பெண்கள் அனந்தரச் சொத்து பற்றிய எதிர்ப்பு வாதங்களுக்கான பதில்கள் (பார்வை 09) - MJM.Hizbullah Anvari (B.Com Reading)

 


பெண்கள் அனந்தரச் சொத்து பற்றிய எதிர்ப்பு வாதங்களுக்கான பதில்கள்

பெண்களுக்கான உலக மாநாட்டின் பரிந்துரைப்படி இஸ்லாம் பெண்களுக்கான உரிமைகளை எவ்விதத்திலும் வழங்கவில்லை என்றே குறிப்பிடுகிறது. பெண்களின் ஆடை குறித்தும், பெண்கள் தொழில் புரிவது குறித்தும், பெண்களின் வெளி நடமாட்டங்கள் குறித்தும் இஸ்லாத்தின் மீது அவதூறைப் பரப்புகிறது. இஸ்லாம் அவர்களுக்கான எவ்வித சுதந்திரத்தையும் வழங்காமல் அடுப்பங்கரையில் மாத்திரம் அடைந்து கிடக்கும் பிறவியாகவே இஸ்லாம் அவர்களை வழிநடாத்துவதாக குற்றம் சுமத்துகின்றனர். அதில் அவர்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று தான் இஸ்லாம் அனந்தரச் சொத்தைப் பிரித்துக்கொடுக்கும் விடயத்தில் நீதத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுமாகும். ஆணையும், பெண்ணையும் சரிவிகிதத்தில் உரிமை விடயத்தில் கண்கானிக்கும் இஸ்லாம் அனந்தர விடயத்தில் கோட்டை விட்டுள்ளது. பெண்களை விட ஆண்களுக்கே சொத்தை அதிகமாக வழங்குகிறது என இஸ்லாத்தின் மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்து இஸ்லாத்தை கேவலப்படுத்தி, இஸ்லாமிய பெண்களை இஸ்லாத்திற்கு எதிராக திருப்பிவிட முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இஸ்லாம் அனந்தரச் சொத்தின் பங்கீடு பற்றி அலசியுள்ள சகலதையும் இவர்கள் கற்றார்களானால் இஸ்லாத்தின் மீது இவ்வாறு பொய்குற்றாச்சாட்டு ஒன்றை கூறியதற்காக தலைகுணிந்து வெட்கப்படுவார்கள்.

அவர்களின் வாதங்களுக்கான பதில்களை பின்வருமாறு முன்வைக்கலாம்:

முதலாவது: அனந்தரச் சொத்தைப் பங்கீடு செய்யும் இஸ்லாமிய சட்டத்திற்கமைவாக ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை பின்வருமாறு நோக்கலாம்.

01. அனந்தரச் சொத்தைப் பெறுபவருக்கும்ஆணுக்கும், பெண்ணுக்கும்-, அனந்தரச் சொத்தை விட்டுச் செல்பவருக்கும்மரணித்தவருக்கும்இடையில் உள்ள சொந்த பந்தத்தின் நெருக்கம் அதிகரித்துச் செல்ல அவர்களுக்கு கிடைக்கும் பங்கின் அளவும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அவ்விருவருக்குமான நெருக்கம் தூரமாகிச் செல்ல அவர்களுக்குக் கிடைக்கும் பங்கின் அளவும் குறைந்துகொண்டே போகும். நெருங்கிய உறவினர்களுக்கு அதிகமாகவும், தூர உறவினர்களுக்கு குறைவாகவும் பங்கை வழங்குவதில் எவ்வித குறையோ, ஏற்றத் தாழ்வோ இடம்பெற வாய்ப்பில்லை. இதுவே நியதி.

02. கால வித்தியாசத்தில் அனந்தரச்சொத்தை பெறுவோரை நோக்கினால், வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்த உறவினரும் (பாட்டன், பாட்டி, முப்பாட்டன், முப்பாட்டி போன்றோர்), தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் உறவினரும் (தாய், தந்தை போன்றோர்), எதிர்காலத்தில் வாழ இருக்கும் உறவினரும் (மகன், மகள் அவர்களின் பிள்ளைகள் போன்றோர்) அனந்தரச் சொத்தைப் பெறுவதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. பெண் எனும் வட்டத்தினுள் இருந்தாலும் மகள் தாயை விட அதிக பங்கை எடுப்பாள். ஆண் எனும் வட்டத்தினுள் இருப்பினும் மகன் தந்தையை விட அதிக பங்கைப் பெறுவான். இவ்வாறான ஏற்றத்தாழ்வுகள் கால வித்தியாசத்தில் ஏற்படுபவையே. அவரவர் வாழ்வாதாரத்திற்குத் தேவையான பிரகாரமே இஸ்லாம் இத்தகைய பாகப்பங்கீட்டை ஏற்படுத்தியுள்ளது. பாட்டி அதிக சொத்துக்களைப் பெற்று வைத்திருப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. அவ்வாறே தாய் அதிக சொத்துக்களை சேர்த்து வைப்பதிலும் எவ்விதப் பயனும் இல்லை. ஏனெனில் சமகாலத்தில் அவர்கள் ஏதோ ஒரு வகையான சொத்தை அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மகள் தான் இங்கு அதிக சொத்தை வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அவள் இன்னும் வாழ்வை ஆரம்பிக்கவில்லை. அப்படி ஆரம்பிக்கும் போது இவளுக்கு அவைகள் தேவைப்படும். இதிலும் எவ்விதக் குறைகளையோ, ஏற்றத் தாழ்வுகளையோ இஸ்லாம் வைக்கவில்லை.

03. நிதிச் சுமையை அடிப்படையாகக் கொண்ட அனந்தரச் சொத்தைப் பெறுவோர். இவர்கள் சொத்துக்களை அதிகம் செலவுசெய்ய வேண்டிய, அழித்துக்கொள்ள வேண்டிய தேவையும் பொறுப்பும் இருப்பதால் இங்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் மத்தியில் பங்கைப் பெறுவதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.  சில சமயங்களில் பெண் பெறும் பங்கை விட இரு மடங்கு பங்கை ஆண் பெற வேண்டுமென்பது இஸ்லாத்தின் கட்டளை. ஏனெனில் ஆண் என்பவன்  நிதிச் சுமையையும், பொருளாதாரச் சுமையையும் தன் மீது சுமந்துகொள்கிறான். திருமணம் முடிக்கும் போது பெண் கேட்கும் மஹர் தொகையை வழங்கிட வேண்டும். திருமணத்தின் பின் பெண்ணின் அனைத்து செலவுகளையும், அவளுக்கான கொடுப்பனவுகளையும் பொறுப்பேற்க வேண்டும். விவாகரத்து சொல்லிவிட்டாலும் அவள் இத்தா இருக்கும் காலத்தில் அவளுக்கான செலவுகளைக் கவனிக்க வேண்டும். ஆணோ, பெண்ணோ தவறுதலாக ஒருவரைக் கொலை செய்துவிட்டால் அதற்கான தியா எனும் நஷ்ட ஈட்டுத் தொகையும் கொலை செய்தவரின் வாரிசுகளில் உள்ள ஆண்களுக்கே சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தனது குடும்பத்துக்காக அதிகம் கஷ்டப்பட்டு உயிர்த்தியாகம் செய்யும் நிலைக்குக் கூட ஆணின் நடப்பு இருக்கிறது. இத்தருணத்தில் பெண் அதிக சொத்தக்களை அனந்தரமாகப் பெற்று எதுவும் செய்யப்போவது கிடையாது. ஆணுக்குரிய நிதிச் சுமைகள் பெண்ணுக்கு இல்லை. ஆகையால் அவளுக்குக் கிடைக்கும் அதிக அனந்தரச் சொத்தை மிதமிஞ்சியதாகக் கருதி இஸ்லாம் அவள் பெரும் பங்கில் இரு மடங்கை ஆணுக்கு வழங்குகிறது. இதிலும் எவ்விதக் குறைகளையோ, ஏற்றத்தாழ்வுகளையோ இஸ்லாம் வைக்கவில்லை.

இரண்டாவது: இஸ்லாம் வரையறுத்துள்ள ஆண்களுக்கான பாகப்பங்கீடுகளையும், பெண்களுக்கான பங்கீடுகளையும் அவரவர் பங்குளின் அடிப்படையில் நாம் கவனித்திட வேண்டும்.

01. நான்கு நிலைகளில் மாத்திரமே ஒரு பெண், ஆண்பெரும் பங்கில் அரைவாசியைப் பெறுவாள்:

, பாகப்பிரிவின் போது இறந்தவரின் மகனும் மகளும் இருத்தல்: அல்லாஹ் கூறுகிறான், இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்” (அல்குர்ஆன் 04:11)

. பாகப்பிரிவின் போது இறந்தவரின் பிள்ளைகளோ, கணவனோ, மனைவியோ இன்றி தாயும், தந்தையும் இருத்தல்:அவருக்குச் சந்ததி இல்லாவிட்டால் அவர் விட்டுச் சென்றதற்குப் பெற்றோர் இருவரும் வாரிசாவார்கள். அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் உண்டு.” (அல்குர்ஆன் 04:11).

. பாகப்பிரிவின் போது இறந்தவரின் ஒன்றுவிட்ட சகோதரிகள் அல்லது தந்தைவழிச் சகோதரிகளோடு, ஒன்றுவிட்ட சகோதரன் அல்லது தநதைவழிச் சகோதரன் இருத்தல்:ஆண்களும், பெண்களுமாக உடன் பிறப்புக்கள் இருந்தால் இரண்டு பெண்களுக்குரிய பங்கு ஓர் ஆணுக்கு என்ற விகிதத்தில் உண்டு.” (அல்குர்ஆன் 04:176).

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு மனைவியோ, அல்லது கணவனோ இருத்தல்: “உங்கள் மனைவியருக்குக் குழந்தை இல்லாவிட்டால் அவர்கள் விட்டுச் சென்றதில் பாதி உங்களுக்கு உண்டு. அவர்களுக்குக் குழந்தை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்களுக்கு உண்டு. அவர்கள் செய்த மரண சாசனம், கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பிறகே (பாகம் பிரிக்க வேண்டும்). உங்களுக்குக் குழந்தை இல்லாவிட்டால் நீங்கள் விட்டுச் சென்றதில் கால் பாகம் உங்கள் மனைவியருக்கு உண்டு. உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் அவர்களுக்கு உண்டு.” (அல்குர்ஆன் 04:12)

02. பின்வரும் நான்கு நிலைகளில் ஒரு பெண், ஆணுக்கு சரிசமமான பங்குகளைப் பெறுவாள்:

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு ஆண்பிள்ளைகளுடன் தாய், தந்தை இருத்தல்:அவருக்குச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு.” (அல்குர்ஆன் 04:11).

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு தாய்வழிச் சகோதரர்களும், தாய்வழிச் சகோதரிகளும் இருத்தல்:தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும்” (அல்குர்ஆன் 04:12).

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு கணவனும், உடன் பிறந்த சகோதரி, அல்லது தந்தைவழிச் சகோதரி இருத்தல். இந்நிலையில் கணவனுக்கும், சகோதரிக்கும் சொத்தில் அரைவாசி சரிசமமாக கிடைக்கும்.

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு இரு பெண்பிள்ளைகளும், ஒரு சகோதரனும் இருத்தல். இந்நிலையில் இரு பெண்பிள்ளைகளுக்கும் மூன்றில் இரு பங்கும், மீதமாக உள்ள ஒரு பங்கு சகோதரனுக்கும் கிடைக்கும்.

03. அதிகமான நிலைகளில் பெண் ஆண்களை விட அதிக பங்குகளைப் பெறுவாள். அவற்றில் சில வருமாறு:

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு ஒரு பெண்பிள்ளை, தாய், தந்தை இருத்தல். இந்நிலையில் பெண்பிள்ளை சொத்தில் அரைவாசியும், தாய் ஆறில் ஒரு பங்கையும், தந்தை எஞ்சியதையும் பெறுவார். இங்கு மகள் தந்தையை விட அதிகமான பங்கைப் பெறுகிறாள்.

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு ஒரு பெண்பிள்ளை, கணவன், தந்தை இருத்தல், இந்நிலையில் பெண்பிள்ளை சொத்தில் அரைவாசிப் பங்கையும், நான்கில் ஒரு பகுதியை கணவனும், எஞ்சிய பகுதியை தந்தையும் பெறுவர். இங்கு மகள் தந்தையை விடவும், கணவனை விடவும் அதிக பங்கைப் பெறுகிறாள்.

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு ஒரு மகள், மகனின் மகள், தாய், தந்தை இருத்தல். இந்நிலையில் மகள் சொத்தில் அரைவாசிப் பங்கையும், ஆறில் ஒரு பகுதியை மகனின் மகளும், மூன்றில் இரு பகுதியை தாயும், எஞ்சியவற்றை தந்தையும் பெறுவார்கள்.

04. இன்னும் பல நிலைகளில் ஆண்களின்றி பெண்கள் மாத்திரமே சொத்துக்களைப் பெறுவர். அந்நிலைகளில் சில வருமாறு:

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு ஒரு மகள், உடன் பிறந்த சகோதரி, தந்தைவழிச் சகோதரன் இருத்தல். இந்நிலையில் மகள் சொத்தின் அரைவாசிப் பங்கையும், உடன் பிறந்த சகோதரி எஞ்சிய அரைவாசிப் பங்கையும் பெறுவர். தந்தைவழிச் சகோதரனுக்கு இதன் போது எப் பங்கும் கிடைக்காது.

. பாகப்பிரிவின் போது இறந்தவருக்கு மகள், உடன் பிறந்த சகோதரி, தந்தைவழிச் சகோதரன், தாய்வழிச் சகோதரன் இருத்தல். இந்நிலையில் மகள் சொத்தின் அரைவாசிப் பங்கையும், சகோதரி எஞ்சிய அரைவாசிப் பங்கையும் பெறுவர். இதன் போது மகனுக்கும், சகோதரர்களுக்கும் எந்தப் பங்கும் கிடைக்காது.

. பாகப்பிரிவன் போது இறந்தவருக்கு மகள், உடன் பிறந்த சகோதரிகள், சாச்சா (தந்தையின் சகோதரன்) இருத்தல். இந்நிலையில் மகள் சொத்தின் அரைவாசிப் பங்கையும், உடன் பிறந்த சகோதரிகள் எஞ்சிய பங்கையும் பெறுவர். சாச்சாவுக்கு இதன் போது எப் பங்கும் கிடைக்காது.

இது போல் நிறைய உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். நாம் மேலே பார்த்த வரைக்கும் நான்கு நிலைகளில் ஒரு நிலையில் மாத்திரமே பெண்கள் ஆண்களை விட குறைவாக பங்குகளைப் பெறுகின்றனர். மற்ற எல்லா நிலைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு சமமான பங்குளையும், அல்லது ஆண்களை விட அதிகமான பங்குகளையுமே பெறுகின்றனர்.

மேற்கத்தேயர்கள் குறிப்பிடுவது போல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிசமமான பங்குகள் தான் வழங்க வேண்டும் எனும் கோரிக்கமைவாக நோக்கினால் குடும்ப உறவினர்களுக்கு மத்தியில் நெருங்கியவர்கள், தூரமானவர்கள் எனும் பிரச்சினை எழும் அதன் போது அனைவரும் சமமான பங்குகளைப் பெற வேண்டுமென கோஷமிட்டால் குடும்பத்தினர்களுக்கு மத்தியில் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டி ஏற்படும்.

அதே போல் காலவித்தியாசத்தையும் கவனித்தால் சொத்துக்களுக்கு தேவையேற்படாதவர்கள் அதிக சொத்துக்களை வைத்துக்கொள்ளும் நிலை காணப்படும். இறுதியில் சொத்துக்களுக்கு உரிமைகொண்டாட யாரும் இல்லாத நிலை ஏற்படும் போது அவை வங்கிகளுக்கோ, அல்லது அரசாங்கத்திற்கோ சொந்தமாகிவிடும். இவ்வாறான பிரச்சினைகள் நாம் தற்போதும் கூட சமூகத்தில் கண்டு வருகிறோம். சொத்துக்கள் ஒரு இடத்தில் முடங்கிக் கிடப்பதை விடவும் புழக்கத்தில் இருந்தால் பொருளாதார ரீதியாக அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது ஊர்ஜிதமான உண்மையாகும். ஆகவே அவை வளர்ந்து வரும் தலை முறைக்கு வழங்குவதே நடைமுறையில் சாத்தியமானதாக இருக்கிறது.

அவ்வாறே அதிக கஷ்டங்களுக்கும், பொருளாதார ஆபத்துக்களுக்கும், உயிர் இழப்பிற்கும் ஆளாகும் ஆண்களை விடவும், எவ்வித கஷ்டங்களையும் அனுபவிக்காத பெண்களுக்கு அதிக சொத்துக்கள் கிடைக்கும் போது குடும்பத்திலும், சமூகத்திலும் பாரிய பிரச்சினைகள் தோன்றி, பெண் வர்க்கத்தை ஒழித்திட வேண்டும் எனும் கோஷம் எழும். இதன் போது நவீன உலகு, திரும்பவும் சமூகரீதியாக பின்னடைவிற்குச் சென்று காலப்போக்கில் முன்சென்ற சமூகத்துப் பெண்களுக்கு ஏற்பட்ட நிலைகள் தோன்ற ஆரம்பித்து விடும். இன்றைய சூழ்நிலையில் தோன்றியிருக்கும் பெண்ணிலை வாதத்தை நோக்குகின்ற போது பெண்கள் சமூகம் மீண்டும் அவ்வாறானதோர் நிலைக்கு சென்றுவிடுவார்களோ எனும் அச்சம் எழுகின்றது.

இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு, இப்பிரச்சினைகள் இறந்த காலத்தில் மாத்திரமில்லாமல் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் உட்பட உலகம் அழியும் வரைக்கும் ஏற்படக் கூடாது எனும் நோக்கில் பெண் சமூகத்தையும், ஆண் சமூகத்தையும் சரிசமமான தராசு கொண்டு இஸ்லாம் நோக்குகிறது. மனிதனால் இயற்றப்படுகின்ற சட்டங்களில் காலத்தின் போக்கிற்கு ஏற்றவாறு தவறுகள் ஏற்படுகின்றன. ஆனால் அல்லாஹ்வால் இயற்றப்டட சட்டங்கள் கால ஓட்டத்தாலும் அழியாது. மனித சமூகத்திற்கும் கேடுவிளைவிக்காது.


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget