விளையாட்டு பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டம் - பகுதி 03 MJM. Hizbullah Anvari B.com Reading
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் காணப்பட்ட சில விளையாட்டுக்களும் பொழுது போக்கு அம்சங்களும் 

இஸ்லாம் பொழுது போக்கிற்கு எவ்வகையிலும் தடையாக இருக்காது. நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் சில விளையாட்டுக்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் இருந்து வந்துள்ளது. 

அக்காலத்தில் இவை கடைபிடிக்கப்பட்டதன் நோக்கம் 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் காணப்பட்ட சில விளையாட்டுக்களும், பொழுபோக்கு அம்சங்களும் நேரத்தை வீணடிப்பவையாக அமையவில்லை. அவை இவ்வுலக வாழ்வுக்கான உடல் வலிமை, உள வலிமையைத் தந்ததோடு மறுமையில் வெற்றி பெறுவதற்கான உயரிய சில நோக்கங்களையும் கொண்டிருந்தது. அந்நோக்கங்கள் வருமாறு: 

1. முஸ்லிம் சமூகத்தவர்கள் இத்தகு பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடும் போது வீர உணர்வு அவர்களிடம் ஏற்பட வேண்டும் எனும் நோக்கத்தை சில விளையாட்டுக்கள் கொண்டிருந்தன. சண்டைப் பயிற்சிகள், வால்வீச்சு, அம்பெறிதல், குதிரைப் போட்டி, ஒட்டக போட்டி போன்ற விளையாட்டுக்கள் இதற்கு உதாரணமாகும். 

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்தார்கள், “நபி (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது, பயிற்சி பெற்ற குதிரைகள் 'ஹஃப்யா' என்ற இடத்திலிருந்து 'ஸனிய்யதுல் வதா' என்ற இடம் வரை ஓட வேண்டும் என்றும், பயிற்சியளிக்கப்படாத குதிரைகள் 'ஸனியதுல் வதா' என்ற இடத்திலிருந்து பனூ ஸுரைக் கூட்டத்தினரின் பள்ளிவாசல் வரை ஓட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்தார்கள். அப்போட்டியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்”. (நூல்: புஹாரி 420, முஸ்லிம் 1870). 

2. மக்களுக்கு மத்தியில் பரஸ்பரத்தை ஏற்படுத்தவும், இஸ்லாத்தின் பக்கம் அவர்களை அழைப்பதற்காகவும் சில விளையாட்டுக்களை நபியவர்கள் ஆர்வமூட்டினார்கள். 

ஸலமா இப்னு அக்வஃ (ரழி) அறிவித்தார்கள். 

அஸ்லம் கூட்டத்தார் கடைவீதியில் அம்பெறிந்து (விளையாடிக்) கொண்டிருக்கையில் (அவ்வழியாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டு வந்தார்கள். அதைக் கண்டதும், 'இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெறியுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை(யான இஸ்மாயீல் - அலை - அவர்கள்) அம்பெறிபவராக (வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவராக) இருந்தார்கள். 'நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்' என்று இருதரப்பினரில் ஒரு தரப்பாரைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். உடனே மற்றொரு தரப்பினர் (விளையாட்டைத் தொடராமல்) நிறுத்திவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இவர்களுக்கென்ன நேர்ந்தது?' என்று கேட்க, அவர்கள், 'நீங்கள் இன்ன குலத்தாரோடு இருக்க, நாங்கள் எப்படி அம்பெறிவோம்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(தொடர்ந்து) அம்பெறியுங்கள். நான் உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி 3507). 

3. குடும்ப உறவை பலப்படுத்தவும், கனவன், மனைவிக்கிடையில் அன்பு பெருகவும் சில விளையாட்டுக்களை நபியவர்கள் விளையாடியுள்ளார்கள். 

ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன். அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது, ‘முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்!’ என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள். பிறகு என்னிடத்தில், ‘என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா!’ என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில், ‘முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்!’ என சொன்னார்கள். பிறகு என்னிடத்தில், ‘என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா’ என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள். (நூல்: அபூதாவுத் 2578, நஸாஈ 8944). 

4. ஓர் முஃமினை உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும் பலப்படுத்துவதற்காகவும் சில விளையாட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “பலசாலியான ஓர் முஃமின் பலவீனமான ஓர் முஃமினை விடவும் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராகவும், அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவராகவும் காணப்படுகிறார்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 2664). 

5. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும், இஸ்லாத்தின் விசாலத்தன்மையையும் உணர்த்தும் வகையிலும், விளையாடுபவர்கள் அச்சமற்று இருக்க வேண்டுமெனும் நோக்கிலும் நபியவர்கள் நடந்துகொண்டுள்ளார்கள். 

ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், “நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்”. (நூல்: புஹாரி 6130, முஸ்லிம் 2440). 

ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “(இவ்வாறு விளையாடுவதற்கு நான் இடமளித்ததைக் கண்டு) யூதர்கள் இஸ்லாத்தின் விசாலத்தன்மையை உணர்நது கொள்ளட்டும். நான் எதையும் இலகுபடுத்தும் மார்க்த்துடனே அனுப்பப்பட்டுள்ளேன்” (நூல்: அஹ்மத் 24855). 

6. ஏதும் கவலைகளோ, மனக்குழப்பங்களோ ஏற்பட்டால் அவற்றை நீக்குவதற்காககவும் நபியர்கள் விளையாட்டை ஊக்குவித்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களில் ஒருவருக்கு கவலை ஏற்பட்டால் அம்பெறிந்து (விளையாடட்டும்). அது அவரின் கவலையைப் போக்கிவிடும். (அறிவிப்பவர்: ஆஇஷா (ரழி), நூல்: இமாம் தபரானி (ரஹ்) அவர்களின் ‘அல்முஃஜமுஸ் ஸகீர்’ 02/275). 

கவலையைப் போக்குவதற்காக ஆகுமாக்கப்பட்ட ஓர் பொழுதுபோக்கு அம்சத்தைத் தேர்வு செய்யுமாறே இவ் ஹதீஸ் குறிப்பிடுகிறது. 

நபித்தோழர்கள் இவ் அடிப்படையிலே விளையாட்டுக்களையும், பொழுதுபோக்குகளையும் கையாண்டுள்ளார்கள். அதனால் அவர்களுக்கு மத்தியில் குழப்பங்களும், பிரச்சினைகளும், சண்டை சச்சரவுகளும், இஸ்லாத்தை பாழ்படுத்தும் அம்சங்களும் காணப்படவில்லை. நாமும் இதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிக அம்சங்கள் இருக்கின்றன. எமது எண்ணதிற்கேற்றவாறே கூலி வழங்கப்படும். அதனால் விளையாட்டுக்களிலும் பொழுது போக்குகளிலும் ஈடுபடும் போது நாம் நமது எண்ணத்தை இஸ்லாத்தின் அடிப்படையில் அமைத்துக்கொள்வதோடு, இஸ்லாம் ஆகுமாக்கிய விளையாட்டுக்களை மாத்திரமே விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். 

நபியவர்கள் காலத்தில் காணப்பட்ட சில பொழுதுபோக்கு அம்சங்கள்.

இஸ்லாம் என்பது எப்போதும் வணக்கத்தை மாத்திரமே கற்றுத் தருகிறது. பொழுதுபோக்கு அம்சங்களில் நாம் ஈடுபடப் போனாலும் அதிலும் ஆயிரம் காரணங்கள் கூறி அவற்றைத் தடை செய்கிறது எனும் சிந்தனையில் இஸ்லாத்தைக் கடிந்துகொள்ளும் அநேகர் நம் மத்தியில் உள்ளனர். அவர்கள் பொழுதுபோக்கு அம்சத்தை சரியாகப் புரிந்து கொள்ளாததே இதற்கான முக்கிய காரணமாகும். 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கூட பல பொழுது போக்கு அம்சங்கள் காணப்பட்டுள்ளன. அவற்றில் சிலதை இங்கு பார்ப்போம். அதைப் பார்க்கும் போது பொழுதுபோக்கு சாதனங்களை எவ்வாறு இஸ்லாமிய வரம்புகளுக்குள் பயன்படுத்துவது என்ற ஓர் தெளிவு நமக்குக் கிடைக்கும். 

1. ஓட்டப் பந்தயம். 

ஓட்டப் பந்தயம் என்பது உடலுக்கு புத்துணர்ச்சியூட்டக் கூடிய ஓர் விளையாட்டாகும். நபி (ஸல்) அவர்கள் சிறுவர்கள், மனைவி, தோழர்கள் என அனைவருக்கும் ஓட்டப் பந்தயம் வைத்துள்ளார்கள். 

ஆஇஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “நான் நபி (ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன். அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது, ‘முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்!’ என்று நபி (ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள். பிறகு என்னிடத்தில், ‘என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா!’ என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில், ‘முன்னே செல்லுங்கள்! முன்னே செல்லுங்கள்!’ என சொன்னார்கள். பிறகு என்னிடத்தில், ‘என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா’ என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள். (நூல்: அபூதாவுத் 2578, நஸாஈ 8944). 

தபூக் யுத்தம் முடிந்து நபியவர்களும், நபித்தோழர்களும் மதீனா நோக்கி வரும் போது ஓர் அன்ஸாரித் தோழர் வேகமாக முன்னேரிச் சென்றார். அவரை முந்துபவர்கள் எவரும் இல்லையா எனக் கேட்டபடி அவர் முன்னேரிச் சென்றார். அப்போது ஸலமா இப்னு அல் அஊஃ (ரழி) அவர்கள் நபியவர்களிடம் அனுமதி பெற்று அவருடன் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டார். -நீண்ட ஹதீஸின் சுருக்கம்- (அறிவிப்பவர்: ஸலமா இப்னு அல் அஊஃ (ரழி), நூல்: இர்வாஉல் ஹலீல் 05/332). 

2. குதிரை மற்றும் ஒட்டக ஓட்டப் பந்தயம். 

நபி (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே ஓட்டப் பந்தயம் வைப்பவர்களாக இருந்தார்கள். அதில் வெற்று பெரும் குதிரை வீரருக்கு பரிசில்களும் வழங்கியுள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே பந்தயம் வைத்தார்கள். அப்போது அவற்றில் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகள் (பந்தயத்தில்) அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு 'ஹஃப்யா' எனுமிடத்திலிருந்து 'ஸனிய்யத்துல் வதாஉ' மலைக்குன்று வரையாக இருந்தது. மெலியவைக்கப்படாத குதிரைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. அவற்றின் பந்தயத் தொலைவு 'ஸனியத்துல் வதா' மலைக்குன்றிலிருந்து 'பனூ ஸுரைக்' குலத்தாரின் பள்ளிவாசல் வரையாக இருந்தது. மேலும், நானும் (குதிரைகளுடன்) போட்டியில். பங்கெடுத்தவர்களில் ஒருவனாயிருந்தேன். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), நூல்: புஹாரி 7336, முஸ்லிம் 1870). 

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே பந்தயம் வைப்பார்கள். அதில் வெற்றி பெறும் குதிரை வீரருக்கு பரிசில்கள் வழங்குவார்கள். (நூல்: அஹ்மத் 08/31). 

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்களிடம் 'அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்தியது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்தபோது நபி (ஸல்) அவர்கள், 'உலகில் உயர்ந்து விடுகிற பொருள் எதுவாயினும் (ஒருநாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்' என்று கூறினார்கள். (நூல்: புஹாரி 2872). 

போட்டியின் போது தோல்வியை ஒப்புக் கொள்வதை நபியவர்கள் அழகாக கையாண்டுள்ள விதத்தை இவ் ஹதீஸ் குறிப்பிடுகிறது. இத்தகு பந்தயங்களில் சூது இடம்பெறவில்லை என்பதும் நாம் இங்கு கவனிக்க வேண்டிய ஓர் முக்கிய விடயமாகும். 

3. மல்யுத்தம் 

மல்யுத்தம் என்பது ஜாஹிலிய்யாக் காலத்தில் விளையாடப்பட்ட சிறந்த உடற்சார் விளையாட்டாக காணப்பட்டது. உக்காழ் சந்தையில் அரேபிய கோத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் மல்யுத்த போட்டியை ஏற்பாடு செய்வார்கள். இதைப் பார்ப்பதற்காய் அதிகமான மக்கள் அங்கு திரழ்வார்கள். அக்காலத்தில் உமர் (ரழி) அவர்களும் சிறந்த மல்யுத்த வீரராக இருந்தார்கள். இஸ்லாம் வந்ததன் பின் சிறு திருத்தங்களுடன் மல்யுத்தத்தை அது ஆதரித்தது. 

நபியவர்கள் காலத்து மல்யுத்தம் என்பது தற்போது நடைபெறுவதைப் போன்று காட்டுமிராண்டித் தனமாகவும், ஒழுக்க சீர்கேட்டை அடிப்படையாக வைத்தும் இருக்க வில்லை. எவ்வித சூதாட்டமும் அற்ற, எதிர்வாதிக்கு எவ்வித உபாதைகளையும் ஏற்படுத்தாத, ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்குகிற அடிப்படையிலே அது நிகழ்த்தப்பட்டது. 

நபி (ஸல்) அவர்களும் மல்யுதத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். ருகானா என்ற நபித்தோழர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்களுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். அப்போட்டியில் நபியவர்கள் போட்ட விதிகள் அவரை இஸ்லாத்தை ஏற்கும் அளவுக்கு ஒழுக்கமானதாகவும், மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருந்தது. -சிறு சுருக்கத்துடன்- (நூல்: அல்பிதாயா வந்நிஹாயா 03/101). 

4. அம்பெறிதல். 

அம்பெறிதல் என்பது நபியவர்கள் காலத்தில் சிறுவர்கள் முதல், வயோதிபர்கள் வரை விரும்பிப் பயின்ற ஓர் விளையாட்டாகவும் , கலையாகவும் காணப்பட்டது. அம்பெறிவதைக் கற்று அதை மறந்தவர் நபியவர்களைச் சார்ந்தவர் கிடையாது எனும் எச்சரிக்கை வரும் அளவுக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஓர் விளையாட்டாக அது இருந்துள்ளது. 

அப்துர் ரஹ்மான் இப்னு ஷுமாசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஃபுகைம் அல்லக்மீ என்பவர் உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்களிடம் "(முதியவரான) தாங்கள் (அம்பெய்வதற்காக) இவ்விரு இலக்குகளுக்கிடையே உங்களைச் சிரமப்படுத்திக் கொள்கிறீர்களே!" என்று கேட்டார். அதற்கு உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை நான் செவியுற்றிராவிட்டால் இதற்காக நான் சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டேன்" என்று பதிலளித்தார்கள். 

இதன் அறிவிப்பாளரான ஹாரிஸ் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

நான் அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா (ரஹ்) அவர்களிடம், "அது என்ன (செய்தி)?" என்று கேட்டேன். அதற்கு அப்துர் ரஹ்மான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுகிறாரோ அவர் "நம்மைச் சேர்ந்தவர் அல்லர்" அல்லது "(நமக்கு) மாறுசெய்துவிட்டார்" என்று கூறினார்கள்" என விடையளித்தார்கள். (நூல்: முஸ்லிம் 1918). 

ஸலமா இப்னு அக்வஃ (ரழி) அறிவித்தார்கள். 

அஸ்லம் கூட்டத்தார் கடைவீதியில் அம்பெறிந்து (விளையாடிக்) கொண்டிருக்கையில் (அவ்வழியாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டு வந்தார்கள். அதைக் கண்டதும், 'இஸ்மாயீலின் சந்ததிகளே! அம்பெறியுங்கள். ஏனெனில், உங்கள் தந்தை(யான இஸ்மாயீல் - அலை - அவர்கள்) அம்பெறிபவராக (வில் வித்தையில் தேர்ச்சி பெற்றவராக) இருந்தார்கள். 'நான் இன்ன குலத்தாருடன் இருக்கிறேன்' என்று இருதரப்பினரில் ஒரு தரப்பாரைக் குறிப்பிட்டுக் கூறினார்கள். உடனே மற்றொரு தரப்பினர் (விளையாட்டைத் தொடராமல்) நிறுத்திவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'இவர்களுக்கென்ன நேர்ந்தது?' என்று கேட்க, அவர்கள், 'நீங்கள் இன்ன குலத்தாரோடு இருக்க, நாங்கள் எப்படி அம்பெறிவோம்?' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், '(தொடர்ந்து) அம்பெறியுங்கள். நான் உங்கள் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன்' என்று பதிலளித்தார்கள். (நூல்: புஹாரி 3507). 

5. நீச்சல் போட்டி 

நீச்சலுக்கும் நபியவர்கள் காலத்தில் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வியாபார நோக்கத்திலும், யுத்தத்திற்காகவும் கடல் மார்க்கமாக பயணிக்க வேண்டி இருந்ததால் அதனைக் கற்றுக்கொள்ள ஆர்வமூட்டியுள்ளார்கள். அவ்வாறே நீச்சல் என்பது தன்நம்பிக்கையை வளர்ப்பதோடு, யாரின் உதவியும் இல்லாமல் தனி ஆலாக எதையும் செய்யும் திறனையும் வளர்க்கிறது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வை நினைவூட்டுவதை விட்டும் தடுக்கும் அனைத்தும் வீணான, கேளிக்கையான, மறதியை ஏற்படுத்தும் விடயங்களாகும். இந் நான்கு விடயங்களையும் தவிர, இரு இலக்குகளுக்கிடையில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடல், குதிரை ஓட்டப்போட்டியை பயிலுதல், தன் குடும்பத்துடன் கொஞ்சி விளையாடுதல், நீச்சலைக் கற்றுக் கொள்ளல். (அறிவிப்பவர்: அதா இப்னு அபூ ரபாஹ் (ரழி), நூல்: ஸில்ஸிலதிஸ் ஸஹீஹா 315). 

உமர் (ரழி) அவர்கள் ஷாம் பிரதேசத்தின் கவர்னர் அபூ உபைதா (ரழி) அவர்களுக்கு ஓர் கடிதம் எழுதினார்கள், அதில், உங்கள் சிறுவர்களுக்கு நீச்சலையும், அம்பெறிதலையும் கற்றுக் கொடுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூ உமாமா இப்னு ஸஹ்ல் (ரழி), நூல்: இப்னு ஹிப்பான் 6037). 

எழுத்தறிவு, நீச்சல், அம்பெறிதல் ஆகிய மூன்று கலைகளும் ஒருவரிடம் காணப்பட்டால் அவருக்கு காமில் எனும் பெயர் கொண்டு அரேபியர்கள் அழைத்துள்ளனர். இம்மூன்றிலும் அஸீத் இப்னு ஹுழைர் (ரழி), ஸஃத் இப்னு உபாதா (ரழி) ஆகிய இருவரும் அப்போது பிரசித்தி பெற்றவர்களாக இருந்துள்ளார்கள். ஹிஜ்ரி ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இமாம் ஸுயூதி (ரஹ்) அவர்கள் நீச்சலின் மகிமைகள் குறித்து ஓர் நூலை எழுதி, அதில் நீச்சல் பற்றி நபித்தோழர்கள் கூறிய அனைத்து செய்திகளையும் பதிவு செய்துள்ளார்கள். 

6. பளு தூக்குதல். 

பளு தூக்கும் விளையாட்டில் பங்கு கொள்வதால் கெண்டைக் கால், கை, தொடை, வயிறு ஆகிய பகுதிகளின் தசைகள் வலுவடைகின்றன. இவ் விளையாட்டை நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள். எதிரிகளுடன் சண்டையிடும் போதும், தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் இது அதிகம் பயனுள்ளதாக இருப்பதால் இதை ஆமோதித்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் பாராங் கல்லைத் தூக்கும் ஓர் குழுவினரைக் கடந்து செல்ல நேர்ந்தது. அப்போது அவர்களிடம், இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் எனக் கேட்டார்கள். அதற்கு அக்குழுவினர், பலசாலியை தீர்மானிப்பதற்காக பாராங் கல்லைத் தூக்குகிறார்கள் என்றார்கள். அதற்கு நபியவர்கள் இவரை விட பலசாலியை நான் உங்களுக்கு கூரட்டுமா கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்துபவர் இவரை விட பலசாலியாவார் எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி), நூல்: ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 07/869). 

7. ஏனைய விளையாட்டுக்கள். 

மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த ஈட்டி, வால்சண்டை போன்ற மேலும் பல விளையாட்டுக்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளன. சில விளையாட்டுக்களுக்கான பயிற்சிகள் பள்ளிவாயிலில் வழங்கப்பட்டுள்ளது. 

ஆயிஷா (ரழி) அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் என்னைத் தம் மேல் துண்டால் மறைத்துக்கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகளின் மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். (நூல்: புஹாரி 5236, முஸ்லிம் 892). 

அவ்வாறே வேட்டையாடுவதுடன் தொடர்புபட்ட அம்பெறிதல், வேட்டை நாய்களைப் பழக்குதல் போன்ற விளையாட்டுக்களும் பிரசித்தமாக இருந்துள்ளது. 

ஆக பொழுதுபோக்கு அம்சங்களில் குறிப்பாக ஆகுமான விளையாட்டுக்களில் ஈடுபடுவதை இஸ்லாம் எமக்கு ஆதரித்துள்ள அதே வேளை எமது நேரத்தையும் கருத்தில் கொண்டு அவற்றில் ஈடுபட வேண்டுமென்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும். இஸ்லாம் எமக்கு நேரத்தைப் பயன்படுத்துவதில் கற்றுத் தந்துள்ள விடயங்களை எமது வாழ்வில் எடுத்து நடந்து, இஸ்லாம் அனுமதித்த விளையாட்டுக்களை விளையாடுவதன் மூலம் உடல், உள புத்துணர்ச்சியைப் பெற்று, அதன் மூலம் வணக்க வழிபாடுகளின் சோர்வின்றி ஈடுபட்டு நாளை மறுமையில் ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் நுழைந்த வல்ல நாயன் அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக!

முற்றும்.......

பகுதி 01:

பகுதி 02:

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget