூறுகிறான்: (இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் நகரத்தை பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார். (அல்குர்ஆன்: 2:126) 

அல்லாஹ் தன் தூதருக்கும் ஸஹாபாக்களுக்கும் அச்சமற்ற வாழக்கையையும் ஹலாலான உணவுகளையும் வழங்கி அருள் புரிந்தான். 

அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!” (அல்குர்ஆன்: 8:26) 

ஒரு நாடு பாதுகாப்பானதாக இருக்குமானால் அங்குள்ள மக்கள் தன்னிலும் தனது குடும்பம், தனது மார்க்கம், தனது பொருளாதாரம், தனது உடைமைகளில் அச்சமற்று இருப்பார்கள். தான் விரும்பிய இடங்களுக்கு செல்வார்கள். பொருளாதாரத்தை தேடிச்செல்வார்கள். அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்ச மாட்டார்கள். இந்த அருட்கொடையை தந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். 

அருட்கொடைகளின் இரண்டாவது அடிப்படை: தேகாரோக்கியம். இது அல்லாஹ் மனிதர்களுக்கு அளித்த மிகவும் மகத்தான அருட்கொடையாகும். 

நபியவர்கள் கூறினார்கள்: ஷஹாதா கலிமாவுக்குப் பின்னால் தேகாரோக்கியத்தைப் போன்று வேறு எந்த அருட்கொடையும் இல்லை, நீங்கள் அல்லாஹ்விடம் தேகாரோக்கியத்திற்காக வேண்டி பிரார்த்தனை புரியுங்கள். (அஹ்மத்:10) 

எவர் தான் தொடராக தேகாரோக்கியத்துடன் இருக்க விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வை இரகசியத்திலும் பரகசியத்திலும் அஞ்சிக் கொள்ளட்டும். அல்லாஹ்விடம் அவர் தேகாரோக்கியம் வேண்டி பிரார்த்தனை புரிய வேண்டும். 

இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்கு ஏதாவது ஒன்றை எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கேட்டார்கள்: அதற்கு நபியர்கள் அல்லாஹ்விடம் தேகாரோக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று பதிலளித்தார்கள். அதன் பின் சில நாட்கள் கழித்து மீண்டும் நபிகளாரிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதற்கு ஏதாவது ஒன்றை எனக்கு கற்றுத்தாருங்கள் என்று கேட்டார்கள்: அதற்கு நபியவர்கள் அப்பாஸே, அல்லாஹ்வின் தூதரின் சாச்சாவே ஈருலகிலும் தேகாரோக்கியம் வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று நபியவர்கள் பதிலளித்தார்கள். (திர்மிதி: 3514) 

நபியவர்கள் தனது சாச்சாவுக்கு மீண்டும் மீண்டும் இவ்வாறு பிரார்த்திக்குமாறு உபதேசம் செய்வது அதன் முக்கியத்துவத்தையும், அவ்வாறு அதிகமதிகம் பிரார்த்திக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. அவ்வாறு தான் நபியவர்களும் பிரார்த்தனை செய்து தனது நாளை ஆரம்பிப்பார்கள், அதேபோன்று தனது தனது நாளை நிறைவு செய்து கொள்வார்கள். 

இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த துஆவை காலையிலும் மாலையிலும் விடாமல் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள். (அபூதாவூத்: 5074) 

அதன் அரபு வாசகம்: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ، فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي 

அதன் பொருள்: இறைவா நிச்சயமாக நான் உன்னிடத்தில் ஈருலகத்திலும் தேகாரோக்கியத்தை வேண்டுகிறேன். இறைவா நிச்சயமாக நான் உன்னிடத்தில் என்னுடைய மார்க்கத்திலும் உலக வாழ்விலும் என்னுடைய குடும்பத்திலும் பொருளாதாரத்திலும் ஆரோக்கியத்தை வேண்டுகிறேன். 

அருட்கொடைகளின் மூன்றாவது அடைப்படை: ஒரு அடியான் அன்றைய நாளுக்கான உணவு, குடிபானங்களை பெற்றுக்கொள்ளல். நீர் என்பது பிரதான அருட்கொடையாக இருக்கிறது. இந்த அருட்கொடை பற்றி மனிதன் மறுமை நாளில் முதலாவதாக கேள்வி கேட்கப்படுபவான். 

நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக மனிதன் மறுமை நாளில் இந்த அருட்கொடையை பற்றி முதலாவதாக விசாரிக்கப்படுவான். குளிர் நீரினால் உன் தாக்கத்தை தீர்த்து உனது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க வில்லையா? என்று அவனிடம் கேட்கப்படும். (திர்மிதி: 3358) 

உன் நிலைமைகள், எதிர்கால விடயங்கள் சீராக வேண்டுமானால் உனது உலக காரியங்களில் உனது தரத்திற்கு கீழ் உள்ளவனை கவனித்துபார் அல்லாஹ் உனக்கு எவ்வளவு அருள் புரிந்துள்ளான் என்பதை கண்டு கொள்வாய். மார்க்க விடயங்களில் உனக்கு மேல் உள்ளவனை பார். இறைவனுக்கு செய்ய வேண்டிய காரியங்களில் எவ்வளவு பொடுபோக்காக உள்ளாய் என்பதை அறிந்து கொள்வாய். உனது குறைபாடுகளை சீர்செய்துகொள். 

அல்லாஹ் தேகாரோக்கியம் எனும் ஆடையை உனக்கு அணிவித்துள்ளான். உனது குடும்பத்தை அமைதியானதாக ஆக்கி வைத்திருக்கிறான். அன்றைய நாளுக்குரிய உணவை உனக்கு போதுமாக்கித் தந்திருக்கிறான். உனது உள்ளத்தில் அமைதியை எற்படுத்தி இருக்கிறான். இப்படியான அனைத்து அருட்கொடைகளையும் ஒன்றுசேர சிலவேளை அடுத்தவர்களுக்கு அவைகள் கிடைக்காமல் இருக்க உனக்கு அல்லாஹ் தந்திருக்கிறான். எனவே அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து அவன் தடுத்தவற்றில் இருந்து முற்றாக விலகி அவனுக்கு நன்றி செலுத்தக்கூடியவனாக இரு. 

அல்லாஹ் கூறுகிறான்: “தாவூதின் சந்ததியினரே! நன்றி செலுத்துங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்). (அல்குர்ஆன்: 34:13) 

ஈமானிய சகோதரர்களே சிறிது நாட்களுக்கு முன்னால் சங்கையான, மகத்தான மாதம் ரமழானை வழியனுப்பி வைத்தோம். அதன் நாட்கள், இரவுகள் முடிவடைந்து விட்டது. அதன் பக்கங்கள் சுருட்டப்பட்டு விட்டது. யார் அதில் இலாபம் அடைந்தாரோ அவர் தன்னை, தன் உள்ளத்தை பரிசுத்தப்படுத்திக் கொண்டார். அவர் ரமழான் மாதத்திற்குப் பின்னால் நலவுகளை அடைந்து கொள்வார். நிச்சயமாக அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளம் என்னவெனில் அதற்குப் பின்னல் (அமல்) மீண்டும் நலவுகளை அடைந்து கொள்வதாகும். 

சகோதரனே அறிந்துகொள் நிச்சயமாக முகஸ்தூதியும் தற்பெருமையும் நல்லமல்களை அழித்துவிடும். அல்லாஹ்வின் கட்டளைப்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா ஆலயத்தை கட்ட ஆரம்பித்த போது அல்லாஹ் இதனை ஏற்றுக்கொள்வானா என்று பயந்தார்கள். 

அல்லாஹ் கூறுகிறான்: “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்). (அல்குர்ஆன்: 2:127) 

நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் பாவங்கள் செய்யாமல் இருந்தாலும் உங்கள் மீது அதைவிட பெரிய ஒன்றை நான் பயப்படுகிறேன். அதுதான் தற்பெருமை. (ஸஹீஹுல் ஜாமீ: 5303) அதனால்தான் முன்சென்றவர்கள் எல்லாம் இதனை கடுமையாக பயந்தார்கள். இது பற்றி அடுத்தவர்களுக்கு விழிப்பூட்டினார்கள். 

ரமழான் மாதம் சென்று விட்டது. வாழ்வு முழுவதையும் அல்லாஹ் அவனை வழிப்பட்டு நல்லமல் செய்வதற்குரிய வாய்ப்பாக ஆக்கி இருக்கிறான். உபரியான வணக்கங்களை அதிகம் அதிகமாக மேற்கொள்ளுங்கள். நலவான காரியங்களின்பால் போட்டி போடுங்கள். 

நிச்சயமாக நபியவர்கள் கூறினார்கள்: யார் ரமழான் மாதம் நோன்பு நோற்று அதனை தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்கிறாரோ அவர் வருடம் முழுவதும் நோன்பு நோற்றவர் போலாவார். (முஸ்லிம்: 1164) 

எவ்வாறெனில் நிச்சயமாக ஒரு நலவுக்கு பத்து நன்மைகள் கிடைக்கும். ரமழான் மாதம் பத்து மாதத்திற்கு ஒப்பானது. ஆறு நோன்புகள் இரண்டு மாதத்திற்கு ஈடானது. அல்லாஹ்விடத்தில் மொத்தமாக பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அதுபோன்று வாரத்தில் திங்கள், வியாழன் போன்ற நாட்கள், ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீல் நாட்களில் நோன்பு பிடிக்குமாறு வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. 

பர்ளான தொழுகைகளுக்குப் பின் சிறந்த தொழுகை இராத் தொழுகைகளாகும். ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: இராத் தொழுகைகளை விட்டு விட வேண்டாம். நிச்சயமாக நபியவர்கள் அதனை ஒரு போதும் விட்டுவிடவில்லை. அவர்கள் நோயுற்றால் அல்லது சோர்வடைந்தால் அமர்ந்து அதனை தொழுவார்கள். (அபூதாவூத்: 1307) 

நலவின் வழிகள் அதிகம் உள்ளது. வெற்றிக்கான பாதைகள் இலகுவானதாகும். அல்லாஹ்வின் அருள் விசாலமானதாகும். சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உண்டு. யார் தொழுகையாளியாக இருக்கிறாரோ அவர் தொழுகையின் கதவால் அழைக்கப்படுவார். யார் தர்மம் செய்பவராக இருக்கிறாரோ அவர் தர்மத்தின் வாயிலால் அழைக்கப்படுவார். எவர் நோன்பாளியாக இருந்தாரோ அவர் ரய்யான் என்ற கதவால் அழைக்கப்படுவார். 


முற்றும்... 

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget