வுழூ - ஓர் சுகாதாரக் கண்ணோட்டம் || Assheikh Hizbullah (Anwari,Riyadhi)

இன்றைய நவீன உலகம் சுகாதாரத்திற்கு அதிகளவில் முக்கியத்துவம் வழங்குகிறது. பல கோணங்களில் நோக்கப்படும் இச்சுகாதாரக் கண்ணோட்டம் தனிமனித சுகாதாரத்தில் அதீத கரிசனை காட்டுகிறது. அதிலும் குறிப்பாக உடல் சுத்தத்தில் அதீத கவனம் செலுத்துகிறது. தனிமனிதன் தனது உடல் சுகாதாரத்தை மேம்படுத்த முயலும் போது வீடு சுத்தமாகிறது. வீடு சுத்தமாகினால் பக்கத்து வீடு, தெரு, கிராமம், நகரம், நாடு என இதன் செல்வாக்கு விரிவடைந்து செல்கிறது. இதற்காக உலக சுகாதார மையத்தினால் முழு வருடத்திலும் தனித் தினங்கள் குறிக்கப்பட்டு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இஸ்லாம் சுகாதாரத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. அதிலும் நாளாந்தம் சுகாதாரத்தைப் பேணும் வகையில் தனிமனித சுகாதாரத்தை அதிகம் வலியுருத்துகிறது. தனித்தனி தினங்கள் ஒதுக்கி, குறித்த சில உடல் உறுப்புக்களில் மாத்திரம் விழிப்புணர்வு ஊட்டும் உலக சுகாதார மையத்தின் நோக்கங்களை ஒரே முறையில் அதுவும் ஒரு நாளில் பல தடவை செய்திட வேண்டுமென எமக்கு கட்டளையிடுகிறது. 

வுழூ என்றால் என்ன? 
மணிக்கட்டு வரை இரு கைகள், வாய், மூக்கு, முகம், முழங்கை உட்பட இரு கைகள், கரண்டை உட்பட இரு கால்கள் முதலிய உறுப்புக்களை நீரால் கழுவும் முறைக்கும், தலை முடி, இரு காதுகள் முதலிய உறுப்புக்களை நீரால் தடவும் முறைக்கும் உபயோகப்படுத்தப்படும் அரபு வார்த்தையே வுழூ ஆகும். தொழுகை. கஃபாவை வலம் வருதல் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு இவ்வுறுப்புக்களை சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதால் இதனை இஸ்லாம் ஓர் அத்தியாவசியச் சுத்தமாக கருதுகின்றது. 

மேற்கூறப்பட்டவற்றில் சில உறுப்புக்களை நாம் விரும்பினால் சுத்தம் செய்திடலாம். சில உறுப்புக்களை அவசியம் சுத்தம் செய்தே ஆக வேண்டும். அவ்வாறு அவசியம் சுத்தம் செய்யவேண்டிய உறுப்புக்கள் யாவை என்பதை பின்வரும் அல்குர்ஆன் வசனம் எமக்கு விளக்குகிறது. 

அல்லாஹ் கூறுகிறான், “முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்)!” (அல்குர்ஆன் 05:06) 

இருப்பினும் இவற்றோடு முன்னர் கூறப்பப்ட உறுப்புக்களையும் சேர்த்து சுத்தம் செய்வதே வுழூவின் பூரணத்துவத்தைக் குறித்துக்காட்டுகிறது. 

வுழூவின் நிபந்தனைகள் 
ஒரு முஸ்லிம் தொழுகை, கஃபாவை வலம் வருதல் போன்ற வணக்கங்களை நிறைவேற்றுவதற்கு மேற்குறிப்பிடப்பட்ட உறுப்புக்களை சுத்தம் செய்திருத்தல் வேண்டும். இவ் உறுப்பகளை சுத்தம் செய்வதற்கு சில நிபந்தனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. அந்நிபந்தனைகளுக்கமைவாக ஒரு முஸ்லிமின் நிலை இருப்பின் மாத்திரமே அது வணக்கங்கள் செய்வதற்கு செல்லுபடியான சுத்தமாக கருதப்படும். அவை வருமாறு 

1. முஸ்லிமாக இருத்தல். 

2. சுயநினைவுள்ளவராக இருத்தல். 

3. பெண்களாயின் மாதவிடாய், மகப்பேற்று இரத்தம் போன்றவற்றிலிருந்து சுத்தமாயிருத்தல். 

4. வுழூவின் உறுப்புக்களில் தோலை நீர் சென்றடையாமல் தடுக்கும் அனைத்தையும் அகற்றுதல். 

5. வுழுவிற்கான நீர் சுத்தமானதாக இருத்தல். 

6. செய்யப் போகும் வணக்கத்திற்கான நேரம் நுழைந்திருத்தல். 

7. வுழு செய்ய வேண்டுமென எண்ணுதல் (நிய்யத்). 

வுழூ செய்யும் முறை 
1. வுமூ செய்யும் எண்ணத்துடன் இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று தடவை நன்கு கழுவ வேண்டும். 

2. "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" என அல்லாஹ்வின் பெயரை கூறிக்கொள்ள வேண்டும். 

3. மிஸ்வாக் குச்சியினால் பற்களைத் துலக்கி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். 

4. தண்ணீரை மூன்று தடவை வாயினுள் செலுத்தி, வாய்கொப்பளிக்க வேண்டும். 

5. தண்ணீரை மூன்று தடவை மூக்கினுள் இழுத்து, சீந்திவிட வேண்டும். 

6. நெற்றியிலிருந்து நாடிக் குழி வரை நீளத்திலும், ஒரு காதிலிருந்து மறு காது வரை அகலத்திலும் உள்ள முகத்தை மூன்று தடவை கழுவ வேண்டும். தோல் தெரியும் படியான தாடி இருப்பின் தோலில் தண்ணீர் படும் வண்ணம் அதைக் கழுவிட வேண்டும். அடர்ந்த தாடியாக இருப்பின் அதைக் குடைந்து கழுவ வேண்டும். 

7. இரு கைகளையும் முழங்கை உட்பட மூன்று தடவை கழுவ வேண்டும். இதன் போது வலதை முற்படுத்திட வேண்டும். 

8. தண்ணீரில் அகக் கையை நனைத்து, தலை முழுவதையும், இரு காதுகளையும் ஒரு தடவை தடவிக் கொள்ள வேண்டும். இதன் போது இரு பெருவிரல்களையும் காதின் அருகில் வைத்து, மற்ற விரல்களை முன் நெற்றியிலுந்து ஆரம்பித்து தலையின் பின் பகுதி வரை கொண்டு சென்று, திரும்பவும் அங்கிருந்து முன் நெற்றி வரை தடவிக்கொள்ள வேண்டும். அதே தடவையில் இரு காதுகளையும் உட்புறமும், வெளிப்புறமும் தடவிக்கொள்ள வேண்டும். 

9. இரு கால்களையும் கரண்டை உட்பட மூன்று தடவை கழுவிக் கொள்ள வேண்டும். இதன் போது வலதை முற்படுத்திட வேண்டும். 

10. வுழூவின் பூரணத்துவத்தைக் கருத்தில் கொண்டு கட்டாயம் நீரால் கழுவ வேண்டிய உறுப்புக்களை நன்கு தேய்த்தும், தாடி, விரல் இடுக்குகளை நன்கு குடைந்தும் கழுவிட வேண்டும். அவ்வாறே ஒரு உறுப்பை மூன்று தடவைக்கு மேல் கழுவுவது மறுக்கப்பட்ட வழிமுறையாகும். 

வுழூவிற்குப் பின் ஓத வேண்டிய பிரார்த்தனை (துஆ) 
أشْهَدُ أنْ لا إله إِلاَّ اللَّهُ وَحْدَهُ لا شَرِيك لَهُ ، وأشْهَدُ أنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَوَّابِينَ ، واجْعَلْني مِنَ المُتَطَهِّرِينَ ، سُبْحانَكَ اللَّهُمَّ وبِحَمْدِكَ ، أشْهَدُ أنْ لا إلهَ إِلاَّ أنْتَ ، أسْتَغْفِرُكَ وأتُوبُ إِلَيْكَ 

அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு, அல்லாஹும்ம இஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன், ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லா அன்த அஸ்தஃபிருக வஅதூபு இலைஹி. 

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணை, துணை இல்லை என நான் சாட்சி சொல்கிறேன். மேலும் முஹம்மத் r அவனது அடிமையும், தூதரும் ஆவார் என நான் சாட்சி சொல்கிறேன். அல்லாஹ்வே, என்னை பாவமீட்சி கோருவோரில் ஒருவனாக ஆக்கிவிடு, மேலும் என்னை தூய்மையானவர்களில் ஒருவனாகவும் ஆக்கிவிடு. அல்லாஹ்வே, உன்னைப் புகழ்வதுடன் உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறேன். வணக்கத்திற்குரியன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். உன் பக்கமே மீளுகிறேன். 

வுழூவை முறிக்கும் அம்சங்கள் 
1. முன் பின் துவாரங்களிலிருந்து ஏதாவது வெளியேறுதல். 

2. பைத்தியம், போதை, தலைசுற்று, ஆழ்ந்த உறக்கம் போன்றவற்றால் சுயநினைவை இழத்தல். 

3. பாலுணர்வோடு பிறப்புறுப்பையோ, பின்பகுதியையோ தொடுதல். 

4. ஒட்டக இறைச்சி சாப்பிடுதல். 

வுழூவின் உறுப்புக்களில் ஏதோ ஒரு வகையில் அன்றாடம் பல வகையான அசுத்தங்களும், நோய்க்கிருமிகளும் படிவது சர்வ சாதாரனமே. அவை சில சமயம் இலகுவில் கண்ணுக்கு புலப்படாவிட்டாலும், அவற்றை அகற்றுவது மிகவும் சுலபமாக இருப்பதால் அழுக்குபடிந்த குறிப்பிட்ட உறுப்பை மாத்திரமே நாம் சுத்தம் செய்துகொள்கிறோம். அதற்காக உடல் முழுவதையுமோ, அல்லது வுழூவின் உறுப்பான கையுடன் இணைந்த அக்குள், அல்லது வுழூவின் உறுப்பான காலுடன் இணைந்துள்ள இரு தொடைகள் இணையும் பகுதி ஆகியவற்றையோ நாம் சுத்தம் செய்வது கிடையாது. அவ்விடங்களில் படியும் அசுத்தங்கள் வெறும் வியர்வையும், அதனால் ஏற்படும் வாடையுமாகும். அவை எமது உளவியலிலோ, புத்துணர்ச்சியிலோ எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

நாம் மேலே பார்த்த வுழூவை முறிக்கும் அம்சங்கள் எமது உளவியலிலும், புத்துணர்ச்சியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதாலும், தொழுகையின் போது நாம் புத்துணர்ச்சியுடனே இருக்க வேண்டும் எனும் கட்டாயத் தேவை இருப்பதாலும் வுழூவின் மொத்த உறுப்புக்களையும் மேற்குறிப்பிட்ட அம்சங்கள் நிகழும் போது மீள் சுத்தம் செய்ய இஸ்லாம் எம்மை கட்டாயப்படுத்துகிறது. வுழூ இல்லையெனில் தொழுகையும் இல்லை எனும் அளவுக்கு வுழூ செய்வது இன்றியமையாத தேவையாக இருக்கிறது. 

வுழூவினால் ஏற்படும் சுகாதாரப் பயன்கள் 
1. இரு கைகளும் ஒரு நாளில் பல தடவைகள் கழுவப்படுவதால் கையில் தங்கியுள்ள பல நுண்ணுயிர் நோய்க் கிருமிகள் அகற்றப்படுவதுடன், உள்ளங்கை நரம்புகளும் புத்தணர்ச்சி பெறுகின்றன. 

2. அன்றாடம் நாம் பற்களைத் தேய்த்து, வாய் கொப்பளித்து, மூக்கினுள் நீர் செலுத்தி சுத்தம் செய்வதால் வாயிலும், மூக்கிலும் உள்ள நுண்ணுயிர்க் கிருமிகள் அகற்றப்படுகின்றன. முரசும், பற்களும் வலிமை பெற்று, தொண்டை மற்றும் வாயில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து எம்மை அவை பாதுகாக்கின்றன. 

3. தோல் மண்டலங்களில் சுரக்கும் வியர்வை, எண்ணைத் தன்மை போன்றவற்றையும், அவற்றினால் தோலில் படியும் அழுக்குகளையும் இது நீக்கி விடுகிறது. ஒரு நாளில் குறிப்பிட்ட சில நேரத்திற்குள் அவ் அழுக்குகளை சுத்தம் செய்யாவிடின் நோய்க்கிருமிகள் எளிதில் நம் தோலை ஊடுருவி உடலை சென்றடையும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 

4. முகம், கை, கால் முதலியவற்றை தேய்த்துக் கழுவுவதால் இரத்த ஓட்டங்கள் வலுவடைவதோடு, உடம்பில் ஒரு வித புத்துணர்ச்சி பிறக்கவும் வழிசெய்கிறது. 

5. உடம்பில் உள்ள இறந்த செல்கள் வுழூவின் உறுப்புக்களில் மேலெழுகின்றது. அவற்றை அடிக்கடி சுத்தம் செய்யாவிட்டால் திரும்பவும் நம் உடலினுள் சென்று, இரத்தத்துடன் கலந்து மூளையின் சில பகுதிகளில் தங்கி விடும். இதனால் கெமிகல் இம்பேலன்ஸ் எனும் நிலையற்ற தன்மை உண்டாகுவதோடு, OCD எனும் விரக்தி நிலை தோன்றவும் இது காரணமாக அமைகின்றது. 

இன்று உலக சுகாதார மையத்தினால் விழிப்புணர்வுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள உலக கைகழுவும் தினம், உலக வாய் சுகாதார தினம் போன்ற தினங்களில் மாத்திரம் நாம் நமது உடல் சுகாதாரத்தைப் பற்றி சிந்திக்காமல், இஸ்லாம் எமக்கு எப்போதோ போதித்துள்ள இக்குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவும் முறையை நாம் அன்றாடம் செயற்படுத்தி வர வேண்டும். ஐவேளை தொழுகைக்கு மாத்திரம் என்றில்லாமல் நாம் அடிக்கடி வுழூ செய்து, புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அப்போதே நாம் அல்லாஹ்விடம் மிகவும் விருப்பத்திற்குரிய அடியார்களாகவும், சுகாதாரத்தைப் பேணிய சிறந்த தலைமுறையாகவும் திகழலாம். 

அல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக அல்லாஹ் தவ்பா செய்பவர்களை நேசிக்கிறான், மேலும் தூய்மையாக இருப்பவர்களையும் நேசிக்கிறான்”. (அல்குர்ஆன் 02:222) 

ஆக்கம்: ஹிஸ்புல்லாஹ் அன்வாரி, B.com Reading.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget