ரவ்ழதுல் இல்ம் - 2023 (பாடம் : பிக்ஹ், நாள் : 07)

 



தொழுகை நேரங்கள், தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்கள்

தொழுகை நேரங்கள்

அல்லாஹ் கூறுகிறான் : 'நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப்பட்டுள்ளது'. (அல்குர்ஆன் - 04 : 103)

 

நபி ள அவர்கள் கூறினார்கள் : 'லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் நடுவானிலிருந்து சற்று சாய்ந்ததில் இருந்து ஆரம்பித்து ஒரு மனிதனின் நிழல் அவனுடைய நீளம் வரும் வரையாகும், இன்னும் அஸர் தொழுகையின் நேரம் அதிலிருந்து சூரியன் மறைய நெருங்கும் நேரம் வரையாகும். மஃரிப் தொழுகையின் நேரம் அதிலிருந்து செவ்வானம் மறையும் நேரம் வரையாகும், இஷா தொழுகையின் நேரம் அதிலிருந்து நள்ளிரவு வரையாகும், சுபஹ் தொழுகையின் நேரம் பஜ்ர் உதயமாகியதிலிருந்து சூரியன் உதிக்கும் நேரம் வரையாகும்'. (ஆதாரம் - முஸ்லிம் : 612)

 

தொழுகையின் நேரம்

பஜ்ர் நேரம் (அடிவானில் ஆரம்பமாக தெரியும் ஒளி) ஆரம்பமானதில் இருந்து சூரியன் உதிக்கும் வரை.

லுஹர் சூரியன் நடுவானத்திலிருந்து சாய்ந்தது முதல் அஸர் நேரம் வரை (ஒரு பொருளின் நிழல் அதனைப் போன்ற நீளத்தைக் கொண்டிருத்தல்)

அஸர், அஸர் நேரம் தொடக்கம் சூரியன் மறையும் வரை.

மஃரிப் சூரியன் மறைந்ததில் இருந்து செவ்வானம் மறையும் வரை.

இஷா, மஃரிப் நேரம் முடிந்ததிலிருந்து (செவ்வானம் மறைந்ததிலிருந்து) நடு இரவு வரையாகும். (ஒரு இரவு என்பது சூரியன் மறைந்ததிலிருந்து சுபஹ் உடைய நேரம் உதிக்கும் முன்னரான நேரமாகும்.)

 

            அதிகளவு வெயில் காலங்களில் லுஹர் தொழுகையை கொஞ்சம் பிற்படுத்தி தொழுவது சிறந்தது.

 

இறைத்தூதர் ள அவர்கள் கூறினார்கள் : 'வெப்பம் கடுமையாகும் போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்'. (ஆதாரம் - புஹாரி : 536, முஸ்லிம் : 615)

 

சுன்னத்தான தொழுகைகள் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்கள்

உக்பத் இப்னு ஆமிர் ன அவர்கள் கூறுகிறார்கள் :  'நபியவர்கள் மூன்று நேரங்களில் தொழுவதை, மரணித்தவர்களை அடக்கம் செய்வதை விட்டும் எம்மை தடுத்தார்கள் : (அவை) சூரியன் உதித்து சற்று உயரும் வரை, சூரியன் நடுவானிலிருந்து சற்று சாயும் வரை, சூரியன் மறையும் நேரம் போன்றனவாகும்'. (ஆதாரம் - முஸ்லிம் : 831)

 

விரிவாக கூறின் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்கள் ஐந்தாகும்.

 

சுபஹ் தொழுகைக்கு பின்னர் சூரியன் உதிக்கும் முன்.

சூரியன் உதித்து சற்று உயரும் வரை.

சூரியன் நடுவானிலிருந்து சற்று சாயும் வரை.

அஸர் தொழுகையில் இருந்து சூரியன் மறையும் வரை.

சூரியன் மறைய ஆரம்பித்ததில் இருந்து மறைந்து முடியும் வரை.

 

குறிப்பு :-

            நிகழ்வுகளோடு தொடர்புபட்ட தவாப் உடைய சுன்னத்தான தொழுகை,    ஜனாஸா தொழுகை, கிரகண தொழுகை, தஹியதுல் மஸ்ஜித், வுழுவுடைய தொழுகை போன்ற தொழுகைகளையும் தடுக்கப்பட்ட இந்நேரங்களில் தொழ முடியும்.

 

            அதேபோன்று சுபஹ் தொழுகைக்கு முன் அதன் சுன்னத்தை தொழவில்லையென்றால் அதனை சுபஹ்  தொழுகையின் பின் தொழமுடியும். இன்னும் லுஹர், அஸர் தொழுகைகளை சேர்த்து தொழும் போது லுஹர் தொழுகையின் சுன்னத்தை அஸர் தொழுகைக்கு பின் தொழமுடியும். இவ்வாறே நபியவர்களும் செய்து காட்டியுள்ளார்கள்.

 

தொழுகையின் சட்டதிட்டங்கள்

தொழுகையை நிறைவேற்றுபவரின் நிபந்தனைகள்

1-முஸ்லிமாக இருத்தல்

2-புத்தி உள்ளவனாக இருத்தல் 

3-பிரித்தறிய கூடிய (தம்யீஸ்;) வயதை அடைந்திருத்தல்.

4-தொழுகையின் நேரத்தை அடைதல்.

5-அவ்ரத்தை மறைத்தல் : ஆண்கள் தொப்புள் தொடக்கம் முழங்கால் வரை, பெண்கள் மாத்திரம் இருக்கும் போது முகத்தையும் கையையும் தவிர உடம்பை பூரணமாக மறைக்க வேண்டும்

6-சுத்தமாயிருத்தல்.

-சிறு தொடக்கு (அதாவது வுழுவை முறிக்கக் கூடியவைகளில் இருந்து சுத்தமாக இருத்தல்) உதாரணமாக மலசலம் கழித்தல்.

-பெருந்தொடக்கு (அதாவது குளிப்பை கடமையாக்கக் கூடியவைகளில் இருந்து சுத்தமாக இருத்தல்)

7.         அழுக்குகளை (நஜீஸ்களை) நீக்குதல் : உடம்பு, உடை, தொழும் இடம் ஆகிய அனைத்தும் சுத்தமாக இருப்பது கட்டாயமாகும்.

8.         கிப்லாவை முன்னோக்குதல்.

9.         நிய்யத் (தொழுகையை நிறைவேற்றுவதாக மனதில் எண்ணுதல், வாயினால் மொழிவது கூடாது)

 

தொழுகையின் ருக்குன்கள் (அடிப்படைக் கடமைகள்)

1-தொழுகைக்காக நிற்றல்.

2-ஆரம்பத் தக்பீர் சொல்லுதல்.

3-சூரத்துல் ஃபாதிஹாவை ஓதுதல்.

4-ருகூஃ செய்தல்.

5-ருகூஃவிலிருந்து முன்பிருந்தது போல் நிலைக்கு வருதல்.

6-ஸுஜூத். ஒவ்வொரு ரக்அத்திலும் ஏழு உறுப்புகளைக் கொண்டு இரு முறை தரையில் சிரம் பணிய வேண்டும். (அவையாவன: நெற்றியுடன் மூக்கு, இரு கால் விரல் நுனிகள், இரு முழங்கால்கள், இரு உள்ளங்கைகள்)

7-இரண்டு ஸுஜூதுக்கிடையில் அமர்வது.

8-இறுதியாக தொழுகையை நிறைவு செய்ய அத்தஹியாத்தில் அமர்தல்.

9-அத்தஹிய்யாத் ஓதுதல்.

10-ஸலாம் கூறல்.

11-மேற்கூறப்பட்ட அனைத்து செயல்களிலும் அமைதியை (அவசரப்படாமல்) பேணல்.

12-மேற்கூறப்பட்டவைகளை வரிசைப்படி செய்தல்.

 

            இதில் எதாவது ஒன்று வேண்டுமென்று விடுபட்டால் தொழுகை பாழாகிவிடும், மறதியாக விடுபட்டால் அந்த ரக்அத்தை மீண்டும் தொழுது மறதிக்காக  அத்தஹியாத்திற்கு பிறகு இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அதிலே            ஸுஜூதில் ஓதும் துஆவை ஓத வேண்டும்

 

தொழுகையின் வாஜிபுகள் (முக்கிய கடமைகள்)

1.         ஆரம்பத் தக்பீரைத் தவிர ஏனைய தக்பீர்கள்.

2.         இமாமும், தனியாக தொழுபவர்களும் ருகூவிலிருந்து எழும் போது                           سمع الله لمن حمدهஎன்று கூறுதல்.

3.         ஜமாஅத்துடன் தொழுபவர்கள் ருகூவிலிருந்து எழும் போது رَبّنَا وَلَكَ الحَمْدُ  என்று கூறுதல்.

4.         ருகூவின் போது ِسُبْحَانَ رَبِّيَ الْعَظِيمஎன்று கூறுதல்.

5.         ஸுஜூதில் سُبْحَانَ رَبِّيَ الْأعلىஎன்று கூறுதல்.

6.         இரண்டு ஸுஜூதுக்குமிடையில் அமர்வில் رَب اغْفِرْلِيஎன்று கூறுதல்.

7. மூன்று ரக்அத்கள் அல்லது நான்கு ரக்அத்துகள் தொழும் போது முதலாவது அத்தஹிய்யாத்துக்காக அமர்தல்.

8. அதில் அத்தஹிய்யாத்தை ஓதுதல்.

 

            இவைகளில் ஏதாவது ஒன்று வேண்டுமென்று விட்டால் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மறதியாக விடுபட்டால் அந்த செயலை மீண்டும் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. மறதிக்கு பரிகாரமாக ஸஜ்தா ஸஹ்வு செய்யவேண்டும். அதிலே வழமையாக ஸூஜூதில் ஓதும் துஆவை ஓதவேண்டும்.

 

தொழுகையின் சுன்னத்துகள்

1-வலது கையை இடது கையின் மீது நெஞ்சில் வைத்தல்.

2-தொழுகையின் ஆரம்ப துஆ (வஜ்ஜஹத்து) ஓதுதல்.

3-அல்லாஹூ அக்பர் என்று சொல்லும் போது (ஆரம்ப தக்பீர், ருகூஃ, நடுநிலைக்கு வருதல், முதல் அத்தஹியாத்தில் இருந்து எழும்புதல்) போன்ற சந்தர்ப்பங்களில் இரு கைகளையும் உயர்த்துதல்.

4-பாதிஹா சூராவிற்கு பின் ஏதாவது சூராவை ஓதுதல்.

5-அத்தஹியாத்து இருப்பில் பிரார்த்தனை செய்தல்.

6-அத்தஹியாத்து இருப்பில் ஆட்காட்டி விரலை நீட்டுதல்.

7-மஹ்ரிப், இஷா, சுபஹ் தொழுகைகளில் இமாம் சத்தமாக ஓதுதல்.

 

            'இதில் எதையேனும் விரும்பியோ அல்லது மறதியால் விடுபட்டால் தொழுகை பாழாகிவிடாது. எனினும் தொழுகையின் கட்டமைப்பை சீர்குலைத்துவிடும்.' இவைகளை உள்ளடக்கியவாறுதான்  நபியவர்கள் தொழுதுகாட்டினார்கள். 'என்னை நீங்கள் எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்' (ஆதாரம் - புஹாரி : 631)

 

தொழும் முறை

தொழுகை முறை

1-எழுந்து நிற்றல்

2-தனது இரு கைகளையும் தனது தோட்புயம் அல்லது காதின் கீழ்ப் பகுதி வரை உயர்த்தி الله أكبر என்று (தக்பீரதுல் இஹ்ராமை) கூறி தக்பீரை கட்டுதல்.

 

            தனது வலது கையை இடது கையின் மணிக்கட்டின் மீது வைத்து கட்டுதல்.

 

பின்னர் தொழுகையின் ஆரம்ப துஆவை ஓதுவார்.

اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَاي كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْني خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَد.

பொருள் : இறைவா! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போன்று எனக்கும் எனது தவறுகளுக்குமிடையே தூரத்தை ஏற்படுத்துவாயாக, இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மையாவது போன்று என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப் படுத்துவாயாக, இறைவா! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக.

وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ.

பொருள் : (எல்லா அசத்தியமான மதங்களை விட்டும் என்னை நீக்கிக் கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தின் பால்) சாய்ந்தவனாக, வானங்கள் மற்றும் பூமியை படைத்தவனாகியவனுக்கே என் முகத்தை நான் திருப்பி விட்டேன்; (ஆனாலும்) நான் இணைவைத்துக் கொண்டிருப்போரில் உள்ளவனல்ல. நிச்சயமாக என்னுடைய தொழுகை, என்னுடைய அறுப்பு, என்னுடைய வாழ்வு, என்னுடைய மரணம் ஆகியவை அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்விற்கே உரியதாகும்; அவனுக்கு இணை (ஏதும், எவரும்) இல்லை அதைக் கொண்டே  நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; நானோ (முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்களில் உள்ளவன்.

 

 

 

3. அஊது, பிஸ்மி கூறி சூரத்துல் பாதிஹா ஓதுதல்.

أَعُوذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ  بسم الله الرحمن الرحيم

என்று கூறுவார். ஏனைய ரக்அத்களில் சூரத்துல் பாதிஹாவை பிஸ்மி சொல்லி ஆரம்பிப்பார்.

 

            சூரத்துல் பாத்திஹா ஓதி முடிந்த பின்னர் இமாமுடன் சேர்ந்து மஃமூன்களும் ஆமீன் கூற வேண்டும். எந்த தொழுகையாக இருந்தாலும் ஜமாஅத்தோடு சேரும் போது இமாமை  ருகூஃவிலோ அல்லது இமாம் ருகூஃ செய்ய நெருங்கும் போது தொழுகையில் சேர்ந்து கொண்டால் பாதிஹா சூரா ஓத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதன்பின் ஏதாவது விரும்பிய சூராவை அல்லது சில வசனங்களை  ஓதுவார்.

       

4. தனது இருகைகளையும் தோட்புயத்தளவிற்கு அல்லது காதளவிற்கு உயர்த்தி தக்பீர் சொல்லியவராக ருகூஃ செய்வார்.

            (ருகூஃவில்) தனது விரல்களை விரித்தவண்ணம் தனது இரு கைகளையும் முட்டுக்காலில் வைத்து, தலையும் முதுகும் சமமாக இருக்குமாறு அமைத்துக் கொள்வார். அதில் سبحان رب العظيم என்று கூறுவார்.

 

பொருள் : மகத்தான என்னுடைய இறைவனைத் துதிக்கிறேன். அதனை மூன்று தடவை அல்லது அதற்கதிகமாகச் சொல்வது சிறந்ததாகும்.

 

5. இருகைகளையும் தோட்புயம் அல்லது காதளவிற்கு உயர்த்தி நடுநிலைக்கு வருவார்.

            அவர் இமாமாக அல்லது தனித்துத் தொழுபவராக இருந்தால் سمع الله لمن حمده  என்று கூறுவார்.

 

பொருள் : தன்னைப் புகழ்வதை அல்லாஹ் கேட்டுக் கொண்டான். நடுநிலையில் அனைவரும் பின்வரும் துஆவைக் கூறுவர்

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ حَمْداً كَثِيْراً طَيِّباً مُبَارَكاً فِيْهِ مِلْءَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ومِلْءَ مَا شِئْتَ مِنْ بَعْدُ

பொருள் : இறைவா! தூய்மையான அருள் நிறைந்த புகழ் அனைத்தும் உனக்கே உரியது. வானங்கள் பூமிகள் நிரம்ப, இதற்குப் பிறகு நீ விரும்பும் அத்தனை பொருள்களும் நிரம்ப (புகழ் அனைத்தும் உனக்கே).

 

6. தனது இரு முழங்கால்களையும் முதலில் வைத்து தக்பீர் சொல்லியவராக ஸஜ்தாச் செய்வார். அவ்வாறு முடியாவிட்டால் முதலில் தனது இரு கைகளையும் பின்னர் தனது இரு முழங்கால்களையும் வைப்பார், தனது இரு கால்விரல்களையும் வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாகவும், தனது இரு கைவிரல்களைச் சேர்த்து கிப்லாவை முன்னோக்கிய விதமாகவும் வைக்க வேண்டும்.

 

ஸுஜூதின் போது ஏழு உறுப்புக்கள் தரையில் பட வேண்டும் : மூக்குடன் சேர்த்து நெற்றி, இரு உள்ளங்கைகள், இரு முழங்கால்கள், இரு கால் விரல்கள்.

 

மேலும் மூன்று விடுத்தம் அல்லது அதற்கதிகமாக 'سُبْحَانَ رَبِّيَ الْأعلى' என்று கூறுவார்.

 

பொருள் : உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்.

 

            தனது முழங்கையை விலாக்களை விட்டும், வயிற்றை தொடைகளை விட்டும், தொடைகளைக் கால்களை விட்டும் தூரமாக்கி வைப்பார். தனது இரு முழங்கைகளையும் தரையில் படாமல் உயர்த்தி வைக்க வேண்டும்.

 

நபியவர்கள் கூறினார்கள் : 'ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்க வேண்டாம்'. (ஆதாரம் - புஹாரி : 822, முஸ்லிம் : 493)

 

7. தக்பீர் சொல்லியவராக தனது தலையை உயர்த்தி நடு இருப்பிற்கு வருவார்.

 

            தனது வலது காலை நட்டி இடது காலை விரித்து அதன் மீது உட்கார்ந்து, இரு கைகளையும் தனது தொடைகளிலும் முட்டுக்கால்களிலும் படுமாறு வைத்துக் கொள்வார். அதில் பின்வரும் துஆவை ஓதுவர் :

رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ رَبِّ اغْفِرْ لِيْ اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَاهْدِنِيْ وَارْزُقْنِيْ وَعَافِنِيْ وَاجْبُرْنِي

பொருள் : இறைவா! என்னை மன்னித்து விடுவாயாக, என்னை மன்னித்து விடுவாயாக, என்னை மன்னித்து விடுவாயாக, யாஅல்லாஹ்! என்னை மன்னித்து விடுவாயாக, எனக்கு கிருபை செய்வாயாக, நேர்வழி காட்டுவாயாக, வாழ்வாதாரம் அளித்திடுவாயாக, ஆரோக்கியத்தை வழங்கிடுவாயாக, எனது தேவைகளை நிறைவேற்றிடுவாயாக!.

 

            ருகூஃவிற்குப் பின் நடுநிலையில் அமைதியாக இருந்ததைப் போன்று, அனைத்து மூட்டுக்களும் அவற்றினுடைய இடங்களுக்கு மீளும் வரை இந்த அமர்விலும் சற்று நேரம் அமைதியாக இருப்பார்.

 

8. தக்பீர் சொல்லி இரண்டாவது ஸுஜூது செய்வார், அதில் முதலாவது ஸுஜூதில் செய்ததைப் போன்று செய்து கொள்வார்.

 

9. தக்பீர் சொல்லி இரண்டாவது ரக்அத்திற்காக எழுவார்.

முதலாவது ரக்அத்தைப் போலவே ஸூரத்துல் பாத்திஹா ஓதிய பின் முடியுமான ஒரு ஸூராவையும் ஓதுவார். 


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget