மோசடி மூலமான பதவிகள்... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A
பதவிகள், பொறுப்புகள், பதவி உயர்வுகள் தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படுவதே அடிப்படையும் மார்க்க வழிகாட்டலுமாகும். நபிகளார் அவர்கள் தம் தோழர்களில் இருந்து மிகப் பொருத்தமான தகுதியுள்ளோரை மட்டுமே பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் தேர்வு செய்திருக்கின்றார்கள் என்பதை பல நபிமொழிகள் உணர்த்துகின்றன.

தமக்கு மிகவும் பரிச்சயமான, மிகத்தெரிந்த, நெருக்கமானவர்களாக இருந்தாலும் அவர்களுக்குக்கூட பொருத்தமற்றவர்கள் என நபிகளார் காணும் போது பதவிகளை வழங்கவில்லை.

அபூதர் (ரலி) கூறினார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏதேனும் பொறுப்பு தரக்கூடாதா?" என்று கேட்டேன். நபியவர்கள், தமது கையால் எனது தோள்மீது அடித்துவிட்டு, "அபூதர்! நீர் பலவீனமானவர். அது ஒரு அமானிதமாகும். அதை முறைப்படி அடைந்து, அதில் தமக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றியவரைத் தவிர மற்றவர்களுக்கு அது (மறுமையில்) இழிவும் துயரமும் ஆகும்" என்று கூறினார்கள்.

ஆனால் இன்று சகல தகைமைகளும் திறமைகளும் உள்ள பொருத்தமானவர்கள் இருக்க தகைமையற்றோர் குறுக்கு வழியினூடாகவும் சிபாரிசுகளினூடாகவும் தொழில்களையும் பதவி உயர்வுகளையும் பெற்றுக் கொள்வது பல இடங்களிலும் புறையோடிப்போயுள்ளது. இது மிகப் பெரும் சமூக அநீதியாகும்.

தகுதியும் திறமையும் இல்லாத ஒருவர் தொழிலொன்றை அல்லது ஒரு பதவி உயர்வை குறுக்கு வழியில் பணத்தின் மூலமோ அல்லது வேறு எந்த வழிகள் மூலமோ அடைந்து கொள்வாராயின் அது மோசடியின் ஒரு வடிவம், பாரியதொரு குற்றம். பணத்தின் மூலமாக இருப்பின் அது லஞ்சம்... வழங்குபவர், பெறுபவர் இருவரின் மீதும் குற்றமாகும்.
(லஞ்சம் வழங்குபவரையும் எடுப்பவரையும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சபித்தார்கள்) ஹதீஸ். 

ஏனெனில் தகுதியுள்ள பலரை வீழ்த்தியும் அவர்களுக்கு அநியாயம் செய்துமே அவர் அந்தத் தொழிலை அல்லது பதவி உயர்வை அடைந்து கொள்கின்றார். 

✍ அடுத்து தொழில் மற்றும் பதவி உயர்வுக்காக செய்யப்படும் சிபாரிசுகளைப் பொருத்த வரை :

👉 உண்மையில் தகுதியான, பதவிக்குப் பொருத்தமான ஒருவருக்காக சிபாரிசு இருக்குமானால் அதில் தவறேதுமில்லை. ஆனால் இந்த சிபாரிசு மூலம் அவரை விட தகுதியுள்ள ஒருவரின் உரிமை பறிக்கப்படக் கூடாது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 

👉 அதேநேரம் தகுதியற்ற, பொருத்தமற்ற ஒருவருக்காக சிபாரிசு இருக்குமேயானால் அது மார்க்க ரீதியில் அனுமதிக்கப்பட்டதல்ல. இந்த சிபாரிசு மூலம் தகுதியானவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
(அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது. அல்லாஹ் அனைத்தையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்) அல் குர்ஆன்.

எனவே பொருத்தமானவர்கள் பொருத்தமான இடத்துக்கு நியமிக்கப்படுவதே பொருத்தமானதாகும். இல்லையேல் பாரிய தீய விளைவுகளும் சீர்கேடுகளும் ஏற்படும். உதாரணமாக அனுபவம், அறிவு, துறை சார்ந்த நிபுணத்துவம் உள்ளவர்களால் மாத்திரமே சில துறைகளை கையாள முடியும் ; அவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். மாற்றமாக பொருத்தமற்றவர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில் அந்தத் துறைகளே பாரிய வீழ்ச்சியடையக்கூடிய அபாயம் ஏற்படும். இது சமூகத்திற்கு செய்யும் பாரிய தீங்கும் மோசடியுமாகும்.

குறிப்பு: தெரிந்தவர், நண்பர், உறவினர் என்பதற்காக தகுதியற்றவர்களுக்கு பதவிகள் கொடுக்கப்படுவது அல்லது அதை அடைந்து கொள்ள அவர்கள் மோசடிகள் மூலம் முயற்சிப்பது மார்க்கத்துக்கு முரணாகும். அதேநேரம் தகைமைகளும் திறமைகளும் உள்ளவர்கள் ஓரங்கட்டப்படுவதும் புறக்கணிக்கப்படுவதும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயமுமாகும். அல்லாஹ்வின் பார்வையில் அவர்கள் அநியாயம் இழைக்கப்பட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் கவலைகள், பிரார்த்தனைகள் பாரிய தண்டனைகளுக்கு வழிவகுக்கும்... அல்லாஹ் பாதுகாப்பானாக.

வாழ்க்கைக்கு வருமானம் அவசியம்தான். ஆனால் அது ஹலாலாக அமைவதுடன் நம் மூலம் எவரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற விடயத்திலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். 
நமது அடைவும் ஹலாலாக இருக்க வேண்டும். அதை அடைந்து கொள்ளச் செல்லும் வழியும் ஹலாலாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வை அஞ்சி நடந்தால் அவன் எமக்கு விடிவைத் தந்து அருளையும் பரகத்தையும் வழங்குவான்.

அல்லாஹ்வை அஞ்சுவோம்... நல்ல முறையில் வாழ்வோம்... 
அல்லாஹ் நம் அனைவரையும் தடுக்கப்பட்டவைகளில் இருந்து பாதுகாப்பானாக.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget