ரவ்ழதுல் இல்ம் - 2023 (பாடம் : பிக்ஹ், நாள் : 09)

 


ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவமும் சட்டமும்

அல்லாஹ் கூறுகிறான் : 'தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்' (அல்குர்ஆன் - 02 : 43)

 

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ன கூறினார்கள் : 'யார் மறுமை நாளில் அல்லாஹ்வை முஸ்லிமாக சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றட்டும். அல்லாஹ் உமது நபிக்கு நேர்வழிகளை காட்டியிருக்கிறான். தொழுகையை உரிய நேரத்தில் தொழுவது அவன் காட்டிய வழிகளில் ஒன்றாகும். பள்ளிக்கு பிந்துபவர் வீட்டில் தொழுவதை போன்று நீங்களும் வீட்டில் தொழுதால் உமது நபியின் வழிமுறையை தவறவிட்டவராகி விடுவீர். எவர் நல்ல முறையில் சுத்தமாகி பள்ளிக்கு சென்றால் அவருடைய ஒவ்வொரு எட்டிற்கும் அல்லாஹ் அவருக்கு ஒரு நன்மை வழங்கி, அவரது அந்தஸ்தை உயர்த்தி, பாவத்தையும் மன்னிக்கிறான். முனாபிக் என அறியப்பட்டவர்களை தவிர வேறு எவரும் ஜமாஅத் தொழுகைக்கு பிந்தமாட்டார்கள்';  (ஆதாரம் - முஸ்லிம் : 654)

 

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'ஜமாஅத்தாக தொழுவது தனித்து தொழுவதை விட இருபத்தி ஏழு மடங்கு நன்மை தரக் கூடியது'. (ஆதாரம் - புஹாரி : 645, முஸ்லிம் : 650)

 

ஜமாஅத் தொழுகையின் சட்டம்

            தொழுகையை ஜமாஅத்துடன் பள்ளிவாயலில் தொழுவது கட்டாயக் கடமையாகும்.

நபி ள அவர்களிடம் ஒரு பார்வையற்றவர் வந்து யாரசூலல்லாஹ் என்னை பள்ளிவாயலுக்கு அழைத்துச் செல்ல யாருமில்லை. அதனால் நான் வீட்டில் தொழலாமா? என கேட்டார். அதற்கு நபி ள அவர்கள் உமக்கு அதான் கேட்கிறதா? என கேட்க அம்மனிதர் ஆம் என்றார். அப்போது நபியவர்கள் அதற்கு நீர் பதிலளிப்பீராக (பள்ளிக்கு வருவீராக) என்றார்கள். (ஆதாரம் - முஸ்லிம் : 653)

 

பெண்களுக்கான ஜமாஅத் தொழுகையின் சட்டம்

            பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை கடமையில்லை. ஆனாலும் அவர்கள் பள்ளிக்கு வருவதை தடுப்பது கூடாது. அவர்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே மிகச் சிறந்ததாகும்.

 

ஜமாஅத் தொழுகையை விட்டும் பிந்துபவர்களுக்கான சட்டம்

ஜமாஅத் தொழுகை விட்டும் பிந்துபவர்கள் இரு கூட்டத்தினர்

முதல் கூட்டத்தினர்: மிகக் கடுமையான நோய், உயிராபத்து போன்ற ஏதாவது காரணத்திற்காக  ஜமாஅத் தொழுகை விட்டும் பிந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள். இவர்கள் தனித்து தொழுதால் ஜமாஅத் உடன் தொழுத நன்மையை பெற்றுக் கொள்வார்கள்.

இரண்டாம் கூட்டத்தினர்: எவ்வித காரணமும் இன்றி ஜமாஅத் தொழுகையை விடுபவர்கள். இவர்கள் ஒரு வாஜிபை விட்ட குற்றத்திற்கு ஆளாகின்றனர்.

 

மஃமூமுடன் (பின்பற்றித் தொழுபவர்) தொடர்புடைய சில சட்டங்கள்

பின்பற்றித் தொழுபவர் ஒரு போதும் இமாமை முந்தக்கூடாது. (இமாம் ருகூஃ செய்யாமல் ருகூஃ செய்யக் கூடாது, இமாம் ஸுஜூது செய்யாமல் ஸுஜூது செய்யக் கூடாது.)

இமாம் ருகூஃவிலிருந்து எழுமுன் மஃமூம் தொழுகையில் சேர்ந்தால் அந்த ரக்அத்தை அடைந்தவராகக் கருதப்படுவார். அவ்வாறில்லாத பட்சத்தில் அடுத்த ரக்அத்துக்காக இமாம் எழும்வரை காத்திருக்கத் தேவையில்லை. இமாம் எந்த நிலையில் இருக்கின்றாரோ அதில் போய் சேர்ந்து கொள்ள வேண்டும். அது ருகூஃ அல்லது அதற்கு முன் என்றால் அது ஒரு ரக்அத்தாக கணிக்கப்படும். இல்லாவிடில் கணிக்கப்படமாட்டாது.

 

சுன்னத்தான தொழுகைகள்

சுன்னத்தான  தொழுகையின் சிறப்பு

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'மறுமை நாளில் மனிதனுடைய அமல்களில் முதலில் விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றியாகும். தொழுகை சீராக இருந்தால் அவன் வெற்றி பெற்று விட்டான், தொழுகை சீராக அமைய வில்லை என்றால் அவன் நஷ்டமடைந்து விட்டான். அவனுடைய (பர்ழ்) தொழுகையில் குறைபாடு இருந்தால், என்னுடைய அடியானின் சுன்னத்தான தொழுகையைப் பாருங்கள் அதைக் கொண்டு குறைப்பாட்டை நிரப்புங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்' (ஆதாரம் - திர்மிதி : 413)

 

பர்ளான தொழுகைகளின் முன் பின் சுன்னத்துக்கள்

            பர்ளான தொழுகையில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அல்லாஹ் சுன்னத்தாக தொழுகைகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளான்.

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'யார் ஒரு நாளில் 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்' (ஆதாரம் - முஸ்லிம் : 728)

 


            இவ்வாறான சுன்னத்தான தொழுகைகளை பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவது சிறந்ததாகும்.

 

குறிப்பு : வலியுறுத்தப்பட்ட சுன்னத், வலியுறுத்தப்படாத சுன்னத் ஆகிய இரண்டையும் சேர்ந்து தொழுவது சிறந்ததாகும்.

 

இராத் தொழுகை

1.         இரவுத் தொழுகை இரண்டு இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

2.         இத் தொழுகையை இஷாவிற்குப் பிறகு பஜ்ர் தொழுகை வரை இரவில் இறுதிப் பகுதியில் தொழுவது சிறந்ததாகும்.

3.         சில நேரங்களில் நபி ள அவர்கள் கூடுதலாக, குறைவான எண்ணிக்கைகளில் தொழுவார்கள்.

4.         இத்தொழுகையில் நிலை, ருகூஃ, ஸுஜூது ஆகியவற்றை நீட்டித் தொழுவது சிறந்தது.

5.         கடைசி மூன்று ரக்அத்களில் பின்வரும் சூராக்களான அஃலா, காபிரூன்,           இஃலாஸ் போன்றவற்றை ஓதுவது ஸுன்னத்தாகும்.

 

குறிப்பு :

            இரவுத் தொழுகை பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. அவை கியாமுலைல், தஹஜ்ஜத், தராவீஹ், வித்ர் என்பனவாகும்.

 

லுஹா தொழுகை

சூரியன் உதயமாகி 15 நிமிடங்கள் கழித்து சூரியன் நடு உச்சிக்கு வரும் வரை இதனுடைய நேரமாகும்.

இரண்டு முதல் எட்டு ரக்அத்கள் வரை தொழ அனுமதி உண்டு.

 

அபூ ஹூரைரா ன அவர்கள் கூறினார்கள் : 'நபியவர்கள் எனக்கு மூன்று விடங்களை உபதேசமாக சொன்னார்கள். நான் மரணிக்கும் வரையில் அவற்றை விடமாட்டேன். ஒவ்வொரு மாதமும் மூன்று நாள் நோன்பு நோற்பது, லுஹா தொழுகையை நிறைவேற்றுவது, தூக்கத்திற்கு முன்னால் வித்ரு தொழுகையை நிறைவேற்றுவது'  (ஆதாரம் - புஹாரி : 1178, முஸ்லிம் : 721)

 

தஹிய்யதுல் மஸ்ஜித் (பள்ளிக் காணிக்கை தொழுகை)

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'உங்களில் எவர் பள்ளிக்குள் நுழைகிறாரோ அவர் இரண்டு ரக்ஆத்துகள் தொழும் வரை பள்ளியில் அமர வேண்டாம்' (ஆதாரம் - புஹாரி : 444, முஸ்லிம் : 714)

 

 

இஸ்திஹாரா தொழுகை

            இது அல்லாஹ்விடம் உதவி வேண்டி நிறைவேற்றும் தொழுகையாகும்.

இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

அதன் பின் அவர் நாடிய விடயங்களை இறைவனிடம் பிரார்த்திப்பார்.

அதில் பின்வரும் துஆவை ஓதுவது சிறந்தது

 

اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ وَتَعْلَمُ وَلَا أَعْلَمُ وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي أَوْ قَالَ فِي عَاجِلِ أَمْرِي وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِي الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي.

பொருள் : 'இறைவா! உனது அறிவைக் கொண்டு உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனது வல்லமையை கொண்டு உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். உன்னால் முடியும் என்னால் முடியாது. நீ அனைத்தையும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். நீ மறைவான விடயங்களை அறிகிறாய். இறைiவா! என்னுடைய இந்தக் காரியம் (தன் தேவையை இந்த இடத்தில் குறிப்பிடுவார்) என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா, அதை எனக்கு இலகுபடுத்திக் கொடு, பின்பு அதில் எனக்கு பரக்கத் செய். இந்தக் காரியம் (தன் தேவையை இந்த இடத்தில் குறிப்பிடுவார்) என்னுடைய மார்க்கத்திற்கும், என்னுடைய வாழ்க்கைக்கும், என்னுடைய மறுமைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும், இந்தக் காரியத்தை விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா, பின்பு அதில் திருப்தியைத் தா.

 

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget