பிரயாண துஆ ஏன் அவசியம்? || JM. Hizbullah Anvari JM. Hizbullah Anvari

பிரயாண துஆ ஏன் அவசியமாகின்றது?


மனிதன் தொண்டு தொற்று இன்று வரைக்கும் தன் சொந்த பந்தங்களைச் சந்தித்தல், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடல், தனக்குரிய வருமானத்தை ஈட்டுதல், வேறு இடங்களில் குடிபுகுதல் என இன்னோரன்ன பல தேவைகளின் நிமித்தம் பிரயாணங்களை மேற்கொள்கிறான். இப்படிப்பட்ட பிரயாணங்களில் பல வகையான குறிக்கோள்களும், மனதிற்கும், உடலிற்கும் சங்கடத்தை உண்டுபன்னக் கூடிய விடயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு முஸ்லிம் பயணம் மேற்கொள்ளும் போது இறை தியானத்தோடு அதை ஆரம்பித்து, இறை தியானத்தோடு முடிக்கும் படி இஸ்லாம் வழியுருத்துகின்றது. அதன் அவசியம் என்ன என்பதை விளக்குவதே இச்சிறிய ஆக்கத்தின் நோக்கமாகும்.


1. வாகனத் தேர்வு:
நாம் தரைமார்க்கமாக செல்கின்றோமா? அல்லது கடல்மார்க்கமாகவா? அல்லது வான்மார்க்கமாகவா? இதன் போது நாம் எந்த வாகனத்தைப் பயன்படுத்துவது? இவ் வாகனம் நமக்கு சரியானதா? இதனால் என்ன ஆபத்துக்கள் நேரலாம்? அப்படி நேர்ந்தால் அதற்கான மாற்று வழி என்ன? என்ற பல கேள்விகளுக்கு விடை கண்டு விட்டே, நாம் நமக்கு ஏற்றாற் போல் ஓர் வாகனத்தைத் தேர்வு செய்கின்றோம். பிரயாணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் வாகனத் தேர்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.


2. கஷ்டம்:
நாம் எவ்வளவு தான் சொகுசான வாகனங்களில் பிரயாணம் மேற்கொண்டாலும், கஷ்டம் என்ற ஒன்று அதில் இருக்கத்தான் செய்கின்றது.
ஆரம்ப காலங்களில் பிரயாணம் என்பது தரைமார்க்கமாக கால் நடையாகவும், ஒட்டகைகளின் மீதும், கடல்மார்க்கமாக பாய்மரக் கப்பல்களிலுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது. பல நாட்கள், பல மாதங்கள், பல வருடங்கள் என அப்பிரயாணங்கள் செல்ல வேண்டி இருந்ததால் தமக்கும், தம்மோடு பிரயாணம் செய்வோருக்கும் தேவையான உணவுப் பொருட்களும், வேறு பல பொருட்களும் தாமே கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது. அவ்வாறே பாலைவனங்களில் ஏற்படும் அகோரங்களுக்கும், கடலின் சீற்றத்திற்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது.

இத்தகைய கஷ்டங்கள் தற்காலத்தில் இல்லாவிட்டாலும், சொகுசு என்பது எம்மை உடலளவில் மாத்திரமின்றி உள அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒரு மனிதன் ஓடியாடி செயற்படும் வரைக்கும் அவனுக்கு எத்தகைய கஷ்டங்களும் விளங்குவதில்லை. தனியே பல மணிநேரங்கள் அமர்ந்து, செய்ய வேலைகள் எதுவுமின்றி இருப்பது பெரும் கஷ்டமாக இருக்கின்றது. உள்ளம் சோர்வடைவதோடு, உடலும் சோர்ந்துவிடுகின்றது.
வாகனம் சொகுசாக இருந்தாலும் பயணத்தோழர்களால் அசௌகரியங்கள் ஏற்படும். பயணத்தோழர்கள் சிறப்பாய் அமைந்தாலும் பயணத்தில் உணவு, தூக்கம், கழிப்பிட வசதிகள் போன்றவற்றில் அசௌகரியங்கள் ஏற்படும். அவை சிறப்பாய் அமைந்தாலும் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் எம்மை வாட்டி வதைக்கும். இது போன்ற இன்னோரன்ன கஷ்டங்களை நாம் அனுபவிக்க வேண்டி இருப்பதால் பயணம் என்பது எப்போதும் கஷ்டமான ஒன்றாகவே இருக்கிறது.

இதனால் தான் பயணிகளுக்கென வணக்க வழிபாட்டில் சிறப்பு சலுகைகளையும் இஸ்லாம் வழங்குகிறது. பயணம் மேற்கொள்ளும் ஒருவரின் அசௌகரியத்தை கவனத்தில் கொண்டு நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் தொழச் சொல்கிறது. அவ்வாறே லுஹர் – அஸர், மஃரிப் – இஷா போன்ற தொழுகைகளில் அஸரை லுஹருடனும், இஷாவை மஃரிபுடனும், அல்லது லுஹரை அஸருடனும், மஃரிபை இஷாவுடனும் சேர்த்து தொழச்சொல்கிறது. நோன்பிருக்கும் நிலையில் பிரயாணம் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டால் நோன்பை விடுவதற்கும் இஸ்லாம் அனுமதியளித்துள்ளது.

3. சோகம், கவலை.
பிரயாணத்தில் கவலையும் சோகமும் ஏற்படுவது வழமையே. தன்னோடு பேசிக்கொண்டிருக்க பக்கத்தில் யாருமில்லை. குதூகலமாக இருக்க குடும்பமோ, உறவினர்களோ, நண்பர்களோ இல்லை. தனக்கு பசிக்கும் போது உணவு பரிமாற தாயோ, மனைவியோ இல்லை. தன்னோடு ஊரில் இருந்த யாரும் இப்போது இல்லை. செல்லும் இடத்திற்கும் வரப்போவதில்லை போன்றன ஒருவரை வாட்டி வதைக்கிறது. தான் விரும்பிய ஒன்றை செய்வதற்குக் கூட சலிப்பு ஏற்பட்டு, அதை விட்டுவிடும் போக்கே அதிகம் ஏற்படுகின்றது. ஆக மொத்தத்தில் பெரிய பரப்பளவில் எம் சந்தோஷத்தையும், உட்சாகத்தையும் வெளிப்படுத்திய நாம் சிறிய பரப்பளவில் சுருங்கி, எம் அனைத்து இன்பங்களையும் தொலைத்து விடுகின்றோம். போக இருக்கும் இடம் பற்றிய பயம் நம்மை வாட்டி எடுப்பதோடு, அது சந்தோஷமாக இருந்தாலும் தாம் விட்டுச் செல்லும் இடம் பற்றிய கவலை கூட எம்மை வாட்டி எடுத்து விடும்.

4. தாம் விட்டு வரும் செல்வங்கள்:
நாம் பிரயாணம் மேற்கொள்ளும் போது மனைவி, குழந்தைகள், தாய் தந்தை, குடும்ப உறவுகள், நாம் கட்டிக்காத்த வீடுவாசல்கள், தோட்டங்கள், ஏனைய செல்வங்கள் அனைத்தையும் விட்டுப் பிரிந்தே செல்கின்றோம். நாம் இருக்கும் வரை அவைகள் அனைத்தும் பாதுகாப்பாக நம் கண்கானிப்பிலே இருந்து வந்தது. நம் பிரயாணத்தின் போது, நம்பிக்கையானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வந்தாலும் அதன் பாதுகாப்பு பற்றிய ஓர் அச்சம் எம்மை வதைக்கவே செய்கின்றது.

5. அதிக தூரம்:
பல பிரயாணங்கள் சில சந்தர்ப்பங்களில் பல மணிநேரங்களை எம்மிடமிருந்து பிடுங்கிவிடுகின்றது. இதன் போது நாம் குறித்த நேரத்தில் அடைய இருக்கும் இலக்கு தவறிவிட அதிக வாய்ப்பு இருக்கின்றது. அவ்வாறே குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டுமென்ற தூண்டுதல் எம்மை அதி வேகத்தில் வாகனத்தை செலுத்த வைத்து விபத்தில் கொண்டு போய் விடுகின்றது. அவ்வாறே நேரம் ஆக ஆக தனக்கும், தான் கொண்டு செல்லும் பொருட்களுக்கும் பிரயாணத்தின் இடைநடுவே ஆபத்து நேரிடும் என்ற அச்சமும் அதிகமாக எம்மை திகைத்து நிற்க வைத்துவிடும்.

6. பிரயாணத்தின் நோக்கம்:
பிரயாணம் என்பது, நன்மையான காரியங்களை நிறைவேற்றிடவும், தீமையான காரியங்களை செய்திடவும் மேற்கொள்ளப்படுகின்றது. ஒரு முஸ்லிமைப் பொருத்தவரையில் தீமையான காரியங்களை செய்வது அவனுக்கு தடுக்கப்பட்டுள்ளது. தீமையான காரியங்களை செய்வதற்கு துணை போகும் ஏனைய காரியங்களும் இதன் மூலம் தடுக்கப்படுகின்றது. விபச்சாரம் புரிவது தடுக்கப்பட்ட ஒரு ஈனச் செயல். இதனை செய்வதற்காக ஒருவன் பிரயாணத்தை மேற்கொண்டால் விபச்சாரத்திற்கு இப்பிரயாணம் துணைபோகிறது எனும் அடிப்படையில் இப் பிரயாணம் மேற்கொள்வதும் இவனுக்கு தடுக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடுகின்றது.

அவ்வாறே தான் பிரபல்யமாய் இருக்கும் இடத்தை விட்டும் இன்னொரு இடத்திற்குச் செல்லும் ஒருவர் தன்னைச் சுற்றி பிரபல்யம் என்ற மகுடம் இல்லாமல் தனித்து இருப்பதால் பாவகாரியங்களில் ஈடுபட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எனவே நாம் நல்ல நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு மாத்திரமே பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டும்.

07. விட்டுச்சென்ற குடும்பத்திலும், செல்வங்களிலும் மாற்றங்கள் ஏற்படல்.
பிரயாணம் முடிந்து வீடு திரும்பும் போது தான் விட்டு வந்த குடும்பம், குடும்ப உறவுகள், ஏனைய சொத்து செல்வங்கள் போன்றவற்றில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்புக்கள் இருக்கின்றன. இன்று நாம் அதை கண்கூடாகவே காண முடிகின்றது. மனைவியோ, கனவனோ இன்னொரு துணையுடன் சென்றிருப்பார்கள். பிள்ளைகள் கட்டுக்கடங்காதவர்களாய் மாறியிருப்பார்கள். குடும்ப உறவுகளிடம் பகைகள் வளர்ந்திருக்கும். சொத்து செல்வங்கள் அனைத்தும் நம்பிக்கைக்குரியர்களாலோ, அல்லது குடும்ப உறுப்பினர்களாலோ, அல்லது கொள்ளைக் காரர்களாலோ சூரையாடப்பட்டிருக்கும். எதற்காக பிரயாணம் மேற்கொண்டோமோ அதன் பயன் பிரயாணத்தின் பின் தலைகீழாக மாறியிருக்கும். இவ்வாறான பல ஆபத்துக்களை பிரயாணத்தின் பின் சந்திக்காமல் இருக்கலாம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லாத பிரயாணமாகத் தான் நமது பிரயாணம் பல சந்தர்ப்பங்களில் இருக்கும்.

ஆக இத்தகைய ஏழு அம்சங்களும் ஓர் பிரயாணத்தில் இடம்பெறுகின்றன என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதுவே அவனது உளவியலில் பல சமயம் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி, அவனை விரக்தி நிலைக்கு கொண்டு செல்கிறது. சில சமயம் தற்கொலைகள் மேற்கொள்வதற்கும் இவை வித்திடுகிறது.

இதனாலேயே இவை அனைத்தையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கவும், தனது உள்ளத்தை அமைதியாகவும், திருப்தியாகவும் வைத்திருக்கவும், அனைத்து விடயங்களையும் அல்லாஹ்வின் மீது பொருப்புச்சாட்டுமாறும், அவனிடம் பாதுகாவல் தேடுமாறும், அவனால் கிடைக்கும் அருள்களுக்கு நன்றிசெலுத்துமாறும் இஸ்லாம் மனிதனுக்கு கட்டளையிடுகிறது. தன் சக்தியை மீறிய பாதுகாவலன் ஒருவன் இருக்கிறான் எனும் நம்பிக்கையை உள்ளத்தில் வளர்க்கச் செய்கிறது. அதற்காகவே பல சந்தர்ப்ப துஆக்களையும் இஸ்லாம் எமக்காக வகுத்துத் தந்துள்ளது. இவை மாத்திரமே ஒரு மனிதனை உளவியல் ரீதியான பாதுகாப்பை வழங்குவதற்கு ஏற்றமானவை.

அதன் வரிசையிலே இஸ்லாம் பிரயாணத்துக்கென தனி துஆவைக் கற்றுத் தந்து, நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பிரயாணத்தின் போதும் இதைக் கூறிக்கொள்ளுமாறும், பிரயாணத்தின் ஆரம்பம் முதல், அதன் இறுதி வரை அல்லாஹ்வின் நினைவோடு இருக்குமாறும் எம்மைப் பணிக்கின்றது. இது எம்மை மனம் தளர்ந்து, பாவகாரியங்களில் ஈடுபடாமலும், தமக்குக் கிடைத்த சொகுசான பிரயாணத்திற்காக அல்லாஹ்வை விட்டு விட்டு, ஏனையோருக்கு நன்றி தெரிவிக்காமலும் இருக்கச் செய்து, நாமே பிரயாணத்தின் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம் எனும் மமதையிலிருந்தும் எம்மைப் பாதுகாக்கின்றது. எமது பிரயாணத்தில் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருக்கிறான் எனும் எண்ணத்தை வளர்க்கிறது. அனைத்தை விடவும் அல்லாஹ்வை மிகைப்படுத்தி, அவனுக்கே புகழனைத்தும் உரித்தானது எனும் கோஷத்தை எழுப்பிடவும் வழிகோலுகின்றது.

பிரயாண துஆ:
அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என மூன்று விடுத்தம் கூறிவிட்டு, பின்வரும் வாசகங்களைக் கூறிக்கொள்ள வேண்டும்.
اللهُ أكْبَرُ، اللهُ أكْبَرُ، اللهُ أكْبَرُ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ * وَإِنَّا إِلَى رَبِّنَا لَـمُنْقَلِبُونَ. اللَّهُمَّ إنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا البِرَّ والتَّقْوى، ومِنَ العَمَلِ مَا تَرْضَى، اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ، اللَّهُمَّ أنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ، والخَلِيفَةُ فِي الأهْلِ، اللَّهُمَّ إنِّي أعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ، وَكآبَةِ الـمَنْظَرِ، وسُوءِ الـمُنْقَلَبِ فِي الـمَالِ والأهْلِ


இதன் தமிழ் அர்த்தம்:
அல்லாஹ் மிகப் பெரியவன் இ(வ் வாகனத்)தை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகின்றோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்து விடு. இறைவா நீயே பயணத்தில் தோழனாய் இருக்கின்றாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றோம்.
(ஆதாரம்: முஸ்லிம் – 1342).

பிரயாணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ
மேற்கூறிய துஆவை ஓதிவிட்டு, மேலதிகமாக பின்வரக்கூடியதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ

இதன் தமிழ் அர்த்தம்:
நாம் திரும்பக்கூடியவர்கள், பாவமன்னிப்புக் கேட்பவர்கள், வணக்கசாலிகள், எம் இரட்சகனை புகழ்பவர்கள்.
(ஆதாரம்: முஸ்லிம் – 1342)


எனவே எல்லா சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வின் நினைவோடு இருந்து பாவகாரியங்களில் ஈடுபடாமல், அவனின் திருப் பொருத்தத்தைப் பெறுவோமாக. இறுதித் தீர்ப்பு நாளில் ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவனத்தில் அல்லாஹ் எம் அனைவரையும் நுழைத்திடுவானாக!


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget