புகழனைத்தும் படைத்தவன் அல்லாஹ்வுக்கே. ஸலாத்தும் ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள், தோழர்கள், மறுமை வரை அவர்களை அழகிய முறையில் துயரும் அனைவர் மீதும் உண்டாவதாக.
இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அருளிய இஸ்லாம் இரு முக்கிய பகுதிகளைக் கொண்டது. 1. அல்குர்ஆன். 2. ஹதீஸ். இவ்விரண்டுமே இஸ்லாத்தின் பிரதான மூலாதாரங்களாகக் கருதப்படுகின்றன.
ஹதீஸின் பிரதான கூறுகள் :
இந்த ஹதீஸ் மூன்று விடயங்களை உள்ளடக்குகின்றது : நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் (அனுமதி). இன்னும் சில அறிஞர்கள் மேற்கண்ட மூன்றுடன் நபி (ஸல்) அவர்களுடைய குணங்கள் மற்றும் அங்க அடையாளங்களையும் ஹதீஸின் தனிக்கூறுகளாக அடையாளப் படுத்தியுள்ளனர்.
(1) நபி (ஸல்) அவர்களின் சொல் :
நபி (ஸல்) அவர்களுடைய கூற்றுக்களே ஹதீஸில் பிரதான இடம் வகிக்கின்றது. அவர்களின் கூற்று பின்வரும் மூன்றிலொன்றாகத்தான் பெரும்பாலும் இருப்பதை நாம் அவதானிக்கலாம்.
1. ஏவல் : இது ஒன்றோ கடமையானதாக (واجب அல்லது فرض) அல்லது விரும்பத்தக்கதாக (سنة அல்லது مستحب) இருக்கும். அதன் தரத்திற்கேற்ப அதனை அமுல்படுத்துவது அவசியமாகும். ‘ஒரு பேரீத்தம்பழத்துண்டை தர்மம் செய்தாயினும் நீங்கள் நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள்’ என்ற நபியவர்களின் கூற்றை ஏவலுக்கு உதாரணமாகக் கூறலாம்.
2. விலக்கல் : இது ஒன்றோ முற்றாகத் தடை செய்யப்பட்டதாக (حرام) இருக்கும். அல்லது வெறுக்கத்தக்கதாக (مكروه) இருக்கும். அதன் தரத்திற்கேற்ப தவிர்ந்து கொள்வது அவசியமாகும். ‘நீங்கள் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்’ என்ற கூற்றை விலக்கலுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
3. தகவல் : இது மேற்கண்ட ஏவலாகவோ அல்லது விலக்கலாகவோ இல்லாமல், முற்காலத்தில் நடந்த, எதிர்காலத்தில் நடக்கவிருக்கின்ற, அல்லது வேறு ஏதாவது ஒரு தகவலாக இருக்கும். இதனை உண்மைப்படுத்துவது அவசியமாகும். உதாரணமாக, குகையில் அடைபட்ட மூவரின் சம்பவம், மறுமை நாளின் அடயாளங்கள், மற்றும் இன்னோரன்ன தகவல்களைக் குறிப்பிடலாம்.
(2) நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் :
நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஸஹாபாக்களில் ஒருவர் ஒரு சொல்லைப் பயன்படுத்தி, அல்லது ஒரு செயலைச் செய்து அதனைத் தடுக்கக் கூடிய அல்லது தூண்டக் கூடிய வாய்ப்பிருந்தும் நபியவர்கள் மௌனமாக இருந்தால் அதற்கே அங்கீகாரம் அல்லது அனுமதி என்கிறோம். இது வாஜிப், ஸுன்னா, ஹராம், மக்ரூஹ் ஆகியவற்றுடன் ஐந்தாவது சட்டமாக مباح (அனுமதி) என்ற பெயரில் இணைகின்றது. இங்கு ஸஹாபாக்களில் ஒருவர்தான் சம்பந்தப்பட வேண்டுமெனக் கூறக் காரணம், காபிர்களுக்கு நபியவர்கள் அளித்த அங்கீகாரத்தை ஸுன்னாவாகக் கருத முடியாது. உதாரணமாக, வரிப்பணம் செலுத்திக் கொண்டிருந்த திம்மிகாபிர்களுக்கு அவர்களது வணக்கங்களை அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களிலேயே செய்ய அனுமதித்தார்கள். அதே போன்று அவர்களுடைய கலாச்சார முறைப்படியே கொடுக்கல், வாங்கல், திருமணச் சடங்குகள் போன்றவற்றை செய்ய அனுமதித்தார்கள். இது போன்றவற்றை நபியவர்களுடைய அங்கீகாரமாக எடுத்து நாமும் அமல்படுத்த முடியாது.
சொல் சார்ந்த அங்கீகாரம் :
நபி (ஸல்) அவர்களைப் பார்த்து ஒரு மனிதர் ‘எங்கள் தலைவரே, எங்கள் தலைவரின் புதல்வரே’ என்று புகழந்தார். அப்போது நபியவர்கள் ‘இதனுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ஷைத்தான் (இதற்கு மேலாகச் சொல்ல வைத்து) உங்களை வழிகெடுத்து விடாமலிருக்கட்டும்’ என்ற கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அஹ்மத் 13596, ஸுனனுந் நஸாஈ அல்குப்ரா 10007). இங்கு நபியவர்கள் ‘இதனுடன் நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதன் மூலம் அவர்களைப் பார்த்துத் தலைவர் என்று சொல்லுங்கள் என்றோ, வேண்டாம் என்றோ கூறாமல் அனுமதி மாத்திரம் வழங்கியதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
செயல் சார்ந்த அங்கீகாரம் :
நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் உடும்பு இறைச்சி சாப்பிட்டதை (புஹாரி 2575, 5391, முஸ்லிம் 1946, 1947) மற்றும் மதீனாவில் மஸ்ஜிதுந் நபவியில் எத்யோப்பிய வாலிபர்கள் சிலர் பெருநாள் தினத்திலே விளையாட, அதனை அன்னை ஆஇஷா (ரலி) அவர்களுக்குக் கண்டு ரசிக்க அனுமதித்தை (புஹாரி 454, முஸ்லிம் 892) செயல் சார்ந்த அங்கீகாரத்திற்குக் குறிப்பிடலாம். இங்கு நபியவர்கள் அவ்விளையாட்டைப் பார்த்து ஆர்வமூட்டவோ, தடுக்கவோ இல்லை. எனவே இது அனுமதியாகவே கருதப்படுகின்றது.
நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் என்பது ஸுன்னாவில் மூன்றாம் தரத்தில்தான் இருக்கின்றது. எனினும் இரண்டாம் தரத்திலுள்ள செயல் சார்ந்த ஸுன்னாக்களைப் பற்றி விரிவாகப் பேச இருப்பதால் அங்கீகாரத்தை முற்படுத்தியுள்ளேன்.
(3) நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள் :
நபி (ஸல்) அவர்கள் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ள செய்திகளே நபியவர்களின் செயற்பாடுகளாகும். நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் பின்பற்றத் தகுந்தவையா? அல்லது அதில் விதிவிலக்குகள் உள்ளனவா? என்பதை சற்று அலசுவதே இச்சிறு கட்டுரையின் நோக்கமாகும். இன்று சமூகத்தில் இது பற்றிய சரியான தெளிவின்மையே பல பிரச்சினைகளுக்கு வழிகோலுகின்றது. எதைப் பின்பற்றினால் நன்மை கிடைக்கும்? எதைப் பின்பற்றினால் நன்மை கிடைக்காது? என்பதைச் சரிவரப் புரிந்து கொண்டால் சமூகத்திலுள்ள பல பிரச்சினைகளுக்கு அல்லாஹ்வின் உதவியால் தீர்வு கண்டுவிடலாம்.
சமூகத்தில் மார்க்க விடயங்களை எத்திவைப்பதிலும், சமூகத்தைப் பண்படுத்துவதிலும் நபி (ஸல்) அவர்களின் சொல் எந்தளவு பங்களிப்புச் செலுத்துகின்றதோ அதே போன்றதொரு பங்களிப்பை நபியவர்களின் செயற்பாடுகளும் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால் அல்குர்ஆனுக்கும் நபி (ஸல்) அவர்களின் பெரும்பான்மையான கூற்றுக்களுக்கும் விளக்கமாக அமைவதே நபியவர்களின் இச்செயற்பாடுகள்தான் என்றால் அது மிகையாகாது. அதனால்தான் அன்னை ஆஇஷா (ரலி) அவர்களிடம் நபியவர்களின் குணங்களைப் பற்றி வினவப்பட்ட பொழுது ‘அவர்களுடைய குணங்கள் குர்ஆனாகவே இருந்தது’ என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 749).
வெளிரங்கமான மற்றும் சூசகமான செயல்கள் :
பொதுவாக செயல்களை நாம் எடுத்துக் கொண்டால் தெளிவான, வெளிரங்கமான செயல்களும் (صريح) உள்ளன. எழுத்து, சைக்கினை, விடையளிக்காமல் மௌனித்தல், ஒன்றை செய்யாமல் தடுத்துக் கொள்ளல், எத்தனித்தல், அனுமதியளித்தல் போன்ற தெளிவாக செயல் என்று கூற முடியாத சில சூசகமான (غير صريح) செயல்களும் உள்ளன.
நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகளிலும் இவ்விரு வகைகளும் உள்ளன. வெளிப்படையான செயல்கள் தெளிவாகவே உள்ளதால் அவை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் மௌனம் சாதிப்பது, ஒன்றை செய்யாமல் விட்டுவிடுவது போன்ற சூசகமான செயல்களை ஆதாரமாகக் கொள்வதற்குப் போதியளவு வெளிச்சான்றுகள் தேவை. இதனை அரபியில் قرينة அல்லது سياق என்று கூறுவார்கள்.
வெளிப்படையான செயல்களுக்கு நபியவர்களுடைய தொழுகை, நோன்பு, ஹஜ், ஏனைய வணக்கங்கள், கொடுக்கல், வாங்கல், எழுந்து நிற்றல், உட்காருதல், உறங்குதல், மனைவமார் உறவினர் தோழர்களுடன் நேசமாக நடத்தல், நிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்களுடன் மார்க்க விடயத்தில் விரோதித்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சூசகமான செயற்பாடுகள் சில :
1. எழுத்து (كتابة) : நபி (ஸல்) அவர்கள் எழுத்து மூலம் மன்னர்களுக்கு அழைப்புப் பணி விடுத்ததையும், அவர்களின் இறுதிக் காலத்தில் ஸகாத் பற்றிய சில சட்டங்களை அபூ பக்ர் (ரலி) அவர்கள் கொடுத்த ஓர் ஏட்டில் எழுதியதையும் சுட்டிக்காட்டலாம்.
2. சைக்கினை (إشارة) : தலை, கண்கள், கண்புருவங்கள், தோல்புயங்கள், உள்ளங்கைகள், விரல்கள் போன்றவற்றால் சுட்டிக்காட்டுவதே சைக்கினை என்கிறோம். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பல முறை சைக்கினை செய்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை தினத்தில் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் நேரத்தைப் பற்றிக் கூறும் போது தனது இரு விரல்களால் அது குறைந்தளவு நேரம் என்பதை சுட்டிக்காட்டினார்கள். (புஹாரி 935, முஸ்லிம் 852). அதேபோன்று அநாதைகளைக் கவனிப்போர் மறுமையில் தன்னுடன் இவ்வாறு நெருக்கமாக இருப்பர் என்று கூறிவிட்டு தனது ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் காட்டினார்கள். (முஸ்லிம் 2983) இது போன்று இன்னும் ஏராளமான உதாரணங்கள் உள்ளன.
3. மௌனம் சாதித்தல் (سكوت) : இரண்டு நோக்கங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் முன்வைக்கப்படக் கூடிய பிரச்சினைகளின் போது மௌனிப்பார்கள்.
1. அது பற்றிய சட்டம் தெரியா விட்டால் வஹீ இறங்கும் வரை மௌனிப்பார்கள். உதாரணமாக, மர்ஸத் பின் அபீ மர்ஸத் (ரலி) தனது ஜாஹிலிய்யாக் காலத்து பழைய தோழியாக இருந்த அனாக் என்பவளைத் திருமணம் செய்ய நபியிடத்தில் அனுமதி கேட்டார்கள். அப்பெண் மக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தவள். நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்காமல் வஹீ வரும்வரை மௌனித்தார்கள். அப்போது ‘விபச்சாரம் செய்யும் பெண்ணை விபச்சாரம் செய்யும் ஆண்தான் திருமணம் செய்வான்’ என்ற ஸூரா நூரின் 3ம் வசனம் இறங்கியது. நபியவர்கள் மர்ஸத் (ரலி) அவர்களை அழைத்து அப்பெண்னைத் திருமணம் செய்யாதீர் என்றார்கள். (அபூ தாவூத் 2051, திர்மிதீ 3177, நஸாஈ 3228).
2. அதற்குரிய தீர்வு இருந்தாலும் வேறொரு தடையிருப்பதன் காரணமாக மௌனிப்பார்கள். இவ்வாறான காரணங்கள் நிறைய உள்ளன. சில சந்தர்ப்பங்களில் கேள்விக்குரிய விடையை கிரகிக்கும் சக்தி கேட்டவருக்கு இல்லாமலிருக்கலாம். அல்லது சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கவனத்திற் கொண்டு ஆறுதலாக பதிலளிக்க வேண்டிய விடயமாக இருக்கலாம். அல்லது நடக்காத ஒரு விடயத்தைப் பற்றி கேட்கப்பட்டு, அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லாமலிருக்கலாம். அல்லது கேட்டவர் காபிராக அல்லது முனாபிக்காக இருந்து பரிகாசிக்கும் நோக்கில் கேட்டிருக்கலாம். இவ்வாறு பல தடைகளுக்காக சம்பந்தப்பட்ட விடயத்தில் தீர்வு இருந்தும் மௌனமாக இருப்பார்கள்.
4. அங்கீகரித்தல் (التقرير) : இது பற்றி நபி (ஸல்) அவர்களுடைய அங்கீகாரம் பற்றி சொல்லும் போது உதாரணங்களுடன் கூறினோம்.
5. ஒன்றை செய்யாமல் விட்டு விடல் : இதற்கு (سنة تركية) ஸுன்னா தர்கிய்யா என்று கூறுவார்கள். அது பற்றி கட்டுரையின் இறுதியில் கூறுவோம் இன்ஷா அல்லாஹ்.
இது போன்ற இன்னும் சூசகமான செயற்பாடுகள் உள்ளன. விரிவின்றி நிறுத்திக் கொள்கின்றேன்.
நபியவர்களுடைய பிரத்தியேகமான செயல்கள் :
நபி (ஸல்) அவர்கள் சில செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பார்கள். அவை அல்லாஹ் அவர்களுக்கு மாத்திரம் அனுமதித்திருப்பான். அல்லது கடமையாக்கியிருப்பான். அதில் நாம் அவர்களைப் பின்பற்றலாகாது. இவற்றுக்கு சில உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
1. இரவுத் தொழுகை நபியவர்கள் மீது கடமையாகும். வேறு ஆதாரங்களின் அடிப்படையில் உம்மத்தினருக்கு ஸுன்னத்தாகும்.
2. நோன்பைத் தொடர்ந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தினங்கள் இடையில் விடாமல் நோற்பது. இதனை விஸால் (وصال) என்று சொல்லுவார்கள்.
3. நான்கு பெண்களைக் காண அதிகமாக ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ளலாம்.
4. பெண் தரப்பில் வலீ இல்லாமல் திருமணம் செய்து கொள்ளலாம்.
5. அவர்களுடைய மனைவியரை வேறு யாருக்கும் மறுமணம் செய்யலாகாது.
6. இஸ்ரா, மிஃராஜ் பயணம் அவர்களுக்கு மாத்திரம் நிகழ்ந்த பயணம்.
தொடரும்...
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.