அந்த 720 மணித்தியாளங்கள்
720 மணித்தியாளங்கள் என்பது ரமழான் மாதம் தன்னகத்தே கொண்டுள்ள மொத்த மணித்தியாளங்களின் எண்ணிக்கையாகும். இவற்றை ஒரு முஸ்லிம் சரியாகப் பயன்படுத்தினால் அல்லாஹ் அவனுக்கு வழங்க இருக்கும் வெகுமதிகளை பூரணமாகவே பெற்றுக்கொள்ள முடியும். பலரும் பல வகையில் இம் மணித்தியாளங்களைப் பயன்படுத்துவதற்காக தமக்கான அட்டவணை ஒன்றை தயார்படுத்தியிருப்பார்கள். ஒவ்வொருவரின் சூழ்நிலைக்கேற்றவாரு அவை வடிவமைக்கப்பட்டிருக்கும். அவற்றில் பொதுவான சில அம்சங்களை மாத்திரம் இங்கு பார்ப்போம்.
1. தூய எண்ணம்.
ஒவ்வொரு மணி நேரமும் தூய எண்ணத்துடன் செயற்படுவது அவசியமானது. அப்போதே எமது நல்ல செயல்கள் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எமது பாவங்களும் மன்னிக்கப்பட்டு, நாமும் அல்லாஹ்விடத்தில் உயர் அந்தஸ்த்தைப் பெற முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ரமழானில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 1901, முஸ்லிம் 760).
2. உறுதியான தீர்மானம்.
நன்மையான விடயங்களை மாத்திரமே இம் மணித்தியாளங்களில் செய்ய வேண்டுமெனவும், அவற்றை உரிய நேரங்களில் செய்து முடிக்க வேண்டும் எனவும் உறுதியான தீர்மானத்திற்கு வர வேண்டும். அப்போதே பாவங்கள் செய்வதற்கும், அதற்கு துணை போவதற்கும் முடியாமல் போய்விடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மக்கள் தங்கம், வெள்ளி போன்றவற்றை (சொத்துக்களாக) சேமித்தால் நீங்கள் பின்வரும் வாசகத்தை சேமித்துக்கொள்ளுங்கள்,
“அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகஸ் ஸபாத ஃபில் அம்ரி, வல் அஸீமத அலர் ருஷ்தி”
‘இறைவா! எனது தீர்மானத்தில் நிலையாக இருப்பதையும், நேர்வழியில் மன உறுதியுடனும் இருப்பதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன்”. (அறிவிப்பவர்: ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரழி), நூல்: அஹ்மத் 17155, முஸன்னப் இப்னு அபீ ஷைபா 29971).
3. கடமையான தொழுகை.
வீடுகளை யாருமே வந்து போவதற்குப் பயப்படும் கப்ருகளாக மாற்றிக்கொள்ளக் கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். பள்ளிவாயில்கள் மூடப்பட்டுள்ள இவ்வேளையில் ஐநேரத் தொழுகைகளையும் வீட்டில் தொழுவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் நாம் தனித்தனியாக தொழுவதை விட கூட்டாகத் தொழுவதே மிகவும் சிறந்த ஓர் செயலாகும். கூட்டாகத் தொழுவதால் எமக்கு ஒரு தொழுகைக்கு 25 அல்லது 27 மடங்கு நன்மை கிடைக்கிறது. ஐநேரத் தொழுகைகளுக்கும் பல மடங்கு நன்மைகள் ஒரு நாளில் எமக்குக் கிடைக்கிறது. எனவே இம் மணித்தியாளங்களில் கடமையான தொழுகைகளைத் தொழுது, பல மடங்கு நன்மைகளைப் பெற, ஆர்வம் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.' (அறிவிப்பவர்: அபூ ஸஈத் அல்ஹுத்ரி (ரழி), நூல்: புஹாரி 646).
மேலும் கூறினார்கள், 'தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்.' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), நூல்: புஹாரி 645, முஸ்லிம் 650).
4. சுவனத்தில் சொந்தமான வீடு.
கடமையான தொழுகைகளுக்கு முன்னும், பின்னும் உள்ள சுன்னத்தான தொழுகைகளைத் தொழுது வருவதன் மூலம் சுவனத்தில் சொந்தமான வீடொன்றைப் பெரும் பாக்கியத்தைப் பெற வேண்டும். இதற்கு ‘ஸுனன் அர்ரவாதிப்’ எனக் கூறப்படும்.
1. ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள்.
2. லுஹர் தொழுகைக்கு முன் நான்கு ரக்அத்கள், லுஹர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
3. மஃரிப் தொழுகைக்கு பின் இரண்டு ரக்அத்கள்.
4. இஷாத் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒரு நாளில் பன்னிரண்டு ரக்அத்களை யார் தொழுது வருவார்களோ, அவர்களுக்கு அவைகளைக் கொண்டு சுவனத்தில் ஓர் வீடு கட்டப்படும்”. (அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரழி), நூல்: முஸ்லிம் 728).
5. அல்குர்ஆன் ஓதுதல்.
அல்குர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் முக்கியமான அற்புதமாகும். அதை வைத்தே தனது நபித்துவத்தை நபி (ஸல்) அவர்கள் நிறுவினார்கள். எனவே அத்தகைய அல்குர்ஆனை அதிகமதிகம் ஓதுவது எமக்கு பல நல்ல விளைவுகளைத் தருகிறது. சிந்தனை ரீதியாகவும், ஆய்வு ரீதியாகவும் அது எம்மில் பல மாற்றங்களைக் கொண்டுவருகிறது. ஓசை நயத்துடன் ஓதுவதால் எமது உச்சரிப்புகளை சரி செய்கிறது. மொழிபெயர்ப்பு மற்றும் அல்குர்ஆன் விளக்கவுரையைப் படிப்பதால் அல்குர்ஆனிய அறிவு வளர்கிறது. அதையும் இம் மணித்தியாளங்களில் நாம் அதிகமதிகம் ஓத வேண்டும்.
அல்குர்ஆனை 720 மணித்தியாளங்களில் ஒரு தடவை ஓதி முடிக்க விரும்பினால் கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் 4 பக்கங்களை ஓதி வந்தால் போதுமானது.
இரு முறை ஓதி முடிக்க விரும்பினால் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு முன்னர் 4 பக்கங்களையும், தொழுகைக்குப் பின் நான்கு பக்கங்களையும் ஓதி வர வேண்டும்.
மூன்று முறை ஓதி முடிக்க விரும்பினால் கடமையான ஒவ்வொரு தொழுகைக்கு முன்னர் 6 பக்கங்களையும், தொழுகைக்குப் பின் 6 பக்கங்களையும் ஓதி வர வேண்டும்.
மேற்கூறப்பட்ட பக்கங்களின் எண்ணிக்கை ஸவூதியில் அச்சிடப்படும் அல்குர்ஆன் பிரதியை அடிப்படையாகக் கொண்டது. இதில் நாம் அல்குர்ஆனை ஓதும் போது, ‘முடிக்க வேண்டும்’ எனும் ஆவலில் வேகமாக ஓதாமல், ‘ஓத வேண்டும்’ எனும் நோக்கில் நிதானமாக, அதன் ஓசை நய சட்டங்களைப் பேணி ஓத வேண்டும்.
6. ஒரு நோன்பில் பல நோன்புகள்.
நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உதவி செய்வதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் கூலியையும் சம்பாதித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இம் மாதத்தில் எமக்குக் கிடைக்கிறது. இவ்வாறு இரண்டு நோன்பாளிகளுக்கு உதவி செய்தால் மூன்று நோன்பின் நன்மைகள் கிடைக்கும். அவ்வாறே பத்து நோன்பாளிகளுக்கு உதவி செய்தால் 11 நோன்புகளின் நன்மை கிடைக்கும். இவ்வாறு பல நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க உதவிகள் செய்வதன் மூலம் பல நோன்புகளின் நன்மையை குறுகிய நேரத்திற்குள் பெற்றுக் கொள்ள முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் ஓர் நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கு அது போன்ற நன்மை கிடைக்கும். அது போக அவருக்கு அந் நோன்பாளியின் கூலியில் இருந்து எந்த ஒன்றும் குறையாமலும் கிடைக்கும்”. (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஹாலித் (ரழி), நூல்: திர்மிதீ 807).
7. ஒரே இரவில் 83 வருடங்கள்.
ரமழான் மாதத்தில் 480 மணித்தியாளங்களைக் கடந்து இறுதிப் பத்தில் நுழையும் போது அதில் உள்ள ஒற்றைப்படையான நாட்களிலே இவ் இரவு தோன்றும். இதற்கு ‘லைலதுல் கத்ர்’ இரவு என அல்குர்ஆன் பெயர் சூட்டியுள்ளது. அல்லாஹ் கூறுகிறான், “லைலதுல் கத்ர் என்னவென்பதை (நபியே!) உமக்கு அறித்தது எது? லைலதுல் கத்ர் என்பது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்”. (அல்குர்ஆன் 97:02-03).
கடந்து வந்த மணித்தியாளங்களில் எமது வணக்கம் சார்நத நல்ல செயற்பாடுகளில் ஏதும் குறைபாடுகள் நிகழ்ந்திருப்பின் இவ் இரவில் அவற்றை முழுமையாக நிவர்த்தி செய்துகொள்ள முடியும். அதற்காக இவ்விரவு மிகவும் இலகுவில் கிடைத்துவிடும் என நாம் எதிர்பார்க்கக் கூடாது. கடைசிப் பத்தின் ஒற்றைப்படையான நாட்கள் அனைத்திலும் நாம் வணக்கங்களை அதிகம் செய்ய வேண்டும். அவ் இரவு வருவதற்கான அறிகுறிகள் எதையும் நபியவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக அவ் இரவு எம்மைக் கடந்துவிட்டால் அதற்கு சில அறிகுறிகளை குறிப்பிட்டுள்ளார்கள். அதன் மூலம் அவ் இரவை அடைந்துவிட்ட பாக்கியத்தை எம்மால் உணர முடியும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “லைலதுல் கத்ரின் அடையாளம் ஒளிவீசும் நிலவுள்ள இரவைப் போன்று தெளிந்த பிரகாசமான அமைதியான இரவாகும். அதில் சூடோ, குளிரோ இருக்காது. உதயக்காலை வரை எரிநட்சத்திரங்கள் எறியப்படுவதில்லை. மேலும், அதன் அறிகுறி அன்றைய காலைச் சூரியன் சந்திரனைப் போன்று ஜுவாலையின்றி உதிக்கும். அன்றைய தினச் சூரியனுடன் ஷைத்தானுக்கு வெளிப்பட அனுமதி கிடையாது”. (அறிவிப்பவர்: உப்பாதா இப்னு ஸாமித் (ரழி), நூல்: மஜ்மஉஸ் ஸவாஇத் 03/178).
எனவே அவ் இரவை தவறவிடாது அதிகமதகம் நன்மைகளை செய்து 83 வருடங்கள் நன்மை செய்த பலனை அடைந்துகொள்ள வேண்டும்.
8. தர்மம்.
தற்போது அதிகமான மக்கள் தொழில் இன்றி வீடுகளில் இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிலர் சிரமமானவர்கள் என கண்முன்னே தெரிந்து கொள்ள முடியும். பலர் தமது சிரமங்களை மறைத்து யாரிடமும் சொல்ல முடியாமல் தவிப்போடு இருப்பர். இவ்வாறான இரு தரப்பினரையும் நாம் இனங்கண்டு, அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தர்மமாகும்.
இஸ்லாமிய பொருளாதாரத்தின் அடிப்படையே இறையியல் கோட்பாடாகும். எமது செல்வங்கள் அனைத்துக்கும் பொறுப்பானவன் அல்லாஹ் மாத்திரமே. அவன் தான் நாடியோருக்கு வளங்களைக் கொடுப்பான் என்பது இஸ்லாத்தின் பொருளியல் கொள்கையாகும். அதில் நன்மைகளை சம்பாதித்துக் கொள்ளவும், நரகில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் சிலருக்கு சற்று அதிகமான செல்வங்களை அல்லாஹ் வழங்குவான். அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கஷ்டம் வந்தாலும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் தேவைகளை முறையிடக் கூடாது, அவனை மாத்திரமே வணங்க வேண்டும், உலக மோகங்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக சிலருக்கு அல்லாஹ் செல்வங்களை வழங்காமல் இருப்பான். அதை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
செல்வம் வழங்கப்பட்டவர்கள் தர்மம் கொடுப்பதால் அல்லாஹ் அவர்களை நரகில் இருந்து பாதுகாப்பதோடு, அவர்களின் வளங்களில் செழிப்பை ஏற்படுத்துவான். செல்வம் கொடுக்கப்படாதவர்களுக்கு அவ்வளங்கள் ஊடாக தொழில் வாய்ப்புக்களையும், தர்மங்களையும் கொடுத்து, அவர்களின் ஈமானை சோதிப்பான்.
செல்வம் இருப்பவர்களும், இல்லாதவர்களும் அல்லாஹ்வின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக இம் மாதத்தின் ஒவ்வொரு மணித்துளிகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டை தர்மம் செய்தேனும் உங்களை நரகத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்’. (அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாதம் அத்தாயி (ரழி), நூல்: புஹாரி 6540, முஸ்லிம் 1016).
மேலும் கூறினார்கள், “நல்ல சம்பாத்தியத்தின் வாயிலாக (ஈட்டிய வருமானத்திலிருந்து) ஒரு பேரீச்சம் பழத்திற்குச் சமமான அளவு தர்மம் செய்கிறவரிடமிருந்து அதை அல்லாஹ் தன் வலக் கரத்தால் பெற்று ஏற்றுக் கொள்வான். அல்லாஹ்வை நோக்கி நல்ல (தூய்மையான)து மட்டுமே மேலே செல்லும். பிறகு அதை, உங்களில் ஒருவர் தம் குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று மலை அளவிற்கு அல்லாஹ் வளர்த்துப் பெருகச் செய்வான்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 7430, முஸ்லிம் 1014).
9. உறவுகளைப் பேணல்.
எமக்கு எஞ்சியுள்ள மணித்தியாளங்களில் குடும்ப உறவுகளில் நாம் அதீத கவனத்தை செலுத்த வேண்டும். குடும்பத்துடன் சேர்ந்து இருப்பதால் எமது ஆயுளிலும், செல்வத்திலும், பண்புகளிலும் அல்லாஹ் அபிவிருத்தியை ஏற்படுத்துகிறான். பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் மாத்திரம் குடும்ப உறவினர்கள் கிடையாது. எது பெற்றோரின் தாய் தந்தையர்கள், அவர்களின் சகோதர சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். தான தர்மங்களை செய்யும் போது அவர்களை முற்படுத்த வேண்டும். அவர்களுக்கு உள்ளத்தாலும், உடலாலும், பொருளாலும் நல்லவற்றை செய்ய வேண்டும்.
குடும்ப உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்வதால் அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் எமக்கு ஏற்படுகிறது. அதனால் அல்லாஹ் எமது செல்வங்களை அதிகப்படுத்தித் தருவான். அவர்களுடன் மகிழ்ச்சியாகவும், எவ்வித குரோதங்களையும் வளர்க்காமலும், முழு மனதாகப் பழகினால் எமக்கு ஏற்படும் பேரானந்தத்தினால் ஆயுள் அதிகரிக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “உங்கள் இரத்த பந்தங்களை அறிந்துகொள்ள உங்கள் பரம்பரையைப் பற்றி கற்றுக்கொள்ளுங்கள். நிச்சயமாக இரத்த பந்தத்தில் அன்பு இருக்கிறது. செல்வம் பெருக்கெடுகிறது. ஆயுள் நீடிக்கிறது”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: திர்மிதி 1979, அஹ்மத் 8855).
10. வாசிப்பு.
ஏனைய நாட்களைப் போல் அல்லாது ரமழான் மாதத்தில் எமது நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுவதால் நாம் கல்விக்காகவும் சிறு பகுதியை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். நோன்பின் சட்டங்கள் பற்றியும், எமது ஆண்மீகத்திற்கு தீனி போடும் விடயங்கள் பற்றியும், இஸ்லாத்தின் ஏனைய துறைகள் பற்றியும் நாம் அதிகம் அறிந்திட வேண்டும். இம் மணித்தியாளங்களில் சிறு பகுதியை அதற்காக நாம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.
இம்மாதத்தில் நபியவர்களும் அல்குர்ஆனை வாசிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டியுள்ளார்கள். அல்குர்ஆனிய அமர்வுகளை ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதன் போது அறிவு ரீதியான உரையாடல்கள் அவர்களுக்கு மத்தியில் எப்படியும் ஏற்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், “ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமழான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து (அது வரை) அருளப்பட்டிருந்த) குர்ஆனை நினைவுபடுத்துவார்கள். இருவருமாகத் திருக்குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்”. (நூல்: புஹாரி 06, முஸ்லிம் 2308).
நாமும் அல்குர்ஆனின் சூறாக்கள், அதன் ஓசை நய சட்டங்கள், சூறாக்களின் உரை நடைகள், அவை இறக்கப்பட்ட காரணங்கள், அல்குர்ஆன் சட்டமியற்றும் முறை, அது கூறும் சம்பவங்களின் படிப்பினைகள், அது போதிக்கும் இறைமைக் கோட்பாடு, பரிபாலணக் கோட்பாடு, பொருளாதாரம், அரசியல், குடும்பவியல், சமூகவியல், அறிவியல், எமது வாழ்வுக்கான வழிகாட்டல்கள் போன்ற அனைத்தையும் அறிந்திட இந்த ரமழான் மாத நோன்பைப் பயன்படுத்த வேண்டும்.
எனவே மேற்கூறப்பட்ட 10 விடயங்களையும் எமது அட்டவணையில் இணைத்துக் கொள்வதால் பின்வரும் நலவுகள் எமக்கு ஏற்படுகின்றன.
1. அல்லாஹ்வுக்காக மாத்திரம் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ளல்.
2. நேரம் குறிப்பிட்ட வணக்கங்களை உரிய நேரத்தில் நிறைவேற்றல்.
3. அல்குர்ஆனை நேர்த்தியாக ஓதி, அது தன்னகத்தே பொதிந்துள்ள அனைத்து அறிவுகளையும் இயலுமான வரை கற்றுக் கொள்ளல்.
4. பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையைப் பெற்று, பொருளாதாரத்தில் சிறந்து விளங்கல்.
5. உறவுகளை துண்டிக்காமல் எப்போதும் அவர்களுடன் இருந்து, தமக்கான ஆள்பலத்தை அதிகரித்துக் கொள்ளல்.
இவ் அனைத்து பலன்களையும் 720 மணித்தியாளங்களுக்குள் எம்மால் வகுக்கப்பட்ட அட்டவணையின் மூலம் அடைந்து, ஏனைய மாதங்களிலும் இதே உந்துதலில் பயணித்து, ஈருலகிலும் வெற்றி பெற்று, மறுமையில் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழைந்திட வல்ல நாயன் எம் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக.
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.