சுரையா நட்சத்திரமும், (கொவிட் 19ம்) பரப்பப்படும் புறளிகளும் - MJM. Hizbullah Anvari (B.com reading)



சுரையா நட்சத்திரமும், கொவிட் 19ம் 

மே மாதம் 12ம் திகதி சுரையா நட்சத்திரம் தோன்றியதும் உலகில் உள்ள அனைத்து தொற்றுநோய்களும் -குறிப்பாக கொவிட் 19ம்- அகன்று விடும் எனும் செய்தி பரவலாக சமூக வலைத்தளங்கில் வலம் வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் வகையில் நாசாவின் ஆய்வு அறிக்கைகளும் ஆதாரமாக காட்டப்படுகின்றன. இதற்கு ஆதாரமாக ஹதீஸ்களும் குறிப்பிடப்படுகின்றன. நாசாவின ஆய்வு அறிக்கைகள் எந்தளவுக்கு உண்மைத் தன்மை வாய்ந்தது என்பதை அறிவதை விடவும் இங்கு குறிப்பிடப்படும் ஹதீஸ்களின் விளக்கங்களை அறிந்து கொள்வதே எமக்கு அவசியமான ஒன்றாகும். அதன் விவரத்தை இங்கு பார்ப்போம். 

சுரையா நட்சத்திரம். 

‘சுரையா’ என்பது அரபு சொல்லாகும். இதனை தமிழில் ‘கார்த்திகை’ எனக் கூறுவர். கார்த்திகை என்பது ஓர் விண்மீன் கூட்டத்தின் பெயராகும். இவை பூமியிலிருந்து 400 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளன. சுரையா என்ற சொல் ‘சர்வதுன்’ (செழிப்பு) எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளதால் அரபிகளிடத்தில் சுரையா எனும் நட்சத்திரக்கூட்டத்திற்கு அன்றிலிருந்து இன்று வரைக்கும் தனி மதிப்பு காணப்படுகிறது. 

நபித்துவத்திற்கு முற்பட்ட காலத்து அரேபியர்கள் தமக்கு மழை பொழிவதற்கு காரணமாக இருப்பது சுரையா நட்சத்திரக் கூட்டம் என நம்பி வந்துள்ளனர். தமது கவிதைகளிலும் இதன் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். அதிக தூரத்தைக் குறிப்பிட உவமையாக ‘சுரையாவை விட தூரமானது’ எனும் வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளனர். வானில் தோன்றும் சுரையா நட்சத்திரக் கூட்டத்தின் ஏழு நட்சத்திரங்களையும் காண்பவர் சிறந்த கண்பார்வையுடையவர் என கண்பார்வையை பரீட்சிப்பதற்கும் இதைப் பயன்படுத்தியுள்ளனர். இன்றும் கூட தமது பெண்பிள்ளைகளுக்கும், முக்கியமான நிறுவனங்கள், பாடசாலைகள் போன்றவற்றுக்கும் இப்பெயரைச சூட்டியுள்ளனர். 

அரபு தேசத்தையும் கடந்து ஐரோப்பா பகுதிகளில் இந் நட்சத்திரக் கூட்டங்களை மூட நம்பிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளனர். ஏழு நட்சத்திரங்களுக்கும் ஏழு பெயர்களை சூட்டி, அவற்றுக்கென தனித் தனி கட்டுக்கதைகளையும் உருவாக்கியுள்ளனர். இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இதனை சாஸ்திரம் பார்ப்பதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். இது எல்லாக் காலங்களிலும் வானில் உதயமாகும் ஓர் நட்சத்திரமாகும். அது உதயமாகும் நேரங்களைப் பொருத்து பருவப் பெயர்ச்சிகளை முன்னோர்கள் கணித்துள்ளனர். இது கோடை காலத்தின் ஆரம்பத்தில், அதிகாலைப் பொழுதில் வானில் தோன்றினால் ஈத்தம் பழங்களுக்கு ஏற்பட்ட நோய்கள் அகன்று விடும் என்பது அரேபியர்களின் கணிப்பீடாகும். (முஸ்னத் ஷாபிஈ 644). அவ்வாறே ஈராக்கியர்களும், எகிப்தியர்களும் இது மே மாதம் 10 முதல் 15 ம் தேதிகளின் அதிகாலைப் பொழுதிலே வானில் தோன்றும் என்றும், அவ்வாறு தோன்றும் போது விளைச்சலில் ஏற்படும் நோய்கள் நீங்கிவிடும் என்பதும் அவர்களின் கணிப்பீடாகும். (ஷரஹ்) முஷ்கிலுல் ஆஸார் 06/57). 

எல்லாக் காலங்களிலும் உதயமாகும் சுரையா நட்சத்திரம் மே மாதத்தில்  மாத்திரமே அதிகாலைப் பொழுதில் உதயமாகிறது. அவ்வாறு உதயமாகும் போது அது கோடைக்காலத்திற்கான அடையாளமாக கருதப்படுகிறது. அப்போது பயிர்களைத் தாக்கும் நோய்கள் நீங்கிவிடும் என்பது இயற்கையோடு ஒன்றியிருப்போர் நன்கு அறிந்த விடயமாக இருக்கிறது.

நோய்களை நீக்கும் சுரையா ?

உஸ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸுராகா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ‘நான் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் பழங்களை விற்பது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர், ‘நபி (ஸல்) அவர்கள் நோய்கள் (ஆஹதுன்) நீங்கும் வரை பழங்களை விற்பதை தடைசெய்துள்ளார்கள்’ எனக் கூறினார்கள். ‘அது எப்போது ஏற்படும்?’ எனக் கேட்டேன். ‘சுரையா தோன்றும் போது’ எனக் கூறினார்கள். (நூல்: முஸ்னத் அஹ்மத் 5105, 07/118). 

இவ் ஹதீஸில் இடம்பெற்றுள்ள ‘ஆஹதுன்’ எனும் அரபு வார்த்தைக்கு வழங்கப்படும் அர்த்தத்தை அடிப்படையாக வைத்தே சுரையா நட்சத்திரம் தொற்று நோய்கள் உட்பட அனைத்தையும் நீக்குவதாக ஆதாரம் கொள்ளப்படுகிறது. நாம் இதற்கான சரியான அர்த்தத்தை ஏனைய பல ஹதீஸ்களினூடாக அறிந்த பின்னே ஓர் முடிவுக்கு வர முடியும். 

புஹாரி 2194, முஸ்லிம் 1536, அஹ்மத் 09/146, இப்னு ஹிப்பான் 4990, 4994 போன்ற ஹதீஸ்களும் இதே பாணியில் அமைந்த ஹதீஸ்களாகும். அவற்றைப் பார்க்கும் போது ‘ஆஹதுன்’ எனும் வார்த்தைக்கு பதிலாக ‘ஸலாஹ்’ எனும் வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. இதற்கு ‘நோய்களிலிருந்து பயிர்கள் காக்கப்படுதல்’ எனும் அர்த்தமே ஹதீஸ் விளக்கவுரை அறிஞர்கள் வழங்கியுள்ளனர். எனவே இவ்ஹதீஸ்கள் அனைத்தும் பழங்களை விற்பதுக்குரிய இஸ்லாம் ஆகுமாக்கிய காலத்தைப் பற்றியே குறிப்பிடுகின்றன. ஏனெனில் சுரையா நட்சத்திரம் வானில் தோன்றும் காலம் கோடைகாலமாக இருப்பதால் பயிர்களுக்கு ஏற்படும் நோய்கள் அக்கோடைக் காலத்தில் நீங்கிவிடும் என்பது அரேபியர்களின் கணிப்பீடாக இருந்துள்ளது. அதற்கு முன் பழங்களை விற்கும் போது வாங்குபவர் பழுதடைந்த, நோய்தன்மையுள்ள பழங்களை கொள்வனவு செய்து ஏமாற்றம் அடையாமல் இருக்கவே இத்தகைய சட்டத்தை இஸ்லாம் விதியாக்கியுள்ளது. 

இஸ்லாமிய சட்டக்கலை (பிக்ஹ்) அடிப்படையில் தொகுப்பட்ட ஹதீஸ் நூற்களில் ‘பழங்களை விற்றல்’ எனும் தலைப்பிட்டு, அதற்கு கீழால் இது போன்ற ஹதீஸ்களை அந்நூலாசிரியர்கள் கொண்டுவந்துள்ளனர். முஸ்லிம், திர்மிதி, முஸன்னப் இப்னு அபீ ஷைபா, முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் அஸ்ஸன்ஆனி, ஷரஹ் முஷக்கலுல் ஆஸார் போன்ற நூற்கள் இதற்கு சில உதாரணங்களாகும். 

அவ்வாறே இவற்றுக்கு வலுசேர்க்கும் வகையில் ஓர் பலவீனமான ஹதீஸும் இடம்பெறுகிறது. முன்னைய ஹதீஸ்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக மாத்திரம் இவ்ஹதீஸை ஹதீஸ் விளக்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “(சுரையா எனும்) நட்சத்திரம் ஓர் சமூகத்தின் நோயை குறைக்கவும் அல்லது நீக்கவுமே தவிர அது ஒருபோதும் காலையில் உதிக்காது”. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: அஹ்மத் 9039, முஃஜமுல் அவ்ஸத் 1305). 

அவ்வாறே தப்ஸீர் குர்துபீ 07/51, அந்நிஹாயா ஃபீ ஹரீபில் ஹதீஸி வல் அஸர் 05/24, தப்ஸீருஸ் ஸம்ஆனி 06/306, அத்தைஸீர் பிஷரஹி ஜாமிஇஸ் ஸகீர் 02/352, ஃபைழுல் கதீர் 05/454 போன்ற நூற்களும் இது பயிர்களில் ஏற்படும் ஒரு வகை நோய் என்றே குறிப்பிடுகின்றன. 

ஆக முன்சென்ற அனைத்து விடயங்களையும் பார்க்கும் போது சுரையா நட்சத்திரம் என்பது தொற்று நோய்கள் போன்ற மனிதர்களுக்கும், மிருகங்கள், பறவைகள் போன்றவற்றுக்கு ஏற்படும் நோயை குறிக்கவில்லை எனவும், அது விவசாயத்துடன் தொடர்புபட்ட நோய்களை மாத்திரமே குறிக்கிறது எனவும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. ஏனெனில் ஹதீஸ்களின் அர்த்தங்களை விளங்குவதற்கு நாம் எமது முன் சென்ற அறிஞர்களின் கருத்துக்களையே முற்படுத்த வேண்டுமென்பது ஓர் அடிப்படை விதியாகும். அவர்களில் ஒருவரும் இவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கொடுக்காத போது நாமும் அவ்வாறே அவற்றைக் கையாள்வது அறிவுசார்ந்த அம்சமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக நட்சத்திரத்தின் சக்தியால் இவை நிகழ்கிறது என்பதையும் இவ்ஹதீஸ்கள் குறிப்பிடவில்லை. சிறந்த அறுவடைக்குரிய காலத்தைக் கணிக்கவே இந்நட்சத்திரங்கள் அடையாளமாக கூறப்பட்டுள்ளன என்பதையும் நாம் புரிந்துகோள்ள வேண்டும்.

இவ்வாறான புறளிகளை நாம் உடனே நம்பி, புதியதோர் கண்டுபிடிப்பாக இதை சித்தரிப்பதற்கு மிக முக்கிய காரணம் இயற்கை பற்றிய அறிவு எம்மிடம் இல்லை என்பதாகும். விவசாயிகள் இது பற்றி நன்கு தெளிவுடனே இருப்பார்கள்.

நட்சத்திரங்கள் பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடு 

நட்சத்திரங்கள் மூன்று நோக்கங்களுக்காக மாத்திரமே படைக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் கூறுகிறான், “நிச்சயமாக நாம் கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். மேலும் அவற்றை ஷைத்தான்களுக்கு எறி கற்களாகவும் ஆக்கினோம்.” (அல்குர்ஆன் 67:05), மேலும், “மேலும், பல அடையாளங்களையும் (அல்லாஹ் பூமியில் ஏற்படுத்தினான்.) நட்சத்திரங்கள் மூலம் அவர்கள் வழியை அறிந்துகொள்கிறார்கள்.” (அல்குர்ஆன் 16:16). 

சுரையா நட்சத்திரத்தின் நோக்கம் என்ன என்பதை மேலும் அறிந்துகொள்ளும் விதத்தில் இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷேஹ் அலி அல்ஹுழைர் அவர்கள், எழுதிய ‘கிதாபு ஜம்உ வத்தஜ்ரீத் ஃபீ ஷரஹி கிதாபித் தவ்ஹீத்’ எனும் நூலில் இடம்பெற்றுள்ள நட்சத்திரம் பற்றிய செய்திகளை நாம் அறிவது அவசியமாகும். இவற்றை வைத்து நாம் எமது நம்பிக்கையை தரப்படுத்திக்கொள்ள முடியும். 

நட்சத்திரம் பற்றிய அறிவியல் கற்கை முறை இரு பிரிவுகளாக நோக்கப்படுகிறது. 

அ. ஜோதிடத்துடன் தொடர்புபட்டது. 

ஆ. ஜோதிடத்துடன் தொடப்புபடாதது. 

அ. ஜோதிடத்துடன் தொடர்புபட்டது: உலகில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு நட்சத்திரத்தின் தாக்கம் இருப்பதாக நம்பிக்கை கொள்வதை இது குறிக்கிறது. இது மூன்று வகைகளைக் கொண்டது. 

முதல் வகை: நட்சத்திரத்திற்கு ஆக்கும் திறனும், அழிக்கும் திறனும் இருப்பதாக நம்பிக்கை கொள்ளல். இவ்வாறு ஒருவர் நம்பிக்கை கொண்டால் அவர் இறைநிராகரிப்பாளராக மாறிவிடுவார். அல்லாஹ் கூறுகிறான், “வானம் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு உணவளிக்கும் அல்லாஹ் அல்லாத வேறொரு படைப்பாளன் இருக்கின்றானா?” (அல்குர்ஆன் 35:03). இங்கு கேட்கப்படும் கேள்வியானது அல்லாஹ்வைத் தவிர வேறு படைப்பாளன் இல்லை என்பதையே உணர்த்துகிறது. நட்சத்திரங்களை நம்புபவர் அல்லாஹ்வின் பரிபாலணக் கோட்பாட்டில் (தவ்ஹீதுர் ருபூபிய்யாவில்) அல்லாஹ்வுக்கு இணையாக அந்நட்சத்திரத்தை ஆக்கிய குற்றத்திற்கு ஆளாகி முஷ்ரிக்காகவும் மாறிவிடுகிறார். 

இரண்டாம் வகை: நட்சத்திரங்கள் உதிப்பதையும், அவைகள் மறைவதையும், கூட்டமாக இருப்பதையும், பிரிந்து இருப்பதையும் கவனத்தில் கொண்டு மறைவான விடயங்களைப் பற்றி கூறுவதையும், அவற்றை நம்பிக்கை கொள்வதையும் இது குறிக்கிறது. இதுவும் இறைநிராகரிப்பு, இணைவைப்பு ஆகிய இரு குற்றங்களையும் செய்தமைக்காக ஒருவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும். ஏனெனில் இது அல்லாஹ்வுக்கு மாத்திரம் இருக்கும் மறைவானவற்றை அறியும் ஞானம் நட்சத்திரங்களுக்கும் இருப்பதாக நம்பிக்கை கொள்வதைக் குறிக்கும். அல்லாஹ் கூறுகிறான், “அல்லாஹ்வைத் தவிர வானங்கள் மற்றும் பூமியில் இருப்பவர்கள் எவரும் மறைவானவற்றை அறியமாட்டார்கள்” (அல்குர்ஆன் 27:65). 

மூன்றாம் வகை: உலகில் நிகழும் அனைத்தையும் செய்வது அல்லாஹ் எனும் நம்பிக்கை இருந்தாலும், அந்நிகழ்வுகளுக்கு காரணமாக நட்சத்திரங்களே இருக்கின்றன என நம்பிக்கை கொள்வதை இது குறிக்கிறது. இரண்டாம் வகை, எதிர்காலத்தில் நடப்பவற்றுக்கு நட்சத்திரமே காரணம் என நம்பிக்கை கொள்வதைக் குறிக்கும். இவ் வகை, தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பவற்றுக்கு நட்சத்திரங்களே காரணமாகும் என நம்பிக்கை கொள்வதைக் குறிக்கிறது. அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கையையும், நட்சத்திரத்தின் மீது சிறிது நம்பிக்கையும் வைப்பதால், இது சிறிய வகை இணைவைப்பைச் சேர்ந்த தடுக்கப்பட்ட நம்பிக்கையாகும். 

ஆ. ஜோதிடத்துடன் தொடர்புபடாதது: இது நட்சத்திரத்தின் ஓட்டம், கூட்டம் ஆகியவற்றைக் கவனித்து ஆகுமான விடயங்களைக் கணிப்பதைக் குறிக்கும். இதுவும் இரு வகைகளாக நோக்கப்படுகிறது. 

முதல் வகை: மார்க்க விடயங்களுக்காக கணிப்பீடு செய்தல். கிப்லாவை அறிதல், இரவின் கடைசிப் பகுதியை அறிதல், தொழுகையின் நேரங்கள் நுழைவதை அறிதல் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். இவ்வாறு கணிப்பீடு செய்வது ‘ஃபர்ழு கிபாயா’வாகும். பிரயாணம் போகும் ஒருவர் இது பற்றி அறிந்திருப்பது விரும்பத்தக்க ஒன்றாகும். 

இரண்டாம் வகை: உலக விடயங்களுக்காக கணிப்பீடு செய்தல். திசைகளை அறிதல், விவசாய பருவங்களை அறிதல், வருடத்தில் ஏற்படும் ஏனைய பருவங்களை அறிதல் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். சுரையா நட்சத்திரத்தை இவ்வகையிலே நாம் சேர்ந்துக்கொள்ள வேண்டும். இவற்றுக்காக நட்சத்திரம் பற்றிய கல்வியைக் கற்றுக்கொள்வதில் அறிஞர்களுக்கு இடையில் இரு கருத்துக்கள் நிலவுகின்றன. 

1. வெறுக்கத்தக்கது. இதை கதாதா (ரஹ்) போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் வழிகெட்ட முறையில் மக்களை நடாத்திச் செல்லும் நட்சத்திர அறிவியல் கலை இவரின் காலத்திலே தோன்ற ஆரம்பித்தது. பேணுதல் நிமித்தமே இவர் இவ்வாறு கூறியுள்ளார். 

2. ஆகுமானது. இதை இமாம் அஹ்மத் (ரஹ்) போன்றோர் கூறியுள்ளனர். இதற்கு ஆதாரமாக, “மேலும், பல அடையாளங்களையும் (அல்லாஹ் பூமியில் ஏற்படுத்தினான்.) நட்சத்திரங்கள் மூலம் அவர்கள் வழியை அறிந்துகொள்கிறார்கள்”. (அல்குர்ஆன் 16:16) எனும் அல்குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுகின்றனர். இதில் ‘வழியை அறிந்துகொள்வதற்காக’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. அது உலக விடயத்திற்கும், மார்க்க விடயத்திற்கும் வழிகாட்டுவதைக் குறிக்கிறது. இது அடிப்படையான அம்சமாக இருப்பதால் ஆகுமானது எனும் விதியின் சட்டத்தைப் பெறுகிறது. இதில் நன்மை இருப்பதால் மக்களுக்கு நன்மைபயக்கும் விடயங்களுக்கு இவற்றை பன்படுத்தலாம் என்பதையும் குறிக்கிறது. (விரிவை அஞ்சி சுருக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது). 

சுரையா நட்சத்திரம் தொற்று நோயை நீக்கும் எனும் நம்பிக்கையில் பரப்பப்படும் செய்திகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதன் மீது நாம் நம்பிக்கை வைப்பது எம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. அவ்வாறே அந்நட்சத்திரத்திற்கு மறைவான அறிவு இருப்பதாகவும் நம்பிக்கை கொள்வதும் கூடாத ஒன்றாகும். சுரையா நட்சத்திரமானது பருவ காலங்களுக்கான ஓர் அடையாளமாகவே அல்லாஹ் அமைத்துள்ளான் என நம்பிக்கை கொள்வதே ஓர் முஸ்லிமுக்கு ஆரோக்கியமானதாகும். 

எனவே எமக்கு இஸ்லாம் பற்றிய ஓர் செய்தி புதிதாக கிடைத்தவுடன் அதன் நம்பகத்தன்மையை அறியாமல் சமூகவலைத்தளங்களில் பரப்பிவிடுவதால் நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யுரைத்த குற்றத்தையும், சில சமயங்களில் இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிவிடும் கொள்கையை மக்கள் மன்றத்தில் பரப்பிய குற்றத்திற்கும் நாம் ஆளாகிவிடுவோம். அல்லாஹ்வே நம் அனைவரையும் பாதுகாப்பானாக.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget