இஸ்லாமிய வரலாற்றில் தொற்று நோய் – ஓர் விரிந்த பார்வை || MJM Hizbullah (Anvari)
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்திலும், அதற்கு பிற்பட்ட காலங்களிலும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மக்களில் அநேகமானவர்கள் இறந்து போயுள்ளனர். அந்நோய் பற்றியும், அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் முறைகள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் அப்போதிருந்த மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின் ஏற்பட்ட கொள்ளை நோயின் போது முஸ்லிம் சமுதாயம் நபியவர்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, அந்நோயிலிருந்து தம்மைக்காத்துக் கொண்டனர். நோயால் பாதிப்புற்ற பிரதேசங்களுக்கு செல்லவில்லை. நோயினால் பாதிப்புற்ற ஊரில் இருப்பவர்கள் அவ்வூரை விட்டும் வெளியேறவில்லை. இந்நடைமுறையால் பல பிரதேசங்களுக்கு நோய் பரவி, பலத்த உயிர் சேதங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டது.
தற்போதைய சூழ்நிலையில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம் இஸ்லாத்திற்குரியதாக இருந்தாலும் நாம் அதை சொந்தம் கொண்டாடுவது அவ்வளவு ஆரோக்கியமானது கிடையாது. உலகமே வாழ்வதற்கான நடைமுறை ஒன்றை வைத்திருக்கும் நாம் அதனை முன்னரே கூறாமல், யாரோ முஸ்லிமல்லாத ஒருவர் கண்டுபிடித்துக் கூறிய பின் அதை சொந்தம் கொண்டாடுவது எவ்வகையில் நியாயமானது?!.
உலக சுகாதார நிறுவனத்தினால் கொள்ளை நோய், எயிட்ஸ், கொலரா, பெரியம்மை, தட்டம்மை, காசநோய், மலேரியா, தொழுநோய், மஞ்சள் காய்ச்சல், கொரோனா ஆகியவைகள் உலகம்பரவு நோய்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
நாம் வாசிப்பின் மூலமும், ஒலி-ஒளி ஊடகங்கள் மூலமும் நோய்த் தொற்று பற்றியும், அதிலிருந்து எம்மை எவ்வாறு காத்துக்கொள்வது என்பது பற்றியும் நிறையவே அறிந்து வைத்திருப்போம். ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாறான நோய்த்தொற்றுகள் ஏற்பட்டது பற்றியும் நாம் தெரிந்து வைத்திருப்பது காலத்தின் தேவையாகும்.
அதனால் நாம் பின்வரும் பயன்களை அடைந்துகொள்ள முடியும்:
01. கொரோனாவை விடவும் உயிர்களை காவுகொள்ளும் கொடிய தொற்று நோய்கள் இதற்கு முன்னர் இருந்துள்ளது என்பதை அறிதல்.
02. தொற்று நோய் பற்றிய நபி (ஸல்) அவர்களின் போதனைகள் அப்போதைய மக்களுக்கு எவ்வாறு இருந்தது என்பதை அறிதல்.
03. தொற்று நோயை நபித்தோழர்கள் கையாண்ட விதத்தை அறிதல்.
04. தொற்று நோயால் மரணித்தோரின் எண்ணிக்கையை கொரோனாவினாலும், சமீபத்திய தொற்று நோய்களாலும் மரணித்தோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு ஓர் ஆய்வறிக்கையைப் பெறல்.
05. தொற்று நோயிலிருந்து மக்களைக் காக்க இஸ்லாம் கூறிய வழிகளை முஸ்லிம் அல்லாத ஒருவர் கூறுவதற்கு முன்னரே நாம் மக்களிடம் கூறி, அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கையை ஆரம்பிக்க உத்தேசித்தல்.

தொற்று நோய் என்பதை இஸ்லாம் ஆதரிக்கிறதா?
நாம் தலைப்பிற்குள் செல்வதற்கு முன்னர் காலத்தின் தேவை கருதி இக்கேள்விக்கும் பதிலைக் காண்பது அவசியமாகிறது.
தொற்று நோய்கள் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளை ஆய்வு செய்து பார்க்கும் போது தொற்று நோய் என்பது இருக்கிறதா? இல்லையா? என்றில்லாமல் அது பற்றிய எமது நம்பிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்? என்றே எமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம் பார்ப்பதும் (இறந்தவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதி) ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. 'ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது” (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 5757).
மேற்கூறப்பட்ட ஹதீஸில் பறவை சகுனம், ஆந்தை சகுனம், பீடை என்பவற்றைப் போன்றே மக்கள் தொற்று நோயையும் ஓர் சகுனமாகவும், பீடையாகவும் கருதி வந்தனர். அது மிகப்பெரும் இணைவைத்தல் எனக்கூறி, அந் நம்பிக்கையைத் தகர்த்து, சகுனம் பார்ப்பது கூடாது எனக் கூறி, தனது நம்பிக்கையை அல்லாஹ்வின் மீது மாத்திரம் வைக்குமாறே இச்செய்தி எமக்குக் கற்றுத் தருகிறது. சிறியதாக காய்ச்சல் ஏற்பட்டாலும் நாம் இவ்வாறான நம்பிக்கையில் இருந்தால் அதுவும் எம்மை இணைவைத்தலுக்கே கொண்டு போய் சேர்க்கும். எனவே எமது நம்பிக்கையை நாம் அல்லாஹ்வின் மீது மாத்திரமே உறுதியாய் வைக்க வேண்டும்.
ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: புஹாரி 5729).

மேற்கூறப்பட்ட ஹதீஸில் நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகக் கூறி, அதற்கான தற்காப்பு முறையை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே நோய் என்பது அல்லாஹ்வின் நாட்டத்துடன் தொடர்பானது. அது அவன் நாடியோருக்கு வரச் செய்கிறான். இறை விசுவாசி அல்லாதோருக்கு அது ஏற்பட்டால் அது அவர்களுக்குரிய தண்டனையாகவும், இறைவிசுவாசிக்கு ஏற்பட்டால் அது அவனுக்கான அருள் எனவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். நாம் முதலில் அல்லாஹ்வின் மீதான எமது நம்பிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அடுத்ததாகவே பாதுகாப்பு நடவடிக்கை மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
தொற்ற நோய் இருப்பதாக ஒருவர் இனம் காணப்பட்டாலோ, அல்லது அவருடன்  பௌதீக தொடர்பை நாம் வைத்தவுடனோ அவரை தரக்குறைவாகவும், ஏளனமாகவும் பார்ப்பதை நாம் முதலில் தவிர்க்க வேண்டும். அதனால் மாத்திரம் அந்நோய் எம்மை தாக்குவது கிடையாது. அவரிடமிருந்து கடத்தப்படும் கிருமி கூட, நோயாக எம்மை அண்டி உடனே நோயாளியாக்கிவிடாது. அக்கிருமி முதலில் எமது உடலில் நுழைய வேண்டும். நாம் அதற்கேற்றாற் போல் பாதுகாப்பாக இருந்தால் அது எம்மில் நுழையாது. அவ்வாறு மீறி நுழைந்தால் அங்கு தன்னை நிலை நிறுத்திக்கொண்டு பல்கிப் பெருகி நோய்க்கான அறிகுறிகளை எமக்கு தர வேண்டும். அதற்கிடையில் எமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதைக் கண்டறிந்து கொன்று விட்டால் அது பல்கிப் பெருகுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். அதையும் மீறி நோய் ஏற்பட்டால் எமது உடல் அதை வெளியேற்றுவதற்கு அதிகம் பாடுபடும். இவ்வாறு பல கட்டங்களைத் தாண்டி தான் நோய் என்பது எம்மைத் தாக்க வேண்டும். அது அல்லாஹ் தான் நாடியோருக்கே வழங்குகிறான். எனவே தொற்று நோய் உள்ளவரை சகுனமாகப் பார்ப்பதும், அவர்களை கௌரவக் குறைவோடு நடாத்துவதும் ஆகுமான ஒன்றல்ல.

வரலாற்றில் தொற்று நோய்கள்
சமீபத்திய மூன்று நூற்றாண்டுகளுக்குள்ளே அதிகமான நோய்கள் பரவியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதற்கு ஆதாரமாக ஆங்கிலேய குறிப்புகளை மாத்திரமே அது வைத்துள்ளது. ஆனால் அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே உலகம்பரவு தொற்று நோய் இருந்துள்ளதாக இஸ்லாமிய வரலாறு குறிப்பிடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், அவர்களுக்கு அடுத்து வந்த நான்கு கலீபாக்கள் காலத்திலும், உமையாக்கள், அப்பாஸியர்கள் போன்றோரின் ஆட்சிக்காலத்திலும் இவ் உலகம் பரவு தொற்று நோய் இருந்துள்ளது.
அக்காலத்தில் கொள்ளை நோயே (பிளேக்) உலகை உலுக்கிய ஓர் நோயாக இருந்தது. இது யெர்சினியா பெஸ்ட்டிஸ் என்ற நுண்ணியிரியினால் உண்டாகிறது. மனிதன் அறிந்த மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. இது ஒருவரின் உடலை அழுக வைத்து, அவரை கொன்றுவிடும். வெப்ப மண்டலம், அதன் சார்  பகுதிகள் மற்றும் மித வெப்ப நாடுகளில் இது இன்றும் ஏற்படுகிறது. அதன் பிற்பட்ட காலங்களில் அனைத்து வித தொற்று நோய்களுக்கும் கொள்ளை நோய் எனும் பெயரே பிரசித்தமாக வைக்கப்பட்டது.

காலம் ரீதியாக தொற்று நோய்கள்
நபி (ஸல்) அவர்கள் காலம்
01. யூதர்களுக்கு ஏற்பட்ட கொள்ளை நோய்கி.பி 541-542.
02. ஷைரவைஹி கொள்ளை நோய் ஹிஜ்ரி 06 கி.பி 627.
03. தொழுநோய்.
04. சிறங்கு நோய்.
குலபாஉர் ராஷிதீன்கள் காலம்

01. அமவாஸ் கொள்ளை நோய்ஹிஜ்ரி 18 கி.பி 639.
உமையாக்கள் காலம்
01. அல்ஜாரிஃப் தொற்று நோய்ஹிஜ்ரி 69 கி.பி 688.
02. அஷ்ராஃப் தொற்று நோய்ஹிஜ்ரி 87 கி.பி 705.
03. முஸ்லிம் இப்னு குதைபா தொற்று நோய்ஹிஜ்ரி 131 கி.பி 748.
அப்பாஸியர் காலம்

01. அப்பாஸியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட கிழக்குப் பிராந்திய மற்றும் மேற்கு பிராந்திய நாடுகளில் ஏற்பட்ட தொற்று நோய்.
02. அவர்கள் அல்லாத ஏனைய காலங்களில் ஏற்பட்ட தொற்று நோய்கள்.

. நபி (ஸல்) அவர்களின் காலம்:
01. யூதர்களுக்கு ஏற்பட்ட கொள்ளை நோய்கி.பி 541-542.
இது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அல்லாது அவர்களுக்கு முன்னரே பரவிய ஓர் நோயாகும். இது ஐரோப்பாவில் ஏற்பட்ட Plague of Justinian எனப்படும் ஒருவகை கொள்ளை நோயாகும். இது அக்காலத்தில் யூதர்களுக்கு தண்டனையாக ஏற்பட்ட ஓர் கொடிய நோயாக இஸ்லாம் குறிப்பிடுகிறது. நபி (ஸல்) அவர்கள், கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ராயீல்களின் ஒரு கூட்டத்தார் மீது அல்லது உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது (அவர்களின் அட்டூழியங்கள் அதிகரித்துவிட்டபோது) அனுப்பப்பட்ட ஒரு(வகை) வேதனையாகும்” (அறிவிப்பவர்: ஆமிர் இப்னு ஸஅத் (ரழி), நூல்: புஹாரி 3473, முஸ்லிம் 2218) எனக் குறிப்பிட்டார்கள். இது ஐரோப்பாவின் மக்கள் சனத்தொகையின் 50-60% மக்களின் இறப்புக்கு காரணமானது.
02. ஷைரவைஹி கொள்ளை நோய்ஹிஜ்ரி 06 கி.பி 627.
இது மதீனாவில் நபியவர்கள் தோற்றுவித்த  இஸ்லாமிய அரசுக்கு உட்படாத மதாஇன் எனும் பிரதேசத்தில் தோன்றியது. இப்னு குதைபா (ரஹ்) போன்ற அறிஞர்கள் இந்நோயை இஸ்லாமிய வரலாற்றில் சேர்ப்பதில்லை. அதற்கு காரணம் மதாஇன் அன்றைய சசானிட் பேரரசின் (பாரசீகப் பேரரசு - தற்போதைய இராக், ஈரான்)  ஆதிக்கத்திற்கு கீழ் இருந்தது. சசானிட் பேரரசின் அரசன் ஷைரவைஹி இந்நோயால் பாதிக்கப்பட்டு, இறந்ததால் அத்தொற்று நோய்க்கும் இப்பெயரே வைக்கப்பட்டது. சசானிட் பேரரசின் தலைநகரமாக மதாஇனே அப்போது திகழ்ந்தது. இஸ்லாமிய சாம்ராஜ்யம் மக்கா வெற்றிக்குப் பின்னரே பலம் பொருந்திய சாம்ராஜ்யமாக மாறியது. அது வரை மதாஇன் பற்றிய செய்திகள் மதீனா முஸ்லிம்களுக்கு எட்டவில்லை. ஆனாலும் அரேபிய தீபகற்பத்தில் ஆங்காங்கே இந்நோய் காணப்பட்டமையால் நபியவர்களும் இது குறித்து முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
நபியவர்கள் மதீனாவிற்கு வரும் போதும் மதீனா நோய்கள் நிறைந்த பூமியாகவே இருந்துள்ளது. ஆஇஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள், நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய் நொடிகள் அதிகமான (பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) 'புத்ஹான்' எனும் ஓடையில் மோசமான (கெட்டுப்போன) தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது”. பல நபித்தோழர்கள் அவ் ஊரைப் பற்றி நபியவர்களிடம் முறையிட்ட போது நபியவர்கள்,இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போல் அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்குவாயாக! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாவு, முத்து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ பரக்கத் செய்வாயாக! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை 'ஜுஹ்ஃபா' எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்வாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்  (அறிவிப்பவர்: ஆஇஷா (ரழி), நூல்: புஹாரி 1887, முஸ்லிம் 1376).
அதன் பின் நபியவர்கள் மதீனாவில் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்கள். மக்களுக்கு சுத்தம் பற்றியும், சுகாதாரம் பற்றியும் தெளிவைக் கொடுத்த பின் அப்பூமி சுத்தமான காற்றையும், ஆரோக்கியமான நீரையும் வழங்கும் பூமியாக மாறிவிட்டது. அத்தோடு, மதீனா நகருக்கு தஜ்ஜால் வருவான். அதை வானவர்கள் காவல் காத்துக் கொண்டிருப்பதைக் கண்பான். எனவே, அதை தஜ்ஜால் நெருங்கமாட்டான்; அல்லாஹ் நாடினால் கொள்ளைநோயும் அணுகாது” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி), நூல்: புஹாரி 7134, முஸ்லிம் 2934) எனவும் கூறினார்கள்.
இதையடுத்தே நபியவர்கள் ஓர் முன்னறிவிப்பொன்றைச் செய்தார்கள், அவ்ஃப் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள். தபூக் (சிரியாவுக்கு அருகில்) போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், 'இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள்: 1. என்னுடைய மரணம் 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல். 3. ஆடுகளுக்கு வருகிற (ஒரு வகை) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் (அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள்) –நீண்ட செய்தியின் ஒரு பகுதி- (புஹாரி 3176).
03. தொழுநோய்.
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தொழுநோயும் ஓர் தொற்று நோயாக இருந்ததாக அதிக செய்திகள் காணப்படுகின்றன. அவர்கள் காலத்தில் அதுவே அதி பயங்கர தொற்றாக இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் இருந்ததால் அது பற்றி அதிகமான ஹதீஸ்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நீ சிங்கத்திடமிருந்து விரண்டு ஓடுவதைப் போல் தொழுநோயாளியிடமிருந்தும் விரண்டோடு” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: அஹ்மத் 9853).
(நபியவர்களுக்கு பைஅத் செய்வதற்காக வந்த) ஸகீப் கோத்திரத்தவர்களில் ஒருவர் தொழுநோயாளியாக இருந்தார். நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் ஒருவரை அனுப்பி, (கையைத் தொட்டு பைஅத் செய்வதற்கு பதிலாக) உனது பைஅத்தை நாம் ஏற்றுக்கொண்டோம். நீ திரும்பிச் செல்லலாம் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அஷ்ஷரீத் இப்னு ஸுவைத் அஸ்ஸகபீ (ரழி), நூல்: முஸ்லிம் 2231)
04. சிரங்கு நோய்.
அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் 'தொற்று நோய் கிடையாது; ஸஃபரும் கிடையாது; (இறந்தவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை பற்றிய நம்பிக்கையும் உண்மையல்ல' என்று கூறினார்கள்.
அப்போது கிராமவாசி ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியமாக) இருந்த ஒட்டகங்களுக்கிடையே சிரங்கு பிடித்த ஒட்டகம் கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே?' என்று கேட்டதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , 'முதல் ஒட்டகத்திற்கு (அதை)த் தொற்றச் செய்தது யார்?' என்று (திருப்பிக்) கேட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 5717, முஸ்லிம் 2220).

. குலபாஉர் ராஷிதீன்கள் காலம்
01. அமவாஸ் கொள்ளை நோய்ஹிஜ்ரி 18 கி.பி 639.
இது உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் பைதுல் மக்திஸ் வெற்றிகொள்ளப்பட்ட பின் ஏற்பட்ட ஓர் நோயாகும். இது அன்றைய பலஸ்தீனின் ஓர் சிற்றூரான அமவாஸ் எனும் ஊரில் தோன்றியதால் அதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இது படிப்படியாக சிரியா, துர்க்கி, ஈராக், லெபனான், சைப்ரஸ், ஜோர்டான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய ஷாம் பிரதேசம் முழுவதும் பரவியது. அது முஸ்லிம்களுக்கும், ரோமானியர்களுக்கும் பயங்கரமான யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலமாகும். அப்போது முஸ்லிம்கள் அதிக நாடுகளை வெற்றிகொண்டார்கள். அக்காலத்தில் யுத்தத்தால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டோரில் அதிகமானவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படமாலே அழுகிப்போகின. அதற்குப் பின்னரே இந்நோய் பரவ ஆரம்பித்தது.
முஸ்லிம்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதை அறிந்த உமர் (ரழி), ஹிஜாஸ் (மக்காவையும், மதீனாவையும் இணைத்த இஸ்லாமிய அரசு) நாட்டிலிருந்து ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். 'சர்ஃக்' எனுமிடத்தை அவர்கள் அடைந்தபோது ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி), நான் நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன், ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அவ்வூரைவிட்டு) வெளியேறாதீர்கள்' என்று கூறியுள்ளார்கள் என்றார்கள். உடனே உமர் (ரழி) அவர்கள், (தம் முடிவு நபி (ஸல்) அவர்களின் வழி காட்டுதலுக்கேற்பவே அமைந்திடச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஆமிர் (ரழி), நூல்: புஹாரி 5730, முஸ்லிம் 2219).
அமவாஸ் நோயினால் 25,000 இற்கும் அதிகமான மக்கள் கொத்து கொத்தாக இறந்து போனார்கள். அதில் நபித்தோழர்களும் அடங்குவார்கள். அன்றைய ஷாம் பிரதேசத்தின் மக்கள் தொகையில் இது பாரிய ஓர் இழப்பாகும். இதில் குறிப்பாக ஷாம் பிரதேசத்தின் இரு கவர்ணர்களான அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரழி), முஆத் இப்னு ஜபல் (ரழி) ஆகிய இருவரும் இந்நோயால் மரணித்தார்கள். அவர்களும் இந்நோயைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்து எதுவும் பலனளிக்கவில்லை. மூன்றாம் கவர்ணரான அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்களே இந்நோயைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்கினார்கள். மக்கள் அனைவரையும் மலைகளுக்கு மேலே ஏறச் செய்து இந்நோயின் வீரியத்தைக் குறைத்தார்கள். இருந்தும் இந் நோயினால் மக்களோடு மக்களாக யஸீத் இப்னு அபூ ஸுப்யான் (ரழி), அல்ஹாரிஸ் இப்னு ஹிஷாம் (ரழி), ஸுஹைல் இப்னு அம்ர் (ரழி), உத்பா இப்னு ஸுஹைல் (ரழி) போன்ற பெரும் பெரும் ஸஹாபாக்களும் மரணித்தார்கள்.

. உமையாக்கள் காலம்
01. அல்ஜாரிஃப் தொற்று நோய்ஹிஜ்ரி 69 கி.பி 688.
ஜாரிஃப் எனும் அரபு சொல்லுக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லல் எனும் அர்த்தம் உள்ளது. ஈராக்கில் உள்ள பஸரா எனும் பகுதியில் அதிகமானோர் கொத்து கொத்தாக மரணித்ததன் விளைவாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது உமையாக்களின் ஆட்சிக்காலத்தில் பஸராவிற்கு கவர்ணராக அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரழி) அவர்கள் இருந்த போதே ஏற்பட்டது. மூன்று நாட்கள் மாத்திரமே பரவிய இந்நோயால் 70,000 பேர் பலியானார்கள். இதில் அரபு இலக்கண மேதையான அபுல் அஸ்வத் அத்துவலி (ரஹ்), கபீஸா இப்னு ஹரீஸ் (ரஹ்) எனும் ஹதீஸ் அறிவிப்பாளர் போன்றோரும் பலியானார்கள். அவ்வாறே அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என 73 பேரும், அப்துர் ரஹ்மான் இப்னு அபூ பக்கர் (ரழி) அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என 40 பேரும் இறந்தார்கள்.
02. அஷ்ராஃப் தொற்று நோய்ஹிஜ்ரி 87 கி.பி 705.
அஷ்ராஃப் என்பது முக்கியஸ்தர்கள் என்பதைக் குறிக்க அரபியில் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இத்தொற்று நோயால் சமூகத்தில் உயர் அந்தஸ்த்தில் இருந்தவர்களும் மரணித்தமையால் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. குறிப்பாக உமையா இப்னு அப்துல்லாஹ் இப்னு ஹாலித் (ரஹ்), முத்ரிஃப் இப்னு அப்துல்லாஹ் இப்னு அஷ்ஷுஹைர் (ரஹ்) போன்ற ஹதீஸ் அறிவிப்பாளர்கள் மரணித்தார்கள். இந்நோய் ஈராக்கின் பஸரா, வாஸித், கூபா ஆகிய ஊர்களிலும், ஷாம் பிரதேசத்தின் ஏனைய நாடுகளிலும் பரவியது. இந்நோய் முதலில் பெண்களுக்கு ஏற்பட்டு, அதன் பின்னரே ஆண்களுக்கு ஏற்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அப்போது இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் அரசராக வலீத் இப்னு அப்துல் மலிக் (ரஹ்) அவர்களும், ஈராக்கின் கவர்ணராக ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அஸ்ஸகபீ அவர்களும் திகழ்ந்தார்கள். இதில் அதிகமானவர்கள் இறந்தார்கள் எனும் தகவலைத் தவிர குறிப்பிட்ட எண்ணிக்கை பற்றி எவ்வித அறிவிப்புக்களும் வரலாற்றாசிரியர்களிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை.
03. முஸ்லிம் இப்னு குதைபா தொற்று நோய்ஹிஜ்ரி 131 கி.பி 748.
இதுவும் ஈராக்கில் குறிப்பாக பஸராவில் பரவிய நோயாகும். இந்நோயால் முதலில் மரணித்தவர் முஸ்லிம் இப்னு குதைபா (ரஹ்) என்பதால் இந்நோய்க்கு இப்பெயரே வைக்கப்பட்டது. இது இவ்வருடத்தின் ரஜப் மாதத்தில் தொடங்கி, ரமழான் வரை மூன்று மாதங்களாக தாக்கம் செலுத்தி வந்தது. நோன்பில் மாத்திரம் சில நாட்களில் 1000 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்காலத்தில் அய்யூப் இப்னு அபூ தமீமா அஸ்ஸஹ்தியானீ (ரஹ்), மன்ஸூர் இப்னு ஸாதான் (ரஹ்), இஸ்ஹாக் இப்னு ஸுவைத் அல்அத்வீ (ரஹ்) போன்ற அதிகமான ஹதீஸ் அறிவிப்பாளர்கள் மரணித்தார்கள்.
ஹிஜ்ரி முதலாம், இரண்டாம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற இவ் ஆறு பிரசித்தமான நோய்களே இஸ்லாமிய வரலாற்றில் அதிக உயிர்களைக் காவு கொண்ட தொற்று நோய்கள் என இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இது தவிர சிறு சிறு தொற்று நோய்கள் உமையாக்கள் சாம்ராஜ்யத்தில் அவ்வப்போது பரவி, காணாமல் போயுள்ளன. அவை வருமாறு:
. ஹிஜ்ரி 50 – கி.பி 670ல் கூபாவில் ஏற்பட்ட தொற்று நோய். இதில் முகீரா இப்னு ஷுஃபா (ரழி) அவர்கள் மரணித்தார்கள்.
. ஹிஜ்ரி 66 – கி.பி 685ல் எகிப்தில் ஏற்பட்ட தொற்று நோய். இதில் உமையா சாம்ராஜ்யத்தின் கவர்ணரான அப்துல் அஸீஸ் இப்னு மர்வான் (ரஹ்) அவர்கள் மரணித்தார்கள்.
. ஹிஜ்ரி 100 – கி.பி 718ல் அதீ இப்னு அர்தா எனும் தொற்று நோய்.
. ஹிஜ்ரி 127 – கி.பி 744ல் காகத் தொற்று நோய்.
ஆக மொத்தத்தில் உமையாக்கள் ஆட்சிக்காலத்தில் ஷாம் பிரதேசத்தில் மாத்திரமே தொற்று நோய்கள் மாறி  மாறி இடம்பெற்றுள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாக சில சிறிய ஊர்கள் அழிந்து போயின. பல மக்கள் இடம்பெயர்ந்து சென்றார்கள். அதிகமான இஸ்லாமிய அறிஞர்கள் மரணித்தார்கள். இஸ்லாமிய அறிவைப் பெற முடியாததினால் மக்கள் ஜோதிடர்களிடமும், கப்றில் அடக்கம் செய்யப்பட்ட நல்லடியார்களிடமும் செல்ல முற்பட்டார்கள்.

. அப்பாஸியர்கள் காலம்
அப்பாஸியர் ஆட்சிக் காலம் ஹிஜ்ரி 132 – கி.பி 749 தொடக்கம் ஹிஜ்ரி 656 – கி.பி 1258 வரை சுமார் ஐந்து நூற்றாண்டுகளாக நீடித்தது. அதில் குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மாத்திரம் இங்கு பார்ப்போம்.
01. ஹிஜ்ரி 221 – கி.பி 836ல் பஸராவில் ஏற்பட்ட தொற்று நோயால் அதிகமானவர்கள் இறந்தார்கள்.
02. ஹிஜ்ரி 423 – கி.பி 1032ல் சிந்து சமவெளி என அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் ஓர் தொற்று நோய் உருவாகி அது தற்போதைய ஆப்கானிஸ்தானிலுள்ள காசுனி, ஹுராஸான் போன்ற நகரங்கள் தொடக்கம், ஈரானிலுள்ள கோர்கன், இரே, இஸ்பஹான் போன்ற நகரங்களூடாக எகிப்திலுள்ள ஹெல்வான், இராகிலுள்ள மௌஸில், பக்தாத் வரை பரவியது. இஸ்பஹானில் மாத்தரிம் 40 ஆயிரம் மக்கள் இதனால் உயிரிழந்தனர்.
03. ஹிஜ்ரி 425 – கி.பி 1034ல் ஈரானிலுள்ள சீராஸ் எனும் இடத்தில் ஆரம்பித்து இராக்கிலுள்ள வாஸித், அஹ்வாஸ், பஸரா, பக்தாத் வரை பரவிய தொற்று நோயால் குறுகிய காலத்தில் 70,000 பேர் உயிரழந்தனர்.
04. ஹிஜ்ரி 439 – கி.பி 1047ல் ஈராக்கிலுள்ள மௌஸில், அல் ஜஸீரா (மொசபத்தேமியா) , பக்தாத் ஆகிய பிரதேசங்களில் பரவிய தொற்று நோயால் 3 இலட்சம் பேர் உயிரிழந்தனர். மொஸிலில் மாத்திரம் ஒரே தடவையில் 400 ஜனாஸாக்கள் தொழுவிக்கப்பட்டன.
05. ஹிஜ்ரி 449 – கி.பி 1057ல் உஸ்பகிஸ்தான் பகுதியில் வரலாறுகாணாத பாரிய தொற்றுநோய் பரவியதன் விளைவாக அவ்வூரிலிருந்து ஒரே நாளில் 18,000 பேர் இடம்பெயர்ந்தார்கள். மீதமிருந்தவர்கள் அனைவரும் அதில் இறந்தனர். அவர்களது தொகை 16 இலட்சத்து 50,000 ஐத் தாண்டியது. ஸமர்கந்து, பல்கு போன்ற நகரங்களில் நாளாந்தம் 6000க்கும் மேற்பட்டோர் மாண்டனர். அங்கிருந்து இராக், ஈரானின் பல நகரங்களுக்கு ஊடுறுவியது. அப்பகுதிகளில் ஒரே கப்ரில் 20 – 30 நபர்கள் என அடக்கம் செய்யப்பட்டனர். மரணித்தவர்களை குளிப்பாட்டி, கபனிடுவதிலே ஏனையோரின் நேரங்கள் செலவாகின. இப்பணியில் ஈடுபட்டவர்களும் தொற்றின் காரணமாக இறந்தனர். அவ்வூரில் 2000 வீடுகள் பூட்டப்பட்டன. மக்கள் யாரும் அங்கு குடியிருக்கச் செல்லவில்லை. இறுதியில் அனைவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோறி, வணக்க வழிபாடுகளிலும், தானதர்மங்களிலும் ஈடுபட்டனர். களியாட்டங்கள், மது, விபச்சாரம் போன்றவற்றை விட்டு விட்டு, பள்ளியும், அல்குர்ஆனும் என அவர்கள் ஒதுங்க ஆரம்பித்தனர். அதன்பின்னர் தான் அவர்களைத் தொற்றிய அக்கொடிய நோய் அகன்றது. 
06. ஹிஜ்ரி 455 – கி.பி 1063ல் எகிப்தில் பத்து மாதங்களாக ஓர் தொற்று நோய் பரவி இருந்தது. அதில் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 1000 பேர் வரை இறந்தனர்.
07. ஹிஜ்ரி 469 – கி.பி 1076ல் டமஸ்கஸ் பிரதேச்சில் 5 இலட்சம் மக்களே வாழ்ந்து வந்தனர். அங்கு ஏற்பட்ட ஓர் தொற்று நோயின் காரணமாக வெறும் 3500 பேரைத் தவிர மற்ற அனைவரும் மரணித்தனர்.

. மங்கோலியர்கள் ஹிஜ்ரி 656 – கி.பி 1258
மங்கோலியர்கள் பக்தாதை ஆக்கிரமித்து அதை அழித்த விதம் பற்றி இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள், பக்தாதில் பல மாதங்களாக பள்ளிவாயில்கள் மூடப்பட்டு, ஜும்ஆத் தொழுகையும், கூட்டுத் தொழுகையும் பாழ்படுத்தப்பட்டது. மக்களை அதிகமாக கொன்று குவித்ததனால் 40 நாற்களின் பின்னர் பக்தாதில் சொற்பமானவர்களே எஞ்சியிருந்தனர். இறந்தவர்களின் சடலங்கள் பாதையில் அநாதையாகக் கிடந்தன. பெரும் மழை ஒன்று பெய்து அவைகள் அழுகி ஒரு வகையான துர்வாடை வீசத் துவங்கியது. அதிலிருந்து ஒருவகை தொற்றுக்கள் உருவாகி அவை காற்றுடன் கலந்து ஷாம் பிரதேசம் முழுக்க வீசத் தொடங்கியது. இதன் காரணமாக அதிகமானவர்கள் மரணித்தார்கள். மக்களுக்கு கஷ்டமும், அழிவும் நோய்களும் பரவ ஆரம்பித்தன. (பார்க்க: இப்னு கஸீர் 13/203).

. மம்லூகியர்கள் ஹிஜ்ரி 648 – கி.பி 1250
இவர்கள் காலத்தில் ஹிஜ்ரி 748 – கி.பி 1347ல் ஷாம் பிரதேசம் முழுவதும் ஒரு வகை தொற்று நோய் பரவியது. இதில் ஹலப், டமஸ்கஸ், குத்ஸ், ஸவாஹில் போன்ற பிரதேச மக்கள் அனைவரும் மரணித்தனர். ஹிஜ்ரி 795 – கி.பி 1392ல் ஹலப் பகுதியில் திரும்பவும் ஒருவித நோய் பரவி 1 இலட்சத்து 50 ஆயிரம் மக்கள் மரணித்தனர். (பார்க்க: அத்தராவினா 2010 /47-48).

. மோரோக்கோ
அல்மோராவிட்ஸ், அல்மோஹாட்ஸ், மரினிட்கள் போன்ற வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் மக்கள் அதிகமான பஞ்சத்திற்கும் நோய்களுக்கும் உள்ளானார்கள். ஹிஜ்ரி 571 – கி.பி 1175 ல் மோரோக்கோ மற்றும் அண்டலூசியாவில் ஒரு வகை தொற்று நோய் பரவி அல்மோஹாட்ஸ் மக்களின் தலைவர் யூஸுப் இப்னு யஃகூப் என்பவரின் நான்கு சகோதரர்களும், 190 பொது மக்களும் ஒரே நாளில் மரணித்தனர். (பார்க்க: பென்லெய் 2002, 124). அவ்வாறே ஹிஜ்ரி 1213 – கி.பி 1798ல் மொரோக்கோவில் அலெக்ஸாண்ட்ரியாவிலிருந்து மொரோக்கோவிற்குள் நுழைந்த வியாபாரிகள் வாயிலாக தொற்று நோய் பரவியது அதில் மொரோக்கோ, துனிசியா, அல்ஜீரியா போன்ற நாடுகளில் ஒரே நாளில் 130 பேர் மரணித்தனர். (பார்க்க: அல்பஸ்ஸாஸ் 1992, 92).

மேலும் சிற குறிப்புகள்:
01. 1342–1352 ஆண்டுகளில் ஏற்பட்ட வேறொருவகை பிளேக் நோயினால், ஐரோப்பிய, ஆசிய ஆப்பிரிக்க மக்கள் சனத்தொகையில் 25-50% மக்கள் இறந்து, உலக மக்கள் தொகையானது கணிசமான அளவில் குறைந்தது. உலக மக்கள் சனத்தொகை கிட்டத்தட்ட 500 மில்லியன்களாக இருந்த அந்த காலகட்டத்தில், ஐரோப்பாவில் மட்டும் 5 வருட கால இடைவெளியில், 25 மில்லியன் மக்கள் அளவில், இந்த நோயினால் இறந்து போனார்கள். இந்த எண்ணிக்கை, ஐரோப்பிய மக்கள் சனத்தொகையில் 30-60% ஆகும். இதனால் இந்த காலமானது ஐரோப்பாவின்கறுப்பு இறப்பு காலம்' (Black Death period) என வர்ணிக்கப்பட்டது.
02. 15ஆம், 16ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பிய தடவியல் அறிஞர்கள், மத்திய, தென் அமெரிக்காவில் அறிமுகமான பெரியம்மை (smallpox), தட்டம்மை அல்லது சின்னமுத்து (measles), தைஃபசு (typhus) போன்ற நோய்கள், அந்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட மக்களில் பல்லாயிரம் இறப்புக்களைத் தோற்றுவித்தது. 1518–1568 காலப்பகுதியில் மெக்சிகோ நாட்டில் மக்கள் சனத்தொகையானது, இந்நோய்களால் 20 மில்லியனிலிருந்து 3 மில்லியனாக குறைவடைந்ததாக அறியப்படுகிறது.
03. 1556–1560 ஆண்டுகளில், ஐரோப்பாவில் முதன் முதலில் அறிமுகமான இன்ஃபுளுவென்சா எனப்படும் ஒருவகைக் காய்ச்சல் தொற்றுநோயானது 20% இறப்பு வீதத்தில் மக்கள் சனத்தொகை குறைவுக்கு காரணமானது.
04. சின்ன அம்மை நோயினால், 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் 60 மில்லியன் மக்கள் இறந்தார்கள். இது வருடமொன்றுக்கு 400,000 மக்கள் இறப்பைக் கொண்டிருந்தது. ஐந்து வயதுக்குட்பட்ட 80% ஆன குழந்தைகளை உள்ளடக்கியிருந்த, தொற்றுக்குட்பட்ட மக்கள் சனத்தொகையில் 30% ஆனோர் இந்நோய்த் தாக்கத்தினால் இறந்து போக, மூன்றில் ஒரு பங்கினர் குருடாகினர்.
05. 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மக்களைத் தாக்கிய காசநோயானது, கிட்டத்தட்ட வளர்ந்தவர்களின் நாலில் ஒரு பங்கினரின் இறப்புக்கு காரணமானது. 1918ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டில் இறப்பவர்களில் ஆறில் ஒருவர் காசநோயால் இறப்பவராக இருந்தார்.
06. 1918ஆம் ஆண்டில் பரவிய ஸ்பைனிய இன்ஃபுளுவென்சா (Spanish Influenza) ஆனது, உலக மக்கள் சனத்தொகையில் கிட்டத்தட்ட 2% மக்களின் (25-50 மில்லியன் மக்கள்) இறப்புக்கு காரணமானது.
07. தற்போதைய காலகட்டத்திலும் புதிது புதிதாக பல இன்ஃபுளுவென்சா காய்ச்சல் அறிமுகமாகிக் கொண்டே இருப்பதும், இதனால் உலகளவில், வருடம்தோறும் 250,000 – 500,000 மக்கள் இறப்பதாக அறியப்படுகிறது.
எனவே அன்பிற்கினிய உறவுகளே! இன்றைய காலத்தில் கொரோனா எனும் ஆபத்தான தொற்று நோய் பீடிக்கப்பட்டுள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம். அதிலும் பல நாடுகளில் அப்பாவி மக்களின் உயிர்கள் கொத்துக் கொத்தாக மடிந்து போவதை எம் கண்களால் பார்த்த வண்ணமும், செவிகளால் கேட்ட வண்ணமும் உள்ளோம். இந்நோய் நாளை எங்களுக்கும் ஏற்படாது என்பதில் எதுவித உறுதியும் கிடையாது. அல்லாஹ்வே எம் அனைவரையும் பாதுகாத்திட வேண்டும். இஸ்லாமிய வாழ்வியல் வழிகாட்டியானது எமக்கு நோய்கள் தொடர்பாக கூறும் அறிவுரைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், ஆண்மீக ரீதியான சிந்தனைகளையும் நாம் கேட்டுப் பயன்பெற வேண்டும். பிறர் நலன் காப்பதில் நபி (ஸல்) அவர்கள் எமக்கு முக்கியமான ஓர் செய்தியைக் கற்றுத் தந்துள்ளார்கள். அதை நாம் கடைபிடித்து வந்தாலே ஆபத்தான நோய்களிலிருந்து எம்மையும், எம் அண்டை வீட்டாரையும், ஊராரையும், நாட்டு மக்களையும் காத்துவிடலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பாத்திரங்களை மூடிவையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாய்ப்பகுதியைச் சுருக்கிட்டு மூடிவையுங்கள். ஏனெனில், ஆண்டின் ஓர் இரவில் தொற்று நோய் இறங்குகிறது. மூடியில்லாத பாத்திரத்தையும் சுருக்கிட்டு மூடிவைக்காத தண்ணீர் பையையும் கடந்து செல்லும் அந்த நோயில் சிறிதளவாவது அதில் இறங்காமல் இருப்பதில்லை.” (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி), நூல்: முஸ்லிம் 2014).
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரழி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஆண்டில் ஒரு நாள் உண்டு. அந்நாளில் தொற்று நோய் இறங்குகிறது" என்று இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் "நமக்கு அருகிலுள்ள அரபியர் அல்லாதோர் டிசம்பர் மாதத்தில் அந்த நாள் வருவதாகக் கருதி அஞ்சுகின்றனர்" என்று லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
எனவே பாத்திரங்களையும், உணவுகளையும் நாம் மாத்திரம் மூடி வைப்பதால் தொற்று நோயிலிருந்து நம்மால் தப்பிக்க முடியாது. அண்டை வீட்டார், ஊர் மக்கள், நாட்டு மக்கள் என அனைவரும் இதைக் கடைபிடிக்க வேண்டும். ஒருவர் மூடாவிட்டாலும் அவரிலிருந்து ஏனையோருக்கு அந்நோய் பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன. இன்னம் கொஞ்ச நாளில் இதையும் யாரோ ஒருவர் கண்டுபிடித்துக் கூறும் வரை காத்திருக்காமல் இப்போதிருந்தே விழிப்புணர்வு நடவடிக்கையில் நாம் இறங்க வேண்டும்.
தொற்று நோய் ஏற்பட்ட பிரதேசத்திற்கு செல்லவும் கூடாது. அது ஏற்பட்ட பிரதேசத்திலிருந்து வெளியேறவும் கூடாது என்பது நபியவர்களின் நோய் தொற்றைக் குறைப்பதற்கான ஓர் வழிகாட்டலாகும். நோய் ஏற்பட்ட பிரதேசத்தில் இருப்பவரின் நிலை என்ன ஆகும் என்பதில் அநேகரும் அச்சத்துடனே இருப்போம். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆண்மீக தகவல் ஒன்றை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.
ஆஇஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்என்று தெரிவித்தார்கள். மேலும், “கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆஇஷா (ரழி), நூல்: புஹாரி 3474).
அமவாஸ் நோய் ஏற்பட்ட போது அதனால் மரணித்த அனைத்து நபித்தோழர்களும் இவ் ஆண்மீகப் போதனையையே பின்பற்றினார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட அந்நோய் அவர்களுக்கு பெரிதாக தென்படவில்லை.
ஷாம் பிரதேசத்திற்கு கவர்ணராக இருந்த அபூ உபைதா (ரழி) அவர்கள் இந்நோயால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக உமர் (ரழி) அவர்கள் அபூ உபைதாவை மதீனாவிற்கு வருமாறு கடிதம் ஒன்றை எழுதினார்கள். ஏனெனில் அவரை அடுத்த கலீபாவாக பிரகடனப்படுத்த உமர் (ரழி) அவர்கள் எண்ணியிருந்தார்கள். அக்கடிதம் கிடைத்ததும் அபூ உபைதா (ரழி) அவர்கள் பின்வருமாறு ஓர் பதிலை எழுதினார்கள், அமீருல் முஃமினீன் அவர்களே என் மீதான உங்கள் தேவையை நான் அறிந்துவிட்டேன். நான் முஸ்லிம்களின் ஓர் படையில் இருக்கிறேன். என்னால் அவர்களைப் புறக்கணிக்க முடியாது. அல்லாஹ் என்னிலும் அவர்களிலும் அவனது விதியை நிர்ணயிக்கும் வரை அவர்களை விட்டும் என்னால் பிரிந்து வரவும் முடியவில்லை. அமீருல் முஃமினீனே என் மீதான உங்கள் உறுதியை தளர்த்துங்கள். என்னை என் படையுடன் இருப்பதற்கு அனுமதி தாருங்கள்.
உமர் (ரழி) அவர்கள் இக்கடிதத்தை வாசித்தவுடன் அழுதுவிட்டார்கள். அப்போது அவரிடமிருந்தவர்கள், அமீருல் முஃமினீனே, அபூ உபைதா இறந்துவிட்டாரா?” எனக் கேட்டனர். அதற்கு உமர் (ரழி) அவர்கள், இல்லை. அவர் மரணத்தை நெருங்கிவிட்டார் எனக் கூறினார்.
அபூ உபைதா (ரழி) அவர்களுக்கும் இந்நோய் ஏற்பட்டது. அவர் மரணிக்கும் போது முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களை தனது படைத்தளபதி பொறுப்பிற்கு நியமித்தார்கள். அவர் படைத்தளபதியாக வந்த உடனே அவரின் மனைவி பிள்ளைகள் அனைவரும் இந்நோயால் பாதிக்கப்பட்டு மரணித்தனர். அவருக்கும் அந்நோய் தொற்றிக்கொள்ளவே அந்நோயைப் பார்த்து, உன்னைத் தவிர இவ்வுலகில் எதைத் தந்தாலும் அது எனக்கு விருப்பத்திற்குரியதாக இருக்காது எனக்கூறினார்கள். அவரும் மரணிக்கும் முன் அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்களை படைத்தளபதி பொறுப்பில் நியமித்துவிட்டு மரணித்தார்கள். (பார்க்க: அல்பிதாயா வந் நிஹாயா, பாகம் 07)
இது போன்ற நபித்தோழர்கள் பற்றிய ஏராளமான சம்பவங்கள் இந்நோய் பரவிய காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவை  அனைத்தும் எமக்கான படிப்பினைகளாகும்.
இறைவா! இந்நோய் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பாயாக! இந்நோய் நமக்கு வர வேண்டுமென நீ நாடியிருந்தால் அதை தண்டனையாக அல்லாமல், உன் அருளாகவே தந்தருள்வாயாக! நீ நாடியபடி அந்நோய் நமக்கும் ஏற்பட்டால் உன் வழியில் உயிர் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன்களை எமக்குத் தந்தருள்வாயாக!

துணை நின்றவை:
01. பத்லுல் மாஊன் ஃபீ பழ்லித் தாஊன்இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்).
02. அத்தவாஈன் ஃபீ ஸத்ரில் இஸ்லாம்நஸீர் பஹ்ஜத் பாழில்.
03. அத்தவாஈன் ஃபில் அஸ்ரில் உமவீநஸீர் பஹ்ஜத் பாழில்.
04. அல்இஃஜாஸ் இணையத்தளம்.
05. ஷபகதுல் அலூகா இணையத்தளம்.
06. விக்கிபீடியா தகவல் களஞ்சியம்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget