ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 05

ஈமானின் அடிப்படைகள் (ருகுன்கள்)

ஈமானைப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தலாம். உள்ளத்தால் நம்பிக்கை கொண்டு, நாவினால் மொழிந்து, உறுப்புக்களால் செயற்படுத்துவதே ஈமான் ஆகும். இது அல்லாஹ்வுக்கு வழிப்படுவதன் மூலம் அதிகரிக்கின்றது. அவனுக்கு மாறு செய்வதன் மூலம் குறைவடைகின்றது.

ஈமான் கொள்ள வேண்டிய அம்சங்கள் ஆறாகும். அவை அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், ரஸூல்மார்கள், மறுமை நாள், கழா கத்ர் முதலியவற்றை நம்புதல் ஆகும்.

'(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஜிப்ரில் (அலை) அவர்கள் வந்து, அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதத்தையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நீங்கள் நம்புவதும், விதியை முழுமையாக நம்புவதும் ஆகும் என்று கூறினார்கள்'. (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி) (அறிவிப்பவர் உமர் (ரலி) , ஆதாரம் - முஸ்லிம் : 08)அல்லாஹ்வை ஈமான் கொள்ளுதல்

அல்லாஹ்வை ஈமான் கொள்வது பல விடயங்களை உள்ளடக்குகின்றன.

01. அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் என்பதை ஏற்றல். அதனை பின்வரும் நான்கு விடயங்கள் மூலம் அறியலாம்.

1. சுபாவம் : ஒவ்வொரு படைப்பும் சிந்திக்காமல், கற்றுக்கொள்ளாமல் அவற்றை படைத்த ஒருவன் இருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ளும் சுபாவத்திலேயே படைக்கப்பட்டுள்ளன. ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'ஒவ்வொரு பிறப்பும் (படைத்தவன் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ளும்) சுபாவத்திலேயே பிறக்கின்றன. எனினும் அவர்களது பெற்றோர்கள் தான் அவர்களை யூதர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், நெருப்பு வணங்கிகளாகவும் மாற்றுகின்றனர்'. (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) ஆதாரம் - புஹாரி : 1359)

2. அறிவு : தற்போதுள்ள, முன்னர் உண்டான படைப்புகள், இதற்கு பின்னர் படைக்கப்பட இருப்பவைகள் அனைத்திற்கும் படைத்தவன் ஒருவன் இருப்பது அவசியமே. ஏனெனில் எந்த ஒரு பொருளும் தன்னைத் தானே படைத்துக் கொண்டது என்றோ அல்லது இயற்கையாகவே உண்டானது என்றோ கூற முடியாது. பகுத்தறிவிற்குரிய இந்த அத்தாட்சியை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது 'அவர்கள் அடிப்படையின்றி படைக்கப்பட்;டார்களா? அல்லது அவர்களை (அல்லாஹ் தான்) படைத்தானா?'. (அல்குர்ஆன் - 52 : 35)

3. இறைவேதங்கள் : இறைவனால் அருளப்பட்ட வேதங்கள் அவனது படைப்புக்களுக்கு தேவையான, நீதியான சட்டங்களையே வழங்கிக் கொண்டிருக்கின்றன. இது படைப்பிற்கு என்ன தேவைகள் இருக்கின்றன என்ற தெளிவான அறிவை படைத்தவன் பெற்றிருக்கிறான் என்பதை உணர்த்துகிறது.

4. உணர்வுகள் : உணர்வுகளும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு சான்றாக இரண்டு விதங்களில் அமைகின்றன. அவை

முதலாவது : பிராத்திப்பவனின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவது, கஷ்டத்திற்குள்ளானவர்களுக்கு உதவியளிக்கப்படுவது போன்ற விடயங்களை நாம் பார்த்தும், கேட்டும் வருகின்றோம். இவையும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை உணர்த்துகின்றன.

இரண்டாவது : நபிமார்களுக்கு கொடுக்கப்பட்ட முஃஜிஸாத் எனும் அற்புதங்கள். உதாரணமாக நபி மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தடியைக் கடலில் அடித்ததும் அது இரண்டாகப் பிளந்தது. மரணித்தவர்களை ஈஸா (அலை) அவர்கள் உயிர்பெறச் செய்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் சந்திரனை இரண்டாகப் பிளக்கச் செய்தது. என்பவற்றைக் குறிப்பிடலாம்.பரிபாலனக் கோட்பாடு (தவ்ஹீதுர் ருபூபிய்யா)
02. அல்லாஹ்வை ஈமான் கொள்வதில் இரண்டாவது விடயமாக பரிபாலண கோட்பாடு இருக்கின்றது.

அது அல்லாஹ்வை அவனுடைய செயற்பாடுகளில் ஒருமைப்படுத்தல் என்பதாகும். இதற்கே ருபூபிய்யா என கூறப்படும். உதாரணமாக உணவளித்தல், ஆட்சிபுரிதல், கொடுத்தல், தடுத்தல், நன்மை, தீமையை ஏற்படுத்தல், மனிதனை உயிர்ப்பித்து, மரணிக்கச் செய்தல் போன்ற அவனது செயற்பாடுகளை குறிப்பிடலாம். அல்லாஹ் கூறுகிறான், 'அல்லாஹ் தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்'. (அல்;குர்ஆன் - 39 : 62). 


இஸ்லாம் மற்றும் பகுத்தறிவு சார்ந்த சான்றுகள்
இவ்வுலகையும் அதில் உள்ளவைகளையும் பற்றி சிந்தித்தால் படைத்து, பரிபாலிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அல்லாஹ் கூறுகிறான், 'நிச்சயமாக இது உண்மை என்பது அவர்களுக்கு தெளிவாகும் வரை பல பாகங்களிலும் அவர்களுக்குள்ளேயும் நமது அத்தாட்சிகளை நாம் அவர்களுக்கு காட்டுவோம். நிச்சயமாக உமது இரட்சகன் யாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது அவர்கள் விடயத்தில் போதுமானதாக இல்லையா?'. (அல்குர்ஆன் - 41 : 53)

அல்லாஹ் கூறுகிறான் 'எப்பொருளுமின்றி அவர்கள் படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள் படைக்கின்றவர்களா?. அல்லது அவர்கள் வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தனரா? மாறாக, அவர்கள் உறுதியாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள.; அல்லது அவர்களிடம் உமது இரட்சகனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது (அவற்றை) அவர்களே ஆதிக்கம் செலுத்துபவர்களா?'. (அல்குர்ஆன் - 52 : 35,36,37)

பரிபாலனக் கோட்பாட்டை இணைவைப்போரும் ஏற்றிருந்தனர்

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் கூட அல்லாஹ்வின் பரிபாலனக் கோட்பாட்டை ஏற்றிருந்தனர். ஆனால் சிலர் அதனை மறுத்துள்ளனர் என்பதை அல்லாஹ் எமக்கு படிப்பினையாக எடுத்துக் கூறுவதை அல்குர்ஆனில் அவதானிக்கலாம்.

அல்லாஹ் கூறுகிறான் 'பின்னர் நானே உங்களது உயர்ந்த இரட்சகன் எனக் கூறினான்'. (அல்குர்ஆன் - 79 : 24)

இவ்வசனத்தில் பிர்அவ்ன் தன்னை இரட்சகனாக கூறியதை விளங்கலாம். மேலும் நாத்திகர்கள், இப்ராஹீம் நபியுடன் வாதாடியவன் போன்ற சிலரும் இதை மறுத்துள்ளனர். அதேபோன்று சிலைகள், கற்கள் போன்றவற்றை வணங்கி அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தனர். சிலைகளை தமக்கும், அல்லாஹ்வுக்கும் மத்தியில் நெருக்கத்தையும், தொடர்பையும் ஏற்படுத்தக் கூடிய இடைத்தரகர்களாக பயன்படுத்தினர்.

அல்லாஹ் கூறுகிறான் 'வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்பீராயின் அவர்கள், அல்லாஹ் என்றே நிச்சயமாக சொல்லுவார்கள்; அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!' என்று நீர் கூறுவீராக எனினும், அவர்களில் பெரும்பாலானோர் அறியமாட்டார்கள்'. (அல்குர்ஆன் - 31 : 25)

அல்லாஹ் கூறுகிறான் இன்னும், அவர்களிடம் 'வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை - அது (காய்ந்து) மரித்தபின் உயிர்ப்பிப்பவன் யார்? என்று நீர் கேட்பீராயின் 'அல்லாஹ்' என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) 'அல்ஹம்துலில்லாஹ் - புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது' என்று கூறுவீராக எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறியமாட்டார்கள்'. (அல்குர்ஆன் - 29 : 63)


வினா இல - 05
ஈமானின் வரைவிலக்கணம் என்ன ?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget