நேர் சிந்தனை, எதிர்மறை சிந்தனை... ஓர் இஸ்லாமிய நோக்கு - Fahir Zubair Gaffoori, Riyadhi B.A
எதிர்மறை சிந்தனை எம்மை ஆட்கொள்ள ஆரம்பித்திருக்கும் உளநோய். இயலாமை மற்றும் தோல்வி மனப்பாங்கின் வெளிப்பாடு. அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையில் ஏற்பட்ட பலவீனம். இதற்கு உதாரணமாக :
இந்த சமூகம் திருந்தாது. என்னால் முடியாது அல்லது அவர்களால் முடியாது. இந்த நோய் குணமாகாது. இவன் திருந்தவே மாட்டான். இவன் முன்னேறவே மாட்டான். இனிமேல் பிரச்சினைதான்...போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம்.
இவ்வாறான எதிர்மறையான வாசகங்களை அல்லாஹ்வின் அருள் விடயத்தில் நம்பிக்கையற்றவர்களே பயன்படுத்துவர். அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழப்பது பெரும்பாவங்களில் ஒன்றாக நபியவர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.
அதற்கு மாற்றமான நேர் சிந்தனை இஸ்லாம் போதிக்கும் அழகிய பண்புகளுல் ஒன்று.அல்லாஹ்வின் மீதான நல்லெண்ணத்தின் வெளிப்பாடு. தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டு. அது அனைத்தையும் சாதகமாக நோக்கும் உயர்ந்த குணம்.
ஒரு முஸ்லிம் தனது செயற்பாடுகள் அனைத்திலும் நேர் சிந்தனை கொள்வதுடன் பேராற்றலுடைய அல்லாஹ்வைப் பற்றி எப்போதும் நல்லெண்ணமும் கொண்டு நடக்க வேண்டும். அவன் மீது பூரண நம்பிக்கை வைக்க வேண்டும். அதுதான் உறுதியான ஈமான்...
"... உனக்குப் பயனளிப்பதையே நீ விரும்பு. இறைவனிடம் உதவி தேடு. தளர்ந்துவிடாதே..." ஹதீஸ்.
குறிப்பாக கஷ்டங்கள், சோதனைகள், பிரச்சினைகள் போன்ற ஈமானை பலமிழக்கச் செய்யும் அபாயகரமான நிலைமைகளில் நேர் சிந்தனையுடன் நடந்து கொள்வது எமது ஈமானை அதிகரிக்கச் செய்வதுடன் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கத்தையும் ஏற்படுத்தும்.
நபிகள் நாயகம் அவர்கள் மிகக் கடுமையான எதிர்ப்பையும் கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்தபோதும், ஆள்பலம் குன்றி பௌதீகக் காரணிகள் அனைத்தும் தனக்கு எதிராக இருந்தபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. எதிர் மறையாக சிந்திக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் மீதான முழு நம்பிக்கையுடன் நேர் சிந்தனையுடன் உறுதியாக இருந்தார்கள்.
எல்லா நிலைமைகளிலும் நம்பிக்கையூட்டும் நேர் சிந்தனை கொண்ட நல்ல வார்த்தைகளையே பேசினார்கள்; அவற்றையே விரும்பினார்கள்.
" பறவை சகுனம் எதுவுமில்லை. ( நேர் சிந்தனையுள்ள) நம்பிக்கையூட்டும் நல்ல வார்த்தை எனக்கு விருப்பமானதாகும்" ஹதீஸ்.
மக்கா வாசிகளின் கொடுமைகள் தாங்காது நபியவர்கள் தாயிப் நகருக்குச் சென்றார்கள். அங்கும் பயங்கரமான துயரங்களை அனுபவித்தவர்கள் அங்கிருந்தும் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அவ்வேளை வானவர் ஒருவர் வருகை தந்து தாயிப் மக்களை அழித்து விடவா என்று நபியவர்களிடம் கேட்டபோது : "வேண்டாம். இவர்களின் வழித்தோன்றல்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத அவனை மட்டுமே வழிப்படுவோரை அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன்". என்றார்கள்.
☝️உச்சபட்சமான துன்பத்திலும் எவ்வளவு அழகான நேர்சிந்தனை. அல்லாஹ்வின் மீதான எவ்வளவு ஆழமான நம்பிக்கை.
அதுபோல்தான் ஏனைய நபிமார்களும் அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையுடனும் நேர் சிந்தனையுடனும் பயணித்துள்ளனர்.
கடுமையான நோயையும் கஷ்டங்களையும் எதிர்கொண்ட அய்யூப் நபியவர்கள் ஏன் பொறுமை செய்தார்கள்...
இப்ராஹீம் நபியவர்கள் நெருப்புக்குள் வீசப்பட்டபோது ஏன் அஞ்சவில்லை...
தன் மகன் யூஸுப் நபியைப் பறிகொடுத்த யஃகூப் நபியவர்கள் ஏன் நம்பிக்கை இழக்கவில்லை...
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்தின் போது குகையில் அபூபக்ர் ரழி அவர்களுடன் இருந்த வேளை ஏன் கவலைப்படவில்லை...
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் கிடைக்குமென்று நேர் சிந்தனை கொண்டதுடன் அவன் மீது அசையாத நம்பிக்கை வைத்து நல்லெண்ணமும் கொண்டார்கள்... அதனால் வெற்றியும் பெற்றார்கள்.
"அல்லாஹ் கூறினான்: என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்து கொள்வேன்" அல் ஹதீஸ் அல் குத்ஸீ.
எனவே தேவையற்ற எதிர்மறை சிந்தனை தேவையற்ற முடிவுகளையும் ஈடு செய்யமுடியாத இழப்புக்களையும் ஏற்படுத்தலாம். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வோம். நல்லதையே எண்ணுவோம். நேர் சிந்தனையுடன் பயணிப்போம்.
இறைவனின் பாதையில் மறுமைக்காகப் பயணிப்பவர்கள் என்றும் நேர் சிந்தனையுடனேயே செயற்படுவார்கள். எதிர்மறை சிந்தனைகளைக் விட்டுவிட்டு நேர் சிந்தனை உள்ளவர்களாக எம்மை மாற்ற முயற்சி செய்வோமாக. அதுதான் இவ்வுலகிலும் பயனளிக்கும்; மறுமையிலும் பயனளிக்கும்...
-பாஹிர் சுபைர்-
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.