ஊசலாடும் இளமை ! | Assheikh Muhammad Waseem Husain (B.A Reading)

-முஹம்மது வஸீம் ஹுஸைன்-

அல்லாஹ் மனிதனுக்கு பல அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றிலிருந்து மனிதன் சிந்தித்து தனது இரட்சகனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பது தான் நிதர்சனம். அப்படிான அருட்கொடைகளில் இளமை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். வெட்டினால் இரத்தம் சீறிப் பாயும் என்று சொல்லும் அளவிற்கு இளைஞர்களது உடல் திடகாத்திரம் பற்றி அறிவியலாளர்கள் கூறுகின்றனர். 

மனிதனது வாழ்க்கையோட்டத்தில் இளமைப்பருவம் முக்கிய இடத்தை பெறுகின்றது. இப்பருவமே அவனது இம்மை மறுமையின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் கால கட்டமாக திகழ்கின்றது. இக்காலத்தில் செய்யப்படும் விளைச்சலுக்கான அறுவடை எப்படி இருக்கின்றது என்பதை இளைஞர்கள் ஆராய்ந்து விதைக்க வேண்டிய தேவைப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளது.

நவீன பூலோக மயமாக்கலில் இளைஞர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வது மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளது. தொடுவதெல்லாம் கேடுகளாக இன்று மாறியுள்ளது. சமூகத்தில் சீரழிவுகள் அதிகரித்துள்ளது. காதல் வயப்பட்டு மங்கையவர்களும், மாணவர்களும் தங்கள் எதிர்காலத்தை அடகு வைப்பதை பார்க்கின்றோம். நவீன சினிமாக்கள் மூலம் ஆபாசம் கலாச்சாரமாக விதைக்கப்படுகின்றது. வன்முறைகள் ஹீரோயிஸமாக தோற்றுவிக்கப்படுகின்றது. கற்பழிப்புக்கள் எல்லாம் சர்வசாதாரணமாக காண்பிக்கப்படுகின்றது. இவைகள் எல்லாம் யௌவன வயது இளைஞர் யுவதிகள் மத்தியில் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றது. அவர்களது வாழ்க்கையில் இவைகள் இழையோடியிருப்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

புத்தகம் சுமக்க வேண்டிய இளம் பெண்கள் வயிற்றில் சிசுவை சுமக்கின்ற நிலை அதிகரித்துள்ளது. பெண்களுக்கெதிரான பாலியல் சேட்டைகள், வல்லுனர்வுகள், பால் நிலை அடக்கு முறைகள் இன்று பல்கிப் பெருகியுள்ளன. பெண் பிள்ளைகள் காமத்தில் மேகம் கொண்டு கண்ட கண்ட காவாலிக்கு இரையாவதை பார்க்கின்றோம். 

இளைஞர் போதைப்பாவனை அதிகரித்து வருவதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவணை மாவா, தூள் என்ற போர்வையில் வலம் வருகின்றன. கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய மாணவர்கள் கலவியில் அக்கறை செலுத்துகின்றனர்.

இப்படியான இறுக்கமான சூழல் நாளைய சமூதாயத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது என்பதே உண்மை. இன்றைய இளைஞர் நாளைய தலைவர்கள் என்ற தோற்றப்பாடு படிப்படியாக தேய்ந்து போகிறது. இப்படி சுழழும் இளமையை திடப்படுத்தி, அவற்றை செப்பனிட வேண்டியது காலத்தின் தேவையாகும்.

இஸ்லாமிய விழுமியங்களுக்குள் இளைஞர்கள் வார்க்கப்பட வேண்டும். திருமறை வேதங்கள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு நபயிவர்கள் ஹீரோவாக காண்பிக்கப்பட வேண்டும். அப்போது தான் இவ்விளைஞர்களை தூசு தட்டி ஒரு நிலைக்கு கொண்டு வர முடியும்.

அல்லாஹ் கூறுகிறான்:

اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَيٰوةُ الدُّنْيَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِيْنَةٌ وَّتَفَاخُرٌۢ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ‌ؕ كَمَثَلِ غَيْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ يَهِيْجُ فَتَرٰٮهُ مُصْفَرًّا ثُمَّ يَكُوْنُ حُطٰمًا‌ؕ وَفِى الْاٰخِرَةِ عَذَابٌ شَدِيْدٌ ۙ وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ

அறிந்து கொள்ளுங்கள் : “ நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை. (அல்குர்ஆன் – 57,20)

மேலுள்ள இறைவசனம் இவ்வுலகமும் இவ்வுலக வாழ்வும் விளையாட்டும் கேலிக்கையுமே தவரி வேறு ஏதும் அதில் இல்லை என அல்லாஹ் குறிப்பிட்டுக்காட்டுகிறான். யாரல்லாம் இவ்வுலக வாழ்வில் மூழ்கி இது தான் வாழ்கை என்று கிடக்கின்றார்களோ அவர்களுக்கு நாளை மறுமையில் கடுமையான வேதனை உண்டு என எச்சரிப்பதை பார்க்கலாம். 

மறுமை நாளுடைய நிலை பற்றி நாளுக்கு நாள் தஃவா நிலையங்களும் தாயிக்களும் மக்களும் நினைவுபடுத்துகின்றனர். இருந்தும் இளைஞர்கள் அதனை பயந்து விழித்துக் கொள்ளவில்லையாயின் தமிழில் சொல்வது போன்று கண்கெட்ட பின் சூரியநமஸ்காரத்தில் பயனில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏ 

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான், (அல்குர்ஆன் 2:208)

மேலுள்ள வசனத்தில் அல்லாஹ் இவ்வுலகில் நாம் செய்கின்ற பாவமான காரியங்களெல்லாம் ஷைத்தானின் வேலைகள். அவன் எமக்கு பகிரங்கமான எதிரி எனவே அவனிடம் பாதுகாப்ப தேட அல்லாஹ்வின் பக்கம் இளைஞர்களை அழைப்பதை பார்கிறோம். இளைஞர்களே இன்றே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அழைப்பிற்கு செவிசாய்க்காமல் போனால் நிலை எங்கு போய் முடியும்.

உனக்கு, ஐந்து விடயங்கள் வருவதற்கு முன்னர், ஐந்து அருட்கொடைகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள் அவை :

1.மரணம் வரமுன் வாழ்க்கையையும்.

2.நோய் வரமுன் உடலாரோக்கியத்தையும்.

3.அதிக வேலை பழுக்கள் வரமுன் ஓய்வு நேரத்தையும்.

4.முதுமை வரமுன் இளமைப் பருவத்தையும்.

5.வறுமை வரமுன் செல்வநிலையையும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரழி)

நூல் : நஸாயீ.

மேலுள்ள நபி மொழி பலபாடங்களை கற்றுத்தருகின்றது. இவற்றை நாம் தவற விடுகின்ற போது காலத்தால் எம்மால் அவற்றை மீளப் பெற முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதில் குறிப்பாக முதுமை வருவதற்கு முன்னால் இளமையை நன்கு பயன்படுத்த வேண்டும் என்று நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

பொதுவாக இளமையை பொறுத்த வரையில் இவ் வயதில் அதிகமாக உடலாரோக்கியம், நல்ல சிந்தனை, நல்ல மனநிலை என்பன அதிகமாக காணப்படுகின்றன. இந்த பருவத்தில் அதிகமாக நல்லமல்கள், இஸ்லாம் ஏவுகின்ற காரியங்களில் பூரணமான ஈடுபட முடியும். இப்படியான வயதை கடந்த முதியயவர்களிடம் கேட்டால் இளமையின் அருமை புரியும்.

நபியவர்கள் கூறினார்கள் :
'மறுமை நாளில் ஓர் அடியான் நான்கு வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. அவை :

1. தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தாய்?

2. தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினாய்?

3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? அதை எவ்வாறு செலவழித்தாய்?

4. பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தாய்?' 

அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் (ரழி)

நூல் : தபரானி.

இளைஞர்களே! எம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடிக்கும் பதிலீடு இல்லை. அவற்றை ஒரு போதும் மீளப்பெறவே முடியாது. கடந்தவை கடந்து விட்டது. இனி இருக்கும் காலத்தையாவது பிரயோசனமாகக் கழிக்க முயற்சிப்போம். எம் இளமை பற்றிய கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம். எமது தேடலும் சிந்தனைகளும் மறுமை வாழ்விற்கு பயன்படுமா? மறுமைக்காக எதனை தேடியிருக்கிறோம். 

காதலிக்காக கால் வலிக்க வீதியோரங்களில் அலைகிறோமே எப்போதாவது கால் வலிக்க நின்று வணங்கியிருக்கிறோமா? காதலர் தினத்தை கொண்டாட பூச் செண்டு, வாழ்த்தட்டை என வீணாக செலவு செய்கிறோமே எப்போவாவது ஒரு ஏழைக்கு சாப்பாடு வழங்கியிருக்கிறோமா? போதைப் பொருள் வாங்க உன் தாய் தந்தையின் காசை செலவு செய்கிறாயே அப்பணத்தை பெற உன் தாய் படும் கஷ்டம் உனக்கு தெரியுமா? நீ செலவு செய்வது உன் தந்தையின் வேர்வை துளி என்பதை எப்போது சிந்திப்பாய்? இவற்றை எல்லாம் கடந்து நீ நல் வழியில் நடக்க யோசிக்கும் போது உன் இளமையே முடிந்து விடும்.

நபியவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத (கியாமத்) நாளில் அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்.

அவர்கள்:

01. நீதமிகு தலைவர்

02. அல்லாஹ்வின் வணக்கத்தில் வளர்ந்த ஒரு வாலிபர்

03. மஸ்ஜித்களுடன் இதய புர்வத் தொடர்பு கொண்ட மனிதர்

04. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.

05. அழகும், கவார்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்றுரைக்கும் மனிதன்.

06. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு இரகசியமாக செலவு செய்யும் மனிதன்.

07. தனிமையில் இறையச்சத்தில் ஈடுபடும் போது, (அல்லாஹ்வின்) அச்சத்தால் அழும் மனிதன்.” 

அறிவிப்பவா;: அபு ஹுரைறா (ரலி) 

நூல்: புகாரி 6806

மேலுள்ள நபி மொழி மிக இக்கட்டான மனிதர்களது நிலமை பற்றி பேசுகிறது. இவ்வுலகில் தனது இளமையினை அல்லாஹ்வுக்காக என்று கழிப்பவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் நிழல் என்பது சர்வசாதரணமானது கிடையாது.

வரலாற்றில் இளைஞர்கள் எல்லாம் சாதனையாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நாம் மதுவிற்கும் மாதுவிற்கும் அடிமைகளாக வாழ்கிறோம். பல இளைஞர்கள் இஸ்லாத்தின் வெற்றிக்கு உதவி புரிந்துள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு நாம் என்ன முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். 

உதாரணமாக

சிந்து சமவெளியை முஹம்மத் பின் காஸிம் அவர்கள் கைப்பற்றிய போது அவர்களின் வயது (17)

பைஸாந்திய சாம்ராஜ்ஜியத்தை முஹம்மத் பின் பாதிஹ் அவர்கள் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது (23)

ஸ்பெயினை தாரிக் பின் ஸியாத் அவர்கள் கைப்பற்றிய பொழுது அவர்களின் வயது (21) 

இது போன்ற வீரதீர செயல்களை செய்து இஸ்லாத்தின் வளர்சிக்கு தூண்களாக இருந்த இளைஞர்கள் இன்று எமது சமூகத்தில் எங்கே?

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு இஸ்லாத்தை போதிப்பதற்காக அனுப்பப்பட்ட ஸஹாபி முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள் ஒரு இளைஞர். 

அபிசீனியாவுக்கு முதன் முதலில் ஹிஜ்ரத் செய்த ஆண்களும், பெண்களும் இளைஞர்களும், யுவதிகளுமே ஆவார்கள். 

யெமனுக்கு நீதிபதியாகவும், விரிவுரையாளராகவும் அனுப்பட்ட முஆத் பின் ஜபல் (ரழி) அவர்கள் ஒரு இளைஞர். 

அபூபக்கர் (ரழி) அவர்களது காலத்தில் குர் ஆனை ஒன்றுதிரட்டும் பணியில் பங்கு கொண்டர்வ‌களுள் பலர் இளைஞர்களே ஆவார்கள்.

ஸூரா கஹஃப் குறிப்பிடப்படும் இளைஞர்களின் வரலாறு என பல்லாயிரம் படிப்பினைகளை கொண்டுள்ள அந்த இளைஞர்கள் எங்கே? எமது இன்றைய முன்மாதிரி இளைஞர்கள் எங்கே?


மது, மாது, அனாச்சாரம், அட்டூழியம், என ஜாஹிலியத்தின் உச்ச நிலையில் அந்த குறைஷிக் குல‌த்தில் உத்தமராக வாழ்ந்த நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் இளைஞர்களே. 

இஸ்லாம் மார்கத்தை வளரப்பதற்கு தமது உயிர்களை தியாகம் செய்த, பல இன்னோரன்ன துன்பங்களை, இன்னல்களை அனுபவித்த, நபி (ஸல்) அவர்கள் காட்டிய ஒழுக்க முன்மாதிரிகளை அணுவ‌ளவும் பிசகாது வாழ்ந்த ஸஹாப்பக்களும் இளைஞர்களே ஆவார்கள். 

இப்படிப்பட்ட மார்க்கத்தின் வாரிசுகளான நாங்கள் சற்று சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இன்று உலகம் பூராகவும் இஸ்லாம் நசுக்கப்படுகின்றது. முஸ்லிம்கள் அநியாயமாக கொலை செய்யப்படுகின்றார்கள். வாழ்வாதாரத்திற்கே வழியின்றி முஸ்லிம்கள் இன்று அகதிகளாக வாழ்கின்றார். முஸ்லிம் என்று கலிமா சொன்னத்திற்காக பெண்கள், சிறுவர்கள் துண்புறுத்தப்படுகின்றார்கள். மரணத்தை நினைத்து பயத்தில் ஓடைகளுக்குள் மக்கள் ஒழிகின்றனர். முதுகெலும்பற்ற ஜடமாக எமது நிலை மாறிவரும் நிலையில்

அவற்றை சீர்தூக்கி எமது சமூகத்தை வழிநடத்துவது சமூகத்தின் முதுகெலும்பாகிய இளைஞர்களின் கடமையல்லவா? ஒடுக்கப்படும் மக்களை உயர்த்த வேண்டிய பொறுப்பு யாருக்குரியது? பாவங்களும், அனாச்சாரங்களும் அத்துமீறும் இக் கால கட்டத்தில் சமூக அக்கறை அற்று தலைகெட்டுத் திரிவது எம் உமமத்திற்கு நாம் செய்யும் துரோகமாக மாறாதா?

எனவே நன்கு சிந்தியுங்கள்.! எந்த முடிவானாலும் குர்ஆன், ஸூன்னாவின் வரையறைக்குள் நின்று யோசியுங்கள். அதிக வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு காட்டுங்கள். நன்மையான காரியங்கள் ஒருவருக்கொருவர் போட்டி போடுங்கள். பள்ளிகளை நிர்வாகிக்க இளைஞர்கள் முன்வாருங்கள். மார்க்க வகுப்புக்களில் அதிகம் கலந்து கொள்ளுங்கள். இப்டியாக எமது வாழ்வை அமைத்துக் கொள்கின்ற போது நிச்சயம் இஸ்லாமிய சமூதாயம் தானாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்படியான இளைஞர்களாக என்னையும் உங்களையும் வல்ல ரஹ்மான் ஆக்கியருள்வானாக!

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget