நபிக்குத் தவறாத வித்ருத் தொழுகை | Assheikh M.AHMED (Abbasi,Riyadhi) M.A Reading

 
 (அஹ்மத் அப்பாஸி, ரியாதி)
 
இரவுத் தொழுகையின் சிறப்பு


இஸ்லாத்தில் தொழுகைக்குள்ள முக்கியத்துவம் வார்த்தையிலடங்காதது. விசுவாசிக்கும் நிராகரிப்பாளனுக்கும் இடையிலுள்ள வேறுபாடே இத்தொழுகைதான். ஐவேளைத் தொழுகைகளை விதியாக்கிய அல்லாஹ் அதனைப் பூரணப்படுத்தும் பொருட்டு அதற்கென முன், பின் ஸுன்னத்துக்களையும் அறிமுகப்படுத்தியுள்ளான். அவனை மென்மேலும் நெருங்க இன்னும் பலவிதமான ஸுன்னத்தான தொழுகைகளை அவன் எமக்குத் தந்துள்ளான். கடமையல்லாத இது போன்ற ஸுன்னத் தொழுகைகளில் முதலிடம் வகிப்பது இரவு நேரங்களில் தொழப்படும் தொழுகைகளே. 
 
அதனை அல்லாஹ் நபியவர்களுக்குப் பிரத்தியேகக் கடமையாகவும், அவரது சமூகத்திற்கு முக்கியமான ஒரு ஸுன்னாவாகவும் ஆக்கியுள்ளான். 'உமக்கு உபரியாக இருக்க, இரவின் ஒரு பகுதியில் தொழுகைக்காக எழுந்து நிற்பீராக' (இஸ்ரா: 79). 'இரவில் சிறிது நேரம் தவிர (தொழுகைக்காக) எழுந்து நிற்பீராக' (முஸ்ஸம்மில் 2). இதுபற்றி இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒகு செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் முஸ்லிம் தனது ஸஹீஹில் (1163) பின்வருமாறு பதிந்துள்ளார்கள் : 'கடமையான தொழுகைகளுக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்'.


வித்ர் ஓர் அறிமுகம்


வித்ர் என்ற அரபுச் சொல்லிற்கு ஒற்றை என்பது பொருள். 'இரட்டை மீதும், ஒற்றை மீதும் சத்தியமாக' (ஃபஜ்ர் 3), 'நிச்சயமாக அல்லாஹ் ஒற்றையானவன், ஒற்றையை விரும்புகிறான்' என்று நபியவர்கள் கூறிய செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் (புஹாரி 6410). இரவு நேரங்களில் தொழப்படும் உபரியான தொழுகைகளை ஒற்றையாக முடிப்பதால் இதற்கு வித்ர் என்று கூறப்படுப்படுகின்றது. இத்தொழுகை வேறு பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுகின்றது. இரவில் தொழப்படுவதால் கியாமுல்லைல் என்றும், அதே தொழுகை ரமழானில் தொழும் போது கியாமு ரமழான் என்றும், ரமழானில் நீளமாக, ஆறுதலாக ஓய்வெடுத்துத் தொழுவதால் நபிக்குப் பிந்திய காலத்தில் தராவீஹ் என்றும், அதே தொழுகை தூங்கி எழுந்து தொழும்பட்சத்தில் அதற்குத் தஹஜ்ஜுத் தொழுகை என்றும், ஒற்றையாக முடிப்பதால் முன்னர் கூறியது போன்று வித்ர் என்றும் கூறப்படுகின்றது.


வித்ரின் சிறப்பு


வித்ருத் தொழுகையின் சிறப்புப்பற்றி ஏரானமான நபிமொழிகள் வந்துள்ளன. கடமையான ஐவேளைத் தொழுகைக்கடுத்து இதற்கே இஸ்லாம் முன்னுரிமை வழங்கியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ பஸ்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார் : 'அல்லாஹ் உங்களுக்கு ஒரு தொழுகையை அதிகரித்துள்ளான். அதுதான் வித்ராகும்' (அஹ்மத் 23851), அத்துடன் நபியவர்கள் அபூஹுரைரா (ரலி), மற்றும் அபூ தர் (ரலி) ஆகியோருக்கு தாம் உறங்கச் செல்லமுன் வித்ரு தொழும்படி வஸிய்யத் செய்துள்ளார்கள். (புஹாரி 1981, முஸ்லிம் 721, அஹ்மத் 21518), இதுபோன்ற இன்னும் பல நபிமொழிகள் இந்த வித்ருத் தொழுகையின் முக்கியத்தை எடுத்துக் கூறுகின்றன.


வித்ர் தொழுகையின் சட்டம்


வித்ருத் தொழுகையின் சட்டமென்ன? அது கடமையா ? அல்லது ஸுன்னாவா ? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் இரண்டு கருத்துக்கள் உள்ளன :

1. பெரும்பான்மையான மார்க்க சட்டக்கலை அறிஞர்கள் இத்தொழுகை கடமையானதல்ல, எனினும் கவனித்துத் தொழப்பட வேண்டிய மிக முக்கியமான ஸுன்னா என்ற கருத்திலேயே உள்ளனர். இதற்கு ஆதாரமாக பின்வரும் நபிமொழிகளைக் கூறுகின்றனர் : ஒரு கிராமவாசி நபியிடத்தில் தினமும் தொழவேண்டிய தொழுகைகளைப் பற்றி வினவிய போது, ஐந்து நேரங்கள் என்று கூறினார்கள். அந்நபர் இதுவல்லாமல் இன்னும் கடமையான தொழுகைகள் உண்டா? என்று வினவினார். அதற்கு நீர் உபரியாகத் தொழுதாலே தவிர என்று நபியவர்கள் பதில் கூறினார்கள். (புஹாரி 46, முஸ்லிம் 11). 'வித்ரு பர்ளான தொழுகைகளைப் போன்று கடமையானதல்ல, எனினும் அது நபியவர்கள் காட்டித் தந்த ஒரு வழிமுறை' என்று அலீ (ரலி) கூறிய செய்தி அஹ்மத் 652, திர்மிதீ 453, நஸாஈ 1676, இப்னு மாஜஹ் 1169 ஆகிய நூட்களில் வலுவான அறிவிப்பாளர் வரிசை மூலம் பதியப்பட்டுள்ளது. இது ஸுன்னா முஅக்கதா என்பதற்குச் சான்றாக வித்ரின் சிறப்புப் பற்றி நாம் மேற்கூறிய நபிமொழிகளை ஆதாரமாகக் கொள்கின்றனர்.

2. இமாம் அபூ ஹனீபா (ரஹ்) வித்ருத் தொழுகை வாஜிப் என்ற கருத்திலுள்ளார்கள். அதற்கு ஆதாரமாக அபூ புர்தா அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் நபியவர்கள் கூறியதாகக் கூறும் பின்வரும் செய்தியைக் கூறுகின்றனர் : 'வித்ரு கடமையானது. யார் வித்ருத் தொழ வில்லையோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல' (அஹ்மத் 23019, அபூதாவூத் 1419), மற்றும் நபியவர்கள் வித்ரு தொழுகை தவறினால் அதனைப் பகல்வேளையில் இரட்டையாகத் தொழுதுள்ளார்கள். கடமையல்லாத ஒரு தொழுகையைக் கழாச் செய்யத் தேவையில்லை என்பதும் ஹனபிய்யாக்கள் முன்வைக்கும் ஆதாரமாகும்.

வித்ருத் தொழுகை கடமையானதல்ல, ஸுன்னா முஅக்கதா என்ற கருத்தே வலுவானதாகும். இமாம் அபூ ஹனீபா மற்றும் அவரைப் பின்பற்றுவோர் முன்வைக்கும் நபிமொழி பலவீனமானது, அதில் இடம்பெறும் உபைதுல்லாஹ் அல்அதகீ என்பவர் மனனசக்தி மிகவும் குன்றியவர் என விமர்சிக்கப்பட்டவர். இதே செய்தி அபூஹுரைரா (ரலி) வாயிலாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது. அதில் இடம்பெறும் முஆவியா பின் குர்ராஃ என்பவர் அபூஹுரைரா (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்பதால் இச்செய்தியும் தொடர் அறுபட்ட பலவீனமான செய்தியாகும். அத்துடன் இமாம் அபூ ஹனீபா இடத்தில் பர்ழுக்கும் வாஜிபுக்கும் வித்தியாசமுள்ளது என்பதையும் இங்கு நாம் புரிந்து கொள்ள வேணடும். அவர்கள் வித்ரை ஐவேளேத் தொழுகையுடைய இடத்தில் வைத்துப் பார்க்கவில்லை என்பதும் மேற்கண்ட அவருடைய விதிமுறை மூலம் தெளிவாகின்றது.


வித்ரை விடுவது பற்றிய எச்சரிக்கை


வித்ருத் தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவர்களை இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) தீயவனென விமர்சித்து அவன் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப் படத்தக்க நம்பகமானவனில்லை என்றும் கூறியுள்ளார்கள். அது பற்றி நபியவர்களைத் தொட்டும் அபூஹுரைரா (ரலி), புரைதா (ரலி) அகியோர் வாயிலாக இரு செய்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் இரண்டும் பலவீனமான செய்திகள். இதன் முக்கயத்துவத்தைக் கருதி, தவறாமல் தொழுவதே மிகச் சிறந்தது. நபி (ஸல்) அவர்கள் பிரயாணத்தில் கூட இத்தொழுகையை விட்டதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


வித்ரு தொழுகையின் நேரம்


வித்ருத் தொழுகையின் நேரம் இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ருடைய நேரம் வரை என்பதில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. நபி (ஸல்) அவர்கள் இரவின் ஒவ்வொரு பகுதியிலும் வித்ருத் தொழுதுள்ளார்கள். ஆரம்பத்தில், மத்தியில், சில நேரம் அவர்களுடைய வித்ர் ஸஹர் நேரம் வரை நீண்டுமுள்ளதென அன்னை ஆஇஷா (ரலி) அவர்கள் கூறும் செய்தி புஹாரி (996), முஸ்லிமில் (745) இடம்பெற்றுள்ளது. 
 
அதிலும் மிகச் சிறந்த நேரம் இரவின் கடைசிப் பகுதியான ஸஹர் நேரமென்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. 'இரவின் இறுதிப் பகுதியில் வித்ருத் தொழ முடியாதென அஞ்சுபவர் ஆரம்பத்தில் தொழுது கொள்ளட்டும், இரவின் இறுதியில் தொழ ஆசைப்படுபவர் அவ்வாறே தொழுது கொள்ளட்டும். ஏனெனில் இரவின் இறுதிப்பதியில் தொழப்படும் தொழுகை சாட்சி கூறப்படுவதாகவுள்ளது. அதுவே சிறந்தது' என்று நபியவர்கள் கூறியதை ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம் 755).


பிரயாணத்தில் வித்ருத் தொழுகை :


பிரயாணத்திலும் நபியவர்கள் வித்ருத் தொழுகையை விடமாட்டார்களென ஏற்கனவே கூறினோம். ஒரு பிரயாணி பிரயாணத்தில் எப்போது இஷாத் தொழுகின்றாரோ அதிலிருந்து அவருடைய வித்ருத் தொழுகைக்குரிய நேரம் ஆரம்பித்து விடுகின்றது. அவர் மஃரிபுடன் இஷாவை முற்படுத்தித் தொழுதால் அந்நேரத்திலேயே அவருக்கு வித்ரையும் தொழுது கொள்ளலாம். ஏனெனில் வித்ருத் தொழுகையின் நேரம் பற்றி ஹதீஸில் இஷாத் தொழுகைக்கும் பஜ்ருத் தொழுகைக்குமிடையில் தொழுங்கள் என்பதாகத் தான் இடம் பெற்றுள்ளது. இஷாவுடைய நேரம் என்று கூறப்படவில்லை.


த்தனை ரக்அத்கள் ? அவற்றைத் தொழும் முறைகள்


வித்ருத் தொழுகை எத்தனை ரக்அத்கள்? அதன் குறைந்தபட்ச ரக்அத்கள் எத்தனை? அதிகபட்சமாக எத்தனை தொழலாம் என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. அதுபற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.


ஒரு ரக்அத் மாத்திரம் தொழுதல் :


வித்ருடைய குறைந்தபட்ச எண்ணிக்கை ஒரு ரக்அத்தாகும். ஏனெனில் வித்ர் என்பது ஒற்றை, ஒற்றையில் அதிகுறைந்தது ஒரு ரக்அத். அதுமட்டுமின்றி ஒரு ரக்அத் மாத்திரம் தொழுவதற்கு பின்வரும் நபிமொழிகள் ஆதாரமாக அமைகின்றன. இரவுத்தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். ஸுபஹ் நெருங்குவதை நீ அஞ்சினால் ஒரு ரக்அத் மூலம் நீ வித்ரு தொழுதுகொள் என்று நபியவர்கள் தன்னிடம் இரவுத்தொழுகை பற்றி கேட்டவருக்குப் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி), ஆதாரம் புஹாரி 473, முஸ்லிம் 749), மேலும் 'வித்ரு என்பது இரவின் இறுதியில் ஒரு ரக்அத் தொழுவதாகும்' என்று நபியவர்கள் கூறியதை இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள் (முஸ்லிம் 752). 
 
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) ஒரு ரக்அத் மாத்திரம் தனித்துத் தொழுவதைக் கூடாதென்றுள்ளார்கள். நபியவர்கள் தனியாக ஒரு ரக்அத் தொழுவதைத் தடுத்தார்கள் என முஹம்மத் பின் கஃப் அல்குரழீ (ரஹ்) அறிவிக்கும் செய்தியை அதற்கு ஆதாரமாக் காட்டியுள்ளார்கள். எனினும் இச்செய்தி ஒரு தாபிஈ நேரடியாக நபியிடமிருந்து அறிவிக்கும் முர்ஸல் வகையைச் சேர்ந்ததாகும். எனவே இது பலவீனமானதாகும். இதுவல்லாமல் இன்னும் சில ஆதாரங்களை முன்வைக்கிறார்கள். அவையனைத்தும் அனுமதித்து வந்துள்ள செய்திகளை விட பலம் குன்றியவையாகவே காணப்படுகின்றன.


அதிகபட்ச எண்ணிக்கை :


அதிகபட்சமாக வித்ரு எத்தனை ரக்அத்கள் தொழலாம் என்பதிலும் கருத்து வேறுபாடுள்ளது. ஷாபிஈ மற்றும் ஹன்பலீ மத்ஹபைச் சேர்ந்தவர்களிடம் அதிகபட்ச வித்ர் 11 ரக்அத்களாகும். இமாம் ஷாபிஈயின் மற்றுமோர் அறிவிப்பில் 13 ரக்அத்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. 11 ரக்அத்கள் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ரமழானிலோ, ரமழான் அல்லாத காலங்களிலோ இரவுத் தொழுகையில் 11 ரக்அத்களைக்கான அதிகரிக்கவில்லை என்று ஆஇஷா (ரலி) அறிவிக்கும் செய்தி ஆதாரமாகவுள்ளது. (புஹாரி 1147, முஸ்லிம் 738). 13 ரக்அத்களுக்கு ஆதாரமாக அதே ஆஇஷா (ரலி) அறிவிக்கும் ஒரு செய்தி முஸ்லிமில் (737) பதியப்பட்டுள்ளது : 'நபியவர்கள் இரவில் 13 ரக்அத்கள் தொழுவார்கள். அதில் ஐந்து ரக்அத்களை ஒற்றையாக ஒரே தடவையில் தொழுவார்கள். அதன் இறுதியில் மாத்திரமே உட்கார்வார்கள்'. இதே செய்தி உம்மு ஸலமா (ரலி) அவர்கள் வாயிலாகவும் வலுவான அறிவிப்பாளர் வரிசையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (அஹ்மத் 26738, திர்மிதீ 458, நஸாஈ 1708).

மற்றும் சில அறஞர்கள் இவ்விரு நபிமொழிகளையும் இணைத்துப் பொதுவான ஒரு கருத்தைக் கூறுகின்றனர். அதாவது, அதிகபட்ச ரக்அத்களுக்கு வரையறை கிடையாது. இரண்டிரண்டாக இரவில் தனக்கு வசதியான அமைப்பில் தொழுது கொள்ளலாம். இறுதியில் ஒற்றைப்படையாக அத்தொழுகையை முடித்துக் கொள்ளலாம் என்ற கருத்தைக் கூறியுள்ளனர். அதற்கு ஆதாரமாக நாம் ஏற்கனவே கூறிய 'இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழப்படும்' என்ற பொதுவான நபிமொழியை ஆதாரமாகக் கொள்வதுடன், நபியவர்கள் 11 அல்லது 13 தொழுதாலும் அதனை விட அதிகரிக்கத் தடை விதிக்காமல் பொதுவாகத் தான் கூறியுள்ளார்கள் என்பதும் இவர்களது அபிப்பிராயமாகும். இவற்றுக்கு ஒரு தீர்வாக நாம் பின்வரும் விடயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. நாம் எப்போதும் எமது வணக்கங்களில் நபியவர்களைத் துயர்வது அவசியமாகும். அதனடிப்படையில் வித்ருத்தொழுகை இத்தனை ரக்அத்கள்தான் என்று வரையறுப்பதாக இருந்தால் நபியவர்கள் தொழுத பிரகாரம் 11 அல்லது 13 தொழுவது மிக மிகச் சிறந்தது. அப்போது ஆஇஷா (ரலி) வர்ணித்தது போன்று நீட்டி, அழகாகத் தொழ முயற்சிக்க வேண்டும்.

2. ஒரே நிலையில் நீண்ட நேரம் நிலைத்திருக்க சிரமமாக இருந்து, அதற்குப் பதிலாக எண்ணிக்கையில் அதிகமாக்க விரும்பினால் 'இரவுத்தொழுகை இரண்டிரண்டு ரக்அத்கள் தான்' என்ற பொதுவான ஹதீஸை வைத்து அவரது சக்திக்குட்பட்டவாறு தினமும் ஒரே எண்ணிக்கை என்ற அமைப்பில் வரையறுக்காமல் அதிகரிக்கலாம்.

3. 11 அல்லது 13 விட அதிகரிக்கலாம் என்பதன் அர்த்தம் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் தினமும் ஒரேயளவு வரையறுத்துத் தொழலாம் என்பதல்ல. குறிப்பாக 23ல் வரையறுப்பதல்ல. அவ்வாறு நபியவர்கள் 23 ரக்அத்கள் இரவுத் தொழுகை தொழுததாக எந்தவித ஸஹீஹான ஆதாரங்களும் இடம்பெறவில்லை. உமர் (ரலி) அவர்கள் உபைய் இப்னு கஃப் (ரலி) மற்றும் தமீமுத்தாரீ (ரலி) ஆகியோரை 23 ரக்அத்கள் தொழுவிக்கும்படி வந்த செய்திகள் அனைத்தும் பலவீனமானதே.

4. சிறந்தது என்பதற்கும் அனுமதி என்பதற்கும் இடையில் பாரிய வேறுபாடுள்ளதை இங்கு நாம் கவனித்தாக வேண்டும். நபியவர்கள் தொழுத 11 அல்லது 13டன் நிறுத்திக் கொள்வது மிக மிகச் சிறந்தது. அதற்கே முழு முக்கிய்யத்துவம் கொடுக்கப்பட வேண்டும். என்றாலும் அதைவிட அதிகரிக்கலாமா? என்றால் மேற்கூறிய பொதுவான ஹதீஸின் அடிப்படையில் அனுமதியுண்டு. ஆனால் 13க்கு மேற்பட்ட எண்ணிக்கையை வழமையாகத் தொழுவதற்காக வரையறுத்துக் கொள்ளக்கூடாது.


மூன்று ரக்அத்கள் தொழும் முறை :

மூன்று ரக்அத்கள் தொழுவதுதான் வித்ரில் குறைந்தபட்ச எண்ணிக்கையில் பரிபூரணமாகும். ஏனெனில் நபியவர்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் தான் ஒரு ரக்அத்துடன் சுருக்கியுள்ளார்கள். வித்ரு தொழுகை மூன்று ரக்அத்கள் தொழும் போது அனுமதிக்கப்பட்ட முறைகள் இரண்டும் தடுக்கப்பட்ட முறை ஒன்றும் உள்ளன.

1. இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்து விட்டு, ஒரு ரக்அத்தைத் தனியாகத் தொழுதல். (முஸ்லிம் 736).

2. மூன்று ரக்அத்களையும் தொடர்ந்து தொழுது, இறுதி ரக்அத்தில் மாத்திரம் அத்தஹிய்யாத் ஓதி, ஸலாம் கொடுத்தல். (நஸாஈ 1701).


தடுக்கப்பட்ட முறை : மஃரிப் தொழுகையைப் போன்று இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு ஸலாம் கொடுக்காமல் மூன்றாம் ரக்அத்துக்கு எழும்புதல். அதனை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். (இப்னு ஹிப்பான் 2429, தாரகுத்னீ 1651, ஹாகிம் 1138, பைஹகீ 4815). இதன் அறிவிப்பாளர் வரிசை வலுவானது.


ஐந்து ரக்அத்கள் இரு முறைகளில் தொழலாம் :

1. ஐந்து ரக்அத்களையும் சேர்த்து ஒரே தடவையில் தொழுது, ஐந்தாவது ரக்அத்தில் மாத்திரம் அத்தஹிய்யாத் ஒதி ஸலாம் கொடுத்தல். (முஸ்லிம் 737, நஸாஈ 1715, இப்னுமாஜாஃ 1192).

2. இரண்டிரண்டாகத் தொழுது விட்டு தனியாக ஒரு ரக்அத் தொழுதல். இதற்கு மேலே நாம் கூறிய இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்கள் என்ற பொதுவான ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளலாம்.


ஏழு ரக்அத்களையும் இரு முறைகளில் தொழலாம் :

1. இரண்டிரண்டாகத் தொழுது விட்டு தனியாக ஒரு ரக்அத் தொழுதல்.

2. எழு ரக்அத்களையும் ஒரே தடவையில் தொழதல். ஆறாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு ஸலாம் கொடுக்காமல் ஏழாவது ரக்அத்தையும் தொழுது விட்டு மீண்டும் அத்தஹிய்யாத் ஓதி ஸலாம் கொடுத்தல். (முஸ்லிம் 746)


ஒன்பது ரக்அத்களையும் இரு முறைகளில் தொழலாம் :

1. இரண்டிரண்டாகத் தொழுது விட்டு தனியாக ஒரு ரக்அத் தொழுதல்.

2. ஒன்பது ரக்அத்களையும் ஒரே தடவையில் தொழதல். எட்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதிவிட்டு ஸலாம் கொடுக்காமல் ஒன்பதாவது ரக்அத்தையும் தொழுது விட்டு மீண்டும் அத்தஹிய்யாத் ஓதி ஸலாம் கொடுத்தல். (முஸ்லிம் 746)


பதினொரு ரக்அத்கள் தொழும் முறைகள் :

1. இரண்டிரண்டாக 8 ரக்அத்கள் தொழுது விட்டு பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுதல். (புஹாரி 1147, முஸ்லிம் 738).

2. இரண்டிரண்டாக 10 ரக்அத்கள் தொழுது விட்டு ஒரு ரக்அத்தை தனியாகத் தொழுதல். (முஸ்லிம் 737).


பதின்மூன்று ரக்அத்கள் தொழும் முறை :

எட்டு ரக்அத்களை இரண்டிரண்டாகத் தொழுதுவிட்டு மீதி ஐந்து ரக்அத்களையும் ஒரே தடவையில் தொழ வேண்டும். (முஸ்லிம் 737).

நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகைமுறையைப் பல நபித்தோழர்கள் பல விதத்தில் அறிவித்துள்ளனர். அதில் ஸஹீஹான அறிவிப்புக்களில் எமது வசதிக்கேற்ப முறைகளைக் கடைபிடித்துத் தொழமுடியும். முடியாத பட்சத்தில் ஒரு ரக்அத்தையாயினும் தொழ வேண்டும்.


வித்ரில் என்ன ஸூராக்கள் ஓத வேண்டும்?


வித்ருத் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுதாலும் அவற்றில் பாத்திஹாவுக்குப் பின் வேறு ஸூராக்கள் ஏதாவதொன்று ஓதவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் இறுதி மூன்று ரக்அத்களில் என்ன ஓத வேண்டுமென்பதில் அறிஞர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். ஹனபிய்யாக்களிடம் குறிப்பிட்ட ஒரு ஸூரா தான் ஓத வேண்டுமென்ப தில்லை. ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தோர் இறுதி மூன்று ரக்அத்களில் முறையே ஸூரா அல்அஃலா (ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா), ஸூரா அல்காபிரூன், ஸூரா இஃலாஸ் ஆகிய மூன்றையும் ஒதுவது ஸுன்னத்தாகும். 
 
இம்மூன்று ஸூராக்களையும் நபியவர்கள் வித்ரில் ஓதியதாக உபைய் பின் கஃப் (ரலி) அறிவிக்கும் நபிமொழியை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர். (அஹ்மத் 21141, அபூதாவூத் 1423, நஸாஈ 1730). மாலிக் மற்றும் ஷாபிஈ மத்ஹபினர் இறுதி ரக்அத்தில் ஸூரா இஃலாஸுடன் சேர்த்து ஸூரா பலக், ஸூரா நாஸ் இரண்டையும் ஓத வேண்டும் என்ற கருத்திலுள்ளனர். இதற்கு ஆதாரமாக இப்னு ஜுரைஜ், ஆஇஷா (ரலி) அவர்களைத் தொட்டும், நபியவர்கள் இம்மூன்று ஸூராக்களையும் இறுதி ரக்அத்தில் ஓதியதாக வரும் செய்தியைக் கூறுகின்றனர் (அபூ தாவூத் 1424, திர்மிதீ 467, இப்னு மாஜாஃ 1173). மூன்றாம் ரக்அத்தில் ஸூரா இஃலாஸ் மாத்திரம் ஓத வேண்டுமென்பதே வலுவான கருத்தாகும். மேற்கூறிய ஆஇஷா (ரலி) அவர்களின் செய்தி இரு அறிவிப்பாளர் வரிசையில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதில் அப்துல் அஸீஸ் பின் ஜுரைஜ் என்பவர் விமர்சனத்திற்குரியவர் என்பதுடன் அவர்கள் ஆஇஷாவை சந்திக்காததால் இச்செய்தியை அவரிடமிருந்து கேட்க வாய்ப்பில்லை. 
 
அப்துல் அஸீஸிடமிருந்து இதனை அறிவிக்கும் கஸீப் பின் அப்திர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவரென இமாம்களான அஹ்மத், இப்னுஹுஸைமா, யஹ்யா பின் ஸஈத் அல்கத்தான் போன்றோர் கூறியுள்ளனர். இரண்டாவது அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் யஹ்யா பின் அய்யூப் என்பவரும் நினைவாற்றல் குறைந்தவரென விமர்சிக்கப்பட்டவர். இதே செய்தி ஹஸனுல் பஸரீ (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களைத் தொட்டும் நபியவர்கள் ஓதியதாக வரும் மற்றுமொரு செய்தி இமாம் தபரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத்தில் (8839) இடம்பெற்றுள்ளது. எனினும் இதுவும் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டது. ஹஸனுல் பஸரீ அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை என்றும், இன்னும் சில அறிஞர்கள் ஒரேயொரு ஹதீஸ் மாத்திரம் தான் அவரிடமிருந்து கேட்டுள்ளார்கள் என்றும் கூறுகின்றனர். ஆனால் அச்செய்தி இதுவல்ல என்பதும் ஊர்ஜிதமானது.  எனவே இது பற்றி வந்துள்ள இரு செய்திகளும் பலவீனமானதாக உள்ளதால் இறுதி ரக்அத்தில் ஸூரா இஃலாஸ் மாத்திரம் ஓதுவதே ஸுன்னத்தாகும்.


மிகுதி பகுதி இரண்டில் பார்க்கவும்

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget