இஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 01) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)


ஆக்கம்
JM. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி

மேற்பார்வை 
M. அஹ்மத் அப்பாஸி MA



அகில உலகைப் படைத்து, பராமரித்துக்கொண்டிருக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அவனது தூதர் முஹம்மத் r அவர்களுக்கும், அவரது குடும்பதவர்கள், தோழர்கள், இறுதி நாள் வரை யாரெல்லாம் அவரைப் பின்பற்றி வாழ்கின்றனரோ அவர்கள் அனைவர் மீதும் அல்லாஹ்வின் ஸலாதும், ஸலாமும் உண்டாவதாக.

ஆரம்ப காலங்களில் பெண் என்பவள் வீட்டின் சொத்தாக கருதப்பட்டு வந்தாள். வீட்டுப் பொருட்களும், சொத்து செல்வங்களும், கால்நடைகளும் ஒருவரின் மரணத்திற்குப் பின் எவ்வாறு வெறொருவருக்கு அனந்தரச் சொத்தாக வழங்கப்படுமோ அவ்வாறே பெண்ணும் தனது கணவனின் மரணத்தின் பின் வேறொருவருக்கு அனந்தரச் சொத்தாக வழங்கப்பட்டு வந்தாள். அவளுக்கு சம்பாதிக்கும் உரிமை, சொத்துக்களை சேர்த்து வைக்கும் உரிமை, பொருளாதாரத்தில் சுதந்திரமாக செயற்படும் உரிமை போன்ற அனைத்தும் அக்கால சமூகத்தினரால் தடை செய்யப்பட்டு இருந்தது. திருமணத்தின் போது அவளுக்குக் கிடைக்கும் மஹ்ரைக் கூட பெற்றுக்கொள்ளும் உரிமை அவளுக்கு இருக்கவில்லை. அதைக்கூட அவளின் தந்தை, அல்லது அவளுக்கு யார் பொறுப்பாளராக இருக்கிறாரோ அவரே பெற்று வந்தார்.

இஸ்லாத்தின் வருகையைத் தொடர்ந்து அனந்தரச் சொத்து என்றால் என்ன? பெண் என்பவள் அதில் பெறவேண்டிய பங்குகள், பொருளாதார கொடுக்கல் வாங்கல்களில் பெண்ணின் சுதந்திரம், சொத்துக்களை சேர்த்து வைப்பதிலும், மஹ்ரைப் பெற்றுக்கொள்வதிலும், தனது சொத்தில் தான தர்மங்கள் புரிவதிலும் பெண்ணுக்கு இருக்கும் உரிமைகள் என்ன? என்பது போன்ற அனைத்தையும் தெளிவுபடுத்தியது. அக்கால சமூகத்தில் நிலவி வந்த மௌட்டீக சிந்தனைகளையும், மனிதர்கள் தொகுத்து காத்துக்கொண்டிருந்த சட்டதிட்டங்களையும் தகர்த்தெறிந்து, இறைவனின் ஆணை என்ன? என்பதற்கு முக்கியத்துவம் அளித்து, அதனை மக்கள் மன்றத்தில் செயற்படுத்த வைத்தது.

பொருளாதார விடயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் மத்தியில் நீதமாக நடந்துகொண்டது இஸ்லாம் மார்க்கம் மாத்திரம் தான். பொருளாதாரத்தில் ஆண் எவ்வாறு அதிக உரிமையோடு செயல்படுகிறானோ அதே சம உரிமை பெண்களுக்கும் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக எடுத்துக்கூறியது. பெண்ணின் சொத்துக்களை சூரையாடுவதற்கும், அவள் மீது ஆதிக்கம் செலுத்தி, அதிகாரம் புரிந்து அவளின் சொத்துக்களை முடக்கிடவும் எக்காலத்திலும் ஆண்களுக்கு முடியாது என்பதை சட்டரீதியாக நடைமுறைபடுத்திக்காட்டியது.

இன்று நாம் வாழும் சூழலில் திருமணம் முடிக்கும் அநேகர் தமது மனைவிமாருக்கு சரியான பொருளாதார உரிமைகளை வழங்குவதில் பொடுபோக்காக இருக்கின்றனர். பல மதத்தினர் வாழும் நம் நாட்டில் ஏனைய மதத்தினரின் சாயலும் நமது முஸ்லிம் சமூகத்தில் ஊடுறுவியிருப்பதால் பெண்கள் விடயத்தில் அந்நிய மதத்தினரின் சட்டதிட்டங்களை அமுல்படுத்துவதிலும், அதை சரிகாண்பதிலும், ஆண்வர்க்கம் உயர்ந்தவர்கள், பெண்கள் கீழ்ஜாதிகள் எனும் எண்ணத்தில் சில்லரைப் பிரச்சினைகளுக்குக்கூட தனது தன்மானம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பெண்களின் பொருளாதராரத்தில் கைவைக்கும் நிலமையுமே காண முடிகிறது.

இங்கு பெண் எனும் வரையறைக்குள் மனைவி மாத்திரம் உள்வாங்கப்படுகிறாள் எனும் எண்ணம் பிழையானது. தாய், சகோதரிகள், மகள் போன்ற அனைவரும் இவ்வட்டதினுள் உள்வாங்கப்படுகின்றனர். இவர்களுக்கும் உரிய பொருளாதார உரிமைகள் ஆண்களால் நிறைவேற்றிக் கொடுக்கப்படுவதில்லை. திருமணம் முடித்த பின் தாயை யார் கவனிப்பது? எனும் விடயத்தில் சகோதர சகோதரிகளுக்கிடையில் சர்ச்சைகள் எழுகின்றன. சகோதரிக்கு பிரச்சினைகள் வரும் போது கணவன் தரப்பிலோ, மனைவியின் தரப்பிலோ பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் தடுக்கப்படுகிறன. மகளுக்கு பிரச்சினைகள் ஏற்படும் போது ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஏனைய பிள்ளைகளால் எங்களை தவிர அவள் மாத்திரம் தான் உங்கள் பிள்ளையா என தர்மசங்கடமான தடைகள் ஏற்படுகின்றன.

பெண்களுக்கான பொருளாதார சட்டவிழுமியங்களைப் பற்றி இஸ்லாம் போதித்தவைகள் இவர்களுக்கு இன்னும் போய்ச் சேராமல் இருப்பதும், இஸ்லாம் என்ன கூறினாலும் பரவாயில்லை. எனது ஆதிக்கத்தை மீறி என் வீட்டில் எதுவும் நடந்திடக்கூடாது எனும் அசமந்தப்போக்கை கையாள்பவர்களுக்கும் தெளிவை வழங்கிடவும், பெண்களுக்கு இஸ்லாம் எதையுமே வழங்கவில்லை, எமது உரிமைகளை நாம் அந்நிய மதத்தினரைப் போலவே எதிர்பார்க்கிறோம் என பெண்ணிலை வாதம் பேசி, புரட்சியில் ஈடுபடும் ஓர் சில பெண்களுக்கு மறுப்பு தெரிவிப்பதுமே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இக் கட்டுரையில் இவை அனைத்துக்குமான தெளிவான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதமும், கொள்கையும், புரட்சியும், சட்ட ஒழுங்குகளும் பெண்களுக்கான பூரண பொருளாதார உரிமைகளை வழங்கிட முடியாது என்பதை இவ் ஆய்வின் ஊடாக நிரூபித்துள்ளேன்.

இக்கட்டுரையினூடாக...

  1. எக்காலத்திற்கும் பொருத்தமான வகையில் பெண்களுக்கான பூரண உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது என்பது இதனூடாக அனைவருக்கும் தெரியவரும்.
  2. பெண்களின் உரிமை என மேற்கத்தியர்களால் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள அனைத்து விடயங்களுக்கும், இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை இதனூடாக வாசகர்கள் புரிந்துகொள்வர்.
  3. பொருளாதார உரிமையில் பெண்களுக்கும் பங்குண்டு என இஸ்லாமிய சட்டமூலாதாரத்தின் ஆதாரங்களுடனும், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களிலிருந்தும் ஆதாரங்கள் முன்வைக்கப்படும் போது, பெண்கள் விடயத்தில் பொடுபோக்கைக் கையாள்வோர் தமது தவறை உணர்ந்து, திருத்திக்கொள்வர்.
  4. பெண்களுக்கு பொருளாதார உரிமைகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், பெண்ணின் நலவுக்காக ஆணே வெளியில் சென்று உழைத்திட வேண்டும் எனும் சட்ட விதியின் யதார்த்தத்தை ஆண்கள் புரிந்து அதற்கு ஏற்றாற் போல் பெண்களுடன் நலினமாக நடந்துகொள்ளும் முறை ஏற்படும்.

அல்லாஹ்வின் உதவியோடு நிறைவுசெய்துள்ள இக்கட்டுரையில் அனைத்து கருத்துக்களும் சரியாக இருந்தால் அவை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவைகள். ஏதும் தவறுகள் இருப்பின் அது மனிதன் எனும் வகையில் என் புறத்தால் ஏற்பட்டவைகள். அல்லாஹ்வே எனக்கு போதுமானவன்.

இக்கட்டுரையில் அதிக தலைப்புக்கள் பற்றி பேசப்பட்டுள்ளதால் இலகுவைக் கருதி இதனை பகுதி பகுதியாக பதிவேற்றம் செய்ய எத்தனித்துள்ளேன். நீங்களும் இதனை வாசித்து இது பற்றிய விமர்சனங்களைக் கூறுங்கள்.

எமது சகல நற்கருமங்களையும் அல்லாஹ் ஏற்றுக்கொண்டு, எமது சகல பாவங்களையும் மன்னித்து, மறுமையில் ஜன்னதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் எம் அனைவரையும் நுழைவிப்பானாக!


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget