பிரதான செய்திகள்
தவ்ஹீத் என்பது நற்செயல்களில் மிக உயர்ந்ததாகும். அதே போல ஷிர்க் மற்றும் பெரும் பாவங்கள் ஆகிய கெட்ட செயல்களில் உயர்ந்ததாகும். மேலும் தூய்மையான முறையில் தவ்ஹீதை ஏற்றுக் கொண்டவர் நரகில் நிரந்தரமாக தங்கமாட்டார். அதே போல தவ்ஹீதில் ஷிர்க் வைப்பவரின் நல்ல அமல்கள் இவ்வுலகில் அவர் தவ்பாச் செய்து மீளாத போது மறுமை நாளில் அவருக்கு அது எந்தப்பயனையும் அளிக்காது. அல்லாஹ் கூறுகின்றான். اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏ 


நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் - 4:48) தவ்ஹீதிற்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அவைகள் ஏனைய விடயங்களுக்கு இருக்கின்ற சிறப்புக்களை விட உயர்ந்ததாகும். 


முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் 'உஃபைர்' என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், 'முஆதே! அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்' என்று பதில் கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்' என்று பதில் கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கட்டுமா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அவர்களுக்கு (இந்த நற்செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்து விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். (ஆதாரம் – புஹாரி 2856.) 


உபாதத் இப்னு ஸாமித் (ரலி) அறிவிக்கிறார்கள் – நபியவர்கள் கூறினார்கள் - அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையாளன் யாருமில்லை. முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன்; (இறைத் தூதர்) ஈசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார்; அல்லாஹ் மர்யமை நோக்கிச் சொன்ன ("ஆகுக" எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்); அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்; சொர்க்கம் உண்மை; நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகின்றாரோ அவரைச் சொர்க்கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழியாக அல்லாஹ் நுழைவிப்பான். (ஆதாரம் புஹாரி – 3435, முஸ்லிம் – 46) 


குர்ஆனிலும் சுன்னாவிலும் தவ்ஹீதின் சிறப்புக்கள் பற்றி அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம். 


01. யார் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துகின்றாரோ அவருக்கு சுவர்க்கம் கிடைப்பதாக நன்மாராயம் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகின்றான் – وَبَشِّرِ الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ؕ ڪُلَّمَا رُزِقُوْا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِّزْقًا ‌ۙ قَالُوْا هٰذَا الَّذِىْ رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوْا بِهٖ مُتَشَابِهًا ‌ؕ وَلَهُمْ فِيْهَآ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ ‌ۙ وَّهُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ 


(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக; சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு; அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்தில்) கொடுக்கப்பட்டிருந்தன; இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு; மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள். (அல்குர்ஆன் 2:25) 2. பாதுகாப்பையும் நேர்வழியையும் உண்மைப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் – 


اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ 

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள். (அல்குர்ஆன் 6:82) 


3. நேரான வழியில் செல்வதற்கான வழிகாட்டல் கிடைக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான். 


وَّلِيَـعْلَمَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّكَ فَيُؤْمِنُوْا بِهٖ فَـتُخْبِتَ لَهٗ قُلُوْبُهُمْ‌ ؕ وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ 

(ஆனால்) எவருக்கு கல்வி ஞானம் அளிக்கப்பட்டிருகின்றதோ அவர்கள், நிச்சயமாக இ(வ் வேதமான)து உம்முடைய இறைவனிடமிருந்துள்ள உண்மை என்று அறிந்து அதன் மீது ஈமான் கொள்வதற்காகவும் (அவ்வாறு செய்தான், அதன் பயனாக) அவர்களுடைய இருதயங்கள் அவன் முன் முற்றிலும் வழிப்பட்டுப் பணிகின்றன; மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 22:54) 4. ஷிர்க் வைத்தவர்கள் தவிர்ந்த அல்லாஹ் நாடியவர்களுக்கு பாவமன்னிக்க கிடைக்க வழிவகுக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான் – 


اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏ 


நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். (அல்குர்ஆன் - 4:48) 5. உலகவாழ்வையும், மறுமை வாழ்வையும் உறுதிப்படுத்துகின்றது. அல்லாஹ் கூறுகிறான். 


يُثَبِّتُ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ ۚ وَيُضِلُّ اللّٰهُ الظّٰلِمِيْنَ‌ ۙ وَيَفْعَلُ اللّٰهُ مَا يَشَآءُ 

எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான். (அல்குர்ஆன் - 14:27) 6. நஷ்டங்களில் இருந்து விடுவிக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்- 


وَالْعَصْرِۙ‏ 

காலத்தின் மீது சத்தியமாக. 

اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏ 

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 

اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ   ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ‏ 

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்குர்ஆன் - 103:1-3) 7. பாவங்கள் மன்னிக்கப்பட்டு நல்லமல்களுக்கு சிறந்த கூலிகளை வழங்குகின்றது. அல்லாஹ் கூறுகின்றான் – 


وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَـنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَـنَجْزِيَنَّهُمْ اَحْسَنَ الَّذِىْ كَانُوْا يَعْمَلُوْنَ‏ 

. ஆகவே, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம். (அல்குர்ஆன் 29:7) 8. அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் அவர்களுக்கு அதிகாரங்களை வழங்கி அவர்களுக்கு மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்து, அவர்களது பயத்தை நீக்கி பாதுகாப்பை வழங்குகிறான். وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌ ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏ 

உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அல்குர்ஆன் - 24:55) 9. ஈமான் கொண்டவர்களுக்கு பாதுகாவலனாக அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ் கூறுகின்றான். 


اَللّٰهُ وَلِىُّ الَّذِيْنَ اٰمَنُوْا يُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ‌ؕ  وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَوْلِيٰٓــــٴُـهُمُ الطَّاغُوْتُۙ يُخْرِجُوْنَهُمْ مِّنَ النُّوْرِ اِلَى الظُّلُمٰتِ‌ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏ 

. அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்); அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்; ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன; அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர். (அல்குர்ஆன் 2:257) 


10. வானம், பூமியிலிருந்து பரக்கத் கிடைக்கின்றது. 


وَلَوْ اَنَّ اَهْلَ الْقُرٰٓى اٰمَنُوْا وَاتَّقَوْا لَـفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكٰتٍ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ وَلٰـكِنْ كَذَّبُوْا فَاَخَذْنٰهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏ 

. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம். (அல்குர்ஆன் 7:96) 
தவ்ஹீதுல் அஸ்மா வ ஸிபாத் என்பது அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் என்பன பூரணத்துவமாக உறுதிப்படுத்துவதை குறிக்கின்றது. அல்லாஹ் தன்னைப் பற்றி அல்குர்ஆனில் எவ்வாறு வர்ணித்துள்ளானோ அதே போன்றும், அவ்வாறே அல்லாஹ்வைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு இருப்பதாக கூறிய பெயர்கள், பண்புகளையும், அல்லாஹ்வுக்கு இல்லை என மறுத்துக் கூறியவைகளையும் எந்தவிதமான உதாரணங்கள் கூறாமலும், எப்படி என விபரிக்காமலும், அவற்றை ஒட்டுமொத்தமாக மறுக்காமலும், அல்லது அதனுடைய பொருளை அல்லது சொல்லை திரிவுபடுத்தாமலும் உள்ளதை உள்ளவாறு ஈமான் கொள்வதை இது குறிக்கின்றது. அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை அறிவு ரீதீயாக எப்படி உறுதிப்படுத்துவது? 

அல்லாஹ்வின் பண்புகள், பெயர்களை ஒருவர் நல்ல முறையில் சிந்திக்கின்ற போது பின்வரும் முறைகளினூடாக மாத்திரமே அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். 

01. அல்லாஹ்வை கண்களால் பார்த்து அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்தல் 

02. அல்லது அல்லாஹ்வை போல உள்ள ஒன்றை அல்லது ஒருவரை பார்த்து அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்தல் 

03. அல்லது அல்லாஹ் அவனைப் பற்றி கூறியுள்ளதாக வந்துள்ள செய்திகள் மூலம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்தல் இம்மூன்று முறைகள் மூலமாக ஒருவர் அல்லாஹ்வின் பண்புகள், பெயர்களை உறுதிப்படுத்தலாம். ஆனால் இவ்வுலகில் அல்லாஹ்வை காண முடியாது என்பதால் முதலாவது முறைப்படி அது சாத்தியமற்றதாகும். இரண்டாவது முறைப்படி அல்லாஹ் لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ  அதாவது அவனைப் போல் எதுவுமில்லை என மறுத்துக் கூறியுள்ளதால் அவனைப் போல ஒன்றை யாரும் பார்க்க முடியாது எனவே இரண்டாவது முறையிலும் சாத்தியமில்லை. மூன்றாவது முறையான அல்லாஹ் அவனைப் பற்றி கூறியுள்ளதாக வந்துள்ள செய்திகள் மூலம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் உறுதிப்படுத்தல். அதாவது மேலே நாம் அஸ்மா வ ஸிபாத் என்பதை ஈமான் கொள்ளும் முறையை கூறியுள்ளோம். எனவே மூன்றாவது முறைதான் அல்லாஹ்வின் பண்புகளை ஈமான் கொள்வதற்கான மிகச் சரியான வழிமுறையாகும். அல்குர்ஆனிலும், நபியவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்ட ஸஹீஹான செய்திகளிலும் எவ்வாறு அல்லாஹ்வின் பண்புகள், பெயர்கள் பற்றி வந்துள்ளதோ அவற்றில் எல்லை கடக்காமல் உள்ளதை உள்ளவாறே ஈமான் கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான். لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ۚ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ 

அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (சூரதுல் ஷூரா – 11) மேலுள்ள வசனத்தின் மூலம் அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஆத்தினர் பின்வரும் வகையில் ஈமான் கொண்டுள்ளனர். لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ  என்பது அவனுக்கு இல்லாத பண்புகளை (மொத்தமாக) பொதுவாக மறுத்துக் கூறப்பட்டுள்ளதோடு, அதே போல وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ என்பது தெள்ளத் தெளிவாக அவனுக்கு பார்வை, கேள்வி ஆகிய பண்புகள் இருக்கின்றன என்பதை விரிவாகவும், விளக்கமாகவும் உறுதிப்படுத்துகின்றது. அப்படியான விடயங்களில் யாரையும் உதாரணமாக கூறக் கூடாது என நம்புகின்றனர். எனவே அல்லாஹ் தனக்கு இல்லாத பண்புகளை தனித்ததியாக ஒவ்வொன்றாக கூறி மறுக்காமல் பொதுவாகவே அவற்றை لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ என்ற வசனத்தின் மூலம் மறுப்பதை அறிந்து கொள்ளலாம். அத்தோடு وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ என்பதன் மூலம் அவனுக்குள்ள பண்புகளை தெளிவாகவும், விபரமாகவும் அல்லாஹ் உறுதிப்படுத்திக் கூறியுள்ளான். குறிப்பாக அல்லாஹ்விற்கு பார்வை, கேள்வி என்ற பண்புகள் உள்ளன. அதே போல அவனது படைப்பினங்களுக்கும் அப்பண்புகள் உள்ளன. ஆகவே அல்லாஹ்வின் பண்புகளும், அவனது படைப்புகளின் பண்பும் ஒன்று என ஒருவர் கூறுவது ஷிர்க் (இணைவைப்பு) ஆகும். இந்த விடயங்களில் அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தினர் அல்லாஹ் அவனது பண்புகளில் சிலதை மனிதர்களுக்கு வழங்கியுள்ளான். ஆனால் படைப்பினங்களது பண்புகளும் அல்லாஹ்வின் பண்புகளும் வெவ்வேறானவையாகும். அல்லாஹ்வும் பார்க்கிறான், மனிதர்களும் பார்க்கிறார்கள். ஆனால் அல்லாஹ் பார்க்கிறான் என்பது அவனது அந்தஸ்திக்கும், மகத்துவத்திற்கும் ஏற்றவாறு பார்க்கிறான். அல்லாஹ் பார்க்கிறான் என்ற அவனது பண்பு அறியப்பட்டதாகும். எப்படி பார்க்கிறான் என்பது தெரியாத விடயமாகும். அது பற்றி கேள்விகள் கேட்பது பித்அத் ஆகும். அதனை அல்லாஹ் கூறிய பிரகாரம் ஈமான் கொள்வது வாஜிப் ஆகும். 

(இது பற்றிய பூரண விபரங்களை ஒரு தனித் தெடராகவே எழுதவுள்ளேன். அவற்றில் இவைகளைப் பற்றி தெளிவாக நோக்குவோம்.) வளரும் இன்ஷா அல்லாஹ்… 


இது மார்க்கம் அனுமதித்துள்ள வழிகளில் அல்லாஹ்வை வணங்கும் செயற்பாடுகளில் (வணக்க வழிபாடுகளில்) அவனை ஒருமைப்படுத்துவதை குறிக்கும். உதாரணமாக துஆ கேட்டல், நேர்ச்சை செய்தல், அறுத்துப் பலியிடுதல், அல்லாஹ்விடம் மீளுதல், அல்லாஹ்வைப் பயப்படுதல், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல், நேசம் வைத்தல் போன்ற அனைத்து விடயங்களில் அல்லாஹ்விற்கு வேறு யாரையும் இணையாக கூட்டுச் சேர்க்காமல் அவனை ஒருமைப்படுத்துவதை குறிக்கும். 


தவ்ஹீதுல் உலூஹிய்யாவிற்கு கூறப்படும் பெயர்கள்.

01. தவ்ஹீதுல் உலூஹிய்யா 

02. தவ்ஹீதுல் இபாதா 

03. தவ்ஹீதுல் இராதா 

04. தவ்ஹீதுல் கஸ்த் 

05. தவ்ஹீதுல் தலப் 

06. தவ்ஹீதுல் பிஅலி 

07. தவ்ஹீதுல் அமலி அனைத்து நபிமார்களும் இதனைப் போதிக்கவே அல்லாஹ்வால் அனுப்பப்பட்டார்கள். அல்லாஹ் கூறுகிறான்.

 

وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ۚ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ‌ ؕ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ

 

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (அந்நஹ்ல் – 36)

 

               அதே போல அனைத்து தூதர்களும் தமது சமூகத்தாரிடம் இத் தவ்ஹீதுல் உலூஹிய்யாவையே முதன் முதலாக போதிக்க ஆரம்பித்தார்கள். இது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

 

ﭐﱡﭐ لَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ   நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; (அல்அஃராப் – 59) அதே போல இப்றாஹிம் (அலை) அவர்களும் தமது சமூகத்தாருக்கு தவ்ஹீதுல் உலூஹிய்யாவையே போதித்ததோடு தமது மக்களுக்கும் தொளிவாக விளக்கினார்கள். அல்லாஹ் கூறுகிறான். 

ﭐﱡﭐ وَاِبْرٰهِيْمَ اِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْـتُمْ تَعْلَمُوْنَ‏ இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்” என்று கூறிய வேளையை (நபியே! நினைவூட்டுவீராக). (அன்கபூத் – 16) அதே போல ஏனைய நபிமார்களும், இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் தமது தஃவா பணியில் தவ்ஹீதுல் உலூஹிய்யாவே உள்ளடக்கப்பட்டிருந்தது. அல்லாஹ் கூறுகிறான்.

 

ﱡﭐ قُلْ اِنِّىْۤ اُمِرْتُ اَنْ اَعْبُدَ اللّٰهَ مُخْلِصًا لَّهُ الدِّيْنَۙ‏  (நபியே! இன்னும்) “மார்க்கத்திற்கு அந்தரங்க சுத்தியுடன் அல்லாஹ்வை வணங்குமாறு நிச்சயமாக நான் ஏவப்பட்டிருக்கின்றேன்” என்றும் கூறுவீராக. (அஸ்ஸூமர் – 11) ஆரம்பமாக ஒருவர் இஸ்லாத்தினுள் நுழைய வேண்டுமாக இருந்தால் அவர் ஷஹாதா கலிமாவை மொழிய வேண்டும். அந்த கலிமாவின் உள்ள அம்சமான லாஇலாஹ என்ற பதத்தோடு இது பின்னிப் பிணைந்த ஒன்றாகும். அதாவது உண்மையாகவே வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்பதையை லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவின் பொருளாகும். அதனை உலூஹியத்தே கொண்டுள்ளது. எனவே ஒருவர் செய்யும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே நிறைவேற்ற வேண்டும் என்பதை கூறும் உலூஹிய்யத், அந்த வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வோடு இன்னொருவரை கூட்டுச் சேர்க்கக் கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. அப்படியான செயற்பாடுகள் ஷிர்க் எனும் இணைவைப்பின் பால் எம்மை இட்டுச் செல்லும். அப்படியான செயற்பாடுகள் சில சந்தர்ப்பங்களில் எம்மை மார்க்கத்தை விட்டும் வெளியேற்ற வைக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 
தவ்ஹீத் என்பது இஸ்லாத்தின் மூலமாகும். அது தனி பிரிவோ அல்லது அமைப்போ கிடையாது. அது நம்பிக்கையோடு தொடர்பான அம்சமாகும். அது முழுக்க முழுக்க அல்லாஹ்வை ஒருவர் அறிந்து கொள்வதற்கான வழியே தவிர அப்பதத்திற்கு வேறெந்த நிலைகளும் கிடையாது. இந்த விளக்கமின்மையால் தவ்ஹீத் என்ற சொல்லே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தவ்ஹீத் என்ற பதம் அல்லாஹ்வை ஈமான் கொள்ளும் ஒருவருக்கு இலகுவாக அதனை புரியவைக்கும் ஓர் முறை என்பதை அறியவில்லை என நினைக்கிறேன். அதே போல முழு உலகிலும் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தவ்ஹீத் என்பது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளும் ஓர் அம்சம் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். மொழி ரீதியில் தவ்ஹீத் என்பது – 

“வஹ்ஹத என்ற என்ற சொல்லில் இருந்தே தவ்ஹீத் என்பது வந்துள்ளது. அதாவது ஒன்றை “ஒருமைப்படுத்துவதை” குறிக்கும். இஸ்லாமிய வழக்கில் 

“அல்லாஹ்வே படைப்பாளன், பராமரிப்பாளன், வணக்க வழிபாடுகளில் அவனை ஒருமைப்படுத்துவதை குறிக்கின்றது. அவனுக்கு மாத்திரமே வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். அவனுக்கு இணையாக்குவதை விட்டு விட வேண்டும். அதே போன்ற உயர்ந்த அவனது பெயர்கள் மற்றும் பண்புகளை உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே தவ்ஹீத் எனப்படுவதாகும். தவ்ஹீத் என்பது மறுப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகிய இரு அம்சங்களையும் கொண்டுள்ளது. அது தவ்ஹீதின் (ருக்ன்) மூல அம்சமாக அமைந்துள்ளது. அதில் உள்ள ( لا إله ) என்பது வணங்கப்படுகின்ற அனைத்தையும் மறுப்பதை குறிக்கின்றது. ( إلا الله ) என்பது அவன் மாத்திரமே வணங்க தகுதியானவன் என்பதை உறுதிப்படுத்துகின்றது. “அதாவது உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.” என்பதை தவ்ஹீத் பொதிந்துள்ளது. அதே போல தவ்ஹீத் என்பது ருபூபிய்யத், உலூஹிய்யத், அஸ்மா வ ஸிபாத் ஆகிய அம்சங்களில் அல்லாஹ்வை அவனுடைய கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் ஏற்றாற் போல ஒருமைப்படுத்துவதை குறிக்கின்றது. அதே போல அவற்றில் இன்னொருவரை உதாரணமாக கூறக்கூடாது. குறிப்பாக அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை அல்லாஹ்வும் அவனைப்பற்றி எவ்வாறு கூறியுள்ளானோ அவ்வாறும், நபியவர்கள் அல்லாஹ்விற்கு இருப்பதாக கூறிய, அவனுக்கு இல்லை என மறுத்துக் கூறிய விடயங்களையும் அவ்வாறே நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான் “ அவனைப் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவன், பார்ப்பவன் (அஷ்ஷூறா) தவ்ஹீதின் வகைகள் 

இது மூன்று உட்கூறுகளை கொண்டுள்ளது. அவையாவன 

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா 

2. தவ்ஹீதுல் உலூஹிய்யா 

3. தவ்ஹீதுல் அஸ்மா வ ஸிபாத் 

1. தவ்ஹீதுர் ருபூபிய்யா - 

இது செயற்பாட்டு ரீதியாக அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதை குறிக்கின்றது. அந்த செயற்பாடுகளில் அவனுக்கு இணையாக எதனையும் ஆக்காமல் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை குறிக்கின்றது. இது அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தான் என்பதை ஈமான் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கின்றது. அவனல்லாத இன்னொரு படைப்பாளன் இருப்பதாக அவனுக்கு இணையாக்க கூடாது என்பதையும் குறிக்கின்றது. எனவே உலகம், அதில் உள்ளவைகள், அதற்கு வெளியில் உள்ள அண்டங்கள் அனைத்தையும் அல்லாஹ் மாத்திரமே படைத்தான் என நம்பிக்கை கொள்வதை ருபூபிய்யத் குறிக்கின்றது. எனவே ருபூபிய்யத் குறித்து நிற்கும் சில அம்சங்களையும் அதற்கான அல்குர்ஆன் ஆதாரங்களையும் நோக்குவோம். அல்லாஹ்வே அனைத்தையும் படைத்த படைப்பாளன் ஆவான். அல்லாஹ் கூறுகிறான் اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ 

“அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தான். அவனே அனைத்திற்கும் பொருப்பாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 39 - 62) அல்லாஹ் மாத்திரமே அனைத்திற்கும் உணவளிக்கிறான் என அவனை ஒருமைப்படுத்தல். அல்லாஹ் கூறுகின்றான் “ﭐ وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன. (அல்குர்ஆன் 11 – 06 ) அவனே ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளன். உலகின் சகல விடயங்களிற்கும் அவனே பொறுப்பாக இருக்கின்றான். அவனே அனைத்தையும் கொடுப்பவன். அதே போல அனைத்தையும் தடுப்பவன். அவனே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறான். அவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கச் செய்யவும் சக்தி பெற்றவன் என நம்பிக்கை கொள்வதோடு அதில் அவனை ஒருமைப்படுத்தவும் வேண்டும். அல்லாஹ் கூறுகிறான். قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ. وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ . تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ‌. وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ (நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். 

நீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீதான் பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கின்றாய்." (அல்குர்ஆன் - 03 – 26,27 ) அதே போல மேலுள்ள விடயங்களில் அவனுக்கு இணையாக வேறொன்றை ஆக்குவதை அல்லாஹ் மறுப்பதையும் இதனைப்பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான். هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖ‌ؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ 

(ஆகவே, நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக் கூறுங்கள்:) "இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவைகளாகும். அவனை யன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவைகள் எதனை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 31 – 11) يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ 

மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதனைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென அழைக்கும்) அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே! (அல்குர்ஆன் 22-73) இப்படி புகழுக்குரியவன் அல்லாஹ், அவனே அனைத்திலும் சக்தியுள்ளவன் என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும். இதனையே ருபூபிய்யத் குறிப்பிடுகின்றது. ருபூபிய்யத்தை உலகில் எல்லோரும் ஏற்றுள்ளனர். குறிப்பாக ஜாஹிலிய்யா காலத்தில் உள்ள இணைவைப்பாளர்களும் கூட அல்லாஹ்தான் அனைத்திற்கும் பொறுப்பானவன் என்பதை ஏற்றிருந்தனர். அனால் பிர்அவ்ன் தன்னை கடவுளாக அறிவித்து ருபூபிய்யத்தை மறுத்தான் என அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். அதே போல நாத்திகர்களும் அல்லாஹ்வை மறுக்கின்றனர். மற்றைய ஒட்டுமொத்த மனித வர்க்கமும் இயல்பாகவே அல்லாஹ்வை ஏற்றிருப்பதாக அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகின்றான். 

எனவே ருபூபிய்யத் விடயத்தில் நாம் சரியான நம்பிக்கையில் இருக்கின்ற போது தான் அந்த நம்பிக்கை பிரகாரம் வணக்க வழிபாடுகளும் அமையும். 

வளரும் இன்ஷா அல்லாஹ் 

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget