ரவ்ழதுல் இல்ம் - 2023 (பாடம் : அகீதா, நாள் : 02)

 ஷிர்க் (இணைவைப்பு)

          'ஷிர்க்' என்பது, அல்லாஹ்வுக்கென்று பிரத்தியேகமாக இருக்கும் விடயங்களில் அவனுடன் அவன் அல்லாதவைகளை சமநிலைப்படுத்தல் அல்லது கூட்டுச் சேர்த்தல் என்ற அர்த்தத்தைக் குறிக்கின்றது.

 

இணைவைத்தலின் வகைகள்

இது இருவகைப்படும்.

01. ஷிர்க் அக்பர்          (பெரிய இணைவைப்பு)

02. ஷிர்க் அஸ்கர்        (சிறிய இணைவைப்பு)

 

01. ஷிர்க் அக்பர்  (பெரிய இணைவைப்பு)

          இது நம்பிக்கை சார்ந்த விடயங்களில் ஏற்படும் இணைவைத்தலை குறிக்கும். அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டிய கடமைகளை இன்னொருவருக்குச் செய்வதை இது குறிக்கும். இதனை பெரிய இணைவைப்பு என இஸ்லாம் கருதுகின்றது. இதனை பின்வருமாறு மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

 

01. பரிபாலணக்கோட்பாட்டில் (ருபூபிய்யா) நிகழும் இணைவைப்பு

          அல்லாஹ்வின் செயற்பாடுகளான படைத்தல், நிர்வகித்தல், உணவளித்தல் போன்ற விடயங்களுக்கு அவனுடன் இன்னொருவர் இருப்பதாக எண்ணுதல்.

 

02. இறைமைக் கோட்பாட்டில் (உலூஹிய்யா) நிகழும் இணைவைப்பு

          பிரார்த்தனை புரிதல், அறுத்துப் பலியிடல், நேர்ச்சை வைத்தல் போன்ற வணக்கங்களில் அல்லாஹ்வுடன் இன்னொருவரை கூட்டுச் சேர்த்தல்.

 

03. அல்லாஹ்வின் பெயர்கள், மற்றும் பண்புகளில் (அஸ்மா, வஸிபாத்) நிகழும் இணைவைப்பு

          அல்லாஹ்வுடைய பண்புகளின் தனித்துவத்தில் பிறரைக் கூட்டுச் சேர்த்தல், அவனின் பார்வை, கேள்வி, முகம், கை போன்றவற்றை படைப்பினங்களுடன் ஒப்பிடல், அல்லாஹ்வின் சக்தியை பிற சக்திகளோடு ஒப்பிடல் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

 

பெரிய இணைவைப்பு பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

1. இஸ்லாத்தை விட்டும் பூரணமாக வெளியேறி விடுவார்.

2. இவரது நற்செயல்கள் அனைத்தும் அழிந்து விடும்.

3. அவரது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பில்லை.

4. மறுமையில் நிரந்தரமாக நரகில் தங்கிவிடுவார்.

5. மரணத்திற்கு முன்னர் இவர் தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவரை மன்னிப்பான்.

 

அல்லாஹ் கூறுகிறான் : 'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். அது தவிர ஏனையவற்றை தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவன் நிச்சயமாகப் பெரும் பாவத்தையே இட்டுக்கட்டியவனாவான்'. (அல்குர்ஆன் - 4 : 48)

 

 

2. ஷிர்க் அஸ்கர் (சிறிய இணைவைப்பு)

          இது நம்பிக்கை சாராத சொற்களில் ஏற்படும் இணைவைப்பாகும். அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் பிறரைக் கூட்டுச் சேர்த்தல் என்பதை இது குறித்தாலும், இது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றாத, அல்குர்ஆனில் அக்காரியம் (ஷிர்க்) இணைவைப்பு எனக் கூறப்பட்டும், பெரிய இணை வைப்பின் எல்லையை அடையாத விடயங்களைக் குறித்து நிற்கும். இவற்றுக்கு சிறிய இணைவைப்பு எனக் கூறப்படும்.

 

சிறிய இணைவைப்பு இரு வகைப்படும் :

1. மறைமுகமான இணைவைப்பு

2. வெளிப்படையான இணைவைப்பு

 

1. மறைமுகமான இணைவைப்பு

          இது முகஸ்துதியைக் குறிக்கும். சொல், செயல் போன்ற விடயங்களில் சிறிதளவேனும் முகஸ்துதி இருந்தால் அது சிறிய இணைவைப்பைச் சார்ந்து விடும். உதாரணமாக :

 

• பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காக தொழுகையை நீட்டித் தொழல்.

• மக்கள் காண வேண்டுமென்பதற்காக சபைகளில் திக்ர் செய்வதாக வாயசைத்தல்.

• தன்னை ஒரு வணக்கசாலியாக மக்கள் எண்ண வேண்டுமென்பதற்காக நெற்றியில் ஸுஜூது செய்த அடையாளம் வர வேண்டுமென சிரமப்படல்.

 

2. வெளிப்படையான இணைவைப்பு

இது இரு வகைப்படும் :

1. சொல் சார்ந்த இணைவைப்பு

2. செயல் சார்ந்த இணைவைப்பு.

 

1. சொல் சார்ந்த இணைவைப்பு

          இது அல்லாஹ்வோடு சேர்த்து ஏனையோரையும் ஒரே வார்த்தையில் கூட்டுச் சேர்த்தலைக் குறிக்கும். இதில் பின்வருவன அடங்கும் :

 

 

i.   அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்தல்.

 

ii.  'அல்லாஹ்வும் நீங்களும் நாடி விட்டீர்கள்', 'நான் அல்லாஹ் மீதும் உங்கள் மீதும் பொறுப்புச் சாட்டுகின்றேன்', 'எனது சொத்துக்கள் அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் உரித்தானது', 'அல்லாஹ்வும் நீங்களுமே போதுமானவர்கள்' போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இவ்வார்த்தைப் பிரயோகங்களில் நாம் குறிப்பாக்கும் விடயத்தை அல்லாஹ்வுக்கு முதலில் குறிப்பாக்கி விட்டு, அதன் பின்னரே ஏனையோரை அதில் கூட்டுச் சேர்க்க வேண்டும்.

 

iii. சில நிகழ்வுகளை அல்லாஹ் அல்லாதவர்களோடு கூட்டுச் சேர்த்தலும் சிறிய இணைவைப்பைச் சாரும். 'இவர் மட்டும் இருக்காவிட்டால் எனக்கு அது கிடைத்திருக்குமே', 'நாய் இருந்திருக்காவிட்டால் திருடன் வீட்டினுள் வந்திருப்பான்', 'அந்த இடத்தில் அவரை நியமித்திருக்காவிட்டால்.....' போன்ற வாசகங்களை உதாரணமாகக் கூறலாம்.

 

iஎ. இஸ்லாம் காரணியாகக் கருதாத ஒன்றை தமக்குச் சாதகமான காரணியாக ஏற்பதும் சிறிய இணைவைப்பில் உள்ளடங்கும். 'இன்னின்ன நட்சத்திரங்களால் தான் எமக்கு மழை கிடைத்தது' என யதார்த்தத்துக்குப் புறம்பாகக் கூறுதலை உதாரணமாக எடுக்கலாம்.

 

02. செயல் சார்ந்த விடயங்களில் ஏற்படும் இணைவைப்பு

i.  பறவை மூலம் சகுணம் பார்த்தல்.

ii.  ஜோசியர்களிடம் சென்று அவர்கள் கூறுவதை உண்மைப்படுத்தல்.

iii. தொலைந்த பொருட்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக சாஸ்திரக் காரனிடம் செல்லல்.

iv. தீமைகளைத் தடுக்கவும், வந்தவற்றை விரட்டவும் வளையங்களையும், காப்புகளையும் (தாயத்து, தகடு) அணிதல்.


குறிப்பு :

          சத்தியம் செய்தல், மற்றும் செயல் சார்ந்த விடயங்கள் போன்றவற்றை அளவுக்கதிகமாக கண்ணியப்படுத்துவது எம்மை சிறிய இணைவைப்பிலிருந்து பெரிய இணைவைப்பிற்கு இட்டுச் செல்லும்.

 

சிறிய இணை வைப்பு பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு

1. இது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்ற மாட்டாது.

2. குறித்த அமலை அழித்து விடும்.

3. ஈமானில் குறையை ஏற்படுத்தும்.

4. மறுமையில் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.

5. நிரந்தரமாக நரகில் தங்க மாட்டார்.

 

 

பெரிய இணைவைப்பிற்கும் சிறிய இணைவைப்பிற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள்.

பெரிய இணைவைப்பு

சிறிய இணைவைப்பு

இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுவார்

இஸ்லாத்தை விட்டும் வெளியேற மாட்டார் ஆனால் பாவிகள் பட்டியலில் இணைவார்

நரகில் நிரந்தரமாக தங்கி விடுவார்

நரகில் நிரந்தரமாக தங்க மாட்டார்

மரணிக்க முன் தவ்பா செய்யாவிடின் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்

தவ்பா செய்யாமல் மரணித்தால் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான் அல்லாஹ் நாடினால் தண்டிப்பான்

உயிர் உடமைக்கு உத்தரவாதம் இல்லை

உயிர் உடமைக்கு உத்தரவாத உண்டு

 

 

 

மாதிரி வினாக்கள்

 

01-பறவை மூலம் சகுணம் பார்ப்பது பெரிய ஷிர்க் ஆகும். அது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி விடும். இக்கூற்று?

 

02-அல்லாஹ்வும் நீங்களுமே போதுமானவர்கள் என்று சொல்வது?

 

03- இறைமை கோட்பாட்டில் (உலூஹிய்யா) நிகழும் இனைவைப்பு யாது.?

 

 

 


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget