ரபீஉனில் அவ்வல் மாதம் ஹிஜ்ரி நாட்காட்டியின் படி மூன்றாவது மாதம். இம்மாதத்தில் இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. 1. நபி (ஸல்) அவர்களின் பிறப்பு. 2. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஹிஜ்ரத் பயணம். 3. நபியவர்களின் வபாத்.
இவற்றில் ஏனைய இரு நிகழ்வுகளையும் விட்டுவிட்டு முதல் நிகழ்வாகிய நபியவர்களின் பிறந்த தின நிகழ்வை மாத்திரம் உலகளாவிய மட்டத்தில் விமர்சையாக் கொண்டாடப்படுவதை அவதானிக்கலாம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் என்ற பெயரில் நபி ஈஸா (அலை) அவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது போல் முஸ்லிம்கள் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய பிறந்த தினத்தை மீலாத் என்ற பெயரில் கொண்டாடுகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.
நபியவர்களோ, நபித்தோழர்களோ, அவர்களைத் துயர்ந்தோரோ, முதல் நூற்றாண்டுகளில் வாழ்ந்த அறிஞர்ப் பெருந்தகைகளோ, இமாம்களோ நபியவர்களின் பிறந்த தினத்தைக் கொண்டாடியதற்கான எவ்விதமான சான்றுகளும் கிடைக்காத பட்சத்தில், ஒரு சிலர் நபியவர்கள் பிறந்ததையொட்டி அவர்களது பெரிய தந்தை அபூலஹப் மகிழ்ந்ததாகவும், அதன் பலனாக அவருக்குக்குத் தண்டனை குறைக்கப்பட்டதாகவும் புஹாரியில் இடம்பெற்றுள்ள ஒரு செய்தியில் தொங்கிக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
இச்செய்தி நபியவர்களின் கூற்றா? இது வருடாவருடம் மீலாத் விழா கொண்டாட ஆதாரமாகுமா? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் அபூலஹப், நபியவர்கள் பிறந்த செய்தி கேட்டவுடனே செய்த ஒரு செயலை, வருடாவருடம் மேடை போட்டு மீலாத்விழா கொண்டாட ஆதாரமாகக் கொள்ளலாமா ?
அவன் அதன் நினைவாக வருடாவருடம் நபியவர்கள் பிறந்த தினத்தன்று ஒவ்வோர் அடிமையை விடுவித்திருந்தால் அதனை ஆதாரமாக எடுக்கலாமா? கூடாதா? என்று ஓரளவுக்கு சிந்திக்கலாம். அதுவும் அவன் காபிராகவே வாழ்ந்து, சபிக்கப்பட்டு, காபிராகவே மரணித்தவன் எனும் போது அதுவும் தவிடுபொடியாகின்றது.
பொதுவாக எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் தனது உடன்பிறப்பில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததென்றால் மகிழ்வது இயற்கைதான். அதற்காக அவர் செய்த ஒரு நற்பணியை இஸ்லாத்தில் நன்மை ஈட்டித்தரும் செயலென்று ஒன்றை நிருவ ஆதாரமாகக் கொள்ள முடியாது.
காபிர்களுக்குத் தண்டனை குறைக்கப்படுமா?
பொதுவாக காபிர்களுக்கு ஒரு போதும் தண்டனை குறைக்கப்பட மாட்டாது என பல அல்குர்ஆன் வசனங்களும் நபிமொழிகளும் இடம்பெற்றுள்ளன. "அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது. அவர்கள் அவகாசம் அளிக்கப்படவும் மாட்டார்கள்". (பகரா 162), "(நம்மை) மறுத்தோருக்கு நரக நெருப்பு உள்ளது. அவர்கள் மரணிக்குமாறு முடிவு செய்யப்பட மாட்டாது. (அப்படியாயின்) அவர்கள் மரணித்து விடுவார்கள். அதன் வேதனை அவர்களுக்கு இலேசாக்கப்படவும் மாட்டாது". (பாதிர் 36).
அவர்கள் செய்த நற்செயல்களுக்கும் அல்லாஹ்விடம் எவ்வித மதிப்புமில்லை என்பதை பின்வரும் ஆதாரங்களின் மூலம் அறியலாம்
"அவர்கள் செய்து வந்த செயல்களைக் கவனித்து அவற்றைப் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவோம்". (புர்கான் 23).
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான், "அல்லாஹ்வின் தூதரே! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே! இவை அவருக்கு (மறுமை நாளில்) பயனளிக்குமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அவருக்குப் பயனளிக்காது; அவர் ஒரு நாள் கூட "இறைவா! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக!' என்று கேட்டதேயில்லை'' என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 214)
அபூ தாலிப் விதிவிலக்களிக்கப்பட்டவர் :
மேற்கூறிய பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் காபிர்கள் இவ்வுலகில் செய்த நற்காரியங்கள் அவர்களுக்கு மறுமையில் பயனளிக்க மாட்டாது. அதன் மூலம் அவர்களின் தண்டனைகள் குறைக்கப்படவும் மாட்டாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
எனினும் வேறு வசனங்கள் மூலமோ, ஸஹீஹான ஹதீஸ்கள் மூலமோ சிலர் விதிவிலக்கு அளிக்கப்பட்டால் அதனையும் எற்றுக் கொள்வது அவசியமாகும். அந்த வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்தான் நபியவர்களை சிறு வயது முதல் பராமரித்து, வளர்த்த அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப். அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : நான், "அல்லாஹ்வின் தூதரே! அபூதாலிப் அவர்களுக்கு ஏதேனும் (பிரதி) உபகாரம் செய்தீர்களா? ஏனெனில், தங்களை அவர் பாதுகாப்பவராகவும் தங்களுக்காக (எதிரிகள்மீது) கோபப்படுபவராகவும் இருந்தாரே!'' என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "ஆம்; அவர் இப்போது (கணுக்கால்வரை தீண்டும்) சிறிதளவு நரக நெருப்பிலேயே உள்ளார். நான் இல்லையானால் அவர் நரகின் அடித்தளத் திற்குச் சென்றிருப்பார்'' என்று கூறினார்கள் (முஸ்லிம் 209)
அபூலஹபும் விதிவிலக்களிக்கப் பட்டவனா?
பொதுவாக நாம் சிந்திக்கும் பட்சத்தில் அபூ தாலிபுக்குத் தண்டனை குறைப்பதற்கு நியாயமான ஒரு காரணமுள்ளது. அவர் நபியவர்களை 8வது வயது முதல் 40க்கும் மேற்பட்ட வருடங்கள் பராமரித்து வந்தார். அதற்குரிய பிரதியுபகாரமாக இத்தண்டனைக் குறைப்பை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் இதேபோன்று தண்டனை குறைக்கப்பட அபூலஹப் என்ன செய்தான்? நபியவர்களின் அழைப்புப் பணிக்கு பகிரங்க முட்டுக்கட்டையாக இருந்ததைத் தவிர வேறு என்னதான் செய்தான்? நபியவர்கள் பிறந்த அன்று சந்தோசப் பட்டான், அடிமையை உரிமையிட்டான் என்பதெல்லாம் அவன் காட்டிய பலத்த எதிர்ப்புகளுக்கு ஈடு கொடுக்குமா?
சரி அவ்வாறுதான் விதிவிலக்கப்படுவதென்றால் அது ஸஹீஹான ஆதாரம் மூலம் நிரூபணமானால் அதனையும் நாம் ஏற்கத்தான் வேண்டும். அபூ லஹபின் தண்டனைக் குறைப்புச் சம்பவம் புஹாரியில் இடம்பெற்றுள்ளதே? அப்படியாயின் அவனும் ஆதாரபூர்வமாக விதிவிலக்களிக்கப்பட்டவர் தானே என்று சிந்திக்கலாம். அதனை நபியவர்கள் தான் கூறினார்களா? என்பதனை அறிந்தால் அபூலஹபின் நிலை தெளிவாகும்.
அபூலஹபின் தண்டனைக் குறைப்பு நபியின் கூற்றா?
அபூலஹபுக்கு தண்டனை குறைக்கப்படுகின்றது என்ற செய்தி புஹாரியில் (5101) இலக்கத்தில் பதிவாகியுள்ளது. அதன் அரபு வாசகம் இதோ :
حَدَّثَنَا الحَكَمُ بْنُ نَافِعٍ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ: أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ، أَخْبَرَتْهَا: أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ، فَقَالَ: «أَوَتُحِبِّينَ ذَلِكِ»، فَقُلْتُ: نَعَمْ، لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ، وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ذَلِكِ لاَ يَحِلُّ لِي». قُلْتُ: فَإِنَّا نُحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ بِنْتَ أَبِي سَلَمَةَ؟ قَالَ: «بِنْتَ أُمِّ سَلَمَةَ»، قُلْتُ: نَعَمْ، فَقَالَ: «لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي، إِنَّهَا لاَبْنَةُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ، فَلاَ تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلاَ أَخَوَاتِكُنَّ»،
قَالَ عُرْوَةُ، وثُوَيْبَةُ مَوْلاَةٌ لِأَبِي لَهَبٍ: كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا، فَأَرْضَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ، قَالَ لَهُ: مَاذَا لَقِيتَ؟ قَالَ أَبُو لَهَبٍ: لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ (البخاري 5101 ، مسلم 1449 ، تفرد البخاري بقصة الرؤيا)
பொருள் :
உம்மு ஹபீபா பின்த் அபீ ஸுஃப்யான் (ரலி) கூறுகின்றார்கள் : நான் (என் கணவர்) நபி (ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரியான அபூ ஸுஃப்யானின் மகளை தாங்கள் மணந்துகொள்ளுங்கள்!'' என்று கூறினேன். அதற்கவர்கள், 'இதை நீயே விரும்புகிறாயா?' என்று (வியப்புடன்) கேட்டார்கள். நான், 'ஆம்! (மனைவியென்று) தங்களுக்கு நான் ஒருத்தி மட்டும் இல்லையே! (தங்களுக்குத் துணைவியாகும்) நற்பாக்கியத்தில் என்னுடன் இணைவதற்கு நான் மிகவும் விரும்புபவள் என் சகோதரிதான் என்றேன்.
அதற்கு அவர்கள், 'என்னை அ(வளை மணப்ப)து அனுமதிக்கப்பட்டதன்று'' என்றார்கள். நான் 'தாங்கள் அபூ ஸலமாவின் புதல்வியை மணக்க விரும்புவதாக எங்களுக்குச் சொல்லப்பட்டதே!'' என்று கேட்டேன். '(அதாவது என் துணைவியார்) உம்முஸலமாவிற்கு (முந்தைய கணவன் மூலம்) பிறந்த மகளையா?' என நபியவர்கள் கேட்க, நான் 'ஆம்' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அவள் (-உம்முஸலமாவின் மகள்-) என்னுடைய மடியில் வளர்ப்பு மகளாக இருந்து வருகிறாள். அப்படி) இல்லாவிட்டாலும் கூட, அவளை நான் மணக்க முடியாது. (ஏனெனில்) அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரின் புதல்வியாவாள். எனக்கும் (அவளுடைய தந்தை) அபூ ஸலமாவுக்கும் ஸுவைபா பாலூட்டினார். எனவே, என்னிடம் உங்கள் பெண் மக்களையோ, உங்கள் சகோதரிகளையோ (மணந்துகொள்ளுமாறு) பரிந்துரைக்க வேண்டாம்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) கூறுகின்றார்கள் :
ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூ லஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூ லஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், '(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன?' என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார். (புஹாரி 5101, முஸ்லிம் 1449).
உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களின் மேலதிகமான கூற்று புஹாரியில் மாத்திரமே இடம்பெறுகன்றது.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விடயம் :
1. அபூ லஹபின் தண்டனைக் குறைப்பு நபி (ஸல்) அவர்களின் கூற்றல்ல. மாறாக அது உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களின் மேலதிகமான கூற்று. உர்வா தாபிஈன்களைச் சேர்ந்தவர். அவர் நபியவர்களின் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நேரடியக அறிந்திருக்க முடியாது. எனவே உர்வாவின் மேலதிகமான வார்த்தை தான் யாரிடம் கேட்டேனென்று தெளிவு படுத்தவில்லை. இவ்வகை அறிவிப்பு ஏற்க முடியாத "முர்ஸல்" வகையைச் சேர்ந்ததாகும். புஹாரியில் இடம்பெறும் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்களும், அறிவிப்பாளர் வரிசைத் தொடர் அறுபடாத செய்திகளும் தான் ஆதாரபூர்வமானவை என்பதே இமாம் புஹாரி உட்பட ஏனைய அறிஞர்களின் அபிப்பிராயம். இது அறிவிப்பாளர் வரிசை அறுபட்ட ஒரு தாபிஈயுடைய செய்தி.
2. இவ்வாறான ஒரு செய்தியைக் கூறும் போது நபியவர்களின் ஒரு செய்தி புஹாரியில் இடம்பெறுவதைப் போல் பொதுவாகக் கூறாமல் "உர்வா (ரஹ்) அவர்களின் செய்தி" என்பதைக் குறிப்பிட வேண்டும். அதுதான் நாம் ஹதீஸ்க்கலைக்குச் செய்யும் அமானிதம். ஏனெனில் புஹாரியில் இடம்பெறும் செய்தி என்றால் மக்கள் முதலில் நினைப்பது அது நபியவர்கள் கூறிய செய்தி என்பதாககத் தான்.
3. இச்சம்பவத்தில் அபூ லஹபுக்குத் தண்டனை குறைக்கப்பட்டதாக நபியவர்கள் கூறவில்லை. மாறாக அபூலஹபின் குடும்பத்தில் ஒருவர் கனவு கண்டதாகத் தான் கூறப்பட்டுள்ளது. அது யார் என்றும் புஹாரியில் இடம்பெறவில்லை.
4. அபுல் காஸிம் அஸ்ஸுஹைலி என்பவர் தனது "அர்ரௌழுல் உனுப்" எனும் நூலில் 5/122 அறிவிப்பாளர் வரிசையின்றி : கனவு கண்டவர் அப்பாஸ் (ரலி) என்பதாகவும், அபூ லஹப் மரணித்து ஒரு வருடத்திற்குப் பின் இக்கனவு கண்டதாகவும், ஒவ்வொரு திங்கட்கிழமையும் நபியவர்கள் பிறந்ததையொட்டி ஸுவைபாவை விடுவித்ததால் தனது விரலிடையால் நீர் புகட்டப்படுவதாகவும் இடம்பெற்றுள்ளது.
الروض الأنف ت السلامي (5/ 122)
وَفِي صَحِيحِ الْبُخَارِيّ أَنّ بَعْضَ أَهْلِهِ رَآهُ فِي الْمَنَامِ فِي شَرّ رَحِيبَةٍ وَهِيَ الْحَالَةُ فَقَالَ مَا لَقِيت بَعْدَكُمْ يَعْنِي: رَاحَةً غَيْرَ أَنّي سُقِيت فِي مِثْلِ هَذِهِ بِعِتْقِي ثُوَيْبَةَ، هَكَذَا فِي رِوَايَةِ الْأُصَيْلِيّ عَنْ أَبِي زَيْدٍ وَفِي رِوَايَةِ غَيْرِهِ قَالَ مَا لَقِيت بَعْدَكُمْ رَاحَةً غَيْرَ أَنّي سُقِيت فِي مِثْلِ هَذِهِ وَأَشَارَ إلَى النّقْرَةِ بَيْنَ السّبّابَةِ وَالْإِبْهَامِ بِعِتْقِي ثُوَيْبَةَ، وَفِي غَيْرِ الْبُخَارِيّ أَنّ الّذِي رَآهُ مِنْ أَهْلِهِ هُوَ أَخُوهُ الْعَبّاسُ قَالَ مَكَثْت حَوْلًا بَعْدَ مَوْتِ أَبِي لَهَبٍ لَا أَرَاهُ فِي نَوْمٍ ثُمّ رَأَيْته فِي شَرّ حَالٍ فَقَالَ مَا لَقِيت بَعْدَكُمْ رَاحَةً إلّا أَنّ الْعَذَابَ يُخَفّفُ عَنّي كُلّ يَوْمِ اثْنَيْنِ وَذَلِكَ أَنّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وُلِدَ يَوْمَ الِاثْنَيْنِ وَكَانَتْ ثُوَيْبَةُ قَدْ بَشّرَتْهُ بِمَوْلِدِهِ فَقَالَتْ لَهُ أَشَعَرْت أَنّ آمِنَةَ وَلَدَتْ غُلَامًا لِأَخِيك عَبْدِ اللهِ؟ فَقُلْ لَهَا: اذْهَبِي، فَأَنْتِ حُرّةٌ فَنَفَعَهُ ذَلِكَ وَفِي النّارِ كَمَا نَفَعَ أَخَاهُ أَبَا طَالِبٍ ذَبّهُ عَنْ رَسُولِ اللهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَهُوَ أَهْوَنُ أَهْلِ النّارِ عَذَابًا،
எனவே இது வெறும் கனவு, அது ஆதாரமாகமாட்டதென ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) தனது பத்ஹுல் பாரீ 11/382ல் கூறியுள்ளார்கள்.
5. நபி (ஸல்) அவர்களாகவே ஷஃபான் இறுதியில் ஒருவரின் கனவில் வந்து இன்றிரவு முதல் நோன்பு ஆரம்பம் என்று கூறி, நோன்பு பிடித்தால் அந்நோன்பு செல்லுபடியாகாதென இமாம் நவவீ (ரஹ்) தனது "அல்மஜ்மூஃ ஷரஹுல் முஹzத்தப்" எனும் நூலில் (6/281)ல் கூறியுள்ளார்கள். இது, நபியவர்களைக் கனவு கண்டால். அப்படியாயின் அபூலஹப் கனவில் வந்து சொன்னால்? அதுவும் கனவு கண்ட அப்பாஸ் (ரலி) அதுவரை இஸ்லாத்திற்கே வராத நிலையில்?
6. இச்சம்பவம் நாம் மேற்கூறிய காபிர்களின் நற்செயல்கள் பயனளிக்காது என்பது பற்றிய அல்குர்ஆன் வசனங்கள், நபிமொழிக்கு முரணாக இருக்கின்றது. அறிவிப்பாளர் வரிசையே இல்லாத, அல்லது ஒரு தாபஈயின் முர்ஸல் வகைச் செய்திக்காக இறைவசனங்களையும், ஸஹீஹான நபிமொழிகளையும் புறக்கணிக்கலாமா?
7. புஹாரியில் இடம்பெறும் செய்தியில் நபியவர்கள் பிறந்த தினத்தன்றுதான் ஸுவைபா விடுவிக்கப்பட்டார் என்று கிடையாது. ஹிஜ்ரத்துக்கு சில காலம் முன்னர், அல்லது ஹிஜ்ரதுக்கு பின்பு விடுவிக்கப்பட்டதாகவும் சில அறிவிப்புக்கள் உள்ளன. இதனை இமாம் இப்னு இப்தில் பர், இமாம் அபுல் பரஜ் இப்னுல் ஜௌஸீ, இமாம் இப்னு ஹஜர் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். (இஸ்தீஆப் 1/28, அல்வபா bபிஅஹ்வாலில் முஸ்தபா 1/106, அல் இஸாபாஃ 8/60/ இல : 10970, பத்ஹுல் பாரீ 11/380)
8. சரி, காபிர்களின் நற்செயல்கள் பயனளிக்குமென ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும் இஸ்லாத்தில் அடிமைகளை உரிமையிடுவது வணக்கமா? அல்லது குழந்தை பிறந்தால் மகிழ்வது வணக்கமா? என்று பார்த்தால் அடிமையை உரிமையிடுவது பற்றித்தான் நிறைய சிறப்புக்கள் வந்துள்ளன. குழந்தை பிறந்தால் மகிழ்வது இயல்பான ஒன்று. அதற்காக ஒரு நபியை எதிர்ப்பதையே வாழ்கையாகக் கொண்ட ஒரு காபிருக்குத் தண்டனை குறைக்கப்படுமா? அல்லது இஸ்லாம் தூண்டிய அடிமை உரிமையிட்டதற்காக குறைக்கப்படுமா? எது பொருத்தமானதென உங்களுக்கே புரிந்திருக்கும். மேலும் அபூ லஹப் தனது சகோதரன் மகன் முஹம்மத் என்பதற்காக மகிழ்தானே தவிர, எதிர்காலத்தில் நபியாக அனுப்பப்படவிருக்கின்ற முஹம்மத் பிறந்ததற்காக அல்ல.
சுருக்கம் :
· புஹாரியில் இடம்பெற்றுள்ள அபூலஹபின் தண்டனைக் குறைப்பு சம்பவம் உர்வா (ரஹ்) அவர்களின் செய்தியே தவிர அதாரமாகக் கொள்ள முடியுமான நபியவர்களின் கூற்றல்ல.
· கனவு கண்டது நபியுமல்ல, நபியையுமல்ல. மாறாக அப்பாஸ் (ரலி) என்பதாகத்தான், அதுவும் அவர் இஸ்லாத்தில் இணைய முன்னதாக என்றுதான் கூறப்பட்டுள்ளது. இச்செய்தி கூட அறிவிப்பாளர் வரிசையற்ற ஏற்க முடியாத செய்தி.
· இவ்வாறான ஒரு மிகவும் பலவீனமான, அல்லது தாபிஈயின் செய்தியை நன்மைதரும் செயலென்று ஒன்றை நிரூபிக்க அறவே எடுக்க முடியாது. ஆக, இச்சம்பவத்தில் மீலாத்விழாவுக்கு ஆதாரமில்லை.
அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைபெறச் செய்வானாக.
M.Ahmed (Abbasi, Riyady)
B.A (Hons), M.A Reading
Al-Imam Muhammad Bin Saud Islamic University
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.