ரமழான் மாதம் என்பது ஏனைய மாதங்களை விடவும் சிறந்த ஓர் மாதமாகும். ஏனெனில் இம் மாதத்தில் எமது வாழ்க்கைக்குத் தேவையான அதிகபட்ச வழிகாட்டல்களை நாம் பெறுகிறோம். அவற்றை ஏனைய மாதங்களிலும் நாம் கடைபிடித்து வந்தால் எமது வாழ்க்கையின் தரமே வியந்து பார்க்கும் அளவுக்கு முன்னேற்றம் மிக்கதாக மாறிவிடும்.
எமக்கான அரிய சந்தர்ப்பமாக கிடைத்துள்ள இம் மாதத்தின் இறுதிப் பகுதியை அடைந்துள்ள நாம், அதன் ஒவ்வொரு மணித்துளிகளையும் இம்மைக்கும், மறுமைக்கும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டும். அந்த வகையில் நாம் ஆண்மீக ரீதியாக கடைபிடிக்க வேண்டிய சில ஏவல்கள் பற்றியும், கடைபிடிக்கக் கூடாத சில விலக்கல்கள் மேலும் அதிகரித்துக்கொள்வது மிகவும் ஏற்றமானது.
1. ரய்யான் வாயிலால் நுழையுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “சொர்க்கத்தில் 'ரய்யான்' என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! 'நோன்பாளிகள் எங்கே?' என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி), நூல்: புஹாரி 1896, முஸ்லிம் 1152).
2. முன்சென்ற பாவங்களின் மன்னிப்பைப் பெறுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 1901, முஸ்லிம் 760).
3. அல்லாஹ்வினதும், மலக்குகளினதும் ஸலவாத்தைப் பெறுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஸஹ்ர் நேரத்தில் சாப்பிடுவது பரக்கத் மிக்கதாகும். ஒரு மிடர் தண்ணீர் குடித்தாவது (அதை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்) அதை விட்டுவிடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வும், மலக்குகளும் ஸஹ்ர் செய்பவர்களுக்கு ஸலவாத்துக் கூறுகிறார்கள்”. (அறிவிப்பவர்: அபூ ஸஈத் அல்ஹுத்ரி (ரழி), நூல்: அஹ்மத் 11101, ஜாமிஉஸ் ஸகீர் 4875).
4. காலம் பூராகவும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் ரமழான் மாத நோன்பையும், ஷவ்வால் மாத ஆறு நோன்பையும் நோற்கிறாரோ அவர் காலம் பூராகவும் நோன்பு நோற்றவர் போலாவார்”. (அறிவிப்பவர் அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரழி), நூல் முஸ்லிம் 1164).
மேலும் கூறினார்கள், “பொறுமையின் மாத ரமழான் மாத நோன்பும், ஒவ்வொரு மாதத்தின் மூன்று நாட்கள் நோட்கப்படும் நோன்பும் காலம் பூராகவும் நோற்கப்படும் நோன்பைப் போன்றதாகும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: அஹ்மத் 7577, நஸஈ 2408).
5. நோன்பை பல மடங்காக்குங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் ஓர் நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கு அது போன்ற நன்மை கிடைக்கும். அது போக அவருக்கு அந் நோன்பாளியின் கூலியில் இருந்து எந்த ஒன்றும் குறையாமலும் கிடைக்கும்”. (அறிவிப்பவர்: ஸைத் இப்னு ஹாலித் (ரழி), நூல்: திர்மிதீ 807).
6. எதற்குமே ஒப்பாகாத, தனித்துவமான நன்மையை செய்யுங்கள்.
அபூ உமாமா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஓர் அமலை செய்யுமாறு ஏவுங்கள்’ என்றார்கள். அதற்கு நபியவர்கள், “நோன்பிரு, அதற்கு ஒப்பாக வேறு எந்த செயலும் இல்லை” என்றார்கள். மீண்டும் ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஓர் அமலை செய்யுமாறு ஏவுங்கள்’ என்றார்கள். அதற்கு நபியவர்கள், “நோன்பிரு, அதற்கு ஒப்பாக வேறு எந்த செயலும் இல்லை” என்றார்கள். (நூல்: அஹ்மத் 22149, நஸாஈ 2223).
7. இரு தடவை மகிழ்ச்சியைப் பெறுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 1904, முஸ்லிம் 1151).
8. எப்போதும் தாகம் ஏற்படாதவர்களாக இருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பாளிகளுக்கு சுவனத்தில் ஓர் வாயில் உள்ளது. அதற்கு ‘ரய்யான்’ எனக் கூறப்படும். அதில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். அவர்களில் கடைசியானவர் நுழைந்தவுடன் அவ்வாயில் மூடப்படும். அதில் நுழைந்தவர் (நபியவர்களின் நீர்த் தடாகத்தில் இருந்து) நீர் அருந்துவார். அவ்வாறு நீர் அருந்துபவருக்கு எப்போதும் தாகம் ஏற்படாது”. (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி), நூல்: நஸஈ 2235, ஸஹீஹுல் ஜாமிஃ 5184).
9. நரகிலிருந்து பாதுகாப்பு பெறுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பு என்பது கேடயமும், அரனும் ஆகும். அது நரகிலிருந்து பாதுகாக்கும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல் அஹ்மத் 9214, பைஹகீ 3571).
10. நபித்துவ பண்புகளில் ஒன்றைப் பெறுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பு திறப்பதை அவசரப்படுத்தல், ஸஹ்ர் செய்வதை பிற்படுத்தல், தொழுகையில் வலது கையை இடது கையின் மீது வைத்தல் ஆகிய மூன்றும் நபித்துவத்துடன் தொடர்பானவை ஆகும்”. (அறிவிப்பவர்: முஹம்மத் இப்னு அப்பான் அல்அன்ஸாரி (ரழி), நூல்: இமாம் பைஹகியின் ஸுனனுல் குப்ரா 02/29, தபரானி 02/108, ஸஹீஹுல் ஜாமிஃ 3038).
11. மார்க்கத்தை பலப்படுத்துபவராக இருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும் வரை மார்க்கம் பலம்பொருந்தியதாக இருக்கும்! ஏனெனில் யூதர்களும், கிறிஸ்தவர்களுமே அதை பிற்படுத்துவார்கள்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: அல்மஜ்மூஃ 06/359).
12. பரக்கத் பொருந்திய அதிகாலை ஆகாரத்தை உண்ட பாக்கியத்தைப் பெறுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!' (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி), நூல்: புஹாரி 1923, முஸ்லிம் 1095).
மேலும் கூறினார்கள், 'நீங்கள் அதிகாலை நேர உணவை ஸஹ்ரில் எடுத்துக்கொள்ளுங்கள்; நிச்சயமாக அதிகாலை உணவில் பரக்கத் இருக்கிறது!' (அறிவிப்பவர்: மிக்தாம் இப்னு மஃதீ கரிப் (ரழி), நூல்: அஹ்மத் 17192, நஸாஈ 2124).
13. அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதன் கூலியை அறிந்திராத ஓர் நன்மையை செய்யுங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “(அல்லாஹ் கூறினான்:) ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) செயல் ஒவ்வொன்றும் அவனுக்கு உரியது; நோன்பைத் தவிர! ஏனெனில், அது எனக்குரியது. அதற்கு (நான் விரும்பிய அளவிற்கு) நானே பிரதிபலன் அளிக்கிறேன்”. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: புஹாரி 5927, முஸ்லிம் 1151).
ஆனால்...
01. வேதக்காரர்களின் நோன்பைப் போல் உங்கள் நோன்பையும் ஆக்கிவிடாதீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “எமது நோன்பிற்கும், வேதம் கொடுக்கப்பட்டோரின் நோற்பிற்குமான வித்தியாசம் ஸஹ்ர் நேரத்தில் சாப்பிடுவதாகும். (யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஸஹ்ர் நேரத்தில் சாப்பிடமாட்டார்கள்)”. (அறிவிப்பவர்: அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி), நூல்: முஸ்லிம் 1096).
02. பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படாதவராகவும், நரக விடுதலை பெறாதவராகவும் இருக்காதீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒவ்வொரு நாளும் (நலகில் இருந்து) விடுதலை பெறுபவர்கள் (விபரம்) அல்லாஹ்விடத்தில் உள்ளது. அவர்களுள் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படும்”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), (அபூ ஸஈத் அல்ஹுத்ரி (ரழி) வாயிலாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது), நூல்: முஸ்னத் அஹ்மத் 7450).
03. பாவமன்னிப்பைப் பெற்றுத் தரும் காரியங்களை செய்யாமல் இருக்காதீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ஒருவர் தம் குடும்பத்தினர், தம் செல்வம், மற்றும் அண்டை வீட்டார் விஷயத்தில் சோதனைக்கு ஆளாகும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்குப் பரிகாரமாக அமையும்”. (அறிவிப்பவர்: ஹுதைபா இப்னு அல்யமான் (ரழி), நூல் புஹாரி 1895, முஸ்லிம் 144).
மேலும் கூறினார்கள், “பெரும் பாவங்களில் இருந்து தவிர்ந்துகொண்டால் ஐநேரத் தொழுகை, ஒரு ஜும்ஆவில் இருந்து இன்னொரு ஜும்ஆ, ஒரு ரமழானில் இருந்து இன்னொரு ரமழான் போன்றவற்றுக்கு இடைப்பட்ட கால பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 233).
04. அல்லாஹ் தன்னை விட்டும் தூரப்படுத்தும், நரகில் நுழைவிக்கும் அடியாராக இருக்காதீர்கள்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள், “நபியவர்கள் மிம்பரில் ஏறி, ‘ஆமீன், ஆமீன், ஆமீன்’ எனக் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மிம்பரில் ஏறும் போது, ‘ஆமீன், ஆமீன், ஆமீன்’ எனக் கூறினீர்களே! (ஏன்?)’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், “ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து, ‘யார் ரமழான் மாதத்தை அடைந்தும் அவரின் பாவம் மன்னிக்கப்பட வில்லையோ அவர் நரகில் நுழையட்டும், அல்லாஹ் அவரை தூரப்படுத்தட்டும்’ என்று கூறி, ‘ஆமீன்’ கூறுமாறு ஏவினார்கள். நானும், “ஆமீன்” என்றேன். ‘யார் தனது பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ அடைந்து, அவர்களுக்கு நல்லது செய்யாமல் மரணிக்கிறாரோ அவர் நரகில் நுழையட்டும், அல்லாஹ் அவரை தூரப்படுத்தட்டும்’ என்று கூறி ‘ஆமீன்’ கூறுமாறு ஏவினார்கள். நானும், “ஆமீன்” என்றேன். ‘உங்களைப் பற்றி ஒருவரிடம் நினைவூட்டப்பட்டும் அவர் உங்கள் மீது ஸலவாத் சொல்லாமல் மரணிக்கிறாரோ, அவர் நரகில் நுழையட்டும். அல்லாஹ் அவரை தூரப்படுத்தட்டும்’ எனக் கூறி, ‘ஆமீன்’ கூறுமாறு ஏவினார்கள். நானும், “ஆமீன்” என்றேன். (நூல்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 907, ஸஹீஹுத் தர்ஹீப் 1679).
05. நபியவர்களுடன் ஹஜ் செய்த பாக்கியத்தை இழக்காதீர்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், நபி (ஸல்) அவர்கள் தம் ஹஜ்ஜை முடித்துத் திரும்பியபோது உம்முஸினான் அல் அன்ஸாரியா என்ற பெண்மணியிடம், 'நீ ஹஜ்ஜுக்கு வர என்ன தடை?' என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, 'என் கணவரே காரணம்; அவருக்கு தண்ணீர் இறைக்கும் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் ஏறி அவர் ஹஜ்ஜுக்குச் சென்றார்; மற்றொன்று எங்களுக்குரிய நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறது; (இதுவே காரணம்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'ரமலானில் செய்யப்படும் ஓர் உம்ரா என்னோடு ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும்' என்றார்கள். (நூல்: புஹாரி 1863, முஸ்லிம் 1256).
06. தலைகீழாக தொங்கவிடப்பட்டு, தாடைகள் கிழிக்கப்பட்டோராக இருக்காதீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது (கனவில்) இரு மனிதர்கள் என்னிடம் வந்தார்கள். என் இரு தோல்புஜங்களையும் பிடித்துக் கொண்டு சப்தங்கள் கேட்கும் ஒரு மலைக்குச் சென்றார்கள். ‘ஏறுங்கள்’ என அவ்விருவரும் எனக்குக் கூறினார்கள். “அதற்கு எனக்கு சக்தி இல்லையே! எனக் கூறினேன். அதற்கு அவர்கள், ‘உங்களுக்கு நாம் இலேசாக்குகிறோம்’ எனக் கூறினார்கள். நான் ஏறி நான் மலையின் உயரமான பகுதிக்குச் சென்றதும் கடுமையான சப்தங்களைக் கேட்டேன். ‘இது என்ன சப்தங்கள்?’ என அவர்களிடம் கேட்க, ‘இது நரகவாசிகளின் சப்தம்’ எனக் கூறி, என்னை நகரச் செய்தனர். அப்போது குதிகால்கள் தொங்க வைக்கப்பட்டு, தாடை கிழிக்கப்பட்ட நிலையில் உள்ள சிலரை அடைந்தேன். அவர்களின் தாடைகளிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. ‘இவர்கள் யார்?’ எனக் கேட்டேன். அதற்கு, ‘இவர்கள் நோன்பின் நேரம் முடிவதற்கு முன்னரே நோன்பை முறித்துக் கொண்டவர்கள்’ எனக் கூறினர். -நீண்ட ஹதீஸின் சுருக்கம்- (அறிவிப்பவர்: அபூ உமாமா அல்பாஹிலீ (ரழி), நூல்: இப்னு ஹுஸைமா 1986, இப்னு ஹிப்பான் 7491, ஹாகிம் 2837).
மேற்கூறப்பட்ட அனைத்து ஏவல்களையும் ரமழான் மாதத்தில் பின்பற்றுவதாலும், விலக்கல்களை தவிர்ந்து இருப்பதாலும் நோன்பின் பூரணத்துவத்தைப் பெற்றிடுவோம். அவற்றுக்கு மாற்றமாக செயற்பட்டால் பூரணத்துவத்தை இழந்த பல சமயங்களில் நோன்பையே இழந்து அல்லாஹ்வின் கோபப்பார்வைக்கு ஆளாகிவிடுவோம்.
எனவே எமக்கு வழங்கப்பட்டுள்ள 720 மணித்தியாளங்களின் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ளதாக கழித்து, அதில் செய்யுமாறு கூறப்பட்டவற்றை சரியான முறையில் செய்து, செய்யக்கூடாது எனக் கூறப்பட்டவைகளை விட்டும் தவிர்ந்து இருந்து, ரமழானின் பூரண கூலிகளையும் பெற்று, நாளை மறுமையில் பிர்தவ்ஸ் எனும் சுவனத்தில் நுழைந்திட வல்ல நாயன் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக!
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.