ரமழான் கற்றுத் தரும் நிர்வாக கட்டமைப்புத் திறன் - MJM. Hizbullah anvari, B.com reading

இஸ்லாமிய மார்க்கமானது முஸ்லிம்களுக்கு ஆண்மீகம், பொருளாதாரம், அரசியல், சமூகவியல், சுகாதாரம் போன்ற துறைகளில் அதீத வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. அதன் கட்டளைகள் சிறந்த பண்பாடும், கலாச்சாரமும் கொண்ட ஓர் வர்க்கத்தை உருவாக்கவும், அதன் விலக்கல்கள் சிறந்த பண்பாடுகள், கலாச்சாரம் போன்றவற்றுக்கு வழிகாட்டவும் உதவியாய் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அது எமக்கு கடமையாக்கியிருக்கும் வணக்க வழிபாடுகளில் எமக்கான உளவியல் வழிகாட்டல்களை வழங்குவதோடு, இவ்வுலகில் நாம் தனியான ஓர் காற்தடத்தைப் பதிப்பதற்கான நிர்வாக கட்டமைப்புத் திறனையும் எமக்குக் கற்றுத் தருகிறது.

ரமழான் மாதத்தை அடைந்துள்ள நாம் இஸ்லாத்தின் நான்காவது கடமையான நோன்பு பற்றியும், அதனால் எமக்குக் கிடைக்கப் பெறும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக ரமழான் மாத நோன்பு எமக்குக் கற்றுத் தரும் நிர்வாக கட்டமைப்பு பற்றியும், அதற்காக எம்மை எவ்வாறு தயார் செய்கிறது என்பது பற்றியும் அறிந்திருப்பது காலத்தின் தேவையாகும். இம் மாதத்தில் எமக்குக் கிடைக்கும் நன்மைகள் இவ்வுலகில் வாழ்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதோடு, மறுமையில் அல்பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழையவும் உதவி புரிகிறது. அதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1. தீர்மானமும், சுய விருப்பும் (Determination):

ஒரு முஸ்லிமின் நாளாந்த வாழ்வின் அட்டவணை ரமழான் மாதத்தில் சற்று மாற்றமடைகிறது. இதன் போது சிலர் கடினத்தை உணர்வார்கள். ரமழான் மாத அட்டவணையை நாம் சுய விருப்புடன் அமைத்துக்கொள்ள தீர்மானிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ரமழானை விட சிறந்த ஓர் மாதம் முஸ்லிம்களுக்கு ஏற்படாது. ரமழானை விட தீய மாதம் நயவஞ்சகர்களுக்கு ஏற்படாது. இதில் முஃமின்கள் வணக்க வழிபாட்டிற்காக தம்மை பலப்படுத்திக் கொள்ளும் ஓர் சந்தர்ப்பமாக அதை ஆக்கிக் கொள்வார்கள். நயவஞ்சகர்கள்  மக்களை திசை திருப்புவதற்கான சந்தரப்பமாக அதை ஆக்கிக் கொள்வார்கள். இது முஃமின்களுக்கு அருளாகவும், நயவஞ்சகர்களுக்கு தண்டனையாகவும் இருக்கும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்னத் அஹ்மத் 16/185).

எமக்கு சுய விருப்பம் ஏற்படுவதற்காகவும், ரமழானின் அட்டவணை பற்றிய தீர்மானத்தைப் பெறவும் ஷஃபான் மாதத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் கூறுகிறது.

ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், '(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பை விட்டுவிடுவார்கள்! ரமழானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை!' (நூல்: புஹாரி 1969).

நாம் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அது முதலில் எமது தீர்மானத்தையும், சுய விருப்பத்தையும் பெற வேண்டும். அப்போதே அதன் முழுப் பயனையும் அடைய முடியும் என இதன் மூலம் எமக்கு இஸ்லாம் வழிகாட்டுகிறது.

2. நம்பிக்கையும், மன உறுதியும் (Confidence):

ரமழானின் ஆரம்ப நாட்களில் இருந்து இறுதி நாள் வரைக்கும் நோன்பை நோற்று வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் செயற்படுமாறு இஸ்லாம் கூறுகிறது. ஒரு நிமிடத்தின் வணக்கம் தவறினால் அடுத்த நிமிட வணக்கம், ஒரு நாள் வணக்கம் தவறிவிட்டால் அடுத்த நாள் வணக்கம், முதல் பத்து நாட்களின் வணக்கம் தவறிவிட்டால் அடுத்த இரு பத்து நாட்கள் என எமது வணக்கத்தை நாம் நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் எடுத்துச் செல்ல வேண்டும். தவறியதற்காக நிராசை அடைந்துவிடக் கூடாது.

ஏனெனில் ரமழானின் ஆரம்ப நாளில் இருந்து இறுதி நாள் வரைக்குமான ஒவ்வொரு நாளிலும் சுவனத்தின் வாயில்கள் திறந்தே இருக்கும். நரகின் வாயில்கள் மூடப்பட்டே இருக்கும். ஷைத்தான்கள் விலங்கிடப்பட்டே இருப்பார்கள். பாவமன்னிப்பிற்கான சந்தர்ப்பமும் இருந்து கொண்டே இருக்கும். லைலதுல் கத்ர் எனும் மகத்தான இரவு எமக்குத் தவறிய அனைத்தையும் பன்மடங்காக கொண்டு வந்து விடும். இவை அனைத்தும் எமக்கான உந்துதல் சக்தியாக இருப்பதால் நாம் எப்போதும் நிராசை அடையாமல் இருக்க முடியும்.

நிராசை இன்றி பயணிக்கும் போதே ரமழானின் கால எல்லையை சரிவர பயன்படுத்த வேண்டுமென்ற ஆர்வமும், ஆவலும் எமக்கு தோன்றும்.
நாம் எமக்காக ஏற்படுத்திக் கொண்ட குறிக்கோலை அடைய முற்படும் போது எத்தகைய பிரச்சனைகள் எதிரில் தோன்றினாலும் நிராசையடையாது நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் நகர்ந்து செல்ல வேண்டும் எனவும், குறிக்கோலினால் கிடைக்கும் அடைவுகளின் பலன்களை உணர்ந்து, அவற்றை உந்து சக்தியாக மாற்றி, இறுதி வரை பயணிக்க வேண்டும் எனவும் இது எமக்கு வழிகாட்டுகிறது.

3. கால எல்லை (Period):

அல்லாஹ் கூறுகிறான், இன்னும் ஃபஜ்ரு நேரம் என்ற வெள்ளை நூல், (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள் பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்” (அல்குர்ஆன் 02:187).

மேற்குறிப்பிட்ட வசனம் நோன்பு இருக்க வேண்டிய ஒரு நாள் பொழுதின் கால எல்லையைக் குறிக்கிறது.

அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், 'நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள்!' என்று ஸைத் இப்னு ஸாபித் (ரழி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!' என்று பதிலளித்தார். (நூல்: புஹாரி 1921).

இவ் ஹதீஸ் ஸஹ்ர் செய்வதை ஃபஜ்ர் தொழுகையின் அதான் வரை பிற்படுத்துமாறு குறிப்பிடுகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!' (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரழி), நூல்: புஹாரி 1957, முஸ்லிம் 1098).

இவ் ஹதீஸ் நோன்பு திறப்பதை மஃரிப் தொழுகையின் அதான் நிறைவுபெரும் வரை காத்திருக்காமல், அதானுடனே துரிதமாக செய்யுமாறு குறிப்பிடுகிறது.

அல்லாஹ் கூறுகிறான், நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது. கணக்கிடப்பட்ட சில தினங்களில் (அது நிறைவேற்றப்பட வேண்டியதாகும்)” (அல்குர்ஆன் 02:185-186).

மேற்குறிப்பிட்ட வசனம் ரமழான் மாத நோன்பை -விதிவிலக்கானவர்களைத் தவிர- வேறு யாரும், வேறெந்த தினங்களிலும் நோற்க முடியாது என்பதையும், ரமழான் மாதத்தில் மாத்திரம் அவற்றை நோற்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது.

மேற்கூறப்பட்ட செய்திகள் அனைத்தையும் அவதானிக்கும் போது நோன்பு நோற்பதையும், திறப்பதையும் அதிகாலை, இரவின் ஆரம்பம் ஆகிய அதான்களை மையமாக வைத்து செயற்படுமாறு இஸ்லாம் குறிப்பிடுகிறது. அவற்றில் ஏதாவதொன்றில் முன் பின் ஆகினாலும் நோன்பிற்குரிய பயன் கிடைக்காது எனவும், நோன்பு முறிந்து விடும் எனவும் இஸ்லாம் எச்சரித்துள்ளது. எனவே குறித்த வேளையை குறித்த நேரத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்ற பயிற்சியை எமக்கு இஸ்லாம் இதன் மூலம் வழங்குகிறது.

4. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளல் (Opportunities):

ரமழான் மாதம் என்பது எமக்குக் கிடைக்கும் அரிய சந்தர்ப்பங்களில் ஒன்றாகும். அதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. பாவங்கள் அழிக்கப்படுகின்றன. ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு எமது நன்மைகளை பன்மடங்காக மாற்றிவிடுகிறது. எனவே இதில் நாம் வணக்க வழிபாடுகளை அதிகமாக செய்து, ஷைத்தானின் சதி வலைகளில் சிக்கிவிடாமல், நரகிலிருந்து பாதுகாப்புப் பெற்று, சுவனத்தில் நுழைவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு முஸ்லிம் செயற்படாவிட்டால் நன்மைகளை சம்பாதித்துக் கொள்ள தெரியாத ஓர் முட்டாளாகவே அவன் கருதப்படுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் ரமழான் மாதத்தை அடைந்து, பாவமன்னிப்பு பெறாமல் அம்மாதத்தைக் கடக்கிறாரோ அவர் நாசமாகட்டும். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி 3454, அஹ்மத் 7444).

வாழ்வில் இருக்கும் குறிப்பிட்ட சில கால எல்லைகளின் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, அவற்றின் மூலம் எமக்குக் கிடைக்கும் அதிகபட்ச நன்மைகளைப் பெற்று, வெற்றிப் பாதையை நோக்கி நகர்வதற்கான அடித்தளத்தை இடும் பயிற்சியை இதன் மூலம் இஸ்லாம் எமக்கு வழங்குகிறது.

5. முடிவெடுத்தல் (Decision):

ஒரு முஸ்லிமின் நோன்பு செல்லுபடியாகுமா? செல்லுபடியாகாதா? என்பதை அவன் எடுக்கும் முடிவுகளே தீர்மானிக்கின்றன. நோன்பிருக்க வேண்டும் என்பதை மனதால் எண்ணி, குறிப்பிட்ட கால எல்லைக்குள் நோன்பை முறிக்கும் காரியங்களில் ஈடுபடாமல் இருந்து, நன்மைகளைப் பெற்றிட வேண்டும் என்பதை இரவிலே முடிவு செய்து விட வேண்டுமென இஸ்லாம் கூறுகிறது. அவ்வாறு இரவில் முடிவு செய்யாமல் நோற்கப்படும் ரமழான் மாத நோன்பு செல்லுபடியாகாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பிருக்கும் முடிவை இரவில் ஏற்படுத்திக் கொள்ளாதவருக்கு நோன்பு கிடையாது”. (அறிவிப்பவர்: ஹப்ஸா (ரழி), நூல்: திர்மிதி 730, நஸாஈ 2334).
ஒரு முஸ்லிம் சிறந்த புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை, சரியான எண்ணம் போன்றவற்றால் அலங்கரிப்பட்டவராக இருக்க வேண்டும். தான் எந்த காரியத்தை செய்ய நினைத்தாலும் அதற்கான சரியான முடிவை தெளிவாகவும், எவ்வித தடுமாற்றமும் இன்றி எடுக்கும் திறன் அவரிடம் இருக்க வேண்டும். முடிவு எடுக்க தாமதித்தாலோ, முடிவு எடுக்காமல் இருந்தாலோ அவருக்கு கிடைக்க இருக்கும் பயன்கள் அவரை விட்டும் நீங்கி, அவர் தோல்வியை சந்தித்தவராக மாறிவிடுவார் எனும் பயிற்சியை இதன் மூலம் இஸ்லாம் வழங்குகிறது.

6. கூட்டாக செயற்படல் (Teamwork):

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே மாதத்தில் கடமையான நோன்பை நோற்கின்றனர். ஒரே நேர இடைவெளியில் நோன்பை நோற்று, விடுகின்றனர். இரவின் ஆரம்பப்பகுதி, இரவின் இறுதிப் பகுதி என ஒரே நேரத்தில் இரவு வணக்கங்களில் ஈடுபடுகின்றனர். இது ஓர் வணக்கத்தில் அனைவரும் கூட்டு சேர்வதன் ஒற்றுமைத் தன்மையைக் குறிக்கிறது.

அல்லாஹ் கூறுகிறான், நிச்சயமாக உங்களது இந்தச் சமூகம் ஒரே சமூகம்தான். நான்தான் உங்களது இரட்சகன். என்னையே நீங்கள் வணங்குங்கள்” (அல்குர்ஆன் 21:92).

கூட்டாக சேர்வதினதும், கூட்டாக சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதினதும் அவசியத்தை எமக்கு இஸ்லாம் இதன் மூலம் தெளிவுபடுத்துகிறது. ஒரே இறைவனை முன்னிருத்தி, அவன் விதியாக்கிய கட்டளைகளை ஒரே விதமாக அனைவரும் சேர்ந்து அமுல்படுத்தும் செயற்திறன் எம்மில் பலத்தையும், திடஉறுதியையும் ஏற்படுத்தும் என்பதை ரமழானில் எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

எனவே நாமும் எம் வாழ்வில் பொருளாதார, அரசியல் போன்ற பலமிக்க துறைகளில் பலமாகவும், வெற்றிக்குரியவர்களாகவும் இருக்க வேண்டுமானால் பெரிதாக எதை செய்ய நினைத்தாலும் அதற்கான குழு செயற்பாட்டில் ஈடுபட்டு, அனைவரையும் ஒரு முகப்படுத்தும் வேலைத்திட்டத்தைக் கையாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டலை இது எமக்கு வழங்குகிறது.

7. பரிபூரணம் (Perfection & Quality):

ஒரு முஸ்லிம் நோன்பிருக்கும் போது தனது நோன்பின் தரத்தைப் பாதுகாக்க அதிக போராட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. கெட்ட வார்த்தைகள் பேசுவதை விட்டும் நாவைப் பாதுகாக்க வேண்டும். பிறருக்கு அநியாயம் செய்யாமல் இருக்க வேண்டும். வுழூ செய்யும் போது கூட வாயில் உள்ள நீர் உள்ளே சென்றுவிடாமல் அவதானமாக இருக்க வேண்டும். சமையலின் சுவையை பரீட்சிக்கும் போது கூட உமிழ் நீர் உள்ளே சென்று விடாமல் இருப்பதில் கரிசனையாய் இருக்க வேண்டும். அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சி இவ்வாறு செயற்படுவதால் இவை அனைத்தும் ஒருவரின் நோன்பின் தரத்தை பாதுகாத்து, அதை பரிபூரணப்படுத்துகிறது.

அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள், 'நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும் பானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகிறார்' (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 7492, முஸ்லிம் 1151).

பிறருக்காகவும், சுயநலத்திற்காகவும், வேண்டா வெறுப்போடும் செய்யப்படும் எந்த செயலிலும் பரிபூரணத்தைக் காண முடியாது. தூய எண்ணத்துடன் செய்யப்படும் செயற்திட்டங்களே தரம் மிக்கதாகவும், பூரணத்துவம் பெற்றதாகவும் இருக்கும். எனவே நாம் எப்போதும் எமது செயற்திட்டங்களின் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனவும், அது பரிபூரணத்தை அடைய வேண்டுமெனவும் இஸ்லாம் எமக்கு வழிகாட்டுகிறது.

8. தனித்துவம் (Excellence & Individuality):

இஸ்லாம் எமக்கு கடமையாக்கியுள்ள அனைத்து வணக்கங்களும் ஏனைய மார்க்கங்கள், மதங்கள், சம்பிரதாயங்கள், கலாச்சாரங்கள், நெறிமுறைகள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது. இதன் மூலம் இஸ்லாத்தை ஓர் தனித்துவமான மார்க்கமாக அல்லாஹ் பிரகடனப்படுத்தியுள்ளான். நோன்பும் அவ்வாறான ஓர் தனித்துவமான வணக்கமாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், எமது நோன்பிற்கும், வேதம் கொடுக்கப்பட்டோரின் நோற்பிற்குமான வித்தியாசம் ஸஹ்ர் நேரத்தில் சாப்பிடுவதாகும். (யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஸஹ்ர் நேரத்தில் சாப்பிடமாட்டார்கள்). (அறிவிப்பவர்: அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி), நூல்: முஸ்லிம் 1096).

மேலும் கூறினார்கள், நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்! ஏனெனில் யூதர்களும், கிறிஸ்தவர்களுமே அதை பிற்படுத்துவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுத் தர்ஹீப் 1075).

நாம் செய்யும் அனைத்து செயற்பாடுகளிலும் அனைவரும் வியந்து பார்க்கும் அளவுக்கும், அவசியம் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கும் யூத, கிறிஸ்தவர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்து, எமக்கான ஓர் தனித்துவத்தையும், சிறப்பம்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறு இஸ்லாம் எமக்கு கற்றுத் தருகிறது.

9. முன்னுரிமை வழங்கல் (Prioritization):

ஃபஜ்ரு அதான் கூறக் கேட்டால் உண்ணுவதை நிறுத்திக்கொள்வதே இஸ்லாமிய சட்டமாகும். ஆனால் ஒருவர் அதான் சொல்ல ஆரம்பித்த போதும் சாப்பிட்டு முடியாவிட்டால் அதான் கூறி முடியும் வரை சாப்பாட்டிற்கு முன்னுரிமை வழங்குவதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஒருவரின் கையில் உணவுத் தட்டு (இருந்து, அதில் சாப்பிட்டுக் கொண்டு) இருக்கும் போது அதான் ஒலிப்பதைக் கேட்டால் தன் தேவையை நிறைவு செய்யும் வரை அதை விட்டு விடக் கூடாது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: அஹ்மத் 10637, அபூதாவுத் 2350).

அவ்வாறே நோன்பு திறந்ததும் மஃரிப் தொழுகையை நிறைவேற்றுவது இஸ்லாமிய சட்டமாகும். மஃரிப் தொழுகைக்கு முன் இரவு உணவு தயாரானால் மஃரிப் தொழுகையை விட இரவு உணவை முற்படுத்துவதற்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நோன்பாளியாக இருக்கும் போதே (மஃரிப்) தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை உண்ணுங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி), நூல்: இப்னு ஹிப்பான் 2068).

நாம் ஓர் முடிவை எடுத்து, அதை அமுல்படுத்தத் தயார் நிலையில் இருக்கும் போது, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அதில் மாற்றங்கள் இடம்பெறுமானால் எதனை முற்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் திறனுக்கான வழிகாட்டலை இதன் மூலம் இஸ்லாம் எமக்கு வழங்குகிறது.

10. நிறைவு (Achievement):

ரமழான் மாத ஆரம்பத்தில் ஆரம்பமான ஒருவரது வணக்க வழிபாடுகளுக்கான செயற்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து, நாட்கள் கடந்து, முதல் பத்தையும் கடந்து, லைலதுல் கத்ர் இரவையும் கடந்து அதன் இறுதி தினத்தை அடையும் போது ஒரு முஸ்லிம் குறுகிய காலத்திற்குள் அதிக நன்மைகளை செய்த மனதிருப்திக்கு ஆலாகிவிடுவான். அப்போது அவன் வாழ்நாளில் இது வரை அடைந்திராத மன திருப்தியை அடைந்திடுவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 1904, முஸ்லிம் 1151).

தான் ஆரம்பித்த செயற்திட்டம் வெற்றியடைந்த பெருமை ஒருவருக்கு ஏற்படுவதை இதன் மூலம் எம்மால் உணர முடிகிறது.
ஒரு மாத காலத்தில் நாம் பெரும் ஆண்மீகப் பயிற்சியானது ஏனைய பதினொரு மாதங்களுக்குமான ஓர் நிர்வாக கட்டமைப்பை எமக்குள் தோற்றுவிக்கிறது.

ஓர் செயற்திட்டத்தில் எமக்கான விருப்பத்தை அளந்து கொள்ளும் முறை, அச்செயற்திட்டத்திற்கான கால எல்லையை வகுத்துக் கொள்ளும் முறை, அதன் மீதான எமது நம்பிக்கையின் பெருமானத்தை அறியும் முறை, அதை செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பெறல் அல்லது அமைத்துக்கொள்ளல் ஆகிய முறை, செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சரியான முடிவுகளை எடுக்கும் முறை, அதை இயலுமான வரை கூட்டாகச் செயற்படுத்துவதற்காக திட்டமிடும் முறை, செய்யும் செயற்பாடுகளை பரிபூரணத்துடன் நிறைவேற்றி, அதை தனித்துவமான ஓர் அடையாளமாக மாற்றிக் கொள்ளும் முறை, பிரச்சினைகள் வரும் போது சரியானதைக் கண்டு, அவற்றுக்கு முன்னுரிமை வழங்கும் முறை போன்ற அனைத்துக் கட்டமைப்புக்களையும் கடந்து ஓர் செயற்திட்டம் பயணிக்கும் போது அது முழுமைப் பெற்ற ஒன்றாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது.

எனவே ரமழான் மாதம் எமக்கு கற்றுத் தரும் இவ் உயரிய முகாமைத்துவக் கற்கை நெறியை இம் மாதத்தில் பூர்த்தி செய்து, இம்மையிலும், மறுமையிலும் வெற்றிபெறுவதற்காக ஏனைய மாதங்களிலும் இதை செயல்படுத்தி, இதன் மூலம் வளமான வாழ்வுக்கான அடித்தளத்தை இட்டு, நாளை மறுமையில் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழைந்திட வல்ல நாயன் அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget