முஹர்ரம் மாதம்
நபி (ஸல்) அவர்களின் சமூகத்தினருக்கு பன்மடங்கு நன்மைகளை இலகுவில் பெற்றுக்கொள்வதற்காக வேண்டி அல்லாஹ் குறிப்பிட்ட சில இரவுகளையும், நாட்களையும், மாதங்களையும் ஏற்படுத்தியுள்ளான். அதில் மிக முக்கியமான ஒன்றே இம் முஹர்ரம் மாதமாகும். இதற்கு அல்லாஹ்வின் மாதம் எனவும் கூறப்படும். ஹிஜ்ரி நாட்காட்டியில் முதல் மாதமாக இருக்கும் இம்மாதம் அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களுள் ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியை படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்” (அல்குர்ஆன் 09:36).
பிரியாவிடை ஹஜ்ஜில் உரையாற்றிய போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து 'ரஜப்' மாதம் ஆகும்”.
(அறிவிப்பவர்:
அபூபக்ரா (ரழி), நூல்: புஹாரி 4262, முஸ்லிம் 1679).
முஹர்ரம் மாதம் பற்றிய சில சட்டங்கள்
இவ்வாறு சிறப்பு வாய்ந்த இம்மாதத்திற்கென சில பிரத்தியேக சட்டங்கள் உள்ளன. அவை வருமாறு:
அ. புதுவருடக் கொண்டாட்டம்.
ஹிஜ்ரி நாட்காட்டியானது தொழுகை தவிர்ந்த இஸ்லாத்தின் ஏனைய வணக்க வழிபாடுகளை பிறை அடிப்படையில் அமைத்து செயற்படுவதற்காகவும், முஸ்லிம்களுக்கான தனித்துவமான, உண்மையான நாட்காட்டியாக இருக்க வேண்டுமெனவும், வரலாற்று நிகழ்வுகளை துள்ளியமாக அறிந்துகொள்வதற்காக வேண்டியும் உமர் (ரழி) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் நாட்காட்டியாகும்.
இதில் அனைத்து மாதங்களும் அல்லாஹ்விடத்தில் சமமான அந்தஸ்த்தையே பெறுகின்றன. அதிலும் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய நான்கு மாதங்களும் விஷேட அந்தஸ்த்தைப் பெறுகின்றன.
ஹிஜ்ரி நாட்காட்டியின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் இடம்பெறுவதால், வருடத்தின் முதல் மாதமாக இது கணிக்கப்படுகிறது. இத்தினத்தை புதுவருடப் பிறப்பு தினமாக கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இஸ்லாம் எமக்கு கொண்டாடுவதற்கான தினங்களாக நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், ஜும்ஆ நாள் ஆகிய மூன்று தினங்களை மாத்திரமே அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றைத் தவிர வேறு எந்த தினத்தையும் கொண்டாடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. அவ்வாறு அதை நாம் கொண்டாடும் பட்சத்தில் அதை பிறமத கலாச்சாரமாகவே கருதுகிறது. அவ்வாறு பிற மத கலாச்சாரத்தை செய்வதானது நாமும் அவர்களைச் சார்ந்தோர் என எமக்குக் கூறி, எம்மிடத்தில் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் செல்வோரின் ஓர் பண்பு வந்துள்ளதை இது அடையாளப்படுத்துகிறது. இவ்வாறு இஸ்லாம் அனுமதிக்காத பிறமதக் கலாச்சாரங்களை நாம் தொடர்ந்து செய்கையில் இஸ்லாத்தை விட்டே வெளியேறிவிடும் அபாயம் எமக்கு ஏற்படும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் ஓர் சமூகத்துக்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவராகிவிடுவார்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), நூல்: அபூதாவுத் 4031, அஹ்மத் 5114).
அவ்வாறே ஹிஜ்ரி புதுவருடத்தை முன்னிட்டு வாழ்த்துக் கூறுவதும் இஸ்லாம் தடை செய்துள்ள ஓர் செயலாகும். கொண்டாடுவதே தடுக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் போது, இதை முன்னிட்டு பிறருக்கு வாழ்த்துக் கூறுவதும் அக்கொண்டாட்டத்தின் ஓர் அம்சமான தடுக்கப்பட்ட ஓர் பகுதியாகும். பிறர் எமக்கு வாழத்துக்கூறினால், ‘உங்களுக்கும் அப்படியே உண்டாகட்டும்’ என மறு வாழ்த்து கூறுவதில் தவறில்லை எனவும், ஆனால் நாமாக ஆரம்பித்து இது போன்ற வாழ்த்துக்களைக் கூறுவது தடுக்கப்பட்ட ஒன்று எனவும் அஷ்ஷேக் ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறே சிலர் புதுவருடம் பிறந்துவிட்டால் வணக்க வழிபாடுகள் ரீதியிலும், பண்பு ரீதியிலும், தொழிற்துறை சார்ந்த, கல்வித்துறை சார்ந்த அனைத்து விடயங்களிலும் பழையன கழிந்து புதியன சிறந்த முறையில் புக வேண்டுமென நினைத்து, பிரத்தியேக கொண்டாட்டங்களிலும், வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர். அதற்கான வாழ்த்து மடல்களையும், கவித்துவமான வரிகளையும் எழுதி பிறருடன் பரிமாறிக்கொள்கின்றனர். இஸ்லாத்தைப் பொருத்தவரையில் இதுவும் ஆரோக்கியமான செயற்பாடு கிடையாது. சென்ற தவறுகளைத் திருத்தி, புதுப் பாதையை அமைத்துக்கொள்வது புதுவருடத்தில் மாத்திரம் கிடையாது. அது ஒவ்வொரு நொடியிலும் இடம்பெற வேண்டும் என்பதையே இஸ்லாம் வரவேற்கிறது. ஏனெனில் எமது அடுத்த நொடிக்கான வாழ்வின் நிலை உறுதியற்றது. அதனாலே இருக்கும் நொடிகளை, நிமிடங்களை காலத்தை சிறந்த முறையில் நற்செயல்களுக்காக பயன்படுத்துமாறு இஸ்லாம் குறிப்பிடுகிறது.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்தார்கள், “இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள். இப்னு உமர் (ரழி) அவர்கள் தொடர்ந்தும் கூறுகையில், 'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு' என்றார்கள்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), நூல்: புஹாரி 6416, திர்மிதி 2333, இப்னுமாஜா 4114).
ஆ. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்.
அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களிலும் சண்டை சச்சரவுகளிலும், போர்களிலும் ஈடுபடக்கூடாது என்பது இப்றாஹிம் (அலை), இஸ்லமாஈல் (அலை) ஆகியோர் காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் ஓர் இறைச்சட்டமாகும். இதையே அரேபியர்களும் நபியவர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்திலும் பின்பற்றி வந்தனர். இம்மாதங்களில் அவர்கள் சண்டை சச்சரவுகளிலும், போர்களிலும் ஈடுபடாமல் இருந்ததற்கான காரணத்தை பின்வருமாறு நோக்கலாம்.
பொதுவாக பழங்காலத்து அரேபியர்கள் துல்கஃதா மாதத்தில் போர் செய்வதை நிறுத்திக் கொள்வார்கள். இதனாலே இதற்கு “துல்கஃதா” (போர்செய்வதை நிறுத்தும் மாதம்)
என பெயர் சூட்டப்பட்டது. அதன் பின் “துல்ஹஜ் மாதம்”
(ஹஜ்செய்யும் காலம்) வருவதால் அக்காலத்தில் ஹஜ் கிரியைகளில் மூழ்கி விடுவார்கள். முஹர்ரம் மாதத்தை ஹஜ் செய்ய வந்தவர்கள் தமது பிரதேசங்களுக்கு திரும்பிச் செல்லும் காலமாக கணித்திருந்தார்கள். இதனால் இம் மூன்று மாதங்களிலும் அவர்கள் தொடராகவே யுத்தங்கள் செய்வதை நிறுத்தி வைத்திருந்தனர். ரஜப் மாதத்தை அரேபிய தீபகற்பத்தின் தென்பகுதி மக்களுக்கான உம்ராவுக்கான மாதமாக அவர்கள் கணித்து வைத்திருந்தனர். அம்மாதத்தில் உம்ரா கிரியைகள் நடைபெறுவதாலும், யாத்திரிகர்களின் போக்குவரத்துகள் இருப்பதாலும் அதிலும் யுத்தம் செய்வதை நிறுத்தியிருந்தனர். இதுவே அரேபியர்கள் இம்மாதங்களில் யுத்தம் செய்யமால் இருந்தமைக்கான காரணமாகும்.
தற்காப்புக்காகத் தவிர சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதும், வன்முறைகளில் இறங்குவதும், போர் செய்வதும் எல்லாக் காலங்களிலும் தடுக்கப்பட்ட ஒரு பாவச் செயலாகும். ஆயினும் இம்மாதங்களில், குறிப்பாக முஹர்ரம் மாதத்தில் இவற்றில் ஈடுபடுவது எமக்கு அதிகமான பாவச்சுமைகளைப் பெற்றுத் தரும். குடும்ப சண்டைகள், ஊர் சண்டைகள், அரசியல் சண்டைகள் போன்றவற்றில் ஈடுபட்டு இம் மாதத்தின் புனிதத் தன்மையைப் பாழாக்கி, ஏனைய மாதங்களை விடவும் இம் மாதத்தில் கூடுதல் பாவச்சுமையை சுமப்பதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டும். ரமழான் மாதத்திலும், ஹஜ்ஜின் போதும் பிறருக்கு அநியாயம் செய்வது எவ்வாறு அதிகபட்ச பாவத்தைப் பெற்றுத் தருமோ அவ்வாறே முஹர்ரம் மாதமும் பெற்றுத்தரும். அல்லாஹ் கூறுகிறான், “இவைகளில் (இப் புனித மாதங்களில்) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்” (அல்குர்ஆன் 09:36).
இ. நோன்பு நோற்றல்.
முஹர்ரம் மாதத்தின் அதிக நாட்கள் நோன்பிருப்பது ஆகுமாக்கப்பட்ட ஓர் வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ரமழான் மாதத்திற்குப் பின் நோன்பு நோற்பதற்குச் சிறந்த மாதம் அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதமாகும்” (அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 1163, அபூதாவுத் 2429).
மேற்கூறப்பட்ட ஹதீஸிற்கு அமைய சில இஸ்லாமிய அறிஞர்கள் முஹர்ரம் மாதம் முழுவதும் நோன்பிருக்க முடியும் எனக் கூறியுள்ளனர். சில அறிஞர்கள் இது நோன்பிருக்குமாறு ஆசையூட்டும் முகமாக கூறப்பட்ட ஹதீஸ் எனவும், ரமழானிற்கு அடுத்ததாக அதிக நோன்பு நோற்பதற்கு தகுதியான மாதம் ஷஅபான் எனவும், முஹர்ரம் மாதத்தில் ஷஅபானை விடவும் குறைந்த நாட்கள் நோன்பிருந்தால் போதுமானது எனவும் கூறியுள்ளனர். இதற்கு ஆதாரமாக பின்வரும் ஆஇஷா (ரழி) அவர்களின் ஹதீஸைக் கூறுகின்றனர், “(இனி) நோன்பை விடவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பார்கள்: '(இனி) நோன்பு நோற்கவே மாட்டார்கள்' என்று நாங்கள் கூறுமளவுக்கு நோன்பைவிட்டுவிடுவார்கள்! ரமழானைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழு மாதமும் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை; ஷஅபான் மாதத்தில் தவிர (வேறெந்த மாதத்திலும்) அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை” (அறிவிப்பவர்: ஆஇஷா (ரழி), நூல்: புஹாரி 1969, முஸ்லிம் 1156).
முதலாவது கூறப்பட்ட ஹதீஸில் ரமழானுக்குப் பின் நோன்பிருப்பதற்கு சிறந்த மாதம் முஹர்ரம் எனக் கூறப்பட்டுள்ளது. இரண்டாவது ஹதீஸில் ரமழானுக்கு அடுத்து, ஷஅபான் மாதத்திலே நபியவர்கள் அதிக நோன்பு நோற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும் பார்ப்பதற்கு முரணாக இருந்தாலும் இதற்கான தெளிவை இமாம் ஷம்ஷுல் ஹக் ஆபாதி (ரஹ்)
அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்,
“இதற்கான தீர்வை இரு விதமாக நோக்க முடியும்:
முதலாவது: முஹர்ரம் மாதத்தின் சிறப்பை நபியவர்கள் தமது வாழ்வின் இறுதிப் பகுதியில் அறிந்திருக்கலாம்.
இரண்டாவது: முஹர்ரம் மாதத்தில் அவர்கள் அதிக பிரயாணம் அல்லது நோய் போன்ற காரணங்களுக்கு ஆளாகியிருக்கலாம்” (அவ்னுல் மஃபூத் 07/59).
ஆக, இம்மாதத்தில் தாம் விரும்பியவாறு நோன்பு நோற்று அதிக நன்மைகளை ஈட்ட முடியும் என்பது அதிகமான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்.
ஈ. பத்தாம் நாள் நோன்பு ஆஷூரா நோன்பு
ஆஷூரா தினம் என்பது குறிப்பாக முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளைக் குறிக்க பயன்படுத்தப்படும் அரபு வாசகமாகும். இத்தினத்தில் நோன்பிருப்பதை தனியாகக் குறிப்பிட்டு பல ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. நபி (ஸல்) அவர்கள் இத்தினத்தில் நோன்பிருக்குமாறு எமக்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
01. ஆஷூரா நாளின் சிறப்பு
மூஸா (அலை) அவர்களின் காலத்தில் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் அல்லாஹ் அவர்களை பிர்அவ்ன் எனும் அவரின் எதிரியிடமிருந்து அவரையும், அவரது சமூகத்தையும் பாதுகாத்தான். அதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மூஸா (அலை) அவர்கள் இத்தினத்தில் நோன்பிருந்துள்ளார்கள். அதை கருத்தில் கொண்டே நபி (ஸல்) அவர்களும் நோன்பிருந்துள்ளார்கள். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், “நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது யூதர்கள் (முஹர்ரம் 10-ஆம் நாளான) ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்பதைக் கண்டார்கள். யூதர்களிடம் அதுபற்றிக் கேட்கப்பட்டபோது அவர்கள், 'இந்த நாள் தான் ஃபிர்அவ்னுக்கெதிராக மூஸா (அலை அவர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அல்லாஹ் வெற்றியளித்த நாள். எனவே, நாங்கள் மூஸா (அலை) அவர்களைக் கண்ணியப்படுத்தும் விதத்தில் அதில் நோன்பு நோற்கிறோம்' என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'மூஸா (அலை) அவர்களைக் கண்ணியப்படுத்திட நாங்களே அதிக உரிமையுடையவர்கள்' என்று சொல்லிவிட்டு அந்நாளில் (தாமும் நோன்பு நோற்று) நோன்பு நோற்கும்படி (முஸ்லிம்களுக்கு) உத்தரவிட்டார்கள்.” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: புஹாரி 3943, 4737, முஸ்லிம் 1130).
நபி (ஸல்) அவர்கள் நோற்ற ஆஷூரா நோன்பு நான்கு படித்தரங்களில் அமைந்து காணப்பட்டது:
முதல் படித்தரம்: இந் நோன்பை நபியவர்கள் மக்காவில் நோற்றுள்ளார்கள். ஆனால் இதனை நோற்குமாறு பிறருக்கு கட்டளையிடவில்லை. “அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்து வந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்தபோது அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள். பிறகு ரமழான் (நோன்பு) கடமையானபோது ரமழான் (மாத நோன்பு) கடமையான வணக்கமாகவும், ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலுமிருக்கலாம் என்று (கூடுதல் வணக்கமாகவும்) ஆகிவிட்டது. (அறிவிப்பவர்: ஆஇஷா (ரழி), நூல்: புஹாரி 4504, முஸ்லிம் 1125).
இரண்டாம் படித்தரம்: நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த பின், யூதர்களும் அத்தினத்தில் நோன்பு நோற்பதையும், அத்தினத்தை கண்ணியப்படுத்துவதையும் கண்டு, தானும் நோன்பு நோற்று, ஏனைய முஸ்லிம்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். மதீனாவில் இருந்த முஸ்லிம்கள் தமது பிள்ளைகளையும் இந் நோன்பை பிடிக்கச்செய்யும் அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் இதன் மகத்துவத்தை அவர்களுக்கு வழியுருத்தியிருந்தார்கள்.
மூன்றாம் படித்தரம்: ரமழான் மாத நோன்பு கடமையாக்கப்பட்ட பின், தான் ஆஷூரா நோன்பு நோற்பதை விட்டுவிட்டு, தன் தோழர்களுக்கு அந் நோன்பை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நிச்சமாயக ஆஷூரா தினமானது அல்லாஹ்வின் தினங்களில் ஓர் தினமாகும். அத்தினத்தில் விரும்பியவர் நோன்பிருக்கட்டும். விரும்பியவர் நோன்பை விட்டுவிடட்டும்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), நூல்: முஸ்லிம் 1126).
நான்காம் படித்தரம்: நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்நாளின் கடைசிப்பகுதியில் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோன்பை தனியாக நோற்காமல் அதற்கு முந்தைய ஒன்பதாம் நாளையும் சேர்த்து நோற்க வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், “நபி (ஸல்) அவர்கள் (முஹர்ரம் மாத பத்தாம்)
ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று, மக்களுக்கும் அந்நோன்பை நோற்குமாறு ஏவியபோது, ‘அல்லாஹ்வின் தூதரே!
இத்தினத்தை யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்துகின்றனரே!’ எனக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் நாடினால் அடுத்த வருடம் முஹர்ரம் மாத ஒன்பதாம் நாளிலும் நாம் நோன்பிருப்போம்” எனக் கூறினார்கள். அடுத்த வருடம் வருவதற்குள் நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: முஸ்லிம் 1134, அபூதாவுத் 2445).
02. ஆஷூரா நோன்பின் சிறப்பு.
முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் நோன்பிருப்பது அதற்கு முன்னுள்ள வருடத்தில் செய்த அனைத்து சிறிய பாவங்களையும் மன்னித்து விடும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “(முஹர்ரம் மாதம் பத்தாம் நாள்)
ஆஷூரா நோன்பானது அதற்கு முன்னுள்ள வருடத்தின் (அனைத்து சிறிய)
பாவங்களுக்கான பரிகாரமாக ஆகவேண்டுமென நான் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைக்கிறேன்” (அறிவிப்பவர்:
அபூகதாதா (ரழி), நூல்: முஸ்லிம் 1126, அபூதாவுத் 2425, திர்மிதி 749, 752, இப்னுமாஜா 1730, 1738).
இச்சிறப்பு பத்தாம் நாள் நோன்பிருப்பவருக்கு நிச்சயம் கிடைத்திடும். அதோடு முஹர்ரம் ஒன்பதாம் நாள் நோன்பையும் சேர்த்து நோற்பவருக்கு சற்று அதிக கூலி கிடைக்கும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அடுத்த வருடம் நான் இருந்தால் நிச்சயம் முஹர்ரம் மாத ஒன்பதாம் நாளிலும் நோன்பிருப்பேன்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), நூல்: முஸ்லிம் 1134, இப்னுமாஜா 1421).
03. ஆஷூரா தினமும், நூதன அனுஷ்டானங்களும்.
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் வந்துவிட்டால் வழமை போன்று இஸ்லாம் அனுமதிக்காத, காட்டித்தராத பல செயற்பாடுகள் மக்களால் அரங்கேற்றப்படுகின்றன. அதன் மூலம் மாத்திரமே அவர்கள் இத்தினத்தை கண்ணியப்படுத்த நினைக்கின்றனர். இந்நாளை ஓர் தினமாக மாற்றுவது யூதர்களும், ஷீஆக்களும் மாத்திரமே. அவர்கள் வழியில் சென்று நாம் எமது இஸ்லாமிய கொள்கையில் கலங்கத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் தான் அலி (ரழி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரழி) அவர்கள் கர்பலாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இத்தினத்தை ஓர் துக்க தினமாக ஆக்கி, அதில் பல அனாச்சாரங்களை உருவாக்கி, அவற்றை ஷீஆக்களும், அஹ்லுல் பைத் எனக் கூறிக்கொள்வோரும் அனுஷ்டித்து வருகின்றனர்.
முஹர்ரம் மாத முதலாம் நாளில் வீட்டைப் பெருக்கி, கழுவி, சுத்தம் செய்கின்றனர். பின் சூரதுல் பாதிஹா, சூரதுல் பகராவின் முந்தைய சில பகுதிகள், சூரதுல் காஃபிரூன், சூரதுல் இஹ்லாஸ், சூரதுல் ஃபலக், சூரதுன் நாஸ் போன்ற சூராக்களை ஓதி, நபி (ஸல்) அவர்கள் மீது பல ஸலவாத்துக்களைக் கூறி, விருந்தோம்பல் செய்து, அவை அனைத்தின் கூலிகளையும் இறந்தவர்களுக்கு அனுப்புகின்றனர்.
இம்மாதத்தில் பெண்கள் தம்மை அலங்காரம் செய்து கொள்ளமாட்டார்கள். மக்கள் இறைச்சி சாப்பிடமாட்டார்கள். விருந்துகளுக்கு அழைக்கப்பட்டால் செல்லமாட்டார்கள். திருமணங்கள் செய்து கொள்ளமாட்டார்கள். திருமணம் முடித்து இரண்டு மாதங்கள் கடக்காத கணவன் மனைவியை சேரவிடாமல் பிரித்துவிடுவார்கள். முகங்களிலும், நெஞ்சுகளிலும் அடித்துக்கொண்டு, அணிந்த ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, ஒப்பாரி வைப்பார்கள். அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), முஆவியா (ரழி), யஸீத் (ரழி) போன்ற ஸஹாபாக்களை வசைபாடித் திட்டுவார்கள்.
முஹர்ரம் மாத முதல் பத்து நாட்களில் நெருப்பு மூட்டி ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வார்கள். பெரியவர்களும் சிறியவர்களும் ‘யா ஹுஸைன், யா ஹுஸைன்’
என முழக்கமிட்டுக்கொண்டு பாதைகளில் நடைபவனி செல்வார்கள். தமது மேனிகளையும், ஏனையோரின் மேனிகளையும் கத்தியால் வெட்டி காயப்படுத்திக் கொள்வார்கள். இம் மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை தீய சகுணமாக கருதுவார்கள். பச்சைக் கொடிகளைக் கட்டி இசைக் கச்சேரிகள் அமைத்து, ஆட்டம் போடுவார்கள். பாடை போன்ற ஒன்றை செய்து ஆண், பெண், சிறுவர்கள் என அனைவரும் பரகத் வேண்டியும், தீராத நோய்கள் குணமாக வேண்டுமெனவும், ஆயுள் நீடிக்க வேண்டுமெனவும் அதைத் தாண்டுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “துன்பத்தினால் தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்: புஹாரி 1924, முஸ்லிம் 103).
“'நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் (துன்பத்தின் போது) அதிகச் சப்தமிட்டு அழும் பெண்ணைவிட்டும் மொட்டையடித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் ஆடைகளைக் கிழித்துக் கொள்ளும் பெண்ணைவிட்டும் தம்மை விலக்கினார்கள்” (அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரீ (ரழி), நூல்: புஹாரி 1296, முஸ்லிம் 104).
ஸஹாபாக்கள் மீது அவதூறுகளைக் கட்டி, அவற்றை மக்கள் மன்றத்தில் பரப்புகின்றனர். குறிப்பாக அஹ்லுல் பைத்தை அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தினரே கொன்று விட்டதாகவும், அவர்களை பாதுகாக்க இவர்கள் எவ்வித நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அஹ்லுஸ்ஸுன்னாக்கள் மீது வீண்பழிகளை சுமத்துகின்றனர்.
இவ்வாறு ஹுஸைன் (ரழி) அவர்கள் மீது தமக்கு இருக்கும் அன்பை பறைசாற்றவும், அவர் படுகொலை செய்யப்பட்ட துக்கத்தைக் கொண்டாட இஸ்லாம் அனுமதிக்காத முறைகளைக் கையாழ்வதும் இஸ்லாம் முற்றாக தடைசெய்த அம்சங்களுள் ஒன்றாகும். அஹ்லுல் பைத்தை நாம் நேசிக்க வேண்டுமே தவிர இவ்வாறான செயற்பாடுகளில் இறங்கி துக்க தினம் கொண்டாடுவது எம்மை வழிதவறிய கூட்டத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். அதன் மூலம் நாம் இஸ்லாத்தை விட்டே வெளியேறும் நிலை ஏற்படும்.
இது ஒரு வகையான துக்க தினமாக ஷீஆக்கள் கருதி வந்தாலும் வேறு சிலர் இத்தினத்தை யூதர்கள் போன்று மகிழ்ச்சிகரமான கொண்டாட்ட தினமாக கருதுகின்றனர்.
இத்தினத்தில் பெண்கள் தம் கைகளிலும், கால்களிலும் மெஹெந்தி வைத்துக்கொள்கின்றனர். ஆண், பெண் இருபாலரும் கண்களில் சுருமா வைக்கின்றனர். குடும்பத்தினரை அழைத்து விருந்தோம்பல் செய்கின்றனர். ஏழை எழியோருக்கு பல உதவிகளை செய்கின்றனர். புத்தாடைகள் அணிந்து, வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொள்கின்றனர். இரவில் பிரத்தியேக தொழுகைகளில் ஈடுபடுகின்றனர். வீடுகளைப் பெருக்கி, கழுவி, சுத்தம் செய்து வீட்டின் படுக்கையறை உட்பட அனைத்து தளபாடங்களையும் புதுப்பிக்கின்றனர். விளையாட்டு நிகழ்ச்சிகளையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் இத்தினத்திற்கென பிரத்தியேகமாக செய்கின்றனர். இவ்வாறாக பெருநாள் தினம் போன்று இத்தினத்தை கொண்டாடுகின்றனர்.
மதீனாவிற்கு நபியவர்கள் வந்த போது யூதர்கள் இவ்வாறான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதைக் கண்டு முஸ்லிம்களும் அவ்வாறு செய்யக் கூடாது என்பதற்காக நோன்பு நோற்பதை மாத்திரமே வழியுறுத்தினார்கள். எனவே முஹர்ரம் மாதமும் சரி, முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளும் சரி ஷீஆக்கள், அஹ்லுல் பைத்துக்களைப் பின்துயர்வோர் போன்று துக்கத்தையும், யூதர்கள் போன்று சந்தோசத்தையும் வெளிப்படுத்தும் தினம் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு எமது தூய இஸ்லாமிய கொள்கையை விட்டும் வெளியேறாமல் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இம் மாதத்தில் இஸ்லாம் கடைபிடிக்குமாறு கூறியுள்ள நோன்பு நோற்பதையும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருப்பதையும் மாத்திரம் செய்து இம் மாதத்தின் முழுப் பயனையும் அடைய முனைய வேண்டும். இதன் மூலம் அல்லாஹ் எமது நன்மைகளை உயர்த்தி, பாவங்களை அழித்து நாளை மறுமையில் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழைவிப்பானாக.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.