புனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-08) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி





குத்பா - (2020/05/08) 

இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்) 

குத்பா நிகழ்த்தியவர்: அஷ்ஷைக் கலாநிதி அப்துல்லாஹ் இப்னு அவ்வாத் அல்ஜுஹனி 



இன்றைய குத்பாவிலிருந்து... 

இன்றைய குத்பாவின் தலைப்பாக சுருங்கக் கூறின் இஸ்லாத்தின் மூன்றாவது கடமை ஸகாத். 

இஸ்லாமிய மார்க்கம் நேர்மையான, சகோதரத்துவ, கருணைமிகு, சமத்துவமிக்க, சீரான, அடுத்தவர்களை சீராக்கக்கூடிய மார்க்கமாகும். அது நல்ல சம்பாத்தியங்களை ஆகுமாக்கி அதன்பால் மக்களை தூண்டுகிறது. கெட்ட வழியில் அமைந்த சம்பாதிப்பை தடைசெய்து அதன்பால் செல்ல வேண்டாமென எச்சரிக்கை செய்கிறது. இஸ்லாம் அனைத்து நலவுகளையும் சிறப்புகளையும் நேர்மையையும் சகோதரத்துவ வாஞ்சையினையும் ஒன்றுசேரப் பெற்ற மார்க்கமாகும். இது ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த உறுதியான கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான, மூன்றாவது அடிப்படை அம்சமான ஸகாத் ஆகும். இது கட்டாயக் கடமை என அல்குர்ஆன், சுன்னாவின் மூலம் பல இடங்களில் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. 

அல்லாஹ் கூறுகிறான்: தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஸகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். (அல்குர்ஆன்: 2:43) 

ஸகாத் இஸ்லாத்தின் பிரதான கடமையான தொழுகையோடு இணைத்து கூறப்பட்டுள்ளது. தொழுகையும் ஸகாத்தும் இணைபிரியாத விட்டுக்கொடுக்க முடியாத இஸ்லாத்தின் இரு அடிப்படை அம்சங்களாகும். 

அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக யார் தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்க்கிறாரோ, அவரோடு நிச்சயமாக நான் போரிடுவேன். (புஹாரி: 1400, முஸ்லிம்: 34) 

அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. 

(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததை சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்). (அல்குர்ஆன்: 9:34-35) 

முஸ்லிமின் மீது ஸகாத் தகுதியானவர்களுக்கு அதனை கொடுத்துவிடுவது கட்டாயக் கடமையாகும். அதற்கு தகுதியானவர்கள் யாரெனில்: 

அல்லாஹ் கூறுகிறான்: (ஸகாத் என்னும்) தானங்கள் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், ஸகாத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்குர்ஆன்: 9:60) 

அல்லாஹ்வின் அடியார்களே இறைவனை பயந்து கொள்ளுங்கள். உங்களின் செல்வங்களில் அவனுக்கு கட்டுப்பட்டு அவன் கடமையாக்கிய ஸகாத்தை கொடுத்து விடுங்கள். அதனால் உங்களின் பொருளாதாரத்தில் இழப்புகள் ஏற்படுவதை விட்டும் பாதுகாத்துக்கொள்ளுங்கள். தர்மங்களின் மூலமாக வானத்தில் இருக்கும் நலவுகளின் வாயில்களை திறந்து விடுங்கள். அதனைக்கொண்டு உங்களோடு இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளியுங்கள். தண்ணீர் நெருப்பை அனைத்து விடுவது போன்று நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை அணைத்துவிடும். ஸகாத் கொடுக்கப்படாமல் இருப்பதன் காரணமாக வானத்தில் மழை பொழிவது தடுக்கப்படுகிறது. பூமியில் மழை பொழியாவிட்டால் உயிரினங்கள் வாழமுடியாது. 

அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல்குர்ஆன்: 3:133-134) 



இரண்டாம் குத்பா... 

நாட்கள் வேகமாக எம்மை விட்டும் கடந்து செல்கிறது. ரமலான் மாதத்தை விருந்தாளியாக நேற்றுதான் அதனை வரவேற்றோம். இன்றைய நாள் அதன் அரைவாசியை அடைந்து விட்டோம். மேகங்கள் வேகமாக நகர்ந்து செல்வதைப் போன்று சந்தர்ப்பங்களை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கதவுகள் அடைக்கப்பட முன் அதனுள் நுழைந்து கொள்ளுங்கள். நிச்சயமாக விருந்தாளியான மாதம் விடைபெற போகிறது. போனது போக இருக்கின்ற காலங்களை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். அல்லாஹ்வை இரகசியத்திலும் பரகசியத்திலும் பயந்து கொள்ளுங்கள். 

சங்கை பொருந்திய ரமலான் மாதத்தில் அல்லாஹ் நபியவர்களையும் சஹாபாக்களையும் வெற்றியைக் கொண்டும் பல இடங்களை அவர்களுக்கு சொந்தமாக்கிக் கொடுத்தும் சோதித்தான். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமலான் மாதம் இடம்பெற்ற பத்ர யுத்தத்தில் அல்லாஹ் முஃமீன்களை வெற்றிபெறச் செய்தான். ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு ரமலான் மாதம் அகழி யுத்தத்திற்காக முஸ்லீம்களின் தயார்படுத்தல்கள் ஆரம்பமானது. ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமலான் மாதம் மிகப் பாரிய வெற்றியாக மக்கமா நகர் வெற்றிகொள்ளப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நபியவர்கள் அனைத்து குறைஷித் தலைவர்களையும் மன்னித்தார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைந்தார்கள். இப்படி முக்கியமாக யுத்தங்கள் ரமலான் மாத்தத்தில் நடைபெற்றது. 

நிச்சயமாக இதன்மூலம் நோன்புக்கும் வெற்றிக்கும் இடையில் தொடர்பு உள்ளதை அறிந்துகொள்ளலாம். இன்று உலகத்தை கொரோனா நோய்த்தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதனுள் எமது நாடும் அகப்பட்டுள்ளது. இது மக்களின் வாழ்க்கையை பாரியளவில் மாற்றியமைத்துள்ளது. இன்றைய எமது தேவையாக அல்லாஹ் இந்த கொரோனா எனும் நோயை தமக்கு நிவாரணியாக மற்றுவான் என்று நல்ல எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவனிடத்தில் மன்னிப்பையும் தேகாரோக்கியத்தையும் கேட்க வேண்டும். 

இந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வுக்குப் பிறகு இந்த நாட்டின் மன்னர் சல்மானுக்கும் இதன் இளவரசர் முஹம்மத் இப்னு சல்மானுக்கும் இந்த நாட்டின் சகல தரப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் மீது பாரிய பொறுப்பு உள்ளது எனக்கருதி இந்த நாட்டையும் அதன் மக்களையும் இந்த நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதில் சிரமம் பாராது பூரண திருப்தியோடு அரும்பங்காற்றுகிறார்கள். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் பூரண கூலியை கொடுப்பானாக. 

முற்றும்... 





கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget