புனித மக்கா குத்பா பிரசங்கத்தின் தமிழாக்கம் - (2020/09/11) - நிந்தகம் இர்ஷாத்



புனித மக்காவில் இடம்பெற்ற ஜும்ஆப் பேருரையின் தமிழாக்கம் 

தலைப்பு: சில உபதேசங்களும், படிப்பினைகளும். 

உரை நிகழத்தியவர்: கலாநிதி அஷ்ஷேக் ஸாலிஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஹுமைத். 

திகதி: 1442/01/23 – 2020/09/11. 

முதல் பிரசங்கம்

அனைத்து விடயங்களையும் நிர்ணயித்து, நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் சொந்தமானது. அவனது அறிவாற்றலால் அனைத்தையும் வழிநடாத்திக்கொண்டிருக்கிறான். ஒவ்வொறு படைப்பினதும் ஆரம்பத்தையும், முடிவையும் அவனே நிர்ணயிக்கிறான். அவனது அருட்கொடைகளுக்கு எப்போதும் நான் நன்றிக் கூறிக்கொண்டே இருக்கிறேன். உண்மையாக வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லையெனவும், அவனுக்கு இணையாக யாரும் இல்லை எனவும் நான் சாட்சி கூறுகிறேன். அவன் இரட்சிப்பதிலும், இறைமைத்துவத்திலும் உயர்ந்துள்ளான். முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாவார்கள் என நான் சாட்சி கூறுகிறேன். அவர் இஸ்லாத்தின் அடையாளத்தை உயர்வாக்கினார். அவருக்கும் அவரின் குடும்பத்தார்கள், இஸ்லாத்தின் ஒளி விளக்காக இருந்த அவரின் தோழர்கள், அவரை நல்ல முறையில் பின்பற்றி, அவர் வழி செல்கின்ற அனைவருக்கும் இரவு பகல் பாராது அல்லாஹ்வின் அருளும், ஈடேற்றமும் என்றென்றும் உண்டாவதாக.

மக்களே! அல்லாஹ்வை அஞ்சுமாறு எனக்கும், உங்களுக்கும் நான் வஸிய்யத் செய்கிறேன். அல்லாஹ்வை அஞ்சி நடந்துகொள்ளுங்கள். அவன் உங்களுக்கு அருள் புரிவான். கராமத் என்பது இறையச்சத்தினால் ஏற்படுகிறது. கண்ணியம் என்பது அல்லாஹ்வை வழிபடுவதனால் ஏற்படுகிறது. இழிவு என்பது அவனுக்கு மாறுசெய்வதால் ஏற்படுகிறது. மனித நேயம் என்பது பிறருக்கு நல்லுபகாரம் செய்வதில் உள்ளது. காட்டுமிராண்டித் தனம் என்பது பிறரை துன்புருத்துவதில் உள்ளது. உங்களுக்கு ஏற்படும் எந்தவொரு துன்பத்திலும் அல்லாஹ் உங்களுக்கு எதிராக இருப்பதில்லை. அது அவனின் அருளாகவே உள்ளது. இவ்வுலகில் ஒரு மனிதனின் வாழ்வு பல கட்டங்களைக் கொண்டது. ஆதமுடைய மகன் அதன் ஒவ்வொரு கட்டத்திலும் தங்கிவிட்டு, அடுத்த கட்டத்திற்கு நகர்கிறான். ஒவ்வொரு மூச்சும் முடிவுக் காலத்தை நெருங்க வைத்து, எதிர்பார்ப்புகளை தூரமாக்குகிறது. இதில், ஒவ்வொரு நாளும் தன்னை சுயபரிசீலனை செய்து, இறுதி நாளில் தனக்கு பயனளிக்கும் விதத்தில் நல்ல செயல்களைச் செய்து, நல்ல முறையில் அல்லாஹ்வை சந்திக்க தயாராகுபவன் மாத்திரமே உறுதியோடு பயணிக்கிறான். அல்லாஹ் கூறுகிறான், அந்நாளில் (விசாரணைக்காக) நீங்கள் முன் நிறுத்தப்படுவீர்கள். உங்களில் மறைவான எதுவும் மறைந்து விடாது” (அல்குர்ஆன் 69:18).

முஸ்லிம்களே! ஒரு வருடம் முடிந்து இன்னொரு வருடம் ஆரம்பித்துள்ளது. இதில் பயன்பெறுபவர்கள் நேரங்களையும், நாட்களையும் நல்ல முறையில் பயன்படுத்தி, நல்ல செயல்களில் ஈடுபட்டவர்கள் மாத்திரமே. இதில் நட்டமடைவோர் வீணாக இருந்து விட்டு, துன்பங்களையும், கைசேதங்களையும் மாத்திரம் தக்கவைத்துக் கொண்டோரே.

சகோதரர்களே! அறிஞர்கள், மேதைகள் போன்றோர் கூறிய சில உபதேசங்களே இவைகள். இவற்றில் படிப்பினைகள் இருக்கலாம். சுயபரிசீலனை செய்வதற்கான சந்தர்ப்பமாகவும் இவை இருக்கலாம். ஒரு முஸ்லிம் ஓர் வருடத்தைக் கடந்து, அடுத்த வருடத்தை வரவேற்கிறான்.

முஸ்லிம்களே! இவ்வுலகம் சோதனைகள் நிறைந்தது. இங்கு துரோகங்கள் அழகாய் உள்ளன. அழிவுகள் பிரசித்தமடைந்துள்ளன. இவைகள் குறுகிய காலங்களுக்குள் மாறி மாறி ஏற்படும். அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அவை மக்களை வாட்டி வதைக்கும். அதிவெப்ப நெருப்பால் அவர்களை பொசுக்கிவிடும். ஆனாலும் மக்கள் சந்தோசமாகவும், மகிழ்வாகவுமே வாழ்கிறார்கள். எத்தனையோ பூத்துக் குழுங்கும் பூஞ்சோலைகள் அல்லாஹ்வின் கட்டளை வந்த பிறகு எரிந்து சாம்பலாகிப் போயுள்ளன. அல்லாஹ்வின் அடியார்களே! ஒரு கட்டத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் உலகம், இன்னொரு கட்டத்தில் கவலையால் அழுதுகொண்டிருப்பதை உங்களால் பார்க்க முடியும். நன்றாகக் கவனித்தால் அங்கு சிரிப்பதும் நீங்களே, அழுவதும் நீங்களே. எனவே உலகம் இச் சுற்றில் இருந்து எப்போதும் மாறப் போவதில்லை. மாறவேண்டியது உங்கள் உள்ளங்களே. நல்ல குணங்கள் மூலமும், நல்ல செயல்கள் மூலமும் உங்கள் உள்ளங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

சகோதரர்களே! படைப்பினங்களின் முடிவு பற்றிய அறிவு அவர்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் நாட்டமே அனைத்தை விடவும் மேலானது. ஆதமுடைய மகன் தனது எதிர்பார்ப்புகளை அறிந்தவன், முடிவு பற்றிய அறிவு இல்லாதவன், செயல்கள் பாதுகாக்கப்படுபவன், நோய்கள் பற்றிய தகவல் மறைக்கப்பட்டவன், பசியால் கைதாகுபவன், சாப்பிட்டே உயிரை மாய்ப்பவன், பூச்சிகளால் துன்புருத்தலுக்கு உள்ளாகுபவன், வறுமையால் உயிர்நீப்பவன். ஆகையால் நன்மை, தீங்கு, மரணம், வாழ்வு, மீள எழல் போன்ற எதையும் தன் கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சுய சக்தி இல்லாதவன்.

அல்லாஹ்வின் அடியார்களே! அறிஞகள் கூறுகிறார்கள், வானங்கள், பூமிகளைப் படைப்பதற்கு முன்னரே அல்லாஹ் சில விதிகளை நிர்ணயித்து விட்டான். தனக்கு வழிபடுவோரை கண்ணியப்படுத்துகிறான். தனக்கு மாறு செய்பவர்களை இழிவாக்குகிறான். எனவே கண்ணியம் என்பது அல்லாஹ்வை வழிபடுவதில் உள்ளது. இழிவு என்பது அவனுக்கு மாறு செய்வதில் உள்ளது. அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு ஒருவர் கட்டுப்பட்டு நடக்கும் அளவுக்கு அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை வழங்குகி, உலக மக்களின் உள்ளத்திலும் அவருக்கான கண்ணியமான  இடத்தை உண்டாக்குகிறான். இஸ்லாத்தில் சிறிது காலத்திற்குள் இன்னல்களும், சோதனைகளும் ஏற்படும். அதன் மூலம் அல்லாஹ் ஒருவரின் பொறுமையையும், இஸ்லாத்தில் அவருக்குள்ள பிடிமானத்தையும் சோதிப்பான். இதில் யாரது உள்ளத்தில் பலவீனம் உள்ளதோ அவர் நிராசையடைந்தும், தனது நிலைகளை தலைகீழாக மாற்றிக்கொண்டும் இச்சோதனையில் தோல்வியடைவார். இஸ்லாம் அல்லாஹ்வின் மார்க்கமாகும். அடியார்கள் மீதான அவனின் திருப்பொருத்தம் பாதுகாக்கப்பட்டுள்ளது. எவ்விதக் குறையுமில்லாமல், பலம் பொருந்தியதாக, பாதுகாப்பாக அவனது அருள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. இம் மார்க்கம் தனது அடையாளங்கள் மூலம் சிறப்புருகிறது. கடமைகள் மூலமும், விதிமுறைகள் மூலமும் நிலைபெற்றுள்ளது. இதில் சில சமயங்களில் கஷ்ட காலம் ஏற்படும் அல்லது கவலையை உண்டுபன்னும் சோகமான நிகழ்வுகள் ஏற்படும். இக்கவலைகள் அல்லாஹ்வை விசுவாசம் கொள்வோரின் உணர்வுகளைத் தூண்டி, அவர்களின் உள்ளத்தில் அல்லாஹ் பற்றிய நம்பிக்கை பரிபோகவில்லை என்பதை எடுத்துக் காட்டும். அத்தருணத்தில் இவ் உள்ளத்தை நிராசைகளாலும், வேறு சிந்தனைகளாலும் பலவீனமாக்கி விடாதீர்கள். நிராசையடைவோரும், வேறு சிந்னைகளால் பாதை மாறிப் போவோரும் தமக்குத் தாமே அநியாயம் செய்துகொள்கின்றனர். ஆனால் பொறுமை காத்து, நல்ல வழியில் செல்வோர் கண்ணியமாகவும், மனபலம் மிக்கவர்களாகவும் மாறிவிடுகின்றனர். இதுவே அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள அருளும், சிறப்பும், பாதுகாப்புமாகும்.

அன்புக்குரியவர்களே! அல்லாஹ்வை யார் சரியான முறையில் அறிந்துகொள்கிறாரோ அவரின் வாழ்வு தெளிவாகி, நல்ல முறையில் சென்றுகொண்டிருக்கும். படைப்பினங்களால் தமக்கு ஏற்படும் எந்த தீங்கினாலும் அது தனது பயணத்தை ஒரு போதும் நிறுத்தாது. ஓரிறைக்கொள்கைக்கு எதிரான பல தெய்வ வழிபாடு, ஸுன்னாவுக்கு எதிரான நூதன அனுஷ்டானங்கள், இறை கட்டளைகளுக்கு எதிரான மனோ இச்சைகள், இறை சிந்தனையைத் தடுக்கின்ற புத்திநீக்கம், மனத்தூய்மையை பாதிக்கும் கெட்ட சிந்தனைகள் போன்ற அனைத்தை விட்டும் ஒருவரின் உள்ளம் பரிசுத்தமாகி விட்டால் அவரது உள்ளம் அமைதியடையும். உள்ளம் அமைதியடைந்தால் இலகுவாக அவரால் சுவனம் செல்ல முடியும்.

அல்லாஹ்வின் அடியார்களே! வாழ்வாதாரம் பிரிக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை. விதி உண்மையானது. எதற்கும் அஞ்சத் தேவையில்லை. வெறுப்பு, குரோதம், முகஸ்துதி ஆகிய மூன்றைக் கொண்டு உங்கள் உள்ளத்தை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். உண்மை, உளத்தூய்மை, பேணுதல் ஆகிய மூன்றைக் கொண்டு உள்ளத்தை அழகுபடுத்துங்கள். அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல், இன்பத்திலும்,துன்பத்திலும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய மூன்றினாலும் உள்ளத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பலம், வாலிபம் ஆகிய இரண்டும் என்றும் நிலைக்காது. பிறரை மன்னித்தல், நற்குணம் ஆகிய இரண்டும் எப்போதும் பயனளிக்கக் கூடியவை. பேணுதல், பிறரின் தேவைகளை நிறைவேற்றல் ஆகிய இரண்டும் எப்போதும் உங்களை உயர்த்தக்கூடியவை. தர்மம், இரத்த உறவுகளை சேர்ந்து நடத்தல் ஆகிய இரண்டும் கஷ்டங்களை விட்டும் உங்களை பாதுகாக்கக் கூடியவை.

அறிந்து கொள்ளுங்கள்! பிறருக்கு நலவு செய்வது அன்பைப் பெருக்கும். பிறருக்கு தீங்கு விளைவிப்பது கோபத்தை ஈட்டித் தரும். விட்டுக் கொடுத்து, உடண்பட்டுச் செல்வது நேசத்தை நிலைக்கச் செய்யும். கருத்து வேறுபடுவது எதிர்ப்பை உண்டுபன்னும். உண்மை நம்பிக்கையையும், பொய் சந்தேகத்தையும் வளரச் செய்யும். நற்குணம் நல்ல  சிநேகிதங்களையும், தீய குணம் விரிசலையும் உண்டு பன்னும்.

அறிந்து கொள்ளுங்கள்! மனோ இச்சையானது அறிவுள்ளோரை ஏமாற்றுகிறது. உண்மையிலிருந்து ஒருவரை வெளியேற்றுகிறது. பகைமையானது நல்ல அறிவுரைகள், நேர்மை போன்றவற்றைத் தடுக்கிறது. பொய், அநியாயம் போன்றவற்றை வரவழைக்கிறது. சகோதரத்துவத்தில் ஒருவர் உண்மையாக இருப்பது குறைகளை ஏற்று, தவறுகளைத் தடுத்து, மனக் கசப்புகளை மன்னித்துவிடும் மனப்பாங்கை ஏற்படுத்துகிறது. இதன் போது ஒருவரை உறுதியாக நம்புவதற்கு எவ்வித ஆவணங்களும் தேவைப்படுவதில்லை. மக்கள் எப்போதும் புகழச்சியை விரும்புபவர்கள். அதில் குறைவைக்காதீர்கள். இதன் போது நயவஞ்சகத் தனத்தை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள். ஒருவர் தனது கவலையை முறையிட்டால் அவருக்கு ஆறுதல் கூறுங்கள். உங்களுக்கு ஒருவர் செய்த தவறை மன்னியுங்கள். தேவையோடு ஒருவர் வந்தால் அவரின் தேவையை நிறைவேற்றுங்கள்.

அன்பார்ந்தவர்களே! வெட்டியாக சமூகவலைத் தளங்களில் உலாவருவோரின் விமர்சனங்களிலிருந்து நீங்கள் நீங்கியிருக்கிறீர்கள் என்றால் அல்லாஹ்வை புகழ்ந்து கொள்ளுங்கள். இதனால் பாதிக்கப்படுவோரில் சிலர் மனக் குழப்பத்துக்கு ஆளாகி, மன உளைச்சல் அதிகரித்து, தமது முழு நேரத்தையும் இதை யோசித்தே அழித்துக் கொள்கின்றனர். மக்களின் குறைகளைப் பேசி இன்பம் காண்பவர்களிடம் திவால் நிலை உருவாகிறது. ஒருவரின் குறைகளை நுணுக்கமாக ஆய்வு செய்து, அதை வைத்து அரசியல் செய்வோருக்கு மத்தியில் அதிக பிரிவுகள் ஏற்படும். அவர்களின் நல்லவைகள் அல்லாஹ்விடத்திலும், மக்கள் மன்றத்திலிருந்தும் அழிந்து போகிறது. எனவே உங்களை விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்து, உங்கள் நேரங்களை வீணாக்காதீர்கள். பூரண அறிவுள்ளோரிடமிருந்து குறைவான வார்த்தைகளே வெளிப்படும். உடம்பின் குறைகளை ஆடை வெளிப்படுத்துகிறது. சிந்தனைக் குறைகளை விதண்டாவாதங்கள் வெளிப்படுத்துகின்றன.

உலகம் தன்னை கைவிடுவதற்கு முன் தானே உலகைக் கைவிட்டவர், கப்றுக்குள் செல்வதற்கு முன்னரே அதை அலங்கரித்துக் கொண்டவர், அல்லாஹ்வை சந்திப்பதற்கு முன்னரே அவனை சந்திக்கத் தயாரானவர் ஆகிய மூவரே புத்திசாளிகள். தனது செல்வாக்கை அறிந்துகொள்ளாதவரே மக்களில் அதிக செல்வாக்கைப் பெற்றவர். தனது சிறப்பை அறியாதவர்களே மக்களில் அதிக பேணுதலானவர். மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக இருப்பவரே அல்லாஹ்விடம் விருப்பத்திற்குரியவர். விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்குகளை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக. அல்லாஹ் கூறுகிறான், எனினும், எவர் (தர்மம்) கொடுத்து (அல்லாஹ்வை) அஞ்சி, இன்னும் நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு இலகுவானதை மேலும் நாம் இலகுவாக்குவோம். மேலும் எவன் உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வை விட்டும்) தன்னைத் தேவையற்றவனாகக் கருதி, நல்லவற்றைப் பொய்ப்பிக்கிறானோ அவனுக்கு சிரமத்திற்குரியதை நாம் இலகுபடுத்துவோம்” (அல்குர்ஆன் 92:05-10).

அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் அவனது வேதத்தின் வழிகாட்டுதலின் படியும், முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படியும் நன்மைகளைத் தருவானாக. அல்லாஹ் எனதும், உங்களதும், உலக முஸ்லிம்கள் அனைவரினதும் பாவங்களை மன்னித்தருள்வானாக. அவனிடமே நீங்கள் பாவமன்னிப்பு கேளுங்கள். அவன் இரக்கக் குணம் உடையவனும், மன்னிப்பவனுமாவான்.

 

இரண்டாம் பிரசங்கம்

திருப்திகரமான, விருப்பமான, சிறந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே எமக்கு அனைத்தையும் வழங்கி, நன்மைகளையும், சோதனைகளையும் தந்துள்ளான். அவனின் புகழ் அனைத்து படைப்பினங்களையும் உள்ளடக்கியது. அவன் நாடிய அனைத்தையும் அடையக் கூடியது. அவனின் விருப்பத்திற்கு இடையூராக எதுவும் இருக்காது. அவனின் புகழ் என்றும் ஓயாது. உண்மையாக வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என நான் சாட்சி கூறுகிறேன். அவனின் திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும், இறுதித் தூதருமாவார்கள் எனவும் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் அருளும், ஈடேற்றமும் அவனின் தூதருக்கும், அவரின் குடும்பத்தார்கள், தோழர்கள், இறுதி நாள் வரை அவரை சரியாகப் பின்பற்றும் அனைவர் மீதும் உண்டாவதாக.

அல்லாஹ்வின் அடியார்களே! அல்குர்ஆன் உங்கள் வாழ்வை பாதுகாக்கிறது. உங்களுக்கு மகிழ்வைத் தருகிறது. நீங்கள் செய்யவேண்டியவற்றைப் பட்டியலிடுகிறது. அல்லாஹ் கூறுகிறான், “(மரணம் எனும்) உறுதியானது உமக்கு வரும் வரை உமது இரட்சகனை வணங்குவீராக” (அல்குர்ஆன் 15:99). நீங்கள் பேசவேண்டிய விதத்தைக் குறிப்பிடுகிறது. அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக!” (அல்குர்ஆன் 17:53). நீங்கள் எவ்வாறு நடக்க வேண்டுமென கற்றுத் தருகிறது. பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.” (அல்குர்ஆன் 31:18). பேசும் போது குரலோசையின் அளவு எவ்வாறு இருக்க வேண்டுமென கற்றுத் தருகிறது. உனது குரலைத் தாழ்த்திக் கொள்!” (அல்குர்ஆன் 31:19). உங்கள் கலந்துரையாடலைப் பாதுகாக்கிறது. உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்!” (அல்குர்ஆன் 49:12). உங்கள் உணவுகளை சீராக்குகிறது. உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்!” (அல்குர்ஆன் 07:31). மேற்குறிப்பிட்ட  அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பின்வருமாறு கூறுகிறது, உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவையாகும்.” (அல்குர்ஆன் 17:31).

இது இவ்வாறிருக்க, யார் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவருக்கு எதுவும் அதிகரிக்காது. நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன்.” (அல்குர்ஆன் 14:07). அல்லாஹ்வை நினைவுபடுத்த மறந்துவிட்டால் அவனும் உங்களை நினைவுபடுத்திக் கொள்ள மாட்டான். எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்” (அல்குர்ஆன் 02:152). அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் எதையும் கேட்கக்கூடாது. என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்” (அல்குர்ஆன் 40:60). அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்காதவருக்கு வெற்றிக்கான எந்த உத்தரவாதமும் கிடையாது. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும்போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.” (அல்குர்ஆன் 08:33).

அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சி நடந்திடுங்கள். தனது பொறுப்பையும், கடமையையும் அறிந்துகொள்ள நினைப்பவர் இஸ்லாம் எனும் இவ் வெற்றிப் பாதையை உற்று நோக்கட்டும். அல்லாஹ் கூறுகிறான், அதைக் கவனிப்போருக்கு அது நன்மையாகும். அதைப் பார்க்காதிருப்போருக்கு அது கேடாகும்” (அல்குர்ஆன் 06:104), “யார் நல்லறம் செய்கிறாரோ அது அவருக்குரியது. யார் தீமை செய்கிறாரோ அது அவருக்கே எதிரானது.” (அல்குர்ஆன் 40:46), “நேர்வழி நடப்பவர் தனக்காகவே நேர்வழி நடக்கிறார். வழிகெட்டவர் தனக்கு எதிராகவே வழிகெடுகிறார்.” (அல்குர்ஆன் 10:108), “யாரேனும் கஞ்சத்தனம் செய்தால் அவர் தமக்கே கஞ்சத்தனம் செய்கிறார். அல்லாஹ் தேவைகளற்றவன். நீங்களே தேவைகளுடையோர்.” (அல்குர்ஆன் 47:38), “பாவம் செய்பவர் தமக்கு எதிராகவே அதைச் செய்கிறார்” (அல்குர்ஆன் 04:111), “நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார்” (அல்குர்ஆன் 27:40). இதுவே உண்மை. இவைகளே ஒவ்வொருவருக்குமான பொறுப்பின் எல்லைகள். ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்கு பிணையாக இருக்கிறான். இப்பொறுப்பில் மற்றவர்களுக்கு குறைவைப்பவர்களும், பிறரை நெறிபிரழ வைப்பவர்களும், பிறருக்கு அநியாயம் செய்பவர்களும் எவ்விதத்திலும் சாட்டு சொல்ல முடியாது.

நபி (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்துக் கூறுங்கள். அல்லாஹ் கூறுகிறான், அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்” (அல்குர்ஆன் 33:56).

முற்றும்


கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget