ஜூதி மலை
இஸ்லாமிய வரலாற்றில் குறிப்பிட்ட சில மலைகள் குறிப்பிட்ட சில நபிமார்களின் வாழ்வோடு தொடர்புபட்டுள்ளன. அம்மலைகளில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் மூலம் மனித சமூகத்திற்கு பல நல்ல விடயங்கள் ஏற்பட்டுள்ளன. மூஸா (அலை) அவர்களுக்கு இறைச் செய்தி அருளப்பெற்றது ‘தூர்சினாய்’ எனும் மலையிலாகும். அதன் பின் யூதர்களின் தலையெழுத்து மாறியது. அல்லாஹ் எவ்வாறு இறந்த பின் உயிர்ப்பிப்பான் என்பதற்கான ஒத்திகையை இப்றாஹிம் (அலை) அவர்களுக்கு காண்பித்ததும் மலையிலாகும். இப்றாஹிம் (அலை) அவர்களின் மனைவி ஹாஜர் அவர்கள் தன் மகன் இஸ்லமாஈலுக்காக தண்ணீர் தேடி அலைந்த நிகழ்வும், அது ஹஜ் உம்றாவின் ஓர் பகுதியாக மாறியதும் ‘ஸபா, மர்வா’ எனும் இரு மலைகளை அடிப்படையாக வைத்தாகும். இவையும் இப்றாஹிம் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களிடத்தில் பாரிய செல்வாக்கைச் செலுத்தியது.
நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்திற்கு முன் தியானத்தில் ஈடுபட்டதும் ‘நூர்’ எனும் மலையில் உள்ள ‘ஹிரா’ எனும் குகையில் ஆகும். இதுவும் உலக அரங்கில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இது போன்று பல நிகழ்வுகள் மலைகளை அடிப்படையாகக் கொண்டு நபிமார்களின் வாழ்வோடு தொடர்புபடுகிறது. அவ்வாறே ஜூதி மலை என்பதும் நூஹ் (அலை) அவர்களின் வரலாற்றோடு தொடர்புபட்ட ஓர் மலையாகும். இதன் மூலமாகவும் மனித வரலாற்றில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அவற்றை இங்கு பார்ப்போம்.
ஜூதி மலையை பல இனத்தவர்களும், மதத்தவர்களும் தமக்கான சில பெயர்களைக் கொண்டு அழைக்கின்றனர். அரேபியர்கள் அல்குர்ஆனில் இடம்பெற்றது போன்று அதை ‘ஜூதி’ என அழைக்கின்றனர். அவ்வாறே ஈரானியர்கள் ‘நூஹ் மலை’ எனவும், துருக்கியர்கள் ‘கார்டாக்’ எனவும், குர்தியர்கள் ‘கார்டோ’ எனவும், கிரேக்கர்கள் ‘ஜோர்டி’ எனவும் பலப்பல பெயர்களைக் கொண்டு இம் மலையை அழைக்கின்றனர்.
இது துருக்கி நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் ஷர்ணக் மாகாணத்தில் சிரியா, ஈராக் எல்லைகள் சந்திக்கும் பகுதியிலிருந்து 8Km தொலைவில் அமையப் பெற்றுள்ள ஓர் மலைத் தொடராகும். இதற்கு தற்போது ‘ஹாம்ரின் மலைத் தொடர்’ என பெயரிட்டுள்ளனர். இது கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 2114 மீட்டர் (6900 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. துருக்கியின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் இம் மலையும் ஒன்றாகக் காணப்படுகிறது. அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு விஜயம் செய்கின்றனர்.
இம் மலை பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. அல்லாஹ் கூறுகிறான், “’பூமியே! உனது நீரை உறிஞ்சிக்கொள், வானமே (மழையை) நீ நிறுத்திக்கொள்’ என்று கூறப்பட்டது. நீர் வற்றியது. கட்டளையும் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜூதி (மலை)யில் (கப்பல்) தரித்தது. அநியாயக்காரக் கூட்டத்தார் (அல்லாஹ்வின் அருளிலிருந்து) தூரமாகட்டும் என்றும் கூறப்பட்டது.” (அல்குர்ஆன் 11:44).
நோவா கப்பல்
நூஹ் (அலை) அவர்களின் கப்பல் பற்றி பைபிள் பின்வருமாறு கூறுகிறது, “நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு. நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும். நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்”. (ஆதியாகமம் 06:14-16).
நூஹ் (அலை) அவர்களால் கட்டப்பட்டது கப்பல் கிடையாது. அது பேழை எனவும் (Nouh’s Ark), அதன் நீளம் 300 அடியும், அகழம் 50 அடியும், உயரம் 30 அடியும் இருந்தது எனவும் பைபிள் கூறுகிறது. அவ்வாறே கப்பல் மூன்று மாடிகளைக் கொண்டது எனவும், ஒவ்வொரு மாடியிலும் அறைகள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.
நூஹ் (அலை) அவர்கள் கட்டிய கப்பல் பேழையாக இருந்தால் அதன் முன்பகுதி இராட்சத அலைகளில் மோதுண்டு உடைந்து போக அதிகம் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அதன் முன்பகுதி கூர்போன்று இல்லாமல் தட்டையாகவே இருக்கும். இது திரவங்களின் இயக்கம் பற்றிய ஆய்வான ‘ஹைட்ரோடினமிக்ஸ்’ எனும் பொறியியல் முறைக்கு முரணானது என கப்பற் துறைப் பொறியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதுமாத்திரமின்றி மலையளவு எழுந்த இராட்சத அலையில் அப்பேழை சிதைந்து சுக்குநூராக போயிருக்கும்.
நூஹ் (அலை) அவர்கள் கட்டிய கப்பல் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
அல்லாஹ் கூறுகிறான், ‘எமது கண்காணிப்பிலும், எமது வஹிக்கு ஏற்பவும் ஒரு கப்பலைத் தயாரிப்பீராக!” (அல்குர்ஆன் 11:37).
“மேலும் பலகைகளையும், ஆணிகளையும் கொண்ட (கப்பல்) ஒன்றின் மீது நாம் அவரைச் சுமந்து சென்றோம். நிராகரிக்கப்பட்டவருக்குரிய கூலியாக, அது நமது கண்களின் முன்னே சென்றது. நிச்சயமாக நாம் அதனை ஒரு அத்தாட்சியாக விட்டு வைத்துள்ளோம். எனவே, உபதேசம் பெறுவோர் எவரேனும் உண்டா?” (அல்குர்ஆன் 54:13-15).
நூஹ் (அலை) அவர்களோடு தொடர்புபட்ட கப்பலைக் குறிக்க ‘ஃபுல்க்’ ‘ஸபீனா’ ஆகிய இரு ஒற்றைக் கருத்துள்ள சொற்களை அல்லாஹ் அல்குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். அதில் ‘ஃபுல்க்’ என்பது பிரமாண்ட கப்பல் அல்லது நீள்வட்டமாக பூமியிலிருந்து உயரமாக இருக்கும் இடம் என்பவற்றுக்காக பயன்படுத்தப்படும் சொல்லாகும். கப்பல் என்பதன் முன்பகுதி கூர்வடிவத்திலே காணப்படும். இது நீரின் இயக்கத்திற்கு இலகுவில் முகம் கொடுத்து எவ்வித சேதமும் இல்லாமல் கப்பல் பயணிப்பதற்கு துணையாக இருக்கும். நூஹ் (அலை) அவர்களால் கட்டப்பட்ட கப்பல் இது போன்று முன்பகுதி கூர்வடிவத்தில் காணப்பட்டது என்பதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.
அவ்வாறே அவர் கட்டிய பலகைக் கப்பலின் நீளம், அகலம், உயரம், அமைப்பு, கப்பல் செய்யப்பட்ட மரம், மாடிகளின் எண்ணிக்கை, அதில் ஏற்றப்பட்டோர் எண்ணிக்கை, ஏற்றப்பட்ட உயிரினங்களின் வகைகள், கப்பல் பயணித்த கால எல்லை, அவர்கள் உட்கொண்ட உணவுகள் பற்றிய துள்ளியமான எந்தத் தகவல்களும் அல்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் இடம்பெறவில்லை. அதுபற்றி தொல்பொருள் ஆய்வுகளோ, கால அளவீட்டு ஆய்வுகளோ இது வரை எவ்விதத் தகவல்களையும் வெளியிடவில்லை. பைபிளில் மாத்திரமே இது பற்றிய தகவல்கள் சில குறிப்பிடப்பட்டுள்ளன. மனிதக் கையூடலுக்கு உள்ளான பைபிளில் கூறப்பட்டுள்ள செய்திகள் மனிதக் கையூடலுக்கு அகப்படாத அல்குர்ஆனுடன் தொடர்புபட்டால் மாத்திரமே மேற்கூறப்பட்ட தகவல்களை எம்மால் ஊர்ஜிதப்படுத்த முடியும். அல்குர்ஆனும் அதுபற்றி கூறாமல் விட்டுள்ளதால் தகவல்களை ஏற்றுக் கொள்ளும் விடயத்தில் நம்பகத்தன்மை இழந்துவிடுகிறது. எதுவெல்லாம் மனிதர்களுக்குத் தேவையான தகவல்களோ, படிப்பினைகள் நிறைந்த தகவல்களோ அதை மாத்திரமே அல்குர்ஆனும், ஸுன்னாவும் எமக்குக் கற்றுத் தரும். அது தவிர்ந்த விடயங்களில் ஆய்வுகள் மேற்கொள்வது வீணான ஆய்வாகவே இஸ்லாம் கருதுகிறது.
நூஹ் (அலை) அவர்களால் கட்டப்பட்ட கப்பல் மனிதர்கள் உட்பட உலகில் எந்த உயிரினங்கள் இருக்க வேண்டுமென அல்லாஹ் நாடினானோ அவை அனைத்தையும் ஏற்றிச் செல்லும் அளவுக்கு விசாலமானதாகவும், மலையளவு எழுந்த இராட்சத அலைகளுக்கு முகம் கொடுத்து எவ்வித சேதமும் இல்லாமல் பயணிப்பதற்கு ஏற்றதாக பிரம்மாண்டமாக இருந்துள்ளதாகவும் (அல்குர்ஆன் 11:40-42) என்ற வசனத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அவ்வாறே அக்கப்பலில் பல நாட்களாக எவ்விதக் குழப்பங்களும் இன்றி மனிதர்களும், ஏனைய உயிரினங்களும் அழிவை ஏற்படுத்தும் கடும் மழைக்கு மத்தியிலும் சாந்தமான முறையில் எவ்வாறு பிரயாணம் மேற்கொண்டார்கள் என்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சியாகவே இருக்கிறது.
கப்பல் தரை தட்டிய மலை
நூஹ் (அலை) அவர்களின் கப்பல் தரை தட்டியது அல்குர்ஆன் குறிப்பிடுவது போன்று ஜூதி மலையா? அல்லது பைபிள் குறிப்பிடுவது போன்று அராராத் மலையா? என்பதில் பல விவாதங்கள் முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மத்தியில் நடந்த வண்ணமுள்ளன. அது பற்றிய ஓர் தெளிவை நாம் பெற்றிருப்பது அவசியமாகிறது.
நூஹ் (அலை) அவர்களின் கப்பல் தரை தட்டியது ஜூதி மலை என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. அல்லாஹ் கூறுகிறான், “’பூமியே! உனது நீரை உறிஞ்சிக்கொள், வானமே (மழையை) நீ நிறுத்திக்கொள்’ என்று கூறப்பட்டது. நீர் வற்றியது. கட்டளையும் நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜூதி (மலை)யில் (கப்பல்) தரித்தது. அநியாயக்காரக் கூட்டத்தார் (அல்லாஹ்வின் அருளிலிருந்து) தூரமாகட்டும் என்றும் கூறப்பட்டது.” (அல்குர்ஆன் 11:44).
இக்கப்பல் தரைதட்டியது அராராத் மலை என பைபிள் கூறுகிறது, “ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது. ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அராராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.” (ஆதியாகமம் 08:03-04).
இது பற்றி நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளைப் பார்ப்போம்.
அராராத் மலை துருக்கியின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது. சுழல்வடிவ எரிமலையான இது லாவா பாய்ச்சல் மூலம் உருவான மலையாகும். இது 5137 மீட்டர் (16,854 அடி)
உயரமுள்ள பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ள மலையாகும். அப்பகுதியில் வசித்து வந்த ரஷீத் கான் எனும் விவசாயி அராராத் மலைக்கு மேல் கப்பல் போன்ற ஒன்று தென்படுவதாக அறிவித்த பின் ‘ரெனீ நோர்பெர்க்மேன்’ (அமெரிக்க எழுத்தாளர்), ‘ஜான் வான் டைமன்’ (பிரபலமான தொலைக்காட்சி நிபுணர்) ஆகியோர் 1959ம் ஆண்டு அம் மலைக்குச் சென்று தமது ஆய்வை மேற்கொண்டனர். அங்கு எவ்வளவு தேடியும் கப்பலின் எவ்வித எச்சங்களும் கிடைக்காததால் அமெரிக்காவிற்குத் திரும்பி, 1960ல் அது கப்பல் போன்ற புவியியல் உருவாக்கம் எனக் கூறினர்.
இது பற்றி ரஷ்ய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் 1840ம் ஆண்டு அராராத் மலையில் பெரும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. ஆகையால் கப்பலின் எந்தப் பாகமும் அங்கு கிடைப்பதற்கு சாத்தியக்கூறுகள் கிடையாது எனவும், அங்கு காணப்படுவது கப்பல் போன்ற புதைபடிவமானது எரிமலை லாவாவினால் உருவாகியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். இதை அறிவியல் ஆராய்ச்சிக்கான காஸ்மோபாலிட்டன் மையம் (Cosmopoisk scientific research center) 2005 ஏப்ரலில் வெளியான ‘இன்டர்ஃபாக்ஸ்’ எனும் தனது செய்தித் தொகுப்பில் வெளியிட்டிருந்தது.
ஜூதி மலை என்பது நாம் முன்னர் பார்த்தது போன்று துருக்கி நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் ஷர்ணக் எனும் மாகாணத்தில் சிரியா, ஈராக் எல்லைகள் சந்திக்கும் பகுதியிலிருந்து 8Km தொலைவில் அமையப் பெற்றுள்ள ஓர் மலைத் தொடராகும். இதற்கு தற்போது ‘ஹாம்ரின் மலைத் தொடர்’ என பெயரிட்டுள்ளனர். இது கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 2114 மீட்டர் (6900 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.
கி.பி 1948ம் ஆண்டு துர்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வில் ஜூதி மலையும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னரே அதில் புதைந்திருந்த நூஹ் (அலை) அவர்களின் கப்பலும் வெளிப்பட்டது. இதையறிந்த பல தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1953ம் ஆண்டு தொடக்கம் இம் மலையில் பல தடவைகள் தமது ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள். கப்பலின் எச்சங்கள் என சில பலகைகளையும், பிரமாண்ட ஆணிகளையும் கண்டெடுத்தனர். கார்பன் செறிவுடன் காணப்பட்ட அவைகளை ரேடியோ கார்பன் கால அளவிடுதல் (Radioisotope
dating) முறையில் ஆய்வு செய்து பார்க்கையில் அது நூஹ் (அலை) அவர்களின் காலத்து கப்பலின் எச்சங்கள் என அமெரிக்க ஆய்வாளர்களான ‘ரான் வியாட்’ (Ron Wyatt) மற்றும் ‘டேவிட் பாசோல்ட்’ (David Fasold) இவர்களோடு துருக்கிய பேராசிரியரான ‘அஹ்மத் அர்ஸ்லான்’ ஆகியோரும் தமது நீண்ட, பல நாடகள் ஆய்வின் பின் 1978ம் ஆண்டு கண்டறிந்தனர்.
எனவே பைபிள் குறிப்பிடுவது போன்று அராராத் மலையில் கப்பல் தரை தட்டியது என்பது ஏற்க முடியாத தகவலாகும். அவ்வாறு தரை தட்டியிருந்தாலும் எரிமலை வெடிப்பினால் அக்கப்பலின் அனைத்து பாகங்களும் அழிந்தே போயிருக்கும். அல்குர்ஆன் குறிப்பிடுவது போன்று அது ஜூதி மலையில் தரை தட்டியது என்பதே உண்மையான, ஊர்ஜிதமான, ஆய்வறிக்கைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள தகவலாகும்.
அல்குர்ஆன் குறிப்பிடுவது போல் உலக மக்களுக்கான அத்தாட்சியாக அல்லாஹ் கப்பலைக் கூறவில்லை எனவும், பேரழிவு பற்றிய இச்சம்பவத்தையே குறிப்பிட்டுள்ளான் எனவும் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர். 6900 அடி வரை தண்ணீரை வரச் செய்து, அல்லாஹ்வுக்கு மாறு செய்தோரை அல்லாஹ் அழித்துள்ளான் என்பது நாம் இவ் அத்தாட்சியிலிருந்து பெற வேண்டிய படிப்பினையாகும். இதைப் பார்க்கும் போது சுனாமி எல்லாம் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது.
பிரளயமும், ஜூதி மலையும்
மனித வரலாறு தற்போது கி.மு, கி.பி என பிரித்து நோக்கப்படுவது போல் அன்றைய காலத்தில் நூஹ் (நோவா) பிரளயத்திற்கு முற்பட்ட காலம், நூஹ் (நோவா) பிரளயத்திற்குப் பிற்பட்ட காலம் என இரு காலகட்டமாக பிரித்து நோக்கப்பட்டது. நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத அனைத்து மக்களும் பூண்டோடு வெள்ளத்தினால் அழிக்கப்பட்டனர். இதுவே உலகில் ஏற்பட்ட முதல் பேரழிவாகும். இதுவே எமக்கான அத்தாட்சி நிறைந்த, படிப்பினை பெற வேண்டிய நிகழ்வாகும்.
இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது,
அல்லாஹ் கூறுகிறான், “’நூஹே! நிச்சயமாக நீர் எம்முடன் தர்க்கம் செய்கிறீர். மேலும் எம்முடன் தர்கிப்பதை அதிகரித்தும் விட்டீர். நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் நீர் எமக்கு எச்சரிப்பதை எம்மிடம் கொண்டு வாரும்’ என அவர்கள் கூறினார்கள். அ(தற்க)வர், ‘அல்லாஹ் நாடினால் அதனை அவனே உங்களிடம் கொண்டு வருவான். அவனை நீங்கள் தோற்கடிப்போராகவும் இல்லை’ என்று கூறினார்” (அல்குர்ஆன் 11:32-33).
“நமது கட்டளை வந்த போது, (பூமியில்) தண்ணீர் பொங்கியெழுந்தது. ‘(உயிர்ப் பிராணிகள்) ஒவ்வொன்றிலிருந்தும் ஒரு சோடியையும், (அழிந்து விடுவார்கள் என) விதி முந்தி விட்டவர்களைத் தவிர உமது குடும்பத்தையும், நம்பிக்கை கொண்ட ஏனையோரையும் அதில் ஏற்றிக்கொள்வீராக’ என்று நாம் கூறினோம். குறைவானவர்களே அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தனர். ‘இதிலே ஏறிக்கொள்ளுங்கள். அது ஓடுவதும், தரிப்பதும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டேயாகும். நிச்சயமாக எனது இரட்சகன் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையோனுமாவான்’ என்று கூறினார் (அல்குர்ஆன் 11:40-41).
“நூஹின் கூட்டத்தினரும் தூதர்களைப் பொய்ப்பித்தபோது, அவர்களை மூழ்கடித்து, மனிதர்களுக்கு அவர்களை அத்தாட்சியாக்கினோம்.” (அல்குர்ஆன் 25:37).
பிரளயம் ஏற்பட்டதற்கு மிக முக்கிய காரணமே மக்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததும், அல்லாஹ்வைப் பற்றியும், அவனை மாத்திரம் வணங்கி வழிபடுவதன் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்த தூதரான நூஹ் (அலை) அவர்களை புறக்கணித்ததுமாகும். அவரின் வருகைக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து மறைந்த நல்ல மனிதர்களான வத்து, ஸுவாஉ, யகூஸ், யஊக், நஸ்ர் போன்றோரை கடவுளாக சித்தரித்து, அவர்களை வணங்க ஆரம்பித்தார்கள். இதனாலே இயற்கைப் பேரழிவான தண்ணீரின் சீற்றத்தால் அவர்களை அழித்து, அல்லாஹ்வை மறுப்போர் இது போன்றே பேரழிவுகளால் அழிவார்கள் என்பதை அல்லாஹ் எமக்கு அத்தாட்சியாகவும், படிப்பினையாகவும் காண்பித்துள்ளான்.
நூஹ் (அலை) அவர்களின் போதனைகளைக் கேட்பது சகிக்காமல் அக்கால மக்கள் காதுகளில் பஞ்சை வைத்துக்கொண்டு இருந்தார்கள். எம்மைத் திருத்த மலக்குகள் வர வேண்டுமெனக் கூறினார்கள். பைத்தியக்காரன் என அவரை ஒதுக்கி வைத்தனர். அவரது மனைவியும், மகன்களில் ஒருவரும் அவரை மதித்து, ஏற்றுக்கொள்ளவில்லை. பாரிய மன உளைச்சலை அனைவருமே அவருக்கு கொடுத்த வண்ணமிருந்தனர். இறைவா இத்தகைய மக்களுக்கு உனது நேர்வழி இல்லையானால் அழிவைக் கொடுப்பாயாக என அவர் பிரார்த்தனை புரியே ஓர் கப்பலைக் கட்டுமாறு அல்லாஹ் அவருக்கு பணித்தான். கப்பல் கட்டும் பணியில் அவர் ஈடுபட்டிருந்த போதும் அவரை கேலியும், கிண்டலும் செய்துகொண்டிருந்தனர். இவை அனைத்தையும் அவர் சகித்துக் கொண்டு, பொறுமையுடன் இருந்தார். இதனாலே நூஹ் (அலை) அவர்களும் உலுல் அஸ்ம் (அதிக கஷ்டங்களுக்கு உள்ளாகி, பொறுமையைக் கையாண்டோர்) என இஸ்லாம் குறிப்பிடும் 5 நபிமார்களில் முதலிடத்தைப் பெறுகிறார்.
இவ்வாறு இன்னல் தரும் மக்களை விட்டு தானும், தன்னைப் பின்பற்றுவோரும் பிரிந்து சென்று வேறு பிரதேசங்களில் மனநிம்மதியுடன் குடியேறுவது நபிமார்களுக்கென அல்லாஹ்வால் விதிக்கப்பட்டுள்ள ஓர் வழிமுறையாகும். பல நபிமார்களின் வாழ்வு இவ்வாறே இருந்துள்ளது. அதை ஆரம்பித்து வைத்தவர் நூஹ் (அலை) ஆவார். அவருக்கு மன நிம்மதியைத் தந்து, உலகிற்கே புதிய தலைமுறையினரை உருவாக்க சிறந்த இடமாக அல்லாஹ் ஜூதி மலைப் பகுதியைத் தேர்வு செய்து, தரை மார்க்கமாக இல்லாமல் நீர் மார்க்கமாக அவரை அங்கு கொண்டுபோய் சேர்த்தான்.
தெற்கிலிருந்து ஜூதி மலையை நோக்கிய பயணம்
நூஹ் பிரளயத்திற்கு முற்பட்ட காலத்தில் ஆதம் (அலை) அவர்களின் இரு புதல்வர்களுக்கு நடுவில் ஏற்பட்ட ஓர் பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கொலை செய்கிறார். அப்போது நடைபெற்ற நிகழ்வை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான், “தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது? என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பூமியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். (இதைக் கண்ணுற்ற) அவன், ‘எனக்கேற்பட்ட கைசேதமே! நான் இக்காகத்தைப் போலாயினும் இருப்பதற்கு இயலாதவனாகி விட்டேனே! அப்படியிருந்தால் என் சகோதரனுடைய சடலத்தை நான் அடக்கஞ் செய்திருப்பேன்’ என்று கூறி, கவலைப்படுவோரில் உள்ளவனாக அவன் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 05:31).
மேற்கூறப்பட்ட வசனத்தில் காகம் சடலத்தை அடக்கஞ் செய்வதற்கு உதவியதாக கூறப்பட்டுள்ளது. காகத்தின் ஆரம்ப கால பூர்வீகம் தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியா எனவும், கப்பல் போக்குவரத்து அதிகரித்ததனால் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் இது பரவிக் காணப்படுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதை வைத்து முதல் மனித இனம் ஆசியாவின் தெற்குப் பகுதியில் வசித்துள்ளனர் என்பதை அனுமானிக்க முடியுமாகிறது.
நூஹ் (நோவா) பிரளயத்திற்கு முற்பட்ட காலத்தில் மனித இனம் ஒரே இடத்தில் வாழ்ந்திருக்க வேண்டுமென மனித இன வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்கிணங்க இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கிழக்குப் பகுதியான மதுரையை ஒத்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 400,000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கண்டறிந்துள்ளனர். அவ்வாறே 300,000 முதல் 500,000 வருடங்களுக்கு முன்னர் ஓமோ எரெக்டசு எனும் மனித இனத்தினர் இலங்கையில் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
இவற்றை சுருக்கமாகப் பார்த்தால், தெற்காசியப் பிராந்தியமான 'லெமூரியா கான்டினென்ட்’ என்று நிலவியல் ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்ற குமரிக் கண்டமே முதல் மனித இனம் வாழ்ந்த இடமாக நோக்கப்படுகிறது. இப்பகுதி இன்றைய ஆஸ்திரேலியா தொடங்கி இந்தியா, இலங்கை உள்ளடங்களாக உள்ள பகுதியாகும். தொடக்கத்தில் இப்பெரும் நிலப்பகுதி பல நாடுகளாக இருந்து, பின் பிளவுபட்டு, கடலில் மூழ்கடிக்கப்பட்டது என பூகோளாய்வியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அவ்வாறே இந்து புராணங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் நோவா பிரளயம் பற்றி அதிகம் பேசப்பட்டுள்ளதாக இலக்கிய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதையும் தாண்டி அப்பிரளயம் ஏற்பட்டபோது தெற்குப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி ஓர் கப்பல் புறப்பட்டது பற்றிய செய்தியையும் அவை குறிப்பிடுகின்றன.
திருக்குறலின் 43ம் குறல் பின்வருமாறு கூறுகிறது,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
இதன் பொருள்: வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம். தென்புலத்தார் என்ற சொல்லுக்கு நேர் பொருள் தெற்குத் திசையிலுள்ள இடத்தில் இருப்பவர் என்பது. இறந்துபோன மூதாதையர் தென்திசையில் உறைவதாகத் தமிழர்களுக்கு ஒரு நம்பிக்கையுண்டு. அதனால் காலமாகிவிட்ட முன்னோர்களைத் தென்திசையிலுள்ளவர் எனக் கூறுவது ஒரு மரபு.
இது தென்பகுதியில் வாழ்ந்து பிரளயத்தில் மரணித்த மக்களைக் குறிக்கும் சொல்லாக கருதப்படுகிறது.
மச்ச புராணத்தின் படி சத்தியவிரதன் எனும் திராவிடத் திருநாட்டின் தேசபதி (நோவா) கிருதமாலா ஆற்றில் அங்க சுத்தி செய்ததாகக் கூறப்படும் நபர் நூஹ் நபியாக இருக்கலாம் எனும் அனுமானம் உள்ளது. கிருதமாலா ஆறு என்பது மதுரையில் உள்ள நதியைக் குறிக்கிறது. அவ் ஆற்றோரத்தில் தோணியபுரம் எனும் ஊரும் உள்ளதால் இவ் அனுமானத்தை முன்வைக்கின்றனர்.
புறப்பொருள் வெண்பா மாலையில் பின்வருமாறு ஒரு பாடல் இடம்பெறுகிறது.
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!
இதன் பொருள்: (பல கடவுள் வழிபாடு எனும்) பொய்கள் அகன்று என்றும் (ஒரே இறைவன் எனும்) உண்மை பரவுவது உலகில் ஒன்றும் ஆச்சரியமில்லை. (அவ்வாறு ஓர் இறவனை வழிபடாதோர் உலகின் முழு நிலப் பிரதேசமும் மூழ்கும் அளவுக்கு பிரளயம் ஏற்பட்டு இறந்து போயினர்). பிரளயத்தின் பின் பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுங்கு நிலை அகன்று, மலைகள், மற்றும் இதர பூமியின் வளங்கள், ஒவ்வொன்றாய்த் தோன்றின. அவ்வாறு நீரின் ஒழுங்கு நிலை விலகி, வளங்கள் தோன்றி, வயல் வெளி நாகரிகம் தோன்றிய காலத்துக்கு முன்பே ஆயுதங்களோடு காடு மலைகளில் சுற்றித் திரிந்து வாழ்க்கை நடத்தியவன் இந்த தமிழன்.
இதுவும் முதல் மனித இனத்தின் பூர்வீகம் தெற்காசியப் பகுதி என்பதைக் குறிக்கிறது.
இவ்வாறு நூஹ் (அலை) அவர்களின் கப்பலில் பயணித்து ஜூதி மலை வரை பயணித்தவர்கள் தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதை அனுமானத்தின் அடிப்படையில் பல மனித இன வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஜூதி மலையில் தோற்றம் பெற்ற புதிய மனித இனம்
அல்லாஹ் கூறுகிறான், “நூஹே உம்மீதும், உம்முடன் இருக்கின்ற சமூகங்கள் மீதும் எம்மிடமிருந்துள்ள சாந்தியையும், அருள் பாக்கியங்களையும் கொண்டு கப்பலிலிருந்து இறங்குவீராக என்று கூறப்பட்டது. மேலும், சில சமூகங்களுக்கு நாம் வசதி வாய்ப்புக்களை வழங்குவோம். பின்னர், எம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களைப் பிடித்துக்கொள்ளும்” (அல்குர்ஆன் 11:48).
துருக்கியில் ஈராக்கின் எல்லையை அண்டிய பகுதியான ஜூதி மலைப்பகுதியில் கப்பல் தரை தட்டிய பின், அதை அண்டிய பிரதேசத்தில் எஞ்சியிருந்த மக்களால் உருவாக்கப்பட்ட முதல் நாகரீகம் மெஸபதோமியா எனும் சுமேரிய நாகரீகமாகும். (இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கி.மு 2750 அளவில் ஏற்பட்ட வெள்ளம் பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மைசூர் மாநிலத்திலிருந்தும், சிந்துவெளியில் இருந்தும் கொண்டு செல்லப்பட்ட நிறைய ஆபரண வகைகளும், தென்பகுதிக்கே உரித்தான தளபாடங்களும், பாத்திரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன).
ஆரம்பத்தில் ஓரிறைக் கொள்கையில் திளைத்திருந்த சுமேரிய நாகரிகத்தில் நூஹ் (அலை) அவர்களின் இறப்பிற்குப் பிற்பட்ட காலத்தில் ஷைத்தானின் ஆக்கிரமிப்பால் மீண்டும் வத்து, ஸுவாஉ, யகூஸ், யஊக், நஸ்ர் போன்ற பல நல்ல மனிதர்களை மூத்த தெய்வமாக நினைத்து, அவர்களுக்கு சிலைகள் செய்து, வணங்க ஆரம்பித்தார்கள். அதிலிருந்து பல கடவுள் கொள்கைகளும், மதங்களும் தோன்ற ஆரம்பித்தன. அதிலிருந்து பிரிந்து சென்று தமக்கு ஏற்றாற் போல் கடவுள் வழிபாட்டையும், மத அனுஷ்டானங்களையும் உருவாக்கிக் கொண்டார்கள்.
அவர்களில் சிலரின் குடிபெயர்ச்சியினால் அசீரிய நாகரீகம், எகிப்திய நாகரீகம், பாபிலோனிய நாகரீகம், கிரேக்க நாகரீகம், அரேபிய நாகரீகம் போன்றன தோன்ற ஆரம்பித்தன. இவர்கள் அனைவரும் தமக்கான தனித்துவமான கடவுள் கொள்கைகளையும், மத அனுஷ்டானங்களையும் வகுத்து, தமக்குத் தாமே சட்டங்களை வரைந்து, தமது வாழ்க்கையை வாழ ஆரம்பித்தனர்.
ஓரிறைக் கொள்கையை மறந்து, பல தெய்வ வழிபாட்டில் தன் மனோ இச்சைப்