இஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 02) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)



ஆக்கம்
JM. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி

மேற்பார்வை 
M. அஹ்மத் அப்பாஸி MA


இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் பெண்களின் பொருளாதார நிலை.

வரலாறு நெடுகிலும் பெண்கள் மோசமான முறையிலே நடாத்தப்பட்டு வந்துள்ளனர். பெண்கள் என்றால் இவ்வாறு தான் வாழ வேண்டுமோ எனும் சோகமும், சோதனையுமே அவர்களின் வாழ்வில் பிரதிபலித்து வந்துள்ளது. தாம் ஒடுக்கப்பட்ட சமூகமாகவும், இறைவனால் படைக்கப்பட்ட இழி பிறவிகள் எனும் பெயருடனும், என்றுமே ஆண்களுக்கு சேவகம் செய்யும் வேலையாட்களாகவும், அவர்கள் எவ்வித தேவைகளும், ஆசாபாசங்களும் அற்ற ஜடங்கள் எனவுமே கடந்து வந்த ஒவ்வொரு நாகரீகத்திலும் பார்க்கப்பட்டுள்ளனர்.

அக்காலங்களில் பெண்கள் பார்க்கப்பட்ட விதமே வேறாக இருந்தது. பெண்கள் என்றாலே அவர்கள் சகுனம் சரியில்லாதவர்களாக பார்க்கப்பட்டுள்ளனர். இதற்காகவே அவர்கள் பல வரையறைகள் போடப்பட்டு, பிறருக்கு தீங்கு ஏற்படும் என பக்குவப்படுத்தப்பட்டு, வீட்டில் அடைக்கப்பட்டு வந்துள்ளனர். அதுவே காலப்போக்கில் அவர்களுக்கான சாபமாகவும் அமைந்துவிட்டது.

கிரேக்க நாகரிகத்தில் பெண்களின் நிலை

இன்றைக்கு எமது நாட்டு பாடப் புத்தகங்களிலும், ஏன் மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க பாடநூல்களிலும் கூட கிரேக்க நாகரீகம் பற்றி வியந்து பேசப்படுகின்றது. "ஏதென்ஸ் தான், உலகில் முதன் முறையாக ஜனநாயகத்தை கண்டுபிடித்து, நடைமுறைப் படுத்திய நாடு என்றும் நாகரீகத்தில் சிறந்து விளங்கியது என்றும், பெண்ணுரிமைக்கு மதிப்பளித்து வந்தது எனவும், இன்றைய ஜனநாயக காவலர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். அத்தகைய பெருமைக்குரிய கிரேக்க நாகரீகம் எவ்வாறு இருந்தது? அங்கு பெண்களின் உரிமைகள் மதிக்கப்பட்டனவா? இது பற்றி எந்த பாடநூலும், தமது மாணவர்களுக்கு சொல்வதில்லை.

கிரேக்கப் பெண்களின் நிலைமை, பண்டைய ஐரோப்பிய நாகரீகத்தில் எந்த வகையிலும் சிறந்ததாக இருக்கவில்லை. சிறந்த நாகரீகத்தில் வாழும் நாட்டு பெண்கள், அங்கிருந்த அடிமைகளை விட சிறிதளவே சுதந்திரம் பெற்றவர்களாக இருந்தனர். குறிப்பாக திருமணமான பெண்கள், வீட்டு வேலைகள் செய்வதற்கும், குழந்தை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட அடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர்.

அவர்களின் கலாச்சார விழுமியங்களில் பெண்கள் ஷைத்தானை விடவும் அருவருக்கத்தக்க கீழ்த்தரமானவர்களாகவே பார்க்கப்பட்டனர். சட்ட அடிப்படையில் அவர்கள் வியாபாரப் பொருட்களாக நடாத்தப்பட்டனர். சிவில் உரிமைகளுக்கு உண்டான எந்த ஒன்றையும் பெண்கள் விடயத்தில் நோக்காது, அவர்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் பறிக்கப்பட்டிருந்தனர். அனந்தரச் சொத்துக்களில் எந்த ஒன்றும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

திருமணம் முடிக்கும் போது கூட பெண்களின் சம்மதமில்லாமல் பெற்றோர் விரும்பும் ஆணுக்கே முடித்து வைக்கப்பட்டனர். திருமணம் முடித்த பின்னரும் காலம் பூராகவும் கணவனின் ஆதிக்கத்திற்குட்பட்டு வாழும் பெண்ணாகவே அவள் வாழ வேண்டியிருந்தது. கணவனின் அனுமதியின்றி தனது சொத்தில் எந்த ஒன்றையும் அசைக்க முடியாத நிலை அவளுக்கு இருந்தது. கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கும் உரிமை கூட இவளுக்கு இருக்கவில்லை. அதற்கும் பல தடைகளை இட்டு விவாகரத்து என்பதை விட ஆயுள் பூராகவும் கணவனுடனே வாழ்ந்திடலாம் எனும் அளவுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

சீதனம் கொடுக்கும் மரபு அவர்களிடம் பின்பற்றப் பட்டு வந்தது. பணக்காரப் பெற்றோர்கள், தமது சொத்து வெளியில் போகக் கூடாது என்பதற்காக, தமது மகளுக்கு ஒரு உறவுக்கார பையனாகப் பார்த்து நிர்ப்பந்தமாக மணம் முடித்து வைப்பார்கள்.

பெண்களின் பேச்சைக் கேட்டு செய்யும் அனைத்துக் காரியங்களும் சட்டபூர்வமாக ரத்து செய்யப்பட்டன. கணவன் மரணித்தால் அவனது சொத்தில் எந்தப் பங்கும் மனைவி பெறமாட்டாள் எனும் சட்டம் நடைமுறையில் இருந்தது. தான் விரும்பிய நேரத்தில் தாயிடமிருந்து குழந்தைகளை தூரப்படுத்தி வைக்கும் அபூர்வ சட்டம் அவர்களிடம் இருந்தது. அந்நேரத்தில் குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் தாய்க்கு அவர்களை அரவணைக்க முடியாது. தன் கண்முன்னே பிள்ளைகள் கஷ்டப்படுவதையும், மரணிப்பதையும் அவர்கள் கண்ணுர வேண்டியிருந்தது.

பெண்களும், அடிமைகளும் ஆண்களுக்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் என்றே கிரேக்க நாகரீக ஆண்கள் வர்க்கம் தமது நாகரீகத்தை வளர்த்து வந்துள்ளது.

உரோம நாகரிகத்தில் பெண்களின் நிலை

ரோமானியர்களும் கிரேக்க நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டவர்களே. பெண்கள் விடயத்தில் கிரேக்கர்கள் கடைபிடித்த அதே அணுகுமுறைகளைத் தான் இவர்களும் கடைபிடித்து வந்தனர். ஆனால் இவர்களின் மத அணுஷ்டானங்கள் கிரேக்கர்களை விட சற்று வித்தியாசமாக இருந்தது. மத அணுஷ்டானங்களை பின்பற்றுகிறோம் எனும் நோக்கில் பெண்களை அலட்சியப்படுத்தி வந்தனர்.

குடும்பத்தில் பெண் என்பவள் ஆண்களை விட தரம் குறைந்தவள். ஆகையால் குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புக்களும் ஆண்கள் கைவசமே இருந்தது. குடும்பத்தை பராமரித்தல், குடும்பத்தின் பொருளாதார விடயங்களைக் கவனித்தல், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்ற அனைத்திலும் ஆணாதிக்கமே மேலோங்கியிருந்தது. பெண் என்பவள் குடும்ப விவகாரங்களில் கைபொம்மையாகவே செயற்பட்டு வந்தாள். பெண்பிள்ளைகள் வேலைக்கு அமர்த்தப்பட்டாலும் அவள் சம்பாதிக்கும் பணத்தை செலவளிக்கும் விடயத்தில் அவளுக்கு உரிமை மறுக்கப்பட்டது. குடும்பத் தலைவரிடமே அப்பணங்கள் அனைத்தையும் சம்பாதித்துக்கொடுக்க வேண்டும் எனும் நிலையே அவர்களிடம் காணப்பட்டது. பெண் பிள்ளை திருமணம் முடித்துச் செல்லும் போது அவளுக்காக அவள் சேர்த்து தந்தையிடம் கொடுத்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை தந்தை வைத்துக்கொண்டு மீதமுள்ள இரண்டு பகுதிகளையும் இவளின் சொத்தாக மணமகனுக்கு கொடுத்து விடுவார். இந் நேரத்திலும் தனது சொத்தை கையாழும் உரிமை இவளுக்கு இருக்கவில்லை.

ஒரு பெண் திருமணம் முடித்துச் சென்றுவிட்டால் அவளின் குடும்பத்துடனான தொடர்பு அத்துடனேயே முறிந்து விடும். கணவன் வீட்டிற்குச் சென்றவுடன் அங்கு அவள் மனைவி போல் அல்லாமல் மகள் போல் நடாத்தப்படுவாள். அவளிடம் ஏதும் குற்றங்கள் நிகழ்ந்தால் அதற்கான தீர்வு வழங்கும் பொறுப்பு கணவனையே சார்ந்து இருந்தது. நீதிமன்றம் செல்லும் வழமை அவர்களிடம் காணப்படவில்லை. கணவன் மரணித்தால் மனைவி தனது ஆண்பிள்ளைகளின் பொறுப்பில் வந்து விடுவாள். அதன் பின்னர் தனது தாய் என்றும் பாராமல் விலைமாதுவாக அவளை நடாத்துவார்கள். இச்சமூகத்தில் பெண்கள் ஓர் விலைப் பொருளாகவே நோக்கப்பட்டனர்.

கணவனினதோ பிள்ளைகளினதோ அனந்தரச் சொத்துக்களை பெறும் உரிமை கூட ஒரு பெண்ணுக்கு இருக்கவில்லை. ஆண்கள் தனது நண்பர்களுக்கு பரிசளிக்கும் போது எதுவும் கிடைக்காவிட்டால் தனது மனைவியை அவர்களுக்கு பரிசளித்து விடுவார்கள். பெண் என்பவள் ஜடப்பொருளாக பார்க்கப்பட்டாள். அவள் இறைச்சி சாப்பிடக் கூடாது, சிரிக்கக் கூடாது, பேசக் கூடாது, எப்போதும் ஆண்களின் ஆசைகளைத் தீர்த்துக்கொண்டு, அவர்களுக்கு பணிவிடை செய்துகொண்டே இருக்க வேண்டுமென ஓர் சட்ட விதி உரோம நாகரிகத்தில் காணப்பட்டது.



இந்து நாகரிகத்தில் பெண்களின் நிலை

இந்து மத வேதங்களின்படி பெண் என்பவள் ஒரு கீழான பிறவி. சூத்திரர்கள் எப்படி கீழான பிறவிகள் என்று இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் சொல்கிறதோ, அதே போன்றுதான் பெண்களும் கீழான பிறவிகள். பல இடங்களில் சூத்திரர்களை விடவும் மிகக் கீழான நிலையில்தான் பெண்களை இந்து மத வேதங்களும் சாத்திரங்களும் வைத்திருக்கின்றன.

கணவன் மரணித்தாலும், எதிரிகள் தம்மை அட்டூழியம் செய்ய வந்தாலும் தீயில் குதித்து தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென வேதங்கள் கூறுகின்றன. மழை பெய்ய வேண்டுமென்பதற்காகவும், உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் கடவுளுக்காக பெண்களை அறுத்துப் பலியிடும் வழக்கம் இந்து மதத்தில் இருந்து வந்துள்ளது.

பெண்கள் சுயமாக இயங்குகின்ற தன்மை அற்றவர்கள். பெண்கள் இயற்கையாகவே நிலையான மனம் அற்றவர்கள். கற்பு நிலை அற்றவர்கள். காமம், கோபம், துரோகம் அனைத்தும் பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கிறது. இவைகளை எல்லாம் பெண்களைப் படைக்கும் போது பிரம்மன் அவர்களுக்காக உருவாக்கியுள்ளார். இந்தப் பாவங்களை மாற்ற முடியாது. அதற்கான மந்திரங்கள் எதுவும் இல்லை. பெண்கள் மந்திரங்களை ஓதவும் கூடாது. மனுதர்மம் பெண்கள் பற்றிச் இப்படித்தான் சொல்கிறது.

பெண் என்பவள் நீதியைக் கூட தனது அழகாலும், ஆபாசத்தாலும் மாற்றிட முடியும் என்பதற்காக அவள் எப்போதும் தந்தை, அல்லது கணவன், அல்லது மகன் ஆகியோரின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும். தன் கணவனுக்கு முன் தலைகுணிந்து, அச்சம் கலந்த தொனியில் அவருடன் பேச வேண்டும். அவரை அழைக்கும் போதுகூட பெயர் கூறி அழைக்காமல், எஜமானே, பெரியவரே, கடவுளே என்றே அழைக்க வேண்டும். கணவனுடன் அமர்ந்து சாப்பிடக்கூடாது. கணவன் சாப்பிட்டு மீதம் வைப்பவற்றையே தான் சாப்பிட வேண்டும்.

கன்யாதானத்தின் போது, மணப்பென்னின் தந்தை மணமகளுடன் நகைகளையும், ஆடைகளையும் இன்னும் பிற பொருட்களுடன் மணமகன் வீட்டுக்கு அனுப்புவது மரபாகும். பெண்ணாய்ப் பிறப்பதே பெரும்பாவம் என ஒரு பக்கம் போதிக்கப்பட்டாலும், மீறிப் பிறந்தாலும் அவர்களின் மீதான வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்து விடுவதை ஆரிய இந்து மதம் நியாயப்படுத்துகிறது.

அவ்வாறே உடைமைகளை சொந்தமாக்கிக் கொள்வதில் பெண், அடிமையைப் போல் நடாத்தப்பட்டாள். மனைவி, மகன், அடிமை ஆகிய மூவருக்கும் எச்சந்தரப்பத்திலும் ஒன்றையும் உடைமையாக வைத்திருப்பது கூடாது என இந்து மதம் போதித்துள்ளது. இவர்கள் சொத்தாக எதையும் சம்பாதித்து விட்டால் அதன் உரிமம் குடும்பத் தலைவருக்கே போய்ச் சேரும். ஆனாலும் சில சலுகைகளின் அடிப்படையில் அரசனின் தாய்க்கு அரசனின் மகன் பருவ வயதை அடையும் வரை நாட்டைப் பாதுகாக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறே மனைவிக்கு தனக்கு திருமணத்தின் போது கிடைக்கும் பரிசுப்பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது.

யூதர்களிடம் பெண்களின் நிலை

யூதர்கள் பெண்களை சாபத்துக்குரியவர்கள் என கருதினார்கள். ஏனெனில், அவள் ஆதம் (அலை) அவர்களை வழிகெடுத்து, தடுக்கப்பட்ட கனியை சாப்பிடச் செய்தாள் என்று எண்ணினர். இச்சிந்தனைக்கு பைபிள்தான் காரணம். பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், வீட்டையும் பாத்திரங்களையும் அவள் தொட்டால் அசுத்தமாகி விடும் என்று கருதி ஒதுக்கி வைத்தனர்.

யூத மதம் மிகவும் மோசமாகப் பெண்னை நோக்குகிறது. அவளுக்கான சிவில் உரிமைகளை மொத்தமாகவே பரித்துக்கொள்கிறது. திருமணத்திற்கு முன் தந்தையிடமும், திருமணத்தின் பின் கணவனிடமும் அடிமைப்பட்டு வாழவேண்டும் என்கிறது. இம் மதத்தின் அடிப்படையில் தந்தைக்கு தனது மகளை அடிமை எனும் நிலையில் வைத்து கணவனுக்கு விற்க முடியும். கணவனும் தான் கொடுக்க வேண்டிய மஹ்ரை வாங்கும் பணமாக பெண்ணின் தந்தைக்குக் கொடுத்து அவளை வாங்கிட முடியும். இங்கு மஹ்ர் என்பது பெண்ணை அடிமையாக வாங்குவதற்கு கொடுக்கப்படும் விலையாக கருதப்பட்டது. திருமண ஒப்பந்தம் நடைபெறாமல் அடிமை வியாபார ஒப்பந்தமே திருமணம் எனும் பெயரில் நடந்து வந்துள்ளது.

கணவன் மரணித்து விட்டால் அனந்தரம் பெறுபவர்களில் ஒருவர், இறந்தவரின் அனந்தரச் சொத்தாக மனைவியைப் பெற்றிடுவார். அவளுக்கென்று கணவனின் சொத்துக்களிலிருந்து ஏதும் கிடைக்காது. மகன்களின் சொத்துக்களில் எந்த ஒன்றும் அவர்களின் மரணத்தின் பின் தாய்க்கு போய்ச் சேராது. சம நிலையில் அனந்தரச் சொத்தைப் பெறுவதற்கு ஆண்களும் பெண்களும் இருந்தால் குறித்த பெண்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்காது. அப்படித்தான் ஒரு பெண் அனந்தரச் சொத்தைப் பெற வேண்டுமாக இருந்தால் அவளின் தந்தைக்கு எந்த ஆண்வாரிசும் இருக்கக் கூடாது எனவும், அவள் தனது குடும்பத்தில் ஒரு ஆணை கட்டாயத் திருமணம் செய்திட வேண்டுமெனவும் நிபந்தனை இடப்பட்டிருந்தாள்.

கிறிஸ்தவர்களிடம் பெண்களின் நிலை

கிறிஸ்தவர்கள் பெண்ணை ஷைத்தானின் 'ஏஜண்ட' எனக் கருதினர். பெண் மனித இனத்தைச் சேராதவள், அவளைக் கண்டால் அவளை மனித இனத்தைச் சார்ந்தவள் எனக் கருதக் கூடாது. அவளை ஓர் உயிருள்ள ஜீவனாய்க் கூடக் கருதக்கூடாது. அவள் ஷைத்தானின் உருவம். அவளின் சப்தம் பாம்பின் சப்தத்திற்கு ஒப்பானது என்று பெண்ணை ஒதுக்கிவைத்தனர்.

5ம் நூற்றாண்டில் பெண் என்பவள் உயிரற்ற ஜடமா? அல்லது உயிருள்ள பிரவியா? என்பதை ஆய்வு செய்ய ஓர் மாநாட்டை ஏற்பாடு செய்தனர். 6ம் நூற்றாண்டில் பிரெஞ்சு நாட்டவர்கள் ஓர் மாநாட்டைக் கூட்டி பெண்ணை மனித இனத்தில் சேர்க்கலாமா என கலந்தாலோசனை செய்தனர். அதன் முடிவில் பெண் என்பவள் மனித இனத்தில் அடங்குவாள், எனினும் அவள் ஓர் இழி பிறவி. ஆண்களுக்கு சேவகம் செய்வதற்கே அவர்கள் படைக்கப்பட்டுள்ளனர் என முடிவெடுத்தனர். 17ம் நூற்றாண்டில் பெண்ணுக்கு உயிர் கிடையாது என ரோம் சாம்ராஜ்ஜிய ஆண்கள் முடிவெடுத்தனர். 11ம் நூற்றாண்டில் கணவன் தனது மனைவியை இன்னொரு ஆணுக்கு அவர் விரும்பும் காலஅளவுக்கு இரவலாக வழங்க முடியும் என திருச்சபை சட்டமியற்றியிருந்தது. அதன் படி விவசாயியின் மனைவி ஆட்சியாளர்களுக்கு 24 மணித்தியாளத்திற்கு இரவலாக வழங்கப்பட்டு வந்தாள். 1075ம் ஆண்டு கணவன், தனது மனைவியை இன்னொருவருக்கு விற்கலாம் என ஆங்கிலேயர்கள் சட்டமியற்றியிருந்தனர். மேலும், மனைவியின் விலையை 6 பென்ஷி, அரை ஷிலின் (ஆங்கிலேய நாணயத்தின் பெயர்) என்று நிர்ணயித்தார்கள். பெண்ணடிமைத்தனம் உலகம் முழுதும் இவ்வாறு கோலோச்சிக் கொண்டிருந்தது. 1500ம் ஆண்டு பிரித்தானியாவில் பெண்களுக்கு தண்டனை வழங்குவது எப்படி என்பதற்காக ஓர் மாநாட்டைக் கூட்டினர். அதன் முடிவில் பெண்களை உயிருடன் எரிப்பதே உச்ச தண்டனையாக பிரகடனப்படுத்தினர்.

இப்படியெல்லாம் பெண்களை ஆய்வுக்குட்படுத்தி அவர்களை சொத்துக்களுக்கு எவ்வகையிலும் சொந்தம் கொண்டாட விடாமலும், அவர்கள் இன்னொரு ஆணின் சொத்து என்பதனால் ஆணாதிக்கத்திற்கு கட்டுப்பட்டவர்களாக அவர்களை ஆக்கிடவுமே கிறிஸ்தவ உலகு முயற்சித்தது.

1804ல் பிரெஞ்சு நாட்டில் சிவில் உரிமைகள் பற்றிய சட்டம் இயற்றப்பட்டது. அதில் 204ம் சரத்தின் படி திருமணமான பெண் தனது சொத்தில் ஒரு பகுதியை கணவனுக்கு கட்டாயம் வழங்கவேண்டுமென இருந்தது. மேலும், தான் வைத்திருக்கும் எஞ்சிய சொத்தில் தான் விரும்பிய பிரகாரம் தானம் செய்வதற்கோ, அதை இன்னொருவருக்கு மாற்றிடவோ, அடகு வைக்கவோ முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. இவற்றை செய்யவேண்டுமாக இருந்தால் கணவனின் கடிதமும், அவரின் கையெழுத்தும் வேண்டுமென நிபந்தனையிட்டிருந்தது. அவள் தொழில் புரியும் பெண்ணாக இருப்பின் தான் சம்பாதிக்கும் அனைத்துப் பணமும் கணவனுக்கே வழங்க வேண்டும். திருமணம் முடிக்காத பெண்ணாக இருந்தால் எந்தத் தொழிலிலிருந்தும் தனக்கு பொறுப்பானவரின் விருப்பமின்றி ஓய்வு பெறக்கூடாது எனவும் பிரெஞ்சு நாட்டு சட்டம் கூறியது.

19ம் நூற்றாண்டில் நடுப்பகுதி வரை ஆங்கிலேயர் பொதுச் சட்டப்படி பெண்கள் பிரஜா உரிமை கொடுக்கப்படாதவர்களாகவே இருந்தனர். இது போன்றே பெண்களுக்கு எந்தவித மனித உரிமைகளும் கிடைக்கவில்லை. அவள் அணியும் ஆடை உட்பட எந்தப் பொருளையும் சொந்தப்படுத்திக் கொள்ள உரிமை அவளுக்கு வழங்கப்படவில்லை.

அரேபியர்களிடத்தில் பெண்களின் நிலை


இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் அரேபியர்களுக்கென ஒருங்கிணைக்கப்பட்ட ஆட்சி, சட்ட அதிகாரங்கள் போன்றன காணப்படவில்லை. அவர்களுக்கு மத்தியில் பல கோத்திரங்கள் காணப்பட்டதால் ஒவ்வொருவரும் தமது கோத்திரத்தின் சட்ட திட்டங்களையே பின்பற்றி வந்தனர். அதில் சில கோத்திரங்கள் தவறாக கருதக்கூடியவற்றை வேறு சில கோத்திரங்கள் நல்லதாகக் கருதிவந்தது. சில கோத்திரங்கள் பெண்களை கௌரவமாக நடாத்தி வந்தனர். இன்னும் சில கோத்திரங்கள் பெண்களை கீழ்த்தரமாக நடாத்தி வந்தனர்.

அரேபியர்களில் ஓர் ஆண் மரணித்தால் அவனுக்கு மனைவியும், குறித்த மனைவிக்கு பிறக்காத வேறு பிள்ளைகளும் இருப்பின் அப்பிள்ளைகளில் மூத்தவன் தனது தந்தையின் மனைவியை அனந்தரச் சொத்தாக திருமணம் செய்துகொள்வான். தான் அப்பெண்ணை திருமணம் செய்ய நினைத்தால் அவள் மீது ஓர் போர்வையைப் போர்த்தி, எனது தந்தையின் சொத்துக்களை நான் அனந்தரமாக பெறுவது போல் உன்னையும் அனந்தரமாக பெறுகிறேன் என சபையில் குறிப்பிட வேண்டும். தான் திருமணம் முடிக்கப் போகும் பெண்ணுக்கு மஹ்ர் ஏதும் ஆண் கொடுக்க மாட்டார். ஓர் பெண்ணை இன்னொருவருக்கு திருமணம் செய்து வைப்பதாக இருந்தால் அதில் கிடைக்கும் மஹ்ரை இவர் பெற்றுக்கொள்வார். சில போது பெண்களை திருமணம் செய்து கொள்ளாமலும், இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்காமலும் வப்பாட்டியாக வைத்துக்கொள்வார்கள். குறைஷிகள் மஹ்ர் விடயத்தில் சற்று வித்தியாசமாக செயற்பட்டனர். யார் குதிரை வீரராக இருந்து, அம்பு எய்தும் வீரராகவும், வாள்வீச்சு வீரராகவும் யுத்தகளத்தில் செயற்பட்டு, யுத்தப்பொருட்களை கைப்பற்றுகிறாரோ அவர் அனந்தரச் சொத்துக்களைப் பெறுவதற்கு தகுதியானவர் எனும் வழக்கம் அவர்களிடம் இருந்தது.

பல அரேபிய கோத்திரத்தவர்கள் தங்களின் பெண்களான தாய், மனைவி, மகள் போன்றோருக்கு எவ்வித அனந்தரச் சொத்தையும் வழங்க மாட்டார்கள். அவ்வாறே தான் விரும்பும் ஆணை திருமணம் செய்துகொள்ளும் உரிமை கூட அவர்களுக்கு இருக்கவில்லை. ஓர் ஆண் எத்தனைப் பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் முடித்திடலாம் எனும் வழக்கு அவர்களிடம் இருந்தது. இதன் போது பெண் விவாகரத்து சொல்லப்பட்டால் அவளை திரும்பவும் அந்த ஆணிடம் அனுப்பாமல் இருக்கும் அதிகாரம் பெண்ணின் பொறுப்பாளருக்கு இருந்தது. ஒருவர் ஒரு பெண்ணை எத்தனை தடவை வேண்டுமானாலும் விவாகரத்து சொல்லிடலாம். அவ்வாறு விவாகரத்து சொல்லிவிட்டால் அவளை வேறு யாரும் மணந்துவிடக்கூடாது என்பதற்காக அவளின் இத்தா முடியும் முன்னரே மீட்டெடுத்து விடுவர்.

சில கோத்திரத்தினர் பெண்களை அபசகுணமாகக் கருதினர். பெண் பிள்ளைகள் பிறந்தால் அவர்கள் மூலம் தமக்கு பசி, பட்டினி, பஞ்சம், ஏழ்மை போன்றவை ஏற்படுமென நினைத்து அவர்களை உயிருடன் புதைத்து வந்தனர்.

இவ்வாறு அரேபியக் கோத்திரங்கள் பெண்களை கீழ்நிலையில் நடாத்தி வந்தாலும் சில கோத்திரங்களில் பெண்கள் நல்ல கௌரமாகவும், வளம் மிக்கவர்களாகவும் சமூகவியல், பொருளாதரம் போன்றவற்றில் சிறந்து விளங்குபவர்களாகவும் இருந்துள்ளனர். அதுவும் பெரிய குடும்பத்துப் பெண்களுக்கும், வியாபாரத்தில் சிறந்து விளங்கும் கோத்திரத்தின் பெண்களுக்குமே இவ்வாறான சலுகைகள் கிடைக்கப்பெற்றன. அவர்களில் பருவமடைந்த பெண்கள் வியாபாரத்தில் ஈடுபடவும், தனது சொத்தை விரும்பியவாறு விரும்பியவர்களுக்கு தானம் செய்வதற்கும், வஸிய்யத்தாக வழங்குவதற்கும் தகுதியுடையவளாக இருந்தார்கள். இஸ்லாத்திற்கு முற்பட்ட காலத்தில் பெண்கள் வைத்தியம், அழகுக்கலை, மகப்பேறு பார்த்தல், பெண்களுக்கு விருத்த சேதனம் செய்தல், கால்நடைகளை மேய்தல் எனும் தொழில்களை சுதந்திரமாக செய்து வந்திருக்கிறார்கள். இத்தகைய நடைமுறைகள் கோத்திரத்திற்கு கோத்திரம் வேறுபட்டதாக இருந்தது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget