ஸலாதுன் நாரியா விளக்கம் !

முஸ்லிம்கள் சிலரிடம் சலாதுன் நாரியா என்ற நரக சலவாத்தை மார்க்கம் என்று கருதி ஓதும் வழக்கம் இருந்து வருகின்றது.சில குறிப்பிட்ட தடவைகள் ஓதினால் ஏழைகள் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற தவறான எண்ணத்தில் ஆலிம்களை அழைத்து அவர்களுக்குரிய கட்டணங்கள் கொடுத்தும் ஓதப்பட்டு வருகின்றது.
இது மார்க்கத்தில் உள்ளதா என்று அறிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
இந்த சலவாத்து நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குப்பின் வந்த சில அறிவீனர்களால் உருவாக்கப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்த்தெறியும் பல கருத்துக்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன.
இனி எவ்வாறு இஸ்லாமிய  அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானது என்பதை பார்ப்போம்.
சலாதுன் நாரியா
( اللهم صل صلاة كاملة ، وسلم سلاما تاما على سيدنا محمد ، الذي تنحل به العقد ، وتنفرج به الكرب ، وتقضى به الحوائج ، وتنال به الرغائب ، وحسن الخواتيم ، ويستسقي الغمام بوجهه الكريم ، وعلى آله وصحبه عدد معلوم لك )
அல்லாஹும்ம சல்லி சலாத்தன் காமிலத்தன், வ சல்லிம் சலாமன் தாம்மன், அலா சய்யிதினா முஹம்மதின், அல்லதி தன்ஹல்லு பிஹில் உகத், வ தன் பரிஜு பிஹில்  குரப், வ துக்லா பிகில் ஹவாயிஜூ, வ துனாலு பிகி ரகாயிபு. வ ஹுஷ்னுள் ஹவாதிம், வ யுஸ்தஷ்கள் கமாமு, பி வஜ்ஹிஹில் கரீம்.வ அலா ஆலிஹி வசஹபிஹி  பீ குல்லி லம்ஹத்தின் வ நப்சின் பி அததி குல்லி மஹ்லூமின் லக.
இதன் பொருள் பின் வருமாறு:
அல்லாஹ்வே எங்களுடைய தலைவரான முஹம்மது அவர்கள் மீதும் அவருடைய குடும்பத்தினர் மற்றும் தோழர்கள் மீதும் ஒவ்வொரு கண் சிமிட்டும் மற்றும் சுவாசிக்கும் நேரமும் உன்னால் அறியப்பட்ட அனைத்து எண்ணிக்கை அளவிற்குப் பரிபூரண அருளையும் முழுமையான சாந்தியையும் பொழிவாயாக! அந்த முஹம்மது எப்படி பட்டவரென்றால் அவர் மூலமாகத்தான் சிக்கல்கள் அவிழ்கின்றன. அவர் மூலம் தான் துன்பங்கள் நீங்குகின்றன. அவர் மூலம்தான் தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அவர் மூலம்தான் நாட்டங்களும் அழகிய இறுதி முடிவும் பெற்று கொள்ளப் படுகின்றன. அவருடைய திரு முகத்தின் மூலம்தான் மேகத்திலிருந்து மழை பெறப்படுகிறது.”
மேற்கண்ட நரக சலவாத்தில் நபிகள் நாயகம் ஸல்  அவர்களின்  மூலம்தான் சிக்கல் அவிழ்கின்றது என்றும் துன்பம் நீங்குகிறது என்றும் தேவை நிறைவேற்றப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இறைவனுக்கு மட்டுமே உரிய இத்தகைய ஆற்றலை இறந்தவர்களுக்கோ அல்லது நல்லடியார்களுக்கோ இது போன்ற ஆற்றல் இருப்பதாக கூறுவது நரகத்தில் சேர்க்க கூடிய இணைக் கற்பிக்கின்ற காரியமாகும். இதனை ஓதும் மக்களும் நம்மை எங்கு போய் சேர்க்கும் என்று சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.
துன்பங்களை நீக்குபவன் யார்?
1.       ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களை காப்பாற்றுகிறான் (6:64)

அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களால் துன்பங்களையும் சிக்கல்களையும் நீக்க முடியும் என்று நம்பிய தீயவர்களைப் பார்த்து இறைவன்  கேட்கும் கேள்வி

2.       நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது நெருக்கடியை சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்க்கு பதில் அளித்து துன்பத்தைப் போக்கி உங்களை பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா?அல்லாஹ்வுடன் வேறு கடவுளா?குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (27:62)
நபியவர்களை இறைவனுக்கு நிகராக ஆக்குகின்ற இந்த நரக சலவாத்தை நாம் ஓதலாமா?
நாட்டங்களை நிறைவேற்றுபவன் யார்?
நாட்டங்களை நிறைவேற்றும் ஆற்றல் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு உண்டு என்றால் நபிகளாரின் அனைத்து நாட்டங்களும் ஏன் அவர்கள் நிறைவேற்றிக்கொள்ளவில்லை? அவர்களின் அனைத்து நாட்டங்களும்  நிறைவேற்றப்பட்டதா? இதை நாம் முதலில் சிந்திக்க வேண்டாமா?
நபியவர்கள் தம்முடைய சிறிய தந்தை அபுதாலிப் ஏகத்துவ கொள்கையை ஏற்க வேண்டும் என்று விரும்பினார்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்களின் இந்த மாபெரும் நாட்டம் இறைவனால் நிறைவேற்றப்படவில்லை. மாறாக நபியவர்களுக்கு நாடியதை செய்யும் ஆற்றல் இல்லை என்பதை கீழ்க்காணும் வசனம் தெளிவு படுத்துகின்றது.
முஹம்மதே! நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன். (9:80)
நபியவர்கள் காலத்தில் மக்காவில் வாழ்ந்த அபு ஜஹ்ல்,உத்பா,ஷைபா போன்ற அணைத்து காபிர்களும் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று பேராவல் கொண்டிருந்தார்கள் என்பதை கீழ்க்காணும் வசனம் விளக்குகின்றது.
அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்! (26:3)
நபிகள் நாயகம் மிகத் தீவிரமாக ஒன்றை விரும்பியும் அவை நிறைவேற்றப்படவில்லை என்றால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மூலம் தான் நாட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்ற இந்த சலவாத்தில் வரக்கூடிய வரிகள் இறைவசனங்களுக்கு முரண்பட்ட நிரந்தர நரகத்தை தேடி தரக்கூடியவை என்பதில் சந்தேகம் இல்லை.
அழகிய இறுதி முடிவை தருபவன் யார்?
நபியவர்களின் மூலமாகத்தான் அழகிய இறுதி முடிவு நமக்கு கிடைக்கின்றது என்று எண்ணுவது நிரந்தர நரகத்தில் சேர்க்கின்ற இணைக் கற்பிக்கின்ற வரிகளாகும்.
ஒருவர் சொர்க்க வாசியாக மரணிப்பதும் நரக வாசியாக மரணிப்பதும் இறைவனின் நாட்டமே!
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் சொர்கத்திற்கென்றே சிலரை படைத்துள்ளான். அவர்கள் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான். நரகத்திற்கென்று சிலரைப் படைத்துள்ளான் அவர்கள் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்.    அறிவிப்பவர் : ஆயிஷா ரலி
இதை சிந்தித்தாலே மேற்கண்ட நரக சலவாத்தை ஓதினால் நரகத்தை தான் சென்றடைவோம் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
மழை பொழிவிப்பவன் யார்?
மழை பொழிவிக்கின்ற ஆற்றல் அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் கிடையாது. ஆனால் நபியவர்களுக்கும் உண்டு என்றால் அவை இறை வசனங்களுக்கு முரண்பட்டு நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை.
நீங்கள் அருந்தும் தண்ணீரை பற்றி சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? (56:68)
மர்யமின் குமாரர் ஈசா அலை அவர்களை கிறித்தவர்கள் வரம்பு மீறி புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்தியதைப் போல் என்னையும் வரம்பு மீறி புகழ்ந்து விடாதீர்கள். அல்லாஹ்வின் அடியார், அல்லாஹ்வின் தூதர் என்று அழையுங்கள் என்று கூறிய நபிகளாரின் போதனைகளையெல்லாம் புறம் தள்ளிவிட்டு இறை வார்த்தைகளுக்கு மாற்றமாக வாழ்த்து கூறுவதுதான் நாம் நபிகள் நாயகம் ஸல் அவர்களை கண்ணியப்படுத்தும் புகழும் விதமா? சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் நாம் கொண்ட அன்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்தித் தந்துள்ளான். அது அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக்கூடிய விதமே தவிர நாம் அவர்களிடம் அருளை வேண்டி  இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு வேட்டு வைக்கக்கூடிய வடிகால் இல்லை.
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகின்றான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக இறை அருளை வேண்டுங்கள். சலாமும் கூறுங்கள். (33:56)
மேற்கண்ட வசனம் இறங்கிய உடன் சஹாபாக்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் சலவாத் சொல்வது எப்படி என்று கேட்டுக் கற்றுக்கொண்டார்கள். அவைகளைத்தவிர நாம் உருவாக்கிய புகழ் மாலைகள் ஒரு போதும் இறை நெருக்கத்தை பெற்றுத்தறாது மாற்றாக இறை கோபத்தையே அதிகரிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் அல்லஹ்வின் தூதரே தங்கள் மீது சலாம் கூறும் முறையை நாங்கள் அறியோம். சலவாத் கூறுவது எப்படி? என்று கேட்கப்பட்டது...
அதற்கு நபியவர்கள் "அல்லாஹும்ம சல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா சல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க  ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்" என்று சொல்லுங்கள் என பதில் அளித்தார்கள்.
தொழுகை அல்லாத சமயங்களில் சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் என்றோ சல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
யார் அல்லாஹ்விடம்  என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆ செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் அருள் பத்து தடவை நம் மீது பொழியப் பட வேண்டுமென்றால் அவர்கள் காட்டித்தந்தவாறு அவர்கள் மீது நாம் சலவாத் கூறினால் மட்டுமே தவிர நமது சொந்த வழியில் உருவாக்கி அதனை வணக்கம் என கருதுவோமேயானால் அது அல்லாஹ்வின் சாபத்தை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்  என்பதில் சந்தேகம் இல்லை.
அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரும் இந்த சலவாத் நாரியாவை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் சலவாத்தை கூறுவோம்.அளப்பரிய நன்மைகளை அடைவோம்
அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!
“யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி - 2550, முஸ்லிம் - 1718)



கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget