இஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 05) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)

 
 
 
ஆக்கம்
JM. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி

மேற்பார்வை 
M. அஹ்மத் அப்பாஸி MA
 
 
கொடுப்பணவுகளில் பெண்களுக்கான உரிமைகள்.

கொடுப்பணவுகள் என்றால் என்ன?


இங்கு கொடுப்பனவுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள சொல்லுக்கு அரபியில் “நபகா” எனக் கூறுவர். நபகா என்பதற்கு செலவீனங்கள் என தமிழில் பொருள்படும்.

நடைமுறை வழக்கில் நபகா என்பது ஒருவருக்குத் தேவையான உணவு, உடை, உடைமைகள் போன்றவற்றை செய்து தருவதற்கு சொல்லப்படுகிறது.

கொடுப்பணவுகள் நிகழ்வதற்கான காரணங்கள்

இஸ்லாமிய அறிஞர்கள் கொடுப்பனவுகள் எனும் பகுதி, இஸ்லாமிய சட்டத்தினுள் கட்டாயக் கடமை எனும் சட்டத்தைப் பெறுவதற்கு முக்கிய இரு காரணங்களைக் குறிப்பிடுகின்றனர். அவை வருமாறு:

01. திருமணத்தின் மூலம் கடமையாகும் கொடுப்பனவு.

தனது மனைவி பணவசதி படைத்தவளாக இருப்பினும் அவளுக்கான உணவு, உடை, உறையுள், சேவைகள், மருத்துவம் என சகலதையும் அவளுக்காக செய்துகொடுப்பது திருமணத்தின் மூலம் கனவனுக்கு கடமையாகும் கொடுப்பனவாகும். 


அதன் சட்டமும், அதற்கான ஆதாரமும்.

குடும்பமாக சேர்ந்த மனைவிக்கான கொடுப்பனவுகளைக் கொடுப்பது மார்க்க ரீதியாகவும், சட்டரீதியாகவும் கணவர் மீது கடமையாகிறது. அவள் பணவசதி படைத்தவளோ, அல்லது ஏழைப் பெண்ணோ யாராக இருந்தாலும் அவளுக்காக செலவளிப்பது இரு கண்ணோட்டத்திலும் கட்டாயக் கடமையாக இருக்கிறது. அக்கொடுப்பனவுகளைக் கொடுக்காது விட்டால் மார்க்க ரீதியாக அல்லாஹ்விடத்தில் பாவியாக குற்றம் சுமத்தப்பட்டு அதற்கான தண்டனையை மறுமையில் அடைந்துகொள்வார். அவ்வாறே அக்காரியத்தை செய்யாது விட்டால் சட்டரீதியாகவும் நீதிபதியின் தீர்ப்புக்கமைய இவ்வுலகில் தண்டனையைப் பெற வேண்டி ஏற்படுகிறது.

அல்லாஹ் கூறுகிறான், “தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவு செய்து கொள்ளவும்; ஆனால், எவர் மீது அவருடைய வாழ்வாதாரம் நெருக்கடியாக்கப் பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவு செய்து கொள்ளவும்; எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதேயல்லாமல் (மிகையாக செலவு செய்யும் படி) சிரமப்படுத்த மாட்டான்” (அல்குர்ஆன் 65:07)

நபி r ஹஜ்ஜின் போது அரபாவில் ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறினார்கள், “பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில்,முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.” (ஆதாரம்: முஸ்லிம் 1218).

பகுத்தறிவு ரீதியாக இதை நாம் அனுகினால் ஒருவரின் அதிகாரத்திற்குக் கீழ் இருக்கும் நபர் அவருக்காகவே வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்களின் சொந்த அலுவல்களைக் கூட இதன் போது பார்ப்பது அவர்களுக்கு மறுக்கப்பட்ட ஒன்றாய் மாறிவிடுகிறது. நீதிபதி, அமைச்சர்கள், அரச கருமங்களில் பணியாற்றுபவர்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் போன்ற அனைவரும் தமது மேலதிகாரியின் ஆதிக்கத்திற்குக் கீழ் இருப்பதாலும், அவர்களுக்காகவே இவர்கள் வேலைபார்ப்பதாலும், இவர்களுக்கு சேரவேண்டிய பங்குகளைக் கொடுப்பது மேலதிகாரிக்கு கடமையாகிறது. அதேபோல் மனைவியும் தனது கணவனின் அதிகாரத்திற்குட்பட்ட வாழ்வை வாழ்வதாலும், பிள்ளைகளைப் பராமரித்தல், கணவனின் சொத்துக்களைப் பாதுகாத்தல், கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான சகலதையும் செய்துகொடுத்தல், தான் தொழில் நிமித்தமோ வேறு தேவைகளுக்காகவோ வெளியில் செல்ல வேண்டி ஏற்படும் போது கணவனின் அனுமதியைப் பெறல் போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் கணவனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவளாக இருப்பதால் இவளுக்கான கொடுப்பனவைக் கொடுப்பது கணவன் மீது கட்டாயக் கடமையாகிறது, 


தொழில் புரியும் மனைவிக்கான கொடுப்பனவு

பெண்ணுக்கு சொத்துக்கள் வைத்திருப்பதற்கும், அதில் அவள் சுதந்திரமாக ஈடுபடவும் இஸ்லாம் உரிமை வழங்கியுள்ளது. அல்லாஹ் கூறுகிறான், “ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. (அவ்வாறே) பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு” (அல்குர்ஆன் 04:32).

இஸ்லாமிய வரம்புக்குட்பட்ட தொழில்களை அவர்கள் புரிந்து, அதன் மூலம் சொத்துக்கள் வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட பெண் அப்பணம் முழுவதையும் தன் தந்தை வீட்டிற்கோ, அல்லது கணவனின் வீட்டினருக்கோ அவசியம் செலவளித்தாக வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை.

ஆனால் இன்று தந்தையின் புறத்திலிருந்தும், கணவனின் புறத்திலிருந்தும் அப்பெண் சம்பாதிக்கும் பணம் இஸ்லாத்தின் பெயரால் சூரையாடப்படுவதையும், எம்மால் அவதானிக்க முடிகிறது. அதிக சொத்துக்களை எனது மகள் சேர்த்து வைத்துள்ளாள். இதை இன்னொருவர் அனுபவிக்க விடுவதா என தந்தை தனது பெண் பிள்ளைக்கு இறுதி வரை திருமணம் செய்து வைக்காமல் இருக்கும் சம்பவங்கள் நிறைய நடைபெறுகின்றன. மனைவியை அருகிலோ, தூர இடங்களுக்கோ, கடல் கடந்தோ தொழிலுக்கு அனுப்பி விட்டு, அவள் சம்பாதிக்கும் பணத்தில் குளிர் காயும் பல கணவன் மாரையும் நாம் நம் சமூகத்தில் காண்கிறோம்.

பெண் என்பவள் சொத்து சேர்த்து வைப்பதற்கு அருகதையற்றவள். அவளின் சொத்துக்கள் உட்பட அனைத்து சொத்துக்களும் ஆணின் பொறுப்பில் தான் இருக்க வேண்டுமென்ற ஜாஹிலிய்யாக் கால சிந்தனை இன்று நம்மில் பல ஆண்களுக்கு இருப்பதே இதற்கான மிக முக்கிய காரணமாகும். இஸ்லாத்தின் பார்வையில் இத்தகைய தந்தையும், கணவனும் பணம் தின்னும் முதலைகள் என்பது நிதர்சனமான உண்மையாகும். அல்லாஹ் கூறுகிறான், “அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.” (அல்குர்ஆன் 02:188).

தொழிலும் புரிந்துகொண்டு, தனது கணவனுக்கும் சேவை செய்துகொண்டிருக்கும் பெண்ணுக்கு கணவன் கொடுப்பனவு கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா? எனும் விடயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கிடையில் இரு கருத்துக்கள் நிலவுகின்றன.

1. திருமணத்திற்கு முன்னரே தான் தொழிலுக்குப் போவதாக திருமண ஒப்பந்தத்தில் மனைவி குறிப்பிட்டிருந்தால் கணவன் அந்நிபந்தனையை நிறைவேற்றுவது கட்டாயக் கடமையாகும். தனது மனைவி செய்யும் வேலையையும் கணவன் கவனித்திட வேண்டும். இஸ்லாம் அனுமதிக்காத நிறுவனங்களிலும், சூழலிலும் தொழில் புரிய நேர்ந்தால் மனைவியை வேலைக்குச் செல்வதை விட்டும் தடுக்க வேண்டும். இஸ்லாம் அனுமதித்த நிறுவனங்களில், அனுமதித்த சூழலில் தொழில் புரிய நேர்ந்தால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்டது போல் வேலைக்கு அனுப்புவது கணவனுக்கு கடமையாகிறது. அதன் மூலமாக மனைவி சம்பாதிக்கும் பணத்தை கணவன் எக்காரணம் கொண்டும் பலவந்தமாகவும், தந்திரங்களை உபயோகித்தும் எடுக்க முயற்சிக்க கூடாது. மனைவியின் சொந்த விருப்பத்தின் பேரில் அப்பணம் கணவனுக்குக் கிடைத்தால் அதனைப் பெற்றுக்கொள்ளலாம். திருமண ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொழில் புரியும் மனைவியின் மொத்த செலவுகளையும் கணவனே பொறுப்பேற்றிட வேண்டும்.

2. திருமணம் முடித்த பின்னர் தான் தொழிலுக்குப் போவதாக மனைவி அனுமதி கேட்டால், கணவனின் விருப்பத்தின் பேரில் அவள் தொழிலுக்குச் செல்லலாம். இச்சந்தர்ப்பத்திலும் அவள் செய்யும் தொழில் இஸ்லாமிய வரம்புகளுக்கு உட்பட்டதா என்பதை கணவன் கண்கானித்திட வேண்டும். இதன் மூலம் அவள் பெறும் பணத்தை இருவரும் நேரடியாகவே பேசித் தீர்மானித்திட முடியும். திருமணத்திற்குப் பின்னர் கணவனுக்காகவும், கணவனின் உடமைகளுக்காகவும் அவள் செலவளிக்கும் நேரத்தில் சிறு பகுதியை தொழிலுக்காக செலவளிப்பதும் கணவனுக்கு செய்யும் பணிவிடையில் உள்ளடங்கும் என்பதால் குடும்பவாழ்க்கைக்குத் தேவையான ஒரு பகுதி செலவீனங்களை மனைவிக்கு பொறுப்பேற்குமாறும், மறு பகுதியை தான் பொறுப்பேற்பதாகவும் இருவரும் ஆலோசனை செய்து முடிவெடுக்கும் உரிமை இருவருக்கும் இருக்கிறது. இது திருமணத்தின் பின் மனைவி தொழில் செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் கணவன் மனைவிக்கு பகிர்ந்தளிக்கும் கொடுப்பனவுகள் ஆகும். (இமாம் பஹூதி - ரவ்ழுல் முர்பிஃ – 271)

கணவனின் அனுமதியின்றி ஒரு பெண் தொழில் புரிந்தால் அவளுக்கு கொடுப்பனவுகள் கொடுப்பது கணவனுக்கு அவசியமாகாது. 


நோய்வாய்ப்பட்டுள்ள மனைவிக்கான கொடுப்பனவு


நோய்வாய்ப்பட்டுள்ள தன் மனைவிக்கு கணவன் கொடுப்பனவை கொடுக்கும் விடயத்தை இஸ்லாமிய அறிஞர்கள் இரு விதமாக நோக்குகின்றனர்.

1. திருமண ஒப்பந்தத்தின் பின் குடும்ப வாழ்வை ஆரம்பிப்பதற்கு முன்னரே மனைவி பாரிய நோய்க்கு உட்பட்டு, கணவனின் வீட்டிற்கு வர முடியாத நிலையில் இருந்தால் தன் மனைவிக்காக செலவளிப்பது கணவனுக்கு கடமையாகாது. ஏனெனில் இஸ்லாம் மனைவிக்கான கொடுப்பனவை கணவனுக்கு கட்டாயமாக்குவதற்கு அவர்கள் உடலளவில் சேர்வதையும் நிபந்தனையாக்குகிறது. இங்கு குடும்ப வாழ்வு இன்னும் இடம்பெறாமல் இருப்பதால் அவளுக்காக செலவளிப்பது கணவனுக்கு கட்டாயக் கடமை கிடையாது. விரும்பினால் செலவு செய்யலாம், விரும்பினால் செலவு செய்யாமலும் இருக்கலாம். செலவளிக்கவில்லை என்பதற்காக கணவன் சட்டரீதியான தண்டனையைப் பெறவும் மாட்டார், அல்லாஹ் விடத்தில் பாவி என குற்றம் சுமத்தப்படவும் மாட்டார்.

2. திருமண ஒப்பந்தம் நடைபெற்று, குடும்ப வாழ்வும் ஆரம்பிக்கப்பட்டதன் பின் மனைவிக்கு பாரிய நோய் ஏற்பட்டால் தன் மனைவிக்காக செலவளிப்பது கணவனுக்கு கட்டாயக் கடமையாகிறது. ஏனெனில் குடும்ப வாழ்வை இன்பகரமாக ஒப்பந்தத்தினாலும், உடலளவிலும் ஆரம்பித்ததவுடனே மனைவிக்கு செலவளிப்பது கணவனுக்கு கடமையாகிவிட்டது. நோய் என்பது இடையில் ஏற்பட்டு இவர்களின் குடும்ப வாழ்வில் பாதிப்பை செலுத்தியிருக்கிருக்கும் இடைக் காரணி. இக்கொடுப்பனவு மனைவியின் இறுதி மூச்சு வரை தொடர இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. கணவன் மனைவியாக இருவரும் ஒப்பந்தம் மற்றும் உடலளவில் மாறிய பிறகு மனைவியின் சுக துக்கங்களில் பங்கெடுப்பது கணவனுக்கும், கணவனின் சுக துக்கங்களில் பங்கெடுப்பது மனைவிக்கும் பொறுப்பான செயலாக மாறிவிடுகிறது. ஆகையால் இச்சந்தர்ப்பத்தில் செலவளிக்காமல் இருந்தால் அவர் அல்லாஹ்விடத்தில் பாவியாக குற்றம் சுமத்தப்பட்டு, அதற்கான தண்டனையைப் பெற்றிடுவார்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget