ரவ்ழதுல் இல்ம் - 2023 (பாடம் : அகீதா, நாள் : 04)


 

அஸ்மா வஸிபாத் (அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள்)

அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத் பற்றிய அறிமுகம்

            நம்பிக்கை, சொல், செயல், அங்கீகாரம் அனைத்திலும் நபி ள அவர்களும், அவர்களுடைய தோழர்களும் இருந்த வழிமுறையே ஸுன்னாவாகும். அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் ஒன்று சேர்ந்து இருப்பவர்களே ஜமாஅத் எனப்படுகின்றனர்.

 

            அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினர் என்போர் நபி ள அவர்களின் ஸுன்னாவைப் பற்றிப் பிடித்து, அதில் ஒற்றுமையாக இருந்து, நம்பிக்கை சொல், செயல் அனைத்திலும் நபியவர்களைப் பின்பற்றுவதிலேயே உறுதியாக இருந்த நபித்தோழர்கள், தாபியீன்கள், நேர்வழி பெற்ற இமாம்களும், அவர்கள் வழியில் சென்ற அனைவரும் இக்கூட்டத்தில் அடங்குவர். எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் பித்அத்தை (நூதனங்கள்) விட்டும் தூரமாக இருப்பது இவர்களின் சிறப்பியல்பாகும். 'வெற்றி பெற்ற கூட்டம்', 'உதவி செய்யப்பட்ட கூட்டம்', 'அஹ்லுல் ஹதீஸ்' போன்ற பல பெயர்கள் இவர்களுக்கு உண்டு.

.

            மார்க்கத்தின் அனைத்து விடயங்களிலும் நடுநிலையாகவும், நீதமாகவும் இருப்பது அஹ்லுஸ்ஸுன்னாக்களின் பிரதான அடையாளமாகும். அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் விடயத்தில் இது தெளிவாகவே பிரதிபலிக்கின்றது. அப்பெயர்கள், பண்புகள் அனைத்திலும் அவற்றை பிற படைப்புகளுக்கு உவமைப்படுத்தாமலும், மறுக்காமலும், வலிந்துரை செய்யாமலும் முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். இதன் காரணமாகவே இப்பாடத்திற்கு ஓர் நுழைவாயிலாக அஹ்லுஸ்ஸுன்னாக்கள் பற்றிய ஓர் அறிமுகத்தை முன்வைக்கிறோம்.

 

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றிய அறிமுகம்

            அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் இடம்பெற்றுள்ள அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் மற்றும் உயரிய பண்புகளின் அர்த்தங்கள், சட்டங்கள் போன்றவற்றை விசுவாசம் கொண்டு, எவ்வித உவமையும், வர்ணனையும், திரிபுகளும், நாத்திக சித்தாந்தங்களும் இன்றி அவனது தகுதிக்கும், கண்ணியத்திற்கும் ஏற்றவாறு அவற்றை உறுதிப்படுத்தி, அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதையே இது குறித்து நிற்கிறது.

 

            வஹீ மூலம் உறுதியான அல்லாஹ்வின் எந்தவொரு பெயரையும் பண்பையும் ஏற்றுக் கொள்ள எவ்விதத் தயக்கமும் தேவையில்லை. அப்பெயர், பண்புகள் படைப்பினங்களான எம்மிடமும் உள்ளனவே, எனவே அல்லாஹ்வும் நாமும் ஒன்றாகி விடுவோமே என்ற அச்சமும் தேவையில்லை.

 

            ஏனெனில் அல்லாஹ் தன் படைப்பினங்களை விட்டும் முற்றிலும் வேறானவன். அவனுக்கு நிகர் ஒன்றும் கிடையாது. அல்லாஹ்வும் பார்க்கின்றான், நாமும் பார்க்கின்றோம் என்பதனால் இருவரது பார்;வையும் ஒன்றல்ல. படைப்பினங்களுக்கு மத்தியிலேயே ஒரே பண்பில் பல வேறுபாடுகளை வைத்துள்ள அல்லாஹ் தனக்கென தனித்துவமான ஒரு முறையை வைத்திருப்பான் என்பதில் கடுகளவும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. அப்பண்புகள் அல்லாஹ்வுக்கு இருப்பதாக ஏற்றுக்கொள்வதால் அவனைப் படைப்பினங்களுக்கு உவமைப்படுத்தி விட்டதாக ஆகாது.

 

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

1.         அல்குர்ஆனிலும், சுன்னாவிலும் இடம்பெற்றுள்ளவாறு அல்லாஹ்வை அறிந்துகொள்கின்றனர். அல்லாஹ் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ள பண்புகளையும், நபி ள அவர்கள் அல்லாஹ்வுக்கு இருப்பதாகக் கூறியுள்ள பண்புகளையும் எவ்வித உதாரணமும், உவமையும், வர்ணனையும், திரிபுகளுமின்றி ஏற்றுக்கொள்கின்றனர்.

 

            அல்லாஹ் கூறுகிறான் : 'அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்' (அல்குர்ஆன் - 42 : 11)

 

2.         அல்லாஹ்வே முதன்மையானவன். அவனுக்கு முன்னர் எவரும் கிடையாது. அவனே இறுதியானவன், அவனுக்குப் பிறகு எவரும் கிடையாது, அவனே வெளிப்படையானவன், அவனுக்கு மேல் எவரும் கிடையாது, அவனே அந்தரங்கமானவன், அவனை விட ஆழமாக வேறு எவரும் கிடையாது என மனதார ஏற்றுக்கொள்கின்றனர்.

 

            அல்லாஹ் கூறுகிறான் : 'அவனே முதலானவன், முடிவானவன், வெளிப்படையானவன்; அந்தரங்கமானவன், ஒவ்வொரு பொருளையும் அவன் அறிந்தவன்' (அல்குர்ஆன் - 57 : 03)

 

3.         அல்லாஹ் தனது படைப்புக்களை விட்டும் பிரிந்து ஏழு வானங்களுக்கு அப்பால் இருக்கும் தனது அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அனைத்தையும் பற்றிய அறிவு அவனிடமே உள்ளது என்பதை எவ்வித வர்ணனைகளுமின்றி ஏற்கின்றனர்.

 

            அல்லாஹ் கூறுகிறான் : 'அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான்.' (அல்குர்ஆன் - 20 : 05)

 

4.         அல்குர்ஆனிலும், நபி ள அவர்களின் கூற்றுக்களிலும் குறிப்பிடப்பட்டது போல் அல்லாஹ்வுக்கு கேட்டல், பார்த்தல், அறிதல், சக்தி, மகத்துவம், பேச்சு, உயிருடன் இருத்தல், கை, கால், முகம் போன்ற அனைத்துப் பண்புகளும் அவனைத் தவிர வேறு யாரும் அறிந்திராத வர்ணனையில் இருப்பதாய் ஏற்கின்றனர்.

 

5.         மறுமையில் இறைவிசுவாசிகள் அல்லாஹ்வை தமது வெற்றுக்கண்களால் உயர் திசையில் காண்பார்கள் என்றும், அல்லாஹ்வுடன் உரையாடுவார்கள் என்றும், அல்லாஹ்வும் அவர்களுடன் உரையாடுவான் எனவும் உளமாற ஏற்கின்றனர்.

 

            அல்லாஹ் கூறுகிறான் : 'அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்' (அல்குர்ஆன் - 75 : 23)

           

6.         அல்லாஹ் தனது தகுதிக்கும், அந்தஸ்த்திற்கும் ஏற்ற வகையில் இரவின் இறுதிப்பகுதியில் அடிவானத்திற்கு இறங்குகிறான். அவ்வாறே மறுமையில் மக்களுக்கு தீர்ப்பளிப்தற்காய் யதார்த்தமாகவே வருவான் என உறுதியாய் ஏற்கின்றனர்.

           

            அல்லாஹ் கூறுகிறான் : 'வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது...' (அல்குர்ஆன் - 89:22)

             

            நபி ள அவர்கள் கூறினார்கள் : 'நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, 'என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்' என்று கூறுவான்'. (ஆதாரம் - புஹாரி : 1145, முஸ்லிம் : 758)

           

7.         அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆன் முழுதும் அவன் யதார்த்தமாகப் பேசிய பேச்சுக்களே. அவற்றை ஜிப்ரீல் ய அவர்கள் செவிமடுத்து நபியவர்களிடம் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஒப்புவித்தார்கள் என்பதை முழுமையாக ஏற்கின்றனர்.

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான நெறிபிறழ்வுகள்

            அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை திரிபுபடுத்துவோரின் கூற்றுக்களை வைத்து மூன்று தரப்பினராக அவர்களை வகைப்படுத்திட முடியும்.

 

1. ஜஹ்மிய்யாக்கள், கராமிதாக்கள், பாதினிய்யாக்கள் மற்றும் இவர்களை பின்தொடர்வோரின் நிலைப்பாடு

            மேற்கண்டவர்கள் அல்லாஹ்வின் அனைத்து பெயர்களையும், பண்புகளையும் மறுக்கின்றனர். அல்லாஹ்வுக்கு 'இருப்பு' எனும் பண்போ, 'இல்லாமை' எனும் பண்போ கிடையாது. 'இருப்பு' எனும் பண்பு இருப்பதாகக் கூறினால் அவன் படைப்பினங்களுக்கு ஒப்பாகின்றான். 'இல்லாமை' எனும் பண்பு இருப்பதாகக் கூறினால் இறைவனே இல்லை என்று ஆகிவிடுவான். எனவே இது அல்லாஹ்வுக்கு இருக்க முடியாத (முஸ்தஹீலான) பண்பாகும்.

 

            இருப்பும், இல்லாமையும் ஒரே நேரத்தில் ஒன்று சேர முடியாது. இது மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்பது இவர்களின் வாதமாகும். அதன் விளைவாக அல்லாஹ்வுக்கு இருப்பதாக அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் இடம்பெற்றுள்ள அனைத்து பெயர்களையும் பண்புகளையும் மறுக்கின்றனர். இது அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் கொள்கைக்குப் புறம்பானது.

 

2. முஃதஸிலாக்கள்

            இவர்கள் அல்லாஹ்வின் பெயர்களைப் பூரணமாக ஏற்று, அவனது பண்புகளை முழுமையாக மறுக்கின்றனர். பெயர்களை ஏற்று அவற்றுள் பொதிந்திருக்கும் கருத்துக்கள், பண்புகளையும் மறுக்கின்றனர். ஒரே இறைவனாக இருக்கும் அல்லாஹ்வுக்குப் பல பண்புகள் இருப்பதென்பது அவனைப் பல கடவுள்களாக சித்தரிப்பதைப் போன்றாகும். ஒவ்வொரு பண்பும் ஒவ்வொரு இறைவனுக்குச் சமம். எனவே அவனுக்குப் பல பண்புக்கள் இருப்பதாகக் கூறுவது பல இறைவன் இருப்பதைப் போன்றாகும் என்பதே இவர்களது வாதம். ஒருவருக்கு பல பண்புகள் இருப்பதால் அவரை பலர்  என யாரும் கூறுவதில்லை. அவ்வாறிருக்க ஒரே இறைவனாகிய அல்லாஹ் மாத்திரம் பல பண்புகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் போது எவ்வாறு பல கடவுள்களாக மாற முடியும்?


3. அஷ்அரிய்யாக்கள், மாதுரீதிய்யாக்களின் நிலைப்பாடு

            இவர்கள் அல்லாஹ்வின் பெயர்களை முழுமையாக ஏற்று, பண்புகளில் சிலதை மாத்திரமே ஏற்கின்றனர். சக்தி, நாட்டம், கேட்டல், பார்த்தல், உயிருடன் இருத்தல், அறிவு, பேச்சு போன்ற இவர்களுடைய பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும் சில பண்புகளை மாத்திரமே ஏற்கின்றனர்.

 

            அல்குர்ஆன், ஸுன்னாவில் கூறப்பட்டுள்ள ஏனைய பண்புகளுக்கு இவர்கள் வலிந்துரை செய்கின்றனர். அல்லாஹ்வின் பண்புகள் அனைத்தும் அவனைச் சார்ந்தது, அவற்றுக்கு மத்தியில் சிலதை ஏற்று, சிலவற்றிற்கு வலிந்துரை செய்வதுதான் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாத விடயம்.

           

குறிப்பு :     

            இவர்கள் அனைவரிலும் மிகவும் வழிகெட்ட, ஆபத்தான கொள்கையினர் ஜஹ்மிய்யாக்களும், பாதினிய்யாக்களுமே. அவர்கள் அல்லாஹ்வுக்கு பெயர்களோ, பண்புகளோ எதுவுமே கிடையாது எனக் குறிப்பிடுகின்றனர்.

 

            அதற்கு அடுத்து முஃதஸிலாக்கள் இடம்பெறுவர். இவர்கள் அல்லாஹ்வுக்கு பெயர்கள் இருப்பதாகக் கூறி அவனது பண்புகளை மறுக்கின்றனர். அதற்கு அடுத்த படித்தரத்தில் அஷ்அரிய்யாக்கள், மாதுருதிய்யாக்கள் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு பெயர்கள் இருப்பதாகக் கூறிவிட்டு, அவனின் பண்புகளில் சிலதை ஏற்று சிலதை வலிந்துரை செய்கின்றனர்.

 

            இவர்களின் இவ்வாறான நெறிபிறழ்வுக்குட்பட்ட கூற்றுக்களுக்குக் காரணம் அல்குர்ஆன், சுன்னாவை விடவும் பகுத்தறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தமையும், படைப்பினங்களுக்கு இருப்பவற்றை படைப்பாளனுக்கும் இருக்க வேண்டும் என அவசியப்படுத்தியமையும், படைப்பாளனுக்கும், படைப்பினங்களுக்கும் மத்தியில் தவறான அணுகுமுறையைக் கையாண்டதுமாகும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget