குத்பா - (2020/06/05)
இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்)
குத்பா நிகழ்த்தியவர்: கலாநிதி. பைஸல் இப்னு ஜெமீல் ஹஸாவீ
குத்பாவின் தலைப்பு: நபிகளாரின் வாழ்வின் சோதனைகளும்
இன்றயை குத்பாவிலிருந்து...
இந்த உலகின் நிலமையை நன்கு உற்றுநோக்குபவர், அதில் வாழ்பவர்கள் கண்ணியமானவர்களாகவும், இழிவானவர்களாகவும், சந்தோசமானவர்களாகவும், கவலை அடைந்தவர்களாகவும், ஏழைகளாகவும், பணக்காரர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும், நோயாளிகளாகவும் இருந்து கொண்டிருப்பதைக் காணமுடியும். இப்படி பலவகையான நிலமைகள் நிச்சயமாக அல்லாஹ்வின் அடியானுக்கு சோதனைகளாக இருக்கின்றன.
அல்லாஹ் கூறுகிறான், “பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்”. (அல்குர்ஆன்: 31:25).
அல்லாஹ் கூறுகிறான், “அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்”. (அல்குர்ஆன்: 07:168).
இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நன்மைகள் என்பது கண்ணியம், ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, எதிரிகளிடமிருந்து வெற்றி போன்ற அருட்கொடைகளாகும். தீமைகள் என்பது நோய், எதிரிகளால் வீழ்த்தப்படல், நிலநடுக்கம், புயல் காற்று, உடைப்பெடுக்கும் வெள்ளப் பெருக்கு போன்ற சோதனைகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான், “மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீய செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்”. (அல்குர்ஆன்: 30:41).
இந்த வசனம் எதை உணர்த்துகிறது எனில் அல்லாஹ் அருட்கொடைகளையும் சோதனைகளையும் நிர்ணயித்துள்ளான். அந்த சோதனைகள் மூலம் வரட்சி, நலவுகளில் குறைவை ஏற்படுத்தல், பரக்கத்தை இல்லாமல் ஆக்குதல் போன்ற விடயங்களை அல்லாஹ், ஏற்படுத்துகிறான். இதனால் மனிதர்கள் அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து நடந்து, சத்தியத்தின்பால் மீள வேண்டும். அதற்காக வேண்டி அல்லாஹ்விடம் பாவமீட்சி பெற வேண்டும். அவன் ஏவியவற்றை எடுத்து நடந்து அவனை வழிபட வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான், “வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்”. (அல்குர்ஆன்: 55:29).
அதாவது வானம், பூமியில் உள்ளோர் அல்லாஹ்விடமே வாழ்வாதாரம், ஆரோக்கியம் போன்றவற்றை கேட்கின்றனர். அவன் சகல நேரங்களிலும் தனது காரியங்களில் கவனம் செலுத்துகிறான். இந்த உலகத்தில் பல வகையான மாற்றங்களை அவன் ஏற்படுத்துகிறான். அவனை எந்தவொரு காரியமும் பராக்காக்கி விடாது.
இந்த வசனத்தை நபியவர்கள் விபரிக்கும் போது, “அவனுடைய காரியம் என்பது அடியார்களின் பாவங்களை மன்னித்தல், துன்பத்தை போக்குதல், சிலரை உயர்த்துதல், சிலரை தாழ்த்துதல் போன்றனவாகும்” என்று விபரித்துள்ளார்கள். (இப்னுமாஜா: 168)
அல்லாஹ் ஒவ்வொரு நாளும் அடியார்களின் காரியங்களில் கவனம் செலுத்துகிறான். பாவங்களை மன்னிக்கிறான், துன்பம், கவலைகளை போக்குகிறான். ஏழையை செல்வந்தனாக மாற்றுகிறான். அறிவிலியை அறிவாளியாக ஆக்குகிறான். வழிதவறியவனை, தடுமாற்றத்தில் இருப்பவனை நேர்வழியில் செலுத்துகிறான். பசியுடையவனை வயிறு நிறைந்தவனாக ஆக்குகிறான். ஆடை இல்லாதவனுக்கு ஆடை வழங்குகிறான். நோயாளியை குணப்படுத்துகிறான். அநியாயம் செய்யப்பட்டவனுக்கு உதவி புரிகிறான். தவ்பா செய்பவனை ஏற்றுக்கொள்கிறான். நலவு செய்பவனுக்கு நற்கூலி வழங்குகிறான். குற்றங்களை மறைத்து விடுகிறான். பயத்தில் இருப்பவனுக்கு அபயம் அளிக்கிறான். சில சமூகத்தினரை உயர்த்துகிறான். சிலரை தாழ்த்தி விடுகிறான்.
நிச்சயமாக ஒரு இறைவிசுவாசியின் சகல காரியங்களும் நன்மையானதாகும். நபியவர்கள் கூறினார்கள், “ஒரு இறைவிசுவாசியின் காரியங்கள் ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக அவரின் சகல காரியங்களும் நன்மையாக இருக்கிறது. அது இறைவிசுவாசிக்கே தவிர வேறு யாருக்கும் கிடைக்காது. அவனுக்கு ஏதும் சந்தோசமான காரியங்கள் நிகழ்ந்து விட்டால் நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவனுக்கு ஏதும் தீங்கு நிகழ்ந்து விட்டால் பொறுமை கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது”. (முஸ்லிம்: 2999).
இறைவிசுவாசியின் உள்ளம் சந்தோசங்களின் போது நன்றி செலுத்துகிறது. சோதனைகளின் போது பொறுமை கொள்கிறது. அது தடுமாற்றம் அடையாது. இந்த இரண்டு நிலமைகளிலும் அதனை படைத்த இறைவனின் பால் அது சென்றுவிடும். நலவும், கெடுதியும் அல்லாஹ்வின் ஏற்பாடுதான் என்பதை உறுதியாக நம்பும்.
அதேபோன்றுதான் பல்வேறுபட்ட சந்தோசமான, துன்பகரமான சூழ்நிலைகள் நபிகளாருக்கு ஏற்பட்ட போது அவர்களின் வழிகாட்டல்கள் எவ்வாறு இருந்தது என்பதை உற்றுநோக்கிப் பாருங்கள். சிறுவயதில் பாட்டனார் அவரை பொறுப்பெடுத்து வளர்க்கிறார்கள். அவர்கள் மரணித்த பின் நபியவர்களின் சிறிய தந்தை அவரை பொறுப்பெடுக்கிறார்கள். மிகவும் அன்பாகவும், பரிவாகவும் வளர்த்து, பாதுகாத்தார்கள். கதீஜா (ரழி) அவர்களும் தன்னால் முடியுமான அளவு நபிகளாருக்கு பொருளாதார உதவி புரிந்தார்கள். அல்லாஹ் வெற்றியின் மூலமும் நம்பிக்கையாளர்கள் மூலமும் நபியவர்களை உறுதிப்படுத்தினான். அந்த நம்பிக்கையாளர்கள் தன்னுடைய பிள்ளைகள், பெற்றோர்கள், மனைவிமார்களை விடவும் நபியவர்களை நேசித்தார்கள். முஹாஜிர்கள், அன்ஸாரிகள் என அனைவரும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள். அவர்களை நேசித்தார்கள்.
நபியவர்கள் அழகியதோர் வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார்கள். அவர்களின் உள்ளம் இறைவனோடு தொடர்புபட்டு இருந்தது. அவர்களின் நாவு அவனை நினைவுபடுத்துவதை விட்டும் சடைவடையவில்லை. அவர்களின் முழு நோக்கமும் அல்லாஹ்வின் அன்பையும் அவனின் திருப்பொருத்தத்தையும் பெறவேண்டும் என்பதாக இருந்தது. அல்குர்ஆனை கொண்டு நிறைவடைந்தார்கள். இன்பமான உலகம், மனைவிமார்களை விட அவர்களுக்கு கண்குளிர்ச்சி தொழுகையிலேயே இருந்தது. நல்லவற்றை ஹராமாக்க மாட்டர்கள். அல்லாஹ் ஹலாலாக்கியதை விட்டும் தன்னை தடுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த மக்கள் சாப்பிட்ட இறைச்சி, பழங்கள், ரொட்டி, ஈத்தம் பழம் போன்றவற்றையே தாமும் உண்டு வந்தார்கள்.
அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். அதற்கு பிரதியுபகாரம் செய்வார்கள். மனிதர்களின் உள்ளத்தில் சந்தோசத்தை விதைப்பார்கள். அவர்கள் தினமும் புன்முறுவல் பூப்பவர்களாக இருந்தார்கள். தனது மனைவிமார்களோடு அன்பாக கேளிக்கைகளில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள். சிறுவர்களோடும், தன் தோழர்களோடும் விளையாடி மகிழ்வார்கள். உண்மையை மாத்திரம் பேசுவார்கள். உள்ளம் அமைதியடைவதற்காக பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்வார்கள். அங்கு அதன் மேற்பகுதியில் இருந்து நீர் வழிந்தோடுவதை கண்டு ரசிப்பார்கள். ஏதும் நலவுகளைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டால் சந்தோஷமடைவார்கள். அவர்களின் முகம் பிரகாசமானதாக காணப்படும். அருள்மழை பொழியும் போது, அல்லது ஏதும் தடைகள் நீங்கும் சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வுக்கு சிரம் பணிவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு பல அத்தாட்சிகளை வழங்கி, அவர்களை தனித்துவப்படுத்தினான். யுத்தங்களில் அவர்களுக்கு பல வெற்றிகளை வழங்கினான்.
நபியவர்கள் சிறு வயதில் அநாதையாக்கப்பட்டு, சோதிக்கப்பட்டார்கள். சில குடும்ப உறவுகளை சிறு வயதில் இழந்தார்கள். அவர்களது நெருங்கிய உறவுகளே அவர்களை எதிர்த்தார்கள். கடும் நெருக்குதலை நபியவர்களுக்குக் கொடுத்தார்கள். தனது சொந்த ஊரை விட்டும் விரட்டினார்கள். தனது சொத்துக்களை விட்டுவிட்டு, இடம்பெயர்ந்தார்கள். கடும் நோவினைகளை சந்தித்தார்கள். ஏசப்பட்டார்கள். பரிகாசம் செய்யப்பட்டார்கள். மடையன், சூனியக்காரன், பொய்யன் என்று அவர்களை வசைபாடினார்கள். நபியவர்களை கொல்லுமாறும், அவர்களின் கழுத்தில் ஒட்டகத்தின் அழுகிய குடல்களைப் போடுமாறும், கல்லால் எரியுமாறும் ஏவினார்கள்.
நபிகளாரின் பல் உடைக்கப்பட்டது. மக்காவுக்குள் நுழைவதை விட்டும் தடுக்கப்பட்டார்கள். பசியை உணர்ந்து தனது உடலில் கல்லை கட்டினார்கள். பல மாதங்கள் தனது வீட்டில் நெருப்பு எரியாமல் பசியோடு, தானும், தனது குடும்பத்தினரும் வாழ்க்கையை கடத்தினார்கள். ஈத்தம் பழம் அவர்களின் பிரதான உணவாகக் காணப்பட்டது. தனது தேவைக்காக வேண்டி கடன்பட்டார்கள். மரணிக்கும் போது தனது கவசம் ஒரு யூதனிடம் அடமானமாக இருந்தது. அவ்வப்போது நோயுற்றார்கள். அதன் வலிகள் கடும் அகோரமாகவும் இருந்தது. இரு தடைவைகள் வஹி துண்டிக்கப்பட்டது. இதனால் கடுமையாக கவலையுற்றார்கள்.
இவ்வாறான சகல நிலைமைகளிலும் பொறுமையாக இருந்தார்கள். சோர்வடையவில்லை. தனக்காக வேண்டி அடுத்தவர்களை தண்டிக்கவில்லை. அனைவரையும் மன்னித்தார்கள். அடுத்தவர்கள் மீது அன்பு செலுத்தினார்கள். தனது சமூகம் தன்னை நிராகரித்திருந்தும், நோவினை செய்திருந்தும், அவர்களுக்காக பாவமன்னிப்பையும், நேர்வழியையும் இறைவனிடம் வேண்டினார்கள்.
நபியவர்கள் பின்ருமாறு கூறினார்கள், “இறைவா! எனது சமூகத்துக்கு நேர்வழி காட்டுவாயாக. நிச்சயமாக அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்”. (பைஹகீ: 2/622).
எப்போதும் தனது தொடர்பை இறைவனோடு ஆக்கிக்கொண்டார்கள். இலகுவான, கஷ்டமான சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் அருளில் இருந்து நிராசை அடையவில்லை. சகல காரியங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டார்கள். அதற்காக வேண்டி கோபம் கொள்ளவில்லை. கலக்கம் அடையவில்லை. அல்லாஹ்விடமே கூலியை எதிர்பார்த்தார்கள். சகல காரியங்களிலும் நல்லெண்ணம் கொண்டார்கள். அல்லாஹ்விடம் பொறுப்புச் சாட்டினார்கள்.
நபியவர்கள் பின்ருமாறு கூறினார்கள்,
عَسَى أَنْ يَكُوْنَ فِيْ الْأَمْرِ خَيْرٌ
"தமது காரியங்களில் ஏதும் நலவிருக்கும்".
إنَّهُ رَبِّيْ وَلَنْ يُضِيْعُنِيْ
"நிச்சயமாக அவன் எனது இறைவன். என்னை அவன் வீணாக்க மாட்டான்".
اَللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الْآخِرَةِ
"இறைவா! நிச்சயமாக வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்". தான் விரும்புகின்றவற்றை கண்டால்,
اَلْحَمْدُ لِله ِالَّذِيْ بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ
"அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனது அருளைக்கொண்டே நலவுகள் பூரணமடைகின்றது". என்றும், தான் வெறுக்கின்றவற்றை கண்டால்
اَلْحَمْدُ لِلهِ عَلَى كُلِّ حَالٍ
"சகல நிலமைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்" என்று கூறுவார்கள். நலவுகளையும், அருட்கொடைகளையும் அல்லாஹ்வின்பால் இணைப்பார்கள். அதற்காக வேண்டி நன்றி செலுத்துவார்கள். அதனை நிராகரிக்க மாட்டார்கள்.
நபியவர்கள் பின்ருமாறு கூறுவார்கள்,
الحمد لِلَّهِ غيرَ مودَّعٍ وَلا مُكَافأ ولا مَكْفُورٍ وَلَا مُسْتَغْنًى عنه ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَ مِنَ الطَّعَامِ ، وَسَقَى مِنَ الشَّرَابِ، وَكَسَا مِنَ الْعُرْيِ، وَهَدَى مِنَ الضَّلَالَةِ، وَبَصَّرَ مِنَ الْعَمَى ، وَفَضَّلَ عَلَى كَثِيرٍ مِنْ خَلْقِهِ تَفْضِيلًا
"புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அதில் அவனே தொடராகவும், போதுமானதாகவும், அதனை நிராகரிக்க முடியாதவாரும், அதனை விட்டும் இறைவனை தேவையற்று இருக்க முடியாதவாறும், (அருள் புரிந்தான்). உண்ண, பருக வைத்த, ஆடையற்று இருந்த போது ஆடை அணிவித்து வழிகேட்டிலிருந்து நேர்வழியை காட்டி, குருடாக இருந்த போது பார்வையை காட்டிய, தனது படைப்பினங்களுக்கு அதிக அருள்களை புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”. (நஸாயீ: 10133).
அல்லாஹ் கூறுகிறான், “மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்”. (அல்குர்ஆன்: 16:53).
நபியவர்கள் தொழுகையிலிருந்து ஸலாம் கொடுத்ததன் பின்னர் பிவருமாறு கூறுவார்கள்,
لَا إِلَهَ إلَّا اللهُ، وَلًا نَعْبُدُ إلَّا إيَّاهُ، لَهُ النِّعْمَةُ، وَلَهُ الْفَضْلُ، وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ
“அல்லாஹ்வை தவிர (உண்மையாக வணங்கப்படுவதற்குத் தகுதியான) வேறு இறைவன் இல்லை. அவனை மாத்திரமே வணங்குகிறோம். அழகிய புகழும், சிறப்புகளும், அருட்கொடைகளும் அவனுக்கே உரியது. (முஸ்லிம்: 594).
நபிகளாரினதும், முஸ்லிம்களினதும் கவலைகளை போக்கியதன் பின்னால் அவன் ஏலவே வாக்களித்தவாறு வெற்றிகளையும் அதிகாரங்களையும் அவர்களுக்கு வழங்கினான். மக்கா வெற்றிகொள்ளப்பட்ட போது தலைகுனிந்தவர்களாக அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தியவர்களாக அல்லாஹ்வின் மாளிகையில் நுழைகிறார்கள். மாறாக பெருமை அடித்துக்கொண்டு வசைபாடியவர்களாக நுழையவில்லை.
அல்லாஹ் கூறுகிறான், “நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!” (அல்குர்ஆன்: 8:26).
ஆனால் இணைவைப்பாளர்கள் இதற்கு மாற்றமாக நடந்து கொள்வார்கள். அதாவது அவர்கள் மீது ஏதும் சோதனைகள் இறங்குகின்ற போது அதனை அல்லாஹ் நீக்கி விடுகின்றான். அதன்பின் அவர்கள் தங்களின் தீய காரியங்களில் மூழ்கி விடுகிறார்கள். அதனை அல்லாஹ் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ் கூறுகிறான், “ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்”. (அல்குர்ஆன்: 23:75).
“இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான்”. (அல்குர்ஆன்: 39:08).
இதுதான் தன்னை படைத்த இறைவனிடத்தில் உதவி தேடுபவர்களின் எதார்த்தமாக இருக்கிறது. கஷ்டமான நிலமைகளில் அவனிடம் உதவி தேடுகிறான். அந்த கஷ்டங்களை போக்கினால் யாரிடம் பிரார்தித்தானோ அவனை மறந்து விடுகிறான். தனது முன்னைய நிலைமை போல் அவனது நிலைமை மாறி விடுகிறது. அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடுகிறான். இவ்வாறு அல்லாஹ் இதேபோன்று பல இடங்களில் கூறிக்காட்டுகிறான்.
அல்லாஹ் கூறுகிறான், “மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான். ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. (அல்குர்ஆன்: 10:12).
நபியவர்கள் தனது வாழ்வில் ஏற்பட்ட சகல காரியங்களிலும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தார்கள். இந்த இடத்தில்தான் தனது தூதரை நன்கு அறிய வேண்டிய, அவர் மீது அன்பு காட்ட வேண்டிய தேவை ஏற்படுகிறது. அவர் மீது நாம் அன்பு வைத்தால் அவரின் வழிகாட்டலை பின்பற்றுவோம். அவரின் வழிகாட்டலை பின்பற்றினால் நாம் நேர்வழி பெற்றவர்களாக மாறலாம்.
நபியவர்கள் எமக்கு பல நன்மாராயங்களை கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்றுதான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு கூறிய செய்தி. அவர்கள் கூறினார்கள், “நீங்கள் வெறுக்கும் பொறுமையில் பல நலவுகள் இருக்கின்றன. வெற்றி என்பது பொறுமையோடு இருக்கிறது. துன்பத்துடன் விடுதலை இருக்கிறது. கஷ்டத்துடன் இலகு இருக்கிறது”. (அஹ்மத்: 4/287)
அல்லாஹ் கூறுகிறான், “எனவே நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது”. (அல்குர்ஆன்: 94:5-6).
இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ‘துன்பமும், விடுதலையும், கஷ்டமும், இலகும் சேர்ந்து இருப்பதன் இரகசியம் என்னவெனில், அடியானுக்கு கடுமையான துன்பம் ஏற்பட்டால் படைப்பினங்களோடு நிராசையடைந்து விடுகிறான். அல்லாஹ்வோடு மாத்திரம் அவனது உள்ளம் தொடர்போடு இருக்கிறது. இதுதான் அல்லாஹ்வின்பால் தவக்குல் வைப்பதன் வெளிப்பாடாகும்’. (ஜாமியுல் உலூமி வல்ஹிகம்: 382).
அல்லாஹ் கூறுகிறான், “எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்”. (அல்குர்ஆன்: 65:03).
கஷ்டமான நிலமைகளில் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் நபி யூனுஸ் (அலை) அவர்களின் பிரார்த்தனையாகும்.
அல்லாஹ் கூறுகிறான், “ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் - (மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள் வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்”. (அல்குர்ஆன்: 37:143-144)
அவர்களின் தஸ்பீஹ் பின்வருமாறு இருந்தது.
لَا إلهَ إلَّا أنْتَ سُبْحَانَكَ إنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ
அல்லாஹ் கூறுகிறான், “எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார். எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம். (அல்குர்ஆன்: 21:87-88).
நபி யூனுஸ் (அலை) அவர்களின் கஷ்டமான நிலைமையையும் வெற்றியிலிருந்து நிராசையடைந்து, மரணத்தை தன்முன்னே கண்ட, பிர்அவ்னுடைய கஷ்டமான நிலைமையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். பிர்அவ்ன் பின்வருமாறு கூறினான்.
அல்லாஹ் கூறுகிறான், “அவன், ‘இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான். (அல்குர்ஆன்: 10:90).
நபி யூனுஸ் (அலை) அவர்கள் முன்னர் ஸாலிஹான நல்லமல்கள் செய்திருந்தார்கள். சந்தோசமான நிலமைகளில் அல்லாஹ்வோடு இருந்தார்கள். அதனால் அல்லாஹ் அவர்களுக்கு, அவர்களின் பிரார்த்தனைக்கு விடையளித்து, வெற்றியை கொடுத்தான். பிர்அவ்ன் சந்தோசமான நிலமைகளில் அநியாயத்திலும், நிராகரிப்பிலும் இருந்தான். அதனால் துன்பத்தின் போதான அவனின் பிரார்த்தனை அவனுக்கு எப்பயனையும் அளிக்கவில்லை.
நல்லடியார்கள், இறைநேசர்கள் மீது கஷ்டமான சூழ்நிலைகளில் அல்லாஹ் இரக்கம் காட்டுகிறான். அவர்களின் துன்பங்களை போக்குகிறான். யார் மார்க்கத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறாரோ அது மிகவும் கடினமானதாகும். நபியவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்வார்கள்,
وَلَاتَجْعَلْ مُصِيْبَتَنَا فِيْ دِيْنِنَا
எங்களை சோதிப்பதாக இருந்தால் அதனை எங்களுடைய மார்க்கத்தில் ஆக்கி விடாதே. (திர்மிதி: 3502).
அல்லாஹ்வின் அருளை யார் ஏற்றுக்கொள்கிறாரோ, அதற்கு அவர் தனது நாவினால் நன்றி செலுத்தி, உடல் உறுப்புகளால் நல்லமல் செய்வார்.
முற்றும்...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.