அனந்தரச் சொத்தில் பெண்ணின் உரிமைகள் (பார்வை 08) - MJM.Hizbullah Anvari (B.Com Reading)



அனந்தரச் சொத்தில் பெண்ணின் உரிமைகள்.

அனந்தரச் சொத்து

அனந்தரச் சொத்து என்பது ஒருவரின் மரணித்திற்குப் பின் அவர் விட்டுச்செல்லும் அசையும், அசையா சொத்துக்களுக்கு சொல்லப்படுகிறது. இச்சொத்துக்கள் இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களில் குறிப்பிட்ட சில ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரையறுக்கப்பட்ட அளவு சென்றடைய வேண்டுமென இஸ்லாம் சட்டமியற்றியுள்ளது.

அனந்தரச் சொத்தும், அது கடமை என்பதற்கான ஆதாரங்களும்.

ஜாஹிலிய்யாக் (நபித்துவத்திற்கு முற்பட்ட) காலத்தில் பெண்கள் அனந்தரச் சொத்துக்களைப் பெறவில்லை என நாம் முன்னர் பார்த்தோம். ஏனெனில் அவர்கள் அனந்தரப் பொருளாக பார்க்கப்பட்டனரே தவிர அனந்தரச் சொத்துக்களைப் பெறும் ஓர் ஜீவனாகப் பார்க்கப்படவில்லை. ஜாஹிலிய்யாக் கால அரேபியர்கள் தம் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்குக் கூட அனந்தரச் சொத்துக்களைக் கொடுக்கவில்லை. அவள் வாள் ஏந்த சக்தியற்றவள், தனது கோத்திரத்தைப் பாதுகாக்க திராணியற்றவள், யுத்த களங்களை கண்டிராதவள், ஆடு, மாடுகளை மேய்க்காதவள். இப்படிப்பட்ட எதற்குமே உதவாத, எதையும் பொறுப்பாக எடுத்து செய்யத் தெரியாத ஒருவளிடம் எப்படி சொத்துக்களை நம்பி ஒப்படைப்பது எனும் கோஷம் அவர்களிடமிருந்தது. இதற்காகவே பெண்களுக்கான அனந்தரச்சொத்து, மஹர், வஸிய்யத் (உயில்) மூலம் கிடைக்கப்பெறும் சொத்து போன்ற அனைத்தையும் அவர்களுக்கு கொடுக்காமல் தடுத்தார்கள். அவளின் சொத்துக்களை அநியாயமாக உண்டு மகிழ்ந்தார்கள். இஸ்லாம் மார்க்கம் வந்த பின்னர் பெண்ணை பெண்ணாக மதித்து, தாயின் அந்தஸ்து யாது?, மனைவியின் அந்தஸ்து யாது?, மகளின் அந்தஸ்து யாது? என அம் மக்களுக்கு தெளிவுபடுத்தியது. அனந்தரச் சொத்துக்கள் விடயத்தில் பெண்ணாக இருக்கும் தாய்க்கு எவ்வளவு பங்கு கிடைக்க வேண்டும்?, மனைவிக்கு எவ்வளவு பங்கு கிடைக்க வேண்டும்?, மகளுக்கு எவ்வளவு பங்கு கிடைக்க வேண்டும்? என பங்குகளை நீதமாக பிரித்துக்கொடுத்தது. இவ்வாறான பங்கீட்டு முறையை அல்குர்ஆனும், ஸுன்னாவும் தெளிவாக குறிப்பிடுகின்றன.

அனந்தரச் சொத்து பற்றி இஸ்லாம்

இங்கு நாம் யாருக்கு எவ்வளவு பங்கு கிடைக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட எத்தனிக்கவில்லை. ஏனெனில் இது தனியாக பேசப்பட வேண்டிய ஓர் கலைக் கடலாகும். அனந்தரச் சொத்து ஆண்கள் உட்பட பெண்களுக்கும் கிடைக்க வேண்டுமா? என்பது பற்றிய அல்குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரங்களை மாத்திரமே இங்கு நாம் பார்க்க இருக்கிறோம்.

அல்குர்ஆனிய ஆதாரங்கள்

01. அல்லாஹ் கூறுகிறான், பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்குண்டு. இன்னும் பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்குண்டு. அது குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருப்பினும் சரியே. (இது) விதியாக்கப்பட்ட அளவீடாகும்.” (அல்குர்ஆன் 04:07).

இவ்வசனத்தில் அல்லாஹ் பெண்களுக்கும் அனந்தரச் சொத்தில் பங்குண்டு என்பதை ஆணித்தரமாக குறிப்பிடுகிறான்.

. இவ்வசனத்தில் ஆண்களைப் பற்றி கூறிய பின்னரே பெண்களைப் பற்றி, அவர்களுக்கும் பங்குண்டு என வேறாக கூறுகிறான். ஆண்களுக்கும், பெண்களுக்கும் பங்குண்டு என சேர்த்து கூறவில்லை. இது பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் உறுதித் தன்மையையும், அவர்களுக்கு உண்டான பங்கு வேறாக இருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறது.

. இவ்வசனத்தில் அது குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருப்பினும் சரியே. (இது) விதியாக்கப்பட்ட அளவீடாகும் எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. இங்கு விநியோகிக்கப்படும் அனந்தரச் சொத்தின் பங்குகள் ஆண்களை விட கூடுதலோ, அல்லது குறைவோ, எந்த அளவைக் கொண்டிருந்தாலும், கிடைக்க வேண்டிய அளவு முழுமையாக பெண்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்பதை அழுத்தமாகவே அல்லாஹ் குறிப்பிடுகிறான். ஏனெனில் ஜாஹிலிய்யாக் காலத்தில் ஆண்கள் அனந்தரச் சொத்தை பெற்று வந்தனர். அவர்கள் இஸ்லாத்திலும் பெறுகின்றனர். ஆனால் பெண்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் அனந்தரச் சொத்தை பெறவில்லை. இஸ்லாத்தில் தான் முதல் முதலாகப் பெறுகிறார்கள். எனவே பெண்கள் அவர்களுக்குரிய பங்கை பெற வேண்டும் என்பதை அழுத்தமாக கூறவே வசனத்தின் இடையிலும் கூறிவிட்டு, வசனத்தின் இறுதியிலும் அல்லாஹ் கூறுகிறான்.

02. தாயும் அனந்தரச் சொத்தில் பங்கைப் பெறவேண்டுமென அல்லாஹ் குறிப்பிடுகிறான், (மரணித்த) அவருக்கு பிள்ளை இருப்பின் அவர் விட்டுச் சென்றதில் அவரது பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்குண்டு. அவருக்கு பிள்ளையில்லாமல் அவரது பெற்றோரே அவருக்கு வாரிசாக இருப்பின் அவரது தாய்க்கு மூன்றில் ஒரு பங்குண்டு. அவருக்கு சகோதரர்கள் இருப்பின் அவரது தாய்க்கு ஆறில் ஒரு பங்குண்டு.” (அல்குர்ஆன் 04:11).

03. மனைவியும் அனந்தரச் சொத்தில் பங்கைப் பெறவேண்டுமென அல்லாஹ் குறிப்பிடுகிறான், உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் நாலில் ஒரு பங்குண்டு. உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பங்குண்டு.” (அல்குர்ஆன் 04:12).

04. சகோதரி அனந்தரச் சொத்தில் பங்கைப் பெற வேண்டுமென அல்லாஹ் குறிப்பிடுகிறான், “(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்; ஒரு மனிதன் இறந்துவிட்டால், அவனுக்கு பிள்ளைகள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து விட்டால், அவளுக்கு பிள்ளைகள் யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன் அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். இரு சகோதரிகள் இருந்தால் அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள். அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும் பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு - நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்; அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 04:176).

05. மகள் அனந்தரச் சொத்தில் பங்கைப் பெற வேண்டுமென அல்லாஹ் குறிப்பிடுகிறான், உங்கள் பிள்ளைகளில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண் பிள்ளைகள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்;” (அல்குர்ஆன் 04:11).

ஹதீஸில் இது குறித்த ஆதாரங்கள்

01. (இறந்தவரின்) சொத்து (அவருடைய) பிள்ளைகளுக்குரியதாக இருந்தது; (இறந்தவரின்) மரணசாசனம் (மூலம் கிடைப்பது) மட்டுமே தாய் தந்தையருக்கு உரியதாக இருந்து வந்தது. அல்லாஹ் அதிலிருந்து, தான் விரும்பியதை மாற்றி(யமைத்து), ஆணுக்கு இரண்டு பெண்களின் பங்கை நிர்ணயித்துத் தாய் தந்தையரில் (தலா) ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கையும் மூன்றிலொரு பங்கையும் நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டிலொரு பங்கையும் நான்கிலொரு பங்கையும் கணவனுக்குப் பாதிப்பங்கையும் நான்கிலொரு பங்கையும் நிர்ணயித்தான். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் y, ஆதாரம்: புஹாரி 4578).

02. நபி r அவர்கள் 'ஹஜ்ஜத்துல் வதா'வின் சமயம் (நான் மக்காவிலிருந்தபோது எனக்கேற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர் நோக்கியிருந்தேன். நான், 'இறைத்தூதர் அவர்களே! செல்வந்தனாகிய எனக்கு என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் இந்த நோய் என்னைப் பீடித்துள்ளது. எனவே, நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். நபி r அவர்கள், 'வேண்டாம்' என்று கூறினார்கள். நான் 'அப்படியானால் என் சொத்தில் பாதியை தர்மம் செய்யட்டுமா?' என்று கேட்க அதற்கும், 'வேண்டாம்' என்று கூறினார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை தர்மம் செய்யட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்களுடைய வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் நிலையில் ஏழைகளாகவிட்டுச் செல்வதை வட அவர்களைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை விரும்பிச் செய்கிற செலவு எதுவாயினும் அதற்குப் பகரமாக உங்களுக்குப் பிரதிபலன் தரப்படும். எந்த அளவிற்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகிற ஒரு கவளம் உணவுக்கும் கூட (உங்களுக்குப் பிரதி பலன் அளிக்கப்படும்.)' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஃத் இப்னு அபீவக்காஸ் y, ஆதாரம்: புஹாரி 4409).

03. அபூ மூஸா t அவர்களிடம், (இறந்த ஒருவருக்கு) மகள், மகனுடைய மகள், சகோதரி ஆகியோர் (இருந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் சொத்துரிமை) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் 'மகளுக்கு (மொத்தச் சொத்தில்) பாதியும் சகோதரிக்கு (மீதி)ப் பாதியும் கிடையாது)' என்று கூறிவிட்டு, '(வேண்டுமானால்,) இப்னு மஸ்வூத் t அவர்களிடம் சென்று (கேட்டுப்) பாருங்கள். அன்னாரும் என் (கருத்தி)னையே பிரதிபலிப்பார்கள்' என்றார்கள். எனவே, இப்னு மஸ்வூத் t அவர்களிடம் (சென்று) அபூ மூஸா t அவர்களின் கூற்றைத் தெரிவித்து (இது குறித்து விளக்கம்) கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'இவ்வாறு (மகனின் மகளுக்கு சொத்தில் பங்கு இல்லை என்று) நானும் சொன்னால் நிச்சயம் நான் வழிதவறியவனாகி விடுவேன்; நான் நேர்வழியடைந்தவர்களில் ஒருவனாக இருக்கமாட்டேன். இந்த விஷயத்தில் நபி r அவர்கள் அளித்த தீர்ப்பையே நானும் அளிக்கிறேன்: மகளுக்குப் பாதியும் மகனின் மகளுக்கு ஆறில் ஒரு பாகமும் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் மூன்றில் இரண்டு பாகங்கள் நிறைவாகும். எஞ்சியிருப்பது சகோதரிக்கு உரியதாகும்' என்றார்கள். பின்னர் அபூ மூஸா t அவர்களிடம் சென்று இப்னு மஸ்வூத் t அவர்கள் சொன்னதைத் தெரிவித்தோம். அப்போது, 'இந்தப் பேரறிஞர் (இப்னு மஸ்வூத் t உங்களிடையே இருக்கும் வரை என்னிடம் (விளக்கம்) கேட்காதீர்கள்' என்று (புகழ்ந்து) சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஹுஸைல் இப்னு ஷுரஹ்பீல்(ரஹ்), ஆதாரம்: புஹாரி 6736).

இவற்றிலிருந்து பெண் என்பவள் அவள் தாயாகவோ, மனைவியாகவோ, சகோதரியாகவோ, மகளாகவோ எக்கோணத்தில் இருப்பினும் அவளுக்கு அனந்தரச் சொத்தில் பங்கு கிடைக்கும் என்பது இஸ்லாம் கடமையாக்கிய ஒன்று என்பது தெளிவாகின்றது.

 

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget