புனித மக்கா ஜூம்ஆ தமிழ் மொழி பெயர்ப்பு (2020-05-16) - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி



குத்பா - (2020/05/16)


இடம்: மக்கா (மஸ்ஜிதுல் ஹராம்)
குத்பா 


நிகழ்த்தியவர்: அஷ்ஷைக் பந்தர் பலீலா

குத்பாவின்  தலைப்பு: அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்தல்


இன்றைய குத்பாவிலிருந்து...


அல்லாஹ்வின் அடியார்களே இறைவனை அஞ்சிக்கொள்ளுங்கள். அவன் மீது நல்லெண்ணம் வைத்துக்கொள்ளுங்கள், அவன் யாரும் பார்த்திராத, நிர்ணயித்து விடாதவற்றைக்கொண்டு உங்கள் மீது அருள் புரிவான். அவனுடைய கொடுக்கும் கரம் நீண்டதாக இருக்கிறது. முஸ்லீம்களே ஈமான் கொண்டவர்கள் குர்ஆனுடைய மாதமான ரமழான் மாதத்தில் அதிகம் அதிகமாக அல்குர்ஆனை ஓதுவார்கள். இரவிலும் பகலிலும் தம்முடைய நேரங்களை, தொடர்புகளை அல்குர்ஆனோடு ஆக்கிக்கொள்வார்கள். அதன் ஆழமான அர்த்தங்களை புரிந்து கொள்வார்கள். அது அவர்களை அல்லாஹ்வின்பால் வழிகாட்டுகிறது. அவர்கள் விரும்பும் உணவு, தூக்கம் போன்ற ஏனையவற்றை விட அல்குர்ஆனை ஓதுவதற்கும் அதனை ஆய்வு செய்வதற்குமாக அதிகம் அதிகமாக தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களின் நாவுகள் எப்பொழுதும் அதனை ஓதிக்கொண்டிருக்கும். அவர்களின் உள்ளம் அவன் தடுத்த, எச்சரிக்கை செய்தவற்றை விட்டும் தவிர்ந்து இருக்கும். அவர்கள் அல்குர்ஆனை நண்பனாக எடுத்துக்கொண்டார்கள். அதன் தெளிவான ஆதாரங்கள் அவர்களை நேர்வழியின்பால் செலுத்துகிறது. அதன் உதாரணங்கள் அவர்களை சிந்திக்க வைக்கிறது. இப்படிப்பட்டவர்கள் ஒரு திசையில் பயணிக்கிறார்கள், ஏனையவர்கள் வேறு ஒரு திசையில் பயணிக்கிறார்கள். எனவேதான் அவர்களை விட்டும் இப்படிப்பட்டவர்கள் சிறந்தவர்களாக விளங்குகிறார்கள். இவர்களின் பார்வையில் அல்குர்ஆன் அல்லாஹ்வின் தூதாக இருக்கிறது. 


அது அல்லாஹ்வின் வார்த்தையாகும். மனிதர்களை விட அல்லாஹ் எவ்வளவு சிறப்பானவனோ அதுபோல் அல்குர்ஆனின் சிறப்பம்சம் ஏனையவற்றை விட மகத்தானது. அல்லாஹ் தன் அடியானுக்கு நலவுகளை அருள நாடினால் அவனுக்கு அல்குர்ஆனில் விளக்கத்தை கொடுக்கிறான். அதன் உண்மையான எதார்த்தத்தை அவனுக்கு புரிய வைக்கிறான். அதனால் அவர்களின் சிந்தனைகள் தெளிவடைகிறது. அவர்களின் உள்ளம் தூய்மை அடைகிறது. அவர்களின் அன்றாட வாழ்க்கை எழுச்சி அடைகிறது. அவர்களின் சகல காரியங்களும் சீரடைகிறது. 


அல்லாஹ்வின் வேதத்தில் காணப்படும் ஆழமான கருத்தாடல்களில் உள்ளதுதான் அவன் மீது நல்லெண்ணம் கொள்ளவேண்டும். அதன் மூலம்தான் அவர்களின் சகல காரியங்களும், இறுதி முடிவுகளும் நலவானதாக அமையும். அவர்கள் அல்லாஹ் தன் மீது அருள், நலவுகள் புரிய, தன் மீது அன்பு காட்ட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதுதான் பூரணமான, சிறந்த அவனைப் பற்றிய உறுதியான நம்பிக்கை கொள்ளலாகும்.


உண்மையில் அவனுடைய வேதத்தை யார் ஓதுகிறாரோ அதனால் அவன் தன் பாவங்களை மன்னிப்பான் என்று ஆதரவு வைப்பார். அவனின் அருளில் இருந்து நிராசை அடையமாட்டார். யார் பாவமன்னிப்பு கோருகிறாரோ நிச்சயமாக அவரின் பாவத்தை அவன் மன்னிக்கக்கூடியவன்.


அல்லாஹ் கூறுகிறான்: “எங்கள் இறைவனே! நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும், எல்லாப் பொருட்களையும் சூழந்து இருக்கிறாய்! (அல்குர்ஆன்: 40:07 )


யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 02:227 )


ஒரு நல்லமல் செய்து முடிந்ததன் பின்னால் அல்லாஹ்விடம் நல்லெண்ணம் வைத்து அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென பிரார்த்திக்க வேண்டும்.


அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ - தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகுகிறார்களோ - நாம் அவர்களுக்கு அளித்திருப்பதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கிறார்கள்.


அவர்களுக்குரிய நற்கூலியை அவர்களுக்கு அவன் முழுமையாகக் கொடுப்பான்; இன்னும் தன் அருளிலிருந்து அவர்களுக்கு மிகுதப்படுத்துவான், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன். (அல்குர்ஆன்: 35:29-30 )


அல்குர்ஆனோடு தொடராக இருந்து தொழுகையை நிலைநாட்டி, நல்ல வழிகளில் செலவு செய்பவர்கள் அல்லாஹ்விடம் பூரணமான, அதிகமான கூலியை பெற்றுக்கொள்ள உரித்தானவர்கள்.


அல்லாஹ் கூறுகிறான்: எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். 


அ(த்தகைய)வருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு (வசதி)களை அளிக்கிறான். (அல்குர்ஆன்: 65:2-3 )


அல்லாஹ் அருளின் கதவை திறப்பான் என்பதில் நல்லண்ணெம் கொள்ளவேண்டும். கவலைகள், மனக்குழப்பங்கள், பயங்கரங்கள், சிரமங்களில் இருந்து விடுதலையளிப்பான் என்று பூரண நம்பிக்கை, தவக்குல், ஆதரவு வைக்க வேண்டும். 


நபியவர்கள் அல்லாஹ்வைப் பற்றி ஹதீஸில் குத்ஸியில் குறிப்பிடும் போது : அடியான் என்னை எவ்வாறு எண்ணுகிறானோ அவ்வாறு நான் அவனுடன் இருக்கிறேன். (புஹாரி, முஸ்லிம்)


இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது: அடியான் அல்லாஹ்வை பற்றி நல்லெண்ணம், ஆதரவு வைக்கும் போது அல்லாஹ் அவனது காரியத்தை வீணாக்கி விடமாட்டான். 


அடியான் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியும் போது அல்லாஹ் என் பிரார்த்தனைக்கு விடையளிப்பான் என்று பூரண நம்பிக்கை வைக்க வேண்டும். 


நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களின் பிரார்த்தனைக்கு விடையளிப்பான் என்ற உறுதியில் அவனை அழையுங்கள். (திர்மிதி)


பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான், மரணிக்கும் தருவாயிலாவது என்னுடைய பாவத்தை மன்னித்து அவனின் அருளை பொழிவான் என்று நம்புவது அவனின் வாக்குறுதியை உண்மைப்படுத்துவதாகும். 


நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக யாரும் அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைக்காமல் மரணிக்க வேண்டாம். (முஸ்லிம்)


அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைப்பதன் பிரதான பயன் என்னவெனில் அல்லாஹ்வைப் பற்றி அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து அல்லாஹ்வும் அவனது தூதரும் அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் வர்ணித்ததன் பிரகாரம் அவனை ஈமான் கொள்ளவேண்டும். எவன் அவ்வாறு அல்லாஹ்வை அறிந்து கொள்கிறானோ அவன் அல்லாஹ்வை விரும்புவான். அவனைப் பற்றி நல்லெண்ணம் கொள்வான். அவன் மீது ஆதரவு, தவக்குல் வைப்பான். 


எவன் அல்லாஹ்வைப் பற்றி தவறான எண்ணம் கொள்கிறானோ அவன் அல்லாஹ்வைப் பற்றி பூரணமாக அறியாதவனாக இருக்கிறான். அல்லாஹ்வுக்கு என்று அழகிய பெயர்கள், உயர்ந்த பண்புகள் உண்டு. அவன் தூய்மையானவன். 


அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைப்பதனால் ஏற்படும் பயன்களில் அடுத்ததாக அவன் அல்லாஹ்வின் மார்க்கத்தை, அதன் சட்டதிட்டங்களை பூரணமாக அறிந்து கொள்கிறான். அல்லாஹ் அவனின் மார்க்கத்தில் காணப்படும் சிரமங்களை நீக்கி மார்க்கத்தில் நலவின் வழிகளை விசாலப்படுத்தி இருக்கிறான். அதனை நடுநிலையான மார்க்கமாக ஆக்கி இருக்கிறான். யாரும் எல்லை கடக்க முடியாது. அது சந்தியான, யாவருக்கும் இலகுவான நேர்மையான, அருள் மிக்க, நலவு பொருந்திய மார்க்கமாகும். இதுவும் கூட அவனைப் பற்றி நல்லெண்ணம் கொள்வதில் உள்ள விடயமாகும்.


யார் தன்னிலும் பண்புகளிலும் செயற்பாடுகளிலும் பூரணமானவனாக இருக்கிறானோ அவன் இறைவன், அவன் தூய்மையானவன். அவனின் மார்க்கம் பூரணமானது, அவனுடைய நுட்பமான, பூரணமான அறிவினால் அதனை செம்மையாக்கி வைத்திருக்கிறான். 
அல்லாஹ் கூறுகிறான்: மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகி விட்டது. (அல்குர்ஆன்: 7:115)


அல்குர்ஆனையும் ஸுன்னாவையும்கொண்டு பயன்பெறக்கூடிய மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்குவானாக. 


இரண்டாம் குத்பா...


அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைப்பதனால் ஏற்படும் பயன்களில் அடுத்ததாக சுன்னாவை நன்கு புரிந்து கொள்ளுமாறு தூண்டுகிறது. அதன் மூலம் தன் அடியார்களின் மீது கொண்ட நுட்பமும் அருளும் தெளிவாகிறது. அவன் மனிதர்கள் மீது கெடுதியை விட நலவை அதிகம் விரும்புகிறான். அல்லாஹ் தன் அடியார்களை அழகிய முறையில் படைத்து, பூமியில் அவர்களை வாழவைத்திருக்கிறான். வானம், பூமியில் உள்ளவற்றை அவர்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். திருப்தியோடும் அச்சம் தீர்ந்தவர்களாகவும் அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களை நலவுகளும் அல்லாஹ்வின் பரக்கத்தும் சூழ்ந்து கொள்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் சோதனைகளை நிரந்தரம் இல்லாமல் தற்காலிகமானதாக ஆக்கிவைத்திருக்கிறான். அவ்வாறு இல்லையெனில் யாரும் பூமியில் நிரந்தரமாக வாழ முடியாது. 


ரமழானின் கடைசிப் பத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். அவற்றில் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வையுங்கள். நீங்கள் அல்லாஹ்வை நினைவுபடுத்துவதனால், நல்லமல்கள் செய்வதனால் அவன் அவர்களுக்கு அருள்  புரிவான். 


நபியவர்கள் ஏனைய காலங்களை விட கடைசிப் பத்தில் அதிகம் அதிகமாக நல்லமல்கள் செய்யக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். (புஹாரி, முஸ்லிம்)


நாபியவர்கள் கடைசிப் பத்து வந்துவிட்டால் அதன் இரவுகளை உயிர்ப்பிப்பார்கள், தனது குடும்பத்தார்களை எழுப்பாட்டுவார்கள், தனது கீழாடையை இருகக் கட்டிவிடுவார்கள். (புஹாரி)


இந்த நாட்களில் லைலதுல் கத்ர் என்ற இரவை எதிர்பார்த்தவர்களாக அதிகமதிகம் நல்லமல்கள் செய்ய வேண்டும். அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. எவன் அதனை அடைந்து விடுகிறானோ அவன் அதிகமான இலாபங்களை பெற்று விட்டான். 


நபியவர்கள் கூறினார்கள்: யார் லைலதுல் கத்ர் இரவில் ஈமான் கொண்டும் கூலிகளை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரின் முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (புஹாரி, முஸ்லிம்)


லைலதுல் கத்ர் இரவு ரமழானின் ஒற்றைப்படையான இரவுகளில் வரும். அந்த நாளை எவர் விட்டுவிடுகிறாரோ அவர் நஷ்டவாளியாவார்.
 
நபியவர்கள் கூறினார்கள்: லைலதுல் கத்ர் இரவை றமழான் மாத கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் தேடிக்கொள்ளுங்கள். (புஹாரி)


அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைத்துக்கொள்ளுங்கள், அவன் உங்கள் நல்லமல்களை ஏற்றுக்கொள்வான், உங்களின் தவறுகளை மன்னிப்பான். நிச்சயமாக அவன் பாவங்களை மன்னிக்கக் கூடியவன், நன்றி பாராட்டக்கூடியவன். இந்த நாட்களில் இந்த கொரோனா எனும் நோய்த் தொற்றை நீக்கி விடுவான் என்று நல்லெண்ணம் வையுங்கள். அவன்தான் அதனை தடுத்து நிறுத்தக்கூடியவன், வேறு எவரும் அதற்கு சக்தி பெறமாட்டார்கள். 


முற்றும்...

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget