விளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 01 MJM. Hizbullah Anvariவிளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் 

விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் கட்டமைக்கப்பட்ட ஒரு செயற்பாடு ஆகும். ஒவ்வொரு சமூகத்தினராலும் காலம் காலமாக பல வகையான விளையாட்டுக்கள் விளையாடப்பட்டு வந்துள்ளன. கிராமப்புற விளையாட்டுக்கள், நகர்ப்புற விளையாட்டுக்கள் என தோன்றியவை இப்போது சர்வதேச விளையாட்டுக்களாக வளர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக உடற்திறன் விளையாட்டுக்களும், மனவலிமை விளையாட்டுக்களும் இன்று இலத்திரணியல் ஊடாக விளையாடப்படுகின்றன. 

பலர் விளையாட்டை தமது அன்றாட செயற்பாடுகளுள் ஒன்றாக ஆக்கிக்கொண்டுள்ளனர். சிலர் பொழுதுபோகவில்லையென்றால் விளையாட்டில் ஈடுபடுவார்கள். ஆக, பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும் இவ்விளையாட்டு குறித்து இஸ்லாத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

நாம் விளையாட்டுக்கள் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டைப் பார்க்கும் முன் விளையாட்டுடன் தொடர்பான பொழுதுபோக்கு பற்றியும், ஓய்வு நேரம் பற்றியும் ஓர் தெளிவைப் பெறுவது அவசியமாகிறது. 

விளையாட்டும், வீண்பொழுதுபோக்கும் (அல்லஇபு வல்லஹ்வு). 

இவ்இரு வாசகங்களும் அல்குர்ஆனில் சுமார் 21 இடங்களில் சேர்ந்தும், தனித்தனியாகவும் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் இவ்வுலக வாழ்வின் யதார்த்தத்தைக் குறிப்பிடுவனவாகவே இருக்கின்றன. அவ்வசனங்கள் மூலம் இவ்விரு வாசகங்களுக்குமான அர்த்தத்தை அறிந்திட முடியும். எடுத்துக்காட்டாக, 

அல்லாஹ் கூறுகிறான், “இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமேயன்றி வேறில்லை. அவர்கள் அறிபவர்களாக இருந்தால் நிச்சயமாக மறுமை வீடே நிரந்தரமான வாழ்வாகும்.” (அல்குர்ஆன் 29:64). 

இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று விளையாட்டு என்பது பயன்கள் எதுவுமற்ற விடயங்களை செய்வதைக் குறிக்கிறது. வீண்கேலிக்கை (அல்லது வீண் பொழுதுபோக்கு) என்பது எவ்வித அடைவுகளும், நோக்கங்களும் அற்ற, குறித்த வேலையை பயனுள்ளதாக திரண்பட செய்ய வேண்டுமென்ற ஆர்வமற்ற விடயங்களில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. 

சில சமூகவியல் அறிஞர்கள் இவ்இரு சொற்களுக்கும் மேலதிக விளக்கத்தை வழங்குகின்றனர். ‘விளையாட்டு’ என்பது குழந்தைப் பருவத்தில் ஒருவர் செய்யும் செயற்பாடுகளைக் குறிக்கிறது. இப்பருவத்தில் செய்யும் எந்தச் செயலும் -செய்பவர் உட்பட- யாருக்குமே பிரயோசனமானதாக இருக்காது. அதற்கு விளையாட்டுத்தனம் எனவும் பெயர் வைத்துள்ளனர். எம்மைப் பார்க்கின்றவர்கள் எமது விளையாட்டுத் தனமான செயல்களை கண்டுகொள்ளாமலே இருப்பர். அல்லது பார்த்து ரசிப்பர். அல்லது கோபப்படுவர். 

‘வீண்பொழுதுபோக்கு’ என்பது இளமைப் பருவத்துடன் தொடர்புபட்ட சில செயற்பாடுகளைக் குறிக்கிறது. இப்பருவத்தில் பெற்றோரின் பேச்சுக்கு மரியாதை கொடுக்காமல், தனது மனம் போன போக்கில் சிலர் செயற்பட ஆரம்பிப்பர். இவர்களுக்கு அதிகமான நேரம் இருப்பதால் அவற்றை எவ்வாறு களிப்பது எனத் தெரியாமல் ஊர் சுத்தல், நண்பர்களுடன் அரட்டை அடித்தல், பணத்தை கண்டபடி செலவழித்தல், மது, விபச்சாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் ஆகிய காரியங்களில் அவற்றை செலவழிப்பர். 

விளையாட்டும், வீண்கேலிக்கைகளும், வீண் பொழுது போக்குகளும் எமது நேரத்துடன் தொடர்புபடுவதை மேற்குறிப்பிட்ட அர்த்தங்களினூடாக எம்மால் விளங்க முடிகிறது. 

இஸ்லாமிய விழுமியங்களுக்குள் வாழும் ஒருவரது வாழ்வின் பிரதான நோக்கமே மறுமை நாளில் வாழப்போகும் வாழ்வு பற்றிய எண்ணமாகும். எனவே அதற்கான அறுவடை நிலமாகவே இவ்வுலகை அவர் ஆக்கிக் கொள்ள வேண்டும். இதில் மறுமை வாழ்வு பற்றிய நோக்கங்களற்ற, அதற்குத் தேவையில்லாத, எவ்விதப் பயனுமற்ற விடயங்களில் தமது நேரங்களையும், சிந்தனைகளையும், ஆரோக்கியத்தையும் செலவழிப்பது அவருக்கு எவ்வகையிலும் பிரயோசனமானதாக இருக்காது. மறுமையில் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள மறுவாழ்வு பற்றிய சிந்தனையற்றவர்கள் இவ்வுலகை இயன்றளவு பயன்படுத்திக்கொள்வதிலும், தமது நேரங்களை போக்குவதற்காக களியாட்டங்களில் ஈடுபடுவதையுமே தமது வழக்கமாகவும், வாழ்க்கையாகவும் கொண்டுள்ளனர். 

வீண்கேலிக்கைகளும், விளையாட்டுக்களும் மாயை, போலி என அதிகமான வசனங்களினூடாக அல்லாஹ் எமக்குக் கூறுகிறான். மேற்குறிப்பிட்ட வசனமும் இதையே தெளிவாக எமக்குக் கூறுகிறது. 

எனவே வீண்கேலிக்கை, விளையாட்டு என்ற இரண்டையும் இஸ்லாம் இவ்வாறுதான் நோக்குகிறது. இவ்வுலக வாழ்வில் விளையாட்டுக்கும், வீண் கேளிக்கைகளுக்கும் அதி முக்கியத்துவம் கொடுப்பவர், அவர் போன்று ஏமாற்றமடைந்தவரும், நஷ்டவாளியும் வேறு யாரும் இருக்க முடியாது. இவ் வாழ்வில் அவ்வப்போது சில ஆகுமான விளையாட்டுக்களை விளையாடுபவர்களும், பொழுது போவதற்காக தமது நேரத்தில் சிறிய பகுதியை ஆகுமான பொழுதுபோக்கில் செலவழிப்பவரும் புகழுக்குரியவர் ஆவர். 

ஓய்வு நேரம் 

அப்படியென்றால் ஓய்வு நேரத்தில் என்னதான் செய்வது என்ற கேள்வி நம்மில் எழும். அதற்கான விடையை இஸ்லாம் பின்வருமாறு கூறுகிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மனிதர்களில் அதிகமானவர்கள் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். அவை ஆரோக்கியமும், ஓய்வுமாகும்”. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: புஹாரி 6412). 

அல்லாஹ் கூறுகிறான், “எனவே, (நபியே!) நீர் ஓய்வு பெற்றால் (வழிபாட்டில்) நிலைத்திருப்பீராக! மேலும் உமது இரட்சகனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!” (அல்குர்ஆன் 94:07-08). 

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், “நேர முகாமைத்துவம் என்பது, தனது அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ்வை நெருங்கும் விடயங்களில் திட்டமிட்டு அமைத்துக்கொள்வதைக் குறிக்கிறது. அல்லது அதற்கு உதவியாக இருக்கும் உணவு, குடிபானம், திருமணம், தூக்கம் போன்றவற்றுக்காக திட்டமிட்டு செலவழிப்பதைக் குறிக்கிறது. தான் செய்யும் விடயங்களை அல்லாஹ்வை நெருங்கும் செயற்பாடுகளுக்கான பக்கபலமாக அமைத்து, அல்லாஹ் கோபப்படும் விடயங்களில் ஈடுபடாமல் தவிர்ந்திருப்பவரே நேரமுகாமைத்துவத்தை சரியாகக் கையாண்டவராவார். ஒருவருக்கு இவற்றில் அதிக இன்பம் கிடைத்துவிட்டால் இவற்றை விட்டு வேறு விடயங்களை தேடிச் செல்வதற்கு நேரமுகாமைத்துவம் இடமளிக்காது. ஒரு முஸ்லிமிடம் இருக்கும் நேரத்தில் அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு நாழிகையும் வணக்கமாகவே மாறிக்கொண்டு செல்லும்.” (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன் பைன மனாஸிலி இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் 02/20). 

நாம் பள்ளியில் இருக்கும் போதும், இஸ்லாமிய வகுப்புக்களுக்கு செல்லும் போதும், மார்க்க அறிஞர்களுடன் இருக்கும் போதும் எம்மில் ஏற்படும் பயபக்தி வீட்டிற்கு வந்ததும் எம்மிடம் இருப்பதில்லை. சோர்வை உணரும் போது விளையாட வேண்டுமென்றே எமது மனம் கூறும். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தாளர்களில் ஒருவரான ஹன்ழலா இப்னு அர்ரபீஉ அல்உசைதீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: 

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்" என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன அது?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துனைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்து விடுகிறோம்" என்று சொன்னேன். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்." என்று மூன்று முறை கூறினார்கள். (அதாவது முழு நேரத்தையும் வணக்கத்தில் ஈடுபடுத்தாமல், வணக்கத்திற்கு துணை போகும் விடயங்களிலும் ஈடுபடுத்த வேண்டும் எனக் கூறினார்கள்). (நூல்: முஸ்லிம் 2750). 

தூங்குவது, அரட்டை அடிப்பது, டீவி நிகழ்ச்சிகள் பார்ப்பது, விளையாடுவது என்பன மட்டுமே ஓய்வு நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வேலைகள் என தவறாகப் புரிந்து வைத்துள்ளோம். ஓய்வு நேரத்தை பிரயோசனமாக கழிக்க வேண்டுமென்பதே இஸ்லாத்தினதும், சமூகவியல் அறிஞர்களினதும் வேண்டுகோளாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாம் மார்க்கம் ஓய்வு நேரத்தை எமக்கு அல்லாஹ்விடமிருந்து நன்மையைப் பெற்றுத் தரும் வணக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்று போதிக்கிறது. 

நாம் பிரயோசனமான எந்த வேலையைச் செய்தாலும் அதை, ‘அல்லாஹ்வுக்காக செய்கிறேன்’ எனும் எண்ணத்தில் ஆரம்பித்தால் அச்செயலுக்கு அல்லாஹ் நமக்கு கூலி வழங்குவான். எமது தொழில் நேரங்கள் போக மீதி நேரங்களை அல்லாஹ் நேரம் குறிப்பிட்டு கடமையாக்கியுள்ள வணக்கங்களிலும், எண்ணம் அடிப்படையில் அமையும் வணக்கங்களிலும் அமைத்துக்கொள்ளுமாறே இஸ்லாம் எமக்கு போதிக்கிறது. இதன் மூலம் நாம் காலையில் எழுந்தது முதல் இரவு உறக்கத்திற்கு செல்லும் வரை உள்ள நேரங்களை எமது ஈருலக வாழ்வுக்கும் பிரயோசனமானதாக ஆக்கிக்கொள்வது அவசியமாகிறது. 

நாம் வணக்கத்தில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடு வேண்டுமானால், சோர்வை உணரும் போது சில ஆகுமான விளையாட்டுக்களில் ஈடுபடலாம். முழு நேரத்தையும் அதில் ஈடுபடுத்தி விடக் கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மறுமையில் நான்கு கேள்விகள் கேட்கப்படும் வரை ஒரு அடியானின் இரு பாதங்களும் நகராமல் ஒரே இடத்தில் இருக்கும். வாழ்வு எவ்வாறு கழிக்கப்பட்டது, உடல் எதில் பயன்படுத்தப்பட்டது, அறிவை கொண்டு என்ன நடைபெற்றது, பணம் எங்கிருந்து ஈட்டப்பட்டு, எதில் செலவு செய்யப்பட்டது (என்பனவே அந்நான்கு கேள்விகளாகும்)”. (அறிவிப்பவர்: அபூ பர்ஸதுல் அஸ்லமீ (ரழி), நூல்: திர்மிதி 2417). 

எனவே எமது வாழ்வின் ஓர் அங்கமாகவே ஆகுமான விளையாட்டுக்களும், ஆகுமான பொழுதுபோக்குகளும் இருக்க வேண்டுமே தவிர, வாழ்வின் முழுப்பகுதியாகவும் அது இருந்துவிடக் கூடாது. 

விளையாட்டுக்களும், வீண்கேலிக்கைகளும் பார்க்கப்படும் முறை 

இன்றைய நவீன உலகில் விளையாட்டுக்கள் பல வகைகளில் எழுச்சி பெற்றுள்ளன. உடல் சுறுசுறுப்பிற்காக விளையாடப்பட்ட விளையாட்டுக்கள் மங்கிப் போய், வியாபார நோக்கத்திற்காக புதிது புதிதாக விளையாட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. இதன் பின்னனியில் மறுவாழ்வு பற்றிய சிந்தனை அற்றவர்களே காணப்படுகின்றனர். அவர்களுக்கு இவ்வுலக வாழ்வு மாத்திரமே வாழ்வதற்கான ஒரே களம் எனும் எண்ணம் இருப்பதால் இதில் இயன்ற அளவு சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும். மிருகங்கள் போன்று உண்ணல் பருகலில் ஈடுபட வேண்டும் என தமது வாழ்வை அணுவணுவாக ரசித்து வாழ்கின்றனர். 

இவ்வுலக வாழ்வை அவர்கள் தமக்கு பிடித்தது போல் அமைத்துக் கொண்டுள்ளனர். இவ்வுலகத்திற்காகவே சுறுசுறுப்பாக இயங்குவார்கள். இவ்வுலகிற்காகவே களைப்படைவார்கள். இவ்வுலக வாழ்விலே அதற்குரிய பயனை அடைய ஆசைப்படுவார்கள். குறிப்பிட்ட நேரத்தை தொழிலில் கழிப்பார்கள். தொழில் முடிந்து வீட்டிற்கு வந்ததும் எஞ்சிய அன்றைய நாளின் பெரும் பகுதி நேரத்தை விளையாட்டு, கூத்து, கும்மாளம், தூக்கம், ஆபாசம் போன்றவற்றில் கழிப்பார்கள். இவர்களுக்காக உருவாக்கப்பட்டதே நாம் இன்று கண்கூடாகக் காணும் இந்த விளையாட்டுக்களும், வீண்கேலிக்கைகளும். 

முஸ்லிம்களாகிய நாம் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்திருக்க வேண்டும். எம்மைக் கடந்து போகும் ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எம் அருகில் கொண்டு வருவதை உணரவேண்டும். மறுவாழ்வு பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களிடம் இருப்பதைப் போன்ற அதிகமான நேரம் எம்மிடம் இல்லை. நாம் நிரந்தரமான வாழ்வு பற்றிய சிந்தனை ஊட்டப்பட்ட சமூகத்தினர். அதுவே எமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். எமது ஒவ்வொரு வினாடியிலும் அது பிரதிபளிக்க வேண்டும். அல்லாஹ்வை வணங்கி வழிபடும் விடயத்தில் அவற்றை செலவழிக்க வேண்டும். உலக மக்கள் போகும் வழியை நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது. 

இன்றைய உலகில் வேறு எதற்கும் இல்லாத அளவில் பொழுதுபோக்கிற்காக அதிகமான பணங்கள் முதலீடு செய்யப்படுகின்றன. அது ஓர் தொழிற் துறையாக மாறியுள்ள அதே வேளை, பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்குபவர்களினதும், வீடியோ கேம் உருவாக்குபவர்களினதும் வருடாந்த தனிநபர் வருமானம் ஐம்பது மில்லியன் டாலராக காணப்படுகிறது. பெரும் பெரும் வைத்தியர்களும், பல்வேறு துறைகளில் கடமையாற்றும் பொறியியலாளர்களும் கூட இவ்வாறான வருமானத்தைப் பெறுவதில்லை. மேற்குலகில் வாழும் சிந்தனையாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், நீதிபதிகள் போன்றோரின் வருடாந்த வருமானமே இவர்கள் பெறும் வருமானத்தில் 1 சதவீதம் தான். 90களில் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்குத் துறை, 1999ம் ஆண்டை அடையும் போது அமெரிக்காவில் மாத்திரம் அதில் பணியாற்றிய அனைத்து தொழிலாளர்களினதும் மொத்த வருமானமாக 40 பில்லியன் டாலர் காணப்பட்டது. 

இவ்வாறு தமது நேரங்களைப் போக்கிக்கொள்வதற்காக மறுவாழ்வு பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட பொழுதைப் போக்கும் வீணான அம்சங்களிலும், விளையாட்டுக்களிலும் ஈடுபடும் நாம், அதன் இஸ்லாமிய வரையறையை உணர்ந்து செயற்பட வேண்டும். 

இஸ்லாம் எனும் போர்வையில், பொழுதுபோக்கு அம்சங்களில் எமக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பறிப்பதே இஸ்லாமிய மார்க்க அறிஞர்களது வேலையாய் இருக்கிறது எனும் சிந்தனை இதனை வாசிக்கும் எம்மில் பலருக்கும் தோன்றலாம். இஸ்லாம் பொழுதுபோக்குகளில் ஈடுபடவே கூடாது என எமக்குப் போதிக்கவில்லை. நாம் ஈடுபடும் பொழுபோக்கு அம்சங்கள் எம் பொன்னான நேரங்களுடன் தொடர்புபடும் போது, இஸ்லாமிய வரம்புகளை மீறி விடக் கூடாது என்றே எமக்குப் போதிக்கிறது. அழகிய வாழ்வியல் வழிமுறை ஒன்றைப் பெற்ற நாம் ஷைத்தானின் சதிவலைகளில் வீழ்ந்து, அதில் மயங்கி, அதன் ஆசாபாசங்களில் திளைக்கக் கூடாது என்றே எமக்கு கூறுகிறது. 

மனதிற்கு புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும் என்பதற்காய் சுற்றுப் பயணம் மேற்கொள்வது தவறு கிடையாது. அதை நாம் ஆரம்பித்து முடிக்கும் கால எல்லை இஸ்லாத்துடன் தொடர்புபட்டாக இருக்க வேண்டும். அதில் நாம் ரசிக்கும் காட்சிகள் இஸ்லாமிய வரையறைக்குள் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் அத்தாட்சிகள் பற்றி சிந்தித்து அதனூடாக அல்லாஹ்வை நெருங்க முனைய வேண்டும். 

மன நிம்மதிக்காகவும், கஷ்டம் ஏற்படக் கூடாது என்பதற்காகவும் திருமணம் முடிக்காமலும், உறவுகளைத் துண்டித்தும், தனிமை, மது, மாது என மாயையாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொழுது போக்கில் சிக்கிவிடக் கூடாது. திருமணம் முடித்து, மனைவியிடத்திலும், குழந்தைகளிடத்திலும், உறவினர்களிடத்திலும் பாசத்துடன் இருந்து, குடும்பவியலில் இஸ்லாத்தைக் கடைபிடித்து, மன நிம்மதியுடனும், சந்தோசமாகவும் வாழ வேண்டும். 

இவ்வாறே விளையாட்டுத் துறையிலும், பொழுதுபோக்குத் துறையிலும் இஸ்லாம் எமக்கான இறை திருப்தியுடன் கூடிய ஓர் வழிகாட்டலை கற்றுத் தருகிறது. நாம் உடலாலும், உள்ளத்தாலும் சோர்வாக இருந்தால் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர நிறைவேற்ற முடியாமல் போகும். எமது உடலிலும், உள்ளத்திலும் புத்துணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஓர் குறிப்பிட்ட நேரம் பொழுதைப் போக்கிக் கொள்ள விளையாட்டில் ஈடுபடலாம். நாம் படித்தும், பிறருடன் பழகியும் கற்றுக்கொள்ளும் ஒழுக்கங்கள், நற்பண்புகள் போக, சில விளையாட்டுக்கள் மூலமும் நல்ல பண்புகளையும், திறமைகளையும் வளர்த்துக்கொள்ள முடியும். இதன் மூலம் நாம் இவ்வுலகில் எமது மனஉறுதிக்கும், ஆரோக்கியத்திற்கும் வித்திடுவதோடு, மறுமையிலும் அதற்கான முழுப் பயனையும் அடைந்திட முடியும். 

இதனை அடிப்படையாக வைத்தே நாம் விளையாடும் விளையாட்டுக்களை சில அடிப்படை விதிகளுடன் எமக்கு இஸ்லாம் தொகுத்து அளிக்கிறது.

மிகுதி அடுத்த தொடரில்...... (இன்ஷா அல்லாஹ்).

பகுதி 02:

பகுதி 03:

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget