ரவ்ழது ரமழான் வினா விடைப் போட்டி – 2018 || பாடம் 04

அகீதாவில் உள்ள கலைச்சொற்கள்

அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்


அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தினர் என்போர் வெற்றி பெற்ற கூட்டத்தினர் ஆவார்கள். இவர்கள் எவ்வித நெறிபிறழ்வுகளும் இன்றி 'தனது வழியிலும், தனது தோழர்கள் சென்ற வழியிலும் பயணிப்பார்கள்' என நபி (ஸல்) அவர்களே முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். இவர்கள் அல்குர்ஆனையும், ஸூன்னாவையும் மாத்திரம் தமது வாழ்வில் எடுத்து நடந்து, வழிகெட்ட கொள்கைகளின் பாதையை விட்டும் தூரமாகி நடப்பார்கள். சுமார் 14க்கும் மேற்பட்ட நபித்தோழர்கள் மூலம் இந்த சமூகமும் முன்சென்றோரைப் போன்றே பல பிரிவுகளாகப் பிரியுமென நபியவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'யூதர்கள் 71 கூட்டங்களாகப் பிரிந்தனர், கிறிஸ்தவர்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தனர், எனது சமூகம் 73 கூட்டங்களாகப் பிரியும், அதில் அனைத்தும் நரகில் நுழையும், ஒன்றைத் தவிர' என நபியவர்கள் கூறினார்கள், அந்த ஒரு கூட்டம் யாரென வினவப்பட்ட போது, 'நானும் எனது தோழர்களும் இன்றைய தினம் இருப்பதைப் போன்று இருப்பவர்கள்' என்றார்கள். இன்னும் சில அறிவிப்புக்களில் 'கூட்டமாக இருப்பவர்கள்' என்றும், 'இன்றைய தினம்' என்ற வாசகம் இல்லாமலும் இடம்பெற்றுள்ளது. (பார்க்க : அபூதாவூத் : 4596, 4597, திர்மிதி : 2640,2641 இப்னு மாஜா : 3992, தபரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் : 4886, ஹாகிம் : 444).

நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஆதாரபூர்வமானதை ஸலபுகள் விளங்கிய பிரகாரம் விளங்கி, பின்பற்றி நடப்பதன் காரணமாக அஹ்லுஸ்ஸூன்னா என்ற பெயரையும், வழிகெட்ட கூட்டத்தின் கருத்துக்களைப் பின்பற்றாது இஸ்லாமிய மார்க்கத்தில் உண்மையின் அடிப்படையில் ஒன்று சேர்ந்து நடந்ததன் காரணமாக ஜமாஅத் என்ற பெயரையும் இக்கூட்டத்தினர் கொண்டுள்ளனர். மேலும் இவர்கள் பின்வரும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றனர்.

1. அஹ்லுல் அதர்

2. அஹ்லுல் ஹதீஸ்

3. அத்தாஇபா அல்மன்ஸூரா

4. அல்பிர்கா அந்நாஜியா 


அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தின் சில அடிப்படைகள்

அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத்தின் அடிப்படைகள் பின்வருமாறு :

1. அல்குர்ஆன், ஸஹீஹான ஹதீஸ்கள், ஸலபுகளின் இஜ்மா போன்றன அவர்களின் அடிப்படைகளாகும்.

2. அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் முஸ்லிம்கள் அனைவருக்கும் கடமையானதாகும். ஸஹீஹான ஹதீஸ்களில் உள்ள செய்திகள் அனைத்தும் அனைவரும் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்களாகும்.



3. அல்குர்ஆனையும், ஸூன்னாவையும் விளங்கிக் கொள்ளும் விடயத்தில் அளவுகோலாக குர்ஆனிலும், ஸூன்னாவிலும் தெளிவாக இடம்பெற்றுள்ள வசனங்களும், ஸலபுகளும், அவர்களின் அணுகுமுறையின் பிரகாரம் சென்றோர் விளங்கிய முறைகளும் மிகப் பிரதானமானதாகும்.

4. மார்க்கத்தின் அடிப்படை அம்சங்கள் அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள். அதில் தமது கருத்துக்களை இடைச்செருகல் செய்ய யாருக்கும் இடம் கிடையாது.

5. இஸ்லாத்தினுள் புதிதாக இணைக்கப்பட்ட அனைத்தும் நூதன அனுஷ்டானங்களாகும். அவை அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகத்தின் பக்கம் கொண்டு போய் சேர்க்கும்.

6. அல்குர்ஆனும், ஸூன்னாவும் குறிப்பிடும் அனைத்து அம்சங்களையும் பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும். அதில் தெளிவான முரண்பாடுகள் எப்போதும் தோன்றாது. அவ்வாறு முரண்பாடுகள் தோன்றுவதாக சந்தேகம் ஏற்பட்டால் பகுத்தறிவை விட அல்குர்ஆன், ஸூன்னாவையே முற்படுத்த வேண்டும்.

7. இஸ்லாமிய கொள்கை சார்ந்த விடயத்தில் இதற்கென்று உத்தியோகப்பூர்வமாகப் பயன்படுத்தும் சொற்களையே அவசியம் பயன்படுத்த வேண்டும். புதிது புதிதாக உருவாக்கப்பட்ட சொற்களை உபயோகப்படுத்துவதை விட்டும் தவிர்ந்திட வேண்டும்.

8. தவறுகள் செய்வதிலிருந்து பாதுகாப்புப் பெற்றவர் நபி (ஸல்) அவர்கள் மாத்திரமாவார்கள். அவ்வாறே அவர்களது சமூகம் வழிகேட்டில் ஒன்று சேர்வதை விட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

9. நல்ல கனவுகள் என்பது யதார்த்தமானதாகும். அது நபித்துவத்தின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படுகின்றது.

10. ஸலபுகளின் வழிமுறை வஹிக்கு முன்னுரிமை வழங்குவதாகும். ஒரு ஹதீஸ் ஆதாரபூர்வமானதாக இருந்தால் அதுவே எனது கருத்தாகும் என இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த கப்ரில் அடக்கப்பட்டிருக்கும் நபியவர்களைத் தவிர ஏனைய அனைவருடைய வார்த்தைகளிலும் எடுத்துக் கொள்ள, நிராகரிக்க வேண்டியதும் உள்ளன என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் நபியவர்களின் கப்ரை சுட்டிக்காட்டிக் கூறினார்கள். எனது நூலில் ஹதீஸிற்கு மாற்றமாக ஏதாவது கருத்தைக் கண்டால் ஹதீஸை எடுத்துக் கொண்டு எனது கருத்தைப் புறக்கணித்து விடுங்கள் என்று இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். நீங்கள் என்னையோ, மாலிகையோ, ஷாபிஈயையோ, அவ்ஸாஇயையோ, ஸவ்ரியையோ கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர். அவர்கள் தமது கருத்துக்களை எங்கிருந்து பெற்றார்களோ அங்கிருந்தே நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள் என இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்து இம்மாபெரும் இமாம்கள் மத்ஹப் பிடிவாதத்தை விட்டு, வஹிக்கு முன்னுரிமை வழங்கும் படியே ஏவியுள்ளார்கள் என்பது தெளிவாக புரிகின்றது.



ஸலபுகள்

ஸலப் என்பதன் தமிழ் அர்த்தம் முன்சென்றோர் என்பதாகும். 'நானும் எனது தோழர்களும் இன்று இருப்பதைப் போன்று இருப்பவர்கள்' என்ற நபியவர்களின் கூற்றுக்கேற்ப அவர்களில் முதன்மையானவர்கள் நபியவர்களும் அவரது தோழர்களுமே. இவர்களை சரியான முறையில் பின்பற்றிய இஸ்லாத்தின் முதல் மூன்று சமூகங்களிலும் வாழ்ந்து மரணித்த சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும், அவர்கள் சென்ற வழியில் பயணிப்போரும் ஸலபுகளில் அடங்குவார்கள். அவர்கள் சென்ற வழிக்கு முரண்படுவோர்; பித்அத்வாதிகள் என்றே அழைக்கப்படுவார்கள்.

நபித் தோழர்கள் அல்குர்ஆனையும், ஸூன்னாவையும் அறிதல், விளங்குதல், செயலில் கொண்டு வருதல், அமுல்படுத்தல் என்ற அடிப்படையில்; பின்பற்றியவாறு ஸலபுகளும் இப்படியான வழிமுறையை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இவ்வழிமுறையே இறுதி நாள் வரை நீடித்திருக்கும். முஸ்லிம்கள் அனைவரும் இவ்வழியிலேயே பயணிக்க வேண்டும். இது தவிர மலைக்கும் மடுவிற்கும் பொருத்தமில்லாதது போன்ற பெயர்களைச் சூட்டிக்கொண்டு ஹவாரிஜ்கள், ராபிழாக்கள், ஷீயாக்கள், முஃதஸிலாக்கள், முர்ஜியாக்கள், ஜபரிய்யாக்கள், கதரிய்யாக்கள் என எத்தனை வழிகெட்ட கூட்டத்தினர் தோன்றினாலும் அவர்கள் அனைவரும் ஸலபுகளின் போக்கிற்கு முரணானவர்களே.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'எனது சமுதாயத்தில் உண்மைக்கு உதவி செய்ய ஒரு குழுவினர் இருந்து கொண்டே இருப்பார்கள். துரோகம் நினைப்பவர்களால் அவர்களுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்த முடியாது. அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை அவர்கள் இவ்வாறே இருப்பார்கள்'. (அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி), ஆதாரம் - முஸ்லிம் : 1920)



வஹ்ஹாபிகள்

இப்பெயர் இன்று நம் மத்தியில் பிரபல்யமாய் வியாபித்துள்ளது. இதன் முக்கியத்துவத்தையும், அதன் நிலைப்பாடுகளையும் அறிய முன்னர் இச்சொல்லின் உண்மை நிலை என்னவென்று அறிவது சாலச் சிறந்ததாகும்.

இது முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு ஸுலைமான் அத்தமீமீ அல் ஹன்பலீ என்பவரின் அழைப்புப் பணிக்கே; நிறைய மக்களால் பெயராகச் சூட்டப்படுகின்றது. இவர் தூய்மையான ஏகத்துவத்திற்காகவும், இணைவைத்தலுக்கு எதிராகவும் போராடியவராவார். மரணித்தவர்களிடம் வணக்கங்களை மேற்கொள்ளுதல், மரம், மட்டைகளை கடவுளாக வணங்குதல் போன்ற இணைவைத்தலோடு தொடர்புடைய விடயங்களை விட்டும் இஸ்லாத்தைப் பாதுகாக்க பெரும்பாடுபட்டவர் என்பதை நடுநிலையாக சிந்திப்போர் அறிந்து வைத்துள்ளனர். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் பிக்ஹில் ஹன்பலி மத்ஹபைச் சார்ந்தவர். ஆனால் அகீதா விடயத்தில் ஸலபுகளின் கொள்கையைக் கொண்டிருந்தார்கள்.

அரேபிய தீபகற்பத்தில் இவர் வாழ்ந்த பிரதேசங்களில் மக்கள் கல்லையும் மண்ணையும் வணங்கினார்கள். மந்திரித்த கயிற்றில் நம்பிக்கை வைத்திருந்தனர்.
 
வணக்க வழிபாடுகளை கப்றுகளில் உக்கி மண்ணோடு மண்ணாய் போனவர்களிடம் வேண்டலாயினர். இந்த வேளையில் தான் இமாமவர்கள் இவற்றுக்கெதிராக தனது அழைப்புப் பணியைத் தொடர்ந்தார்கள். தவறானவற்றைத் தெளிவுபடுத்தி, சரியான தூய இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்தார்கள். அந்நேரத்தில் அவருக்கு திர்இய்யா எனும் பகுதியில் கவர்ணராக இருந்த அல் இமாம் முஹம்மத் இப்னு ஸுஊத் என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

இவரின் அழைப்புப் பணியால் ஈர்க்கப்பட்ட கவர்ணரும், அவரது பிள்ளைகளும் இவரோடு சேர்ந்து அழைப்புப் பணியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அரேபிய தீபகற்பத்தில் இருந்த பெரும்பாலான இணைவைப்புக்கள் அழிக்கப்பட்டு, தூய இஸ்லாம் பரவ ஆரம்பித்தது. இவரின் அழைப்புப் பணியானது அல்குர்ஆன், ஸூன்னாவிற்கு உட்பட்டதாகவே இருந்தது. ஆனால் இன்று சமூகத்தில் இவரின் இத்தூய கொள்கைகளை ஆதரிப்போருக்கு வஹ்ஹாபிகள் எனப் பெயரிட்டு, அதற்குப் பல எதிர்மறையான கருத்துக்களையெல்லாம் தெரிவித்து வருகின்றனர்.

தூய இஸ்லாம் அரேபிய தீபகற்பத்தில் மீண்டும் மிளிர வேண்டும் என அரும்பாடுபட்ட இம்மாமனிதரை இன்று பல வன்சொற்களால் ஏசுவதை பார்க்கின்றோம். இணைவைத்தலுக்கு எதிராக இவரது போராட்டத்தை சிலர் வக்கிர மனம் கொண்டு விமர்சிப்பதையும் எழுதுவதையும் கண்கூடாக பார்க்கின்றோம். குறை கண்ணாடியணிந்து அவரை நோக்குவது மட்டுமல்லாது தவறான கடும்போக்கு சிந்தனைகளை அவர் மீது கட்டவிழ்த்துவிட்டு கூத்துப் பார்க்கின்றமையும் அவதானிக்க முடிகின்றது.

இங்கு நாம் மற்றுமொரு விடயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹஹாப் அவர்களுடைய அழைப்புப் பணியை மேற்கொள்வோருக்கு 'வஹ்ஹாபிகள்' என மக்கள் அழைக்கின்றனர். உண்மையில் இஸ்லாம் வளர்ந்து வருவதை ஜீரணிக்க முடியாத பிரிட்டிஷ் காலணித்துவவாதிகள் மக்களை சத்தியக் கொள்கையை விட்டும் தூரப்படுத்த தெரிவு செய்ததே இந்த 'வஹ்ஹாபிகள்' என்ற பெயராகும்.

காரணம், இதே பெயரில் வட ஆப்ரிகாவின் தாஹிறத் என்ற பகுதியில் பிறந்த அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் வஹ்ஹாப் இப்னு ருஸ்தும் என்பவனால் ஹிஜ்ரி 2ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஓர் வழிகெட்ட இயக்கம் உருவாக்கப்பட்டது. கவாரிஜ்களின் உட்பிரிவுகளில் ஒன்றான இபாழிய்யாக்களின் கொள்கையைத் தழுவி 'வஹ்ஹாபிகள்' என்ற பெயரில் அப்பகுதியில் இயங்கியது. ஹஜ், தொழுகை போன்ற பிரதான வணக்கங்களைப் பாழ்படுத்தி அவற்றை மறுக்கக்கூடிய கொள்கையை கொண்டிருந்தார்கள்.

இவர்கள் வழிகேட்டிலுள்ளவர்கள் என்பது அக்காலத்தில் வட ஆபிரிக்கா, மொரோக்கோ போன்ற பகுதிகளில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களினதும் ஒருமித்த கருத்தாகும். அக்காலத்தில் வாழ்ந்த அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்துடைய மக்களுக்கும், ருஸ்துமுடைய கொள்கைகளுக்கும் எதிராக பல போர்கள் இடம் பெற்றுள்ளன. இவன் தாஹிறத் பகுதியிலேயே மரணித்து அடக்கம் செய்யப்பட்டதால் அந்த ஊரின் பெயரை வஹ்ஹாயிய்யா என மாற்றிக் கொண்டனர்.

இவனுடைய தந்தை பெயரை அடிப்படையாக கொண்டு 'ருஸ்துமிய்யா', 'வஹ்ஹாபிய்ய ருஸ்துமிய்யா' போன்ற பெயர்களால் இக்கொள்கையுடையவர்கள் அழைக்கப்பட்டு இனங்காணப்பட்டனர். மேலும் மேற்கு ஆப்ரிகாவிலுள்ள முற்காலத்து அறிஞர்கள் இந்த வஹ்ஹாப் அல் ருஸ்தும் என்பவனையும் அவனது வழிகெட்ட கொள்கைகளை பின்பற்றுவோரையும் காபிர்கள் என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.

இவன் மரணித்து பல வருடங்களுக்கு பின்னர்தான் ஸஊதி அரேபியாவில் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்கள் பிறக்கின்றார்கள். எனவே வரலாற்று அடிப்படையிலும், கொள்கையிலும் இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் ;அவர்களுக்கும் அப்துல் வஹ்ஹாப் ருஸ்துமிற்கும் இடையில் மலைக்கும் மடுவிற்கும் இடையான வித்தியாசம் இருக்கின்றது.

இமாமவர்களுடைய அழைப்பு முறையை மக்கள் வெறுப்பதற்காக காலணித்துவவாதிகள் முடிச்சுப் போட முயன்றார்கள். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களது தஃவா முறைகளுக்கு வஹ்ஹாபிகள் என பெயரை சூட்டி அதில் வெற்றியும் கண்டு விட்டார்கள். வழிகேட்டிலுள்ள அவ்வியக்கத்தின் பெயரை இமாமவர்களின் ஸலபுகளைத் பின்தொடர்ந்த அழைப்பு முறைக்கு சூட்டி மிகப்பெரிய வரலாற்று உண்மையை மறைத்து விட்டார்கள்.

'வஹ்ஹாபிகள்' என்றாலே ஆரம்ப கால வழிகெட்ட இயக்கம் என்பது மறக்கடிக்கப்பட்டு இமாமவர்களின் அழைப்பு முறைதான் மக்கள் நினைவுக்கு வருகின்றது என்பது கவலைக்கிடமான உண்மையான விடையாகும். இன்று இணையத்தளங்களில் வஹ்ஹாபி என தேடலுக்குட்படுத்துகின்ற போது கூட இமாமவர்களது அழைப்பு பணியே விடையாக கிடைக்கின்றதென்றால் மேற்கெத்தேய உலகம் ஈட்டிய வெற்றியும், அஹ்லுஸ் ஸூன்னா வல் ஜமாஅத்தின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வும் புலப்படுகின்றது.

நல்ல விடயங்களை கற்கின்ற எம்மைப் போல நற்சிந்தனையுள்ள மக்கள் உண்மையான வஹ்ஹாபிகள் யார்? என்பதை தற்போது அறிந்துள்ளது போல் மேற்கத்தேய சவாலை முறியடித்து இதிலுள்ள உண்மைத் தன்மைகளை ஏனையவர்களுக்கும் பரப்ப முயற்சி செய்ய வேண்டும். இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அவர்களது அழைப்பு பணியை உண்மையாக விபரிக்க வேண்டும்.



வினா இல  - 04
 
இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வாஹ்ஹாப் அவர்கள் அகீதாவில் யாருடைய கொள்கையை பின்பற்றினார்கள் ?

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget