தற்காலத்தில் பெருநாள் தொழுகை சம்மந்தமான வழிகாட்டல்கள் - நிந்தகம் இர்ஷாத் ஸஹ்வி M.A Reading



எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அல்ஹம்து லில்லாஹ்... 

இறைவன் இவ்வுலக மக்களுக்கு இஸ்லாத்தின் பிரதான இரு கடமைகளோடு தொடர்புபடுத்தி இரு பெருநாட்களை கடமையாக்கியிருக்கிறான். 

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது அந்த மக்கள் இரண்டு நாட்களில் விளையாடி மகிழ்பவர்களாக இருந்தார்கள். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் இந்த இரண்டு நாட்களுக்கு பகரமாக வேறு இரு நாட்களை ஆக்கியிருக்கிறான் என்று கூறினார்கள். ( அஹ்மத் : 1134 ) 

முதன் முதலாக ஹிஜ்ரி 2ம் ஆண்டு நோன்பு பெருநாள் தொழுகையை நபியவர்கள் தொழுதார்கள். 

இந்த வருடத்தினுடைய நோன்பு, பெருநாள் தயார்படுத்தல்கள் ஏனைய காலங்களை விட பெரிதும் வித்தியாசமானதாக இருக்கிறது. இது வரை நாம் யாரும் பாத்திராத, கேட்டிராத அளவு நீண்ட காலமாக பள்ளிவாயல்கள் மூட்டப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் காணப்படுகின்றனர். பெருநாளுக்கென்று தனித்துவமான சிறப்புகள் இருக்கின்றன. அத்தினத்தில் எல்லோருடைய முகத்திலும் ஆனந்தம் பொங்கி வழிகிறது. மக்களிடத்தில் அதற்கென்று தனித்துவமான இடம் இருக்கிறது. 

இமாம் இப்னு தைமிய்யாஹ் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது இஸ்லாத்தின் தனித்துவங்களில் பெருநாள் மிகவும் மகத்தானது என்று வர்ணிக்கிறார்கள். (மஜ்மூ பாதாவா 23/161 ) 

இத்தனையையும் தாண்டி இந்த வருடத்தினுடைய நோன்புப் பெருநாளை பெரும் சோதனைக்கு மத்தியில் கழிக்க இருக்கிறோம். அல்லாஹ் இந்த சோதனையில் இருந்து நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. இவ்வாறான சோதனைகள் நிகழும் போது நாம் எவ்வாறு பெருநாள் தினங்களை கழிக்க வேண்டும், எப்படி அதனை தொழ வேண்டும், குத்பா பிரசங்கம் செய்ய வேண்டுமா? பெருநாள் சம்மந்தமான வழிகாட்டல்கள் போன்றவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

இமாம் இப்னு ரஜப் அவர்கள் குறிப்பிடும் போது பெருநாள் தொழுகைக்கு பின்வரும் நிபந்தனைகள் அவசியமா? என்பதில்தான் கருத்துவேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன. அவை என்னவெனில் பெருநாளுக்கென்று குறிப்பிட்ட எண்ணிக்கை, அதேபோன்று அதனை நிறைவேற்றுபவர் ஊர்வாசியாக இருத்தல், அதனை நிறேவேற்ற இமாமின் அனுமதியை பெற வேண்டுமா? என்ற மூன்று விடயங்களை மையப்படுத்தி அறிஞ்சர்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. 

இதில் அதிகமான அறிஞர்கள் இந்த நிபந்தனைகள் அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். எனவேதான் பெருநாள் தொழுகையை பிரயாணி, நோயாளி, அதனை ஜமாஅத்தாக தொழுவதை விட்டும் தக்க காரணங்களுக்காக தவற விட்டவர்கள் தனியாகவோ அல்லது ஜமாஅத்தாகவோ நிறைவேற்றலாம். ஆனால் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது அவ்வாறு தொழுகையை நிறை வேற்றுபவர் பெருநாள் தொழுகைக்குப் பின் இமாம் உரை நிகழ்த்துவது போன்று உரை நிகழ்த்தக் கூடாது. (பத்ஹுல் புஹாரி : 9/79) 

இமாம் புஹாரி அவர்கள் தனது நூலில் எவருக்கு பெருநாள் தொழுகை தப்பிவிடுகிறதோ அவர் இரண்டு ரகத்துக்கள் தொழுதுகொள்ள வேண்டும். அவ்வாறுதான் பெண்களும், வீடுகளில், கிராமங்களில் உள்ளவர்களும் தொழுதுகொள்ள வேண்டும். ஏனெனில் நபியவர்கள் கூறினார்கள்: இது இஸ்லாமியர்களின் பெருநாளாகும். 

இமாம் புஹாரியின் ஹதீஸிற்கு விரிவுரை வழங்கும் போது இமாம் ஐனீ மற்றும் கிஸ்தலானீ போன்றவர்களும் இதே கருத்தை குறிப்பிட்டுள்ளனர். ( பார்க்க: உம்தத்துல் காரீ 6/308, இர்ஸாதுஸ் ஸாரீ 2/226) 

எனவேதான் யாரும் நோயாளி, பிரயாணி என்ற வித்தியாசமின்றி அனைவரும் இஸ்லாமியர்கள் என்ற அடிப்படையில் இரண்டு ரக்அத்துகள் தொழுதுகொள்ள வேண்டும். 

அனஸ் இப்னு மாலிக் (ரஹ்) தனது அடிமையான இப்னு அபீ உத்பாவை ஸாவியா என்ற இடத்தில் குடும்பத்தினரையும் பிள்ளைகளையும் ஒன்று சேர்க்குமாறு ஏவி நகரங்களில் தொழுகை நிறைவேற்றப்பட்டது போன்று தக்பீர்கள் கூறி தொழுகை நடத்துவார்கள். ( பத்ஹுல் பாரி 2/475) இந்த சந்தர்ப்பத்திலும் தொழுது முடிந்ததன் பின் குத்பா நிகழ்த்தியதாக எவ்வித அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. (ஸாவியா என்ற இடம் பஸராவில் இருந்து சற்று தூரமான இடமாகும்) 

இவ்வாறு அவர்கள் தொழுவித்தது முதலில் இமாம் திடலில் தொழுகை நடாத்தி குத்பா செய்த பின் இடம்பெற்றிருக்கிறது. எனேவதான் பெருநாள் தொழுகையை தக்க காரணங்களுக்காக தவற விட்டவர் அதனை இரண்டு ரகத்துக்கள் கொண்டதாக முதல் ரக்அத்தில் ஆரம்ப தக்பீர் தவிர்த்து ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஸுஜுதில் இருந்து எழும்பும் தக்பீரை தவிர்த்து ஐந்து தக்பீர்கள் கூறி இரன்டு ரக்அத்துகளிலும் அவ்வாறு தக்பீர்கள் கூறியதன் பின் சத்தமிட்டு சூரத்துல் பாத்திஹாவுடன் இன்னுமொரு சூராவை ஓதி அந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும். 

இயலாமை போன்ற தக்க காரணங்கள் இருக்குமா இருந்தால் அதனை வீடுகளில் ஜமாஅத்தாக அல்லது தனிமையில் தொழுது கொள்ள முடியுமென இமாம் புஹாரி, இப்னு தைமியாஹ் போன்ற பல அறிஞ்சர்கள் கூறியுள்ளனர். 

பெருநாளுக்கென்று குறிப்பிட்ட எண்ணிக்கை, அதேபோன்று அதனை நிறைவேற்றுபவர் ஊர்வாசியாக இருத்தல், அதனை நிறேவேற்ற இமாமின் அனுமதியை பெற வேண்டும் என்பன நிபந்தனையாகும் என்று கருதுபவர்கள் எவருக்கு பெருநாள் தொழுகை தப்பிவிடுகிறதோ அவர் வீட்டில் அதனை நான்கு ரக்அத்துக்களாக தொழுது கொள்ள வேண்டும், பெருநாள் தொழுகை முடிந்து விட்டது என்றும் பெருநாள் தொழுகை போன்று அதனுடைய வடிவில் மேலதிகமான தக்பீர் கூறி இரண்டு ரக்அத்துக்கள் தொழ முடியாது என்கிறார்கள். இதற்கு ஆதாரமாக இப்னு மஸ்ஊத் (ரழி), இமாம் தவ்ரீ மற்றும் இஸ்ஹாக் போன்றவர்களின் கூற்றை ஆதாரமாக முன்வைக்கிறார்கள். (பத்ஹுல் பாரீ 9/81-82) ஆனால் இவ்வாறான நிபந்தனைகள் அவசியம் இல்லை என்பதே சரியான கருத்தாகும். 

பெருநாள் தொழுகைகள் சுன்னத்தான தொழுகைகளாகும். இத்தொழுகைகைகள் அடிப்படையில் மகிழ்ச்சியான அந்த தினத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டாக நிறைவேற்றும் ஓர் வணக்கமாகும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் எங்கும் பெருநாள் தொழுகைகள் திடலிலோ அல்லது பள்ளிவாயல்களிலோ நடைபெறாது. 

ஆனால் அப்படி இருந்தும் அதனை வீடுகளில் தொழுது கொள்ள வேண்டும் ஆனால் தொழுகையின் பின் குத்பா பிரசங்கம் செய்ய கூடாது என தற்போதைய நவீன கால அறிஞ்சர்களான சவூதி அரேபியாவின் பிரதான முப்தி அப்துல் அஸீஸ் ஆலு ஷைஹ், ஸாலிஹ் அல்பவ்ஸான் ஸஃத் ஹத்லான் போன்றவர்களும் எகிப்து, ஜோர்டான், குவைத், அல்ஜீரியா, இலங்கை போன்ற நாடுகளின் மார்க்க தீர்ப்பு வழங்க உத்தியோகபூர்வமாக அனுமதி பெற்ற நிறுவனங்களும் இவ்வாறு மார்க்க தீர்ப்பு வழங்கியுள்ளன. 

ஆகேவ ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்ற குடும்ப தலைவர்கள், பாதுகாவலர்கள், பொறுப்பாளர்கள் தங்களுக்கு கீழ் இருக்கின்றவர்களை ஒன்று சேர்ந்து மேலுள்ள பிரகாரம் பெருநாள் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றுவது சுன்னத் ஆகும். அதன்பின் அவர்களை வைத்து குத்பா செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. தனக்கு பின் ஒருவரை வைத்துக்கொண்டு தொழுகை நடாத்தினாலும் அதுவும் ஜமாத்தாக கணிக்கப்படும். இவ்வாறு வீட்டில் தொழுகை நடாத்தும் போது விடுபட்ட தொழுகையை வீட்டில் தொழுதோம் என்று இல்லாமல் அதனை உரிய நேரத்தில் உரிய முறைப்படி தொழுது இருக்கிறோம் என்று கருத வேண்டும். 

பெருநாள் தினத்தில் கூறப்படும் தக்பீரை பொறுத்தவரை பல ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் வந்துள்ளன. எது தனக்கு மனனமாக, எளிதாக இருக்கிறதோ அதனை கூறிக்கொள்வது, பெருநாளுடைய தினத்தில் குளித்து நறுமணம் பூசி இருக்கிற ஆடைகளில் சிறந்ததை அணிவைது, தக்பீர் சொல்லுவது போன்றன சுன்னத்தான காரியங்களாகும். அதேபோன்று நோன்புப் பெருநாள் என்றால் எதாவது சாப்பிட்டதன் பின்னும் ஹஜ் பெருநாள் என்றால் சாப்பிடாமலும் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ( திர்மிதி 542 ) 

பெருநாள் தொழுகை தொழும் நேரம் என்னவெனில் நோன்புப் பெருநாள் என்றால் சூரியன் உதித்ததில் இருந்து இரண்டு ஈட்டியளவு உயர்ந்ததின் பின்னும் ஹஜ் பெருநாள் என்றால் ஒரு ஈட்டி அளவு உயர்ந்ததின் பின் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும். ஒரு ஈட்டி அளவு என்பது சுமார் 15 நிமிடங்களாகும். 

பெருநாள் தொழுகைகள் அதான், இகாமத் இல்லாத இரண்டு ரக்அத்துகள் கொண்ட தொழுகைகளாகும்: ஒரிரு தடவை அல்லாமல் பல தடவை நபி ( ஸல் ) அவர்களுடன் தொழுதுள்ளேன். அவர்கள் அதான், இகாமத் இல்லாமல் பெருநாள் தொழுகையை ஆரம்பிப்பார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் ( ரலி ) ( முஸ்லிம் 885 ) 

நபி ( ஸல் ) அவர்கள் நோன்பு பெருநாள் தினத்தன்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். இன்னும் அதற்கு முன்னாலோ, பின்னலோ எந்த தொழுகையையும் தொழவில்லை. அறிவிப்பாளர் : இப்னு உமர் ( ரலி ) ( புஹாரி 989 முஸ்லிம் 884 ) 

நபி ( ஸல் ) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதலாவது ரக்அத்தில் ஏழு தடவை தக்பீரும் இறுதி ரக்அத்தில் ஐந்து தடவை தக்பீரும் சொன்னார்கள். ( அஹ்மத் 2/180 ) 

இமாம் இப்னுல் கையும் அவர்கள் கூறுகிறார்கள் : இந்த தக்பீர்களுக்கு இடையில் குறிப்பிட்ட எந்த துஆவும் கிடையாது மாறாக சற்று அமைதியாக இருக்க வேண்டும். ( ஸாதுல் மஆத் 1/443 ) கதீஸ்களில் பலவாறான வாசகங்கள் இடப்பெற்றுள்ளன. ஆனால் ஒருவர் அவற்றுக்கிடையில் தான் விரும்பிய துஆவை ஓதி பிரார்த்தனை செய்து கொள்ளலாம். 

பெருநாள் தின வாழ்த்தை பொறுத்தவரையில் பெருநாள் தினத்தில் சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது “”தகப்பலல்லாஹு மின்னா வமின்க’” என்ற வாசகத்தை ஓதி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். எனவே இதனை நாமும் கூறி ஏனைய வாழ்த்துகளை விட்டுவிடுவது சாலச் சிறந்ததாகும். 

பெருநாள் தினம் என்பது ஒரு சந்தோஷமான தினம், அதிலே ஒவ்வொருவரும் உண்டு, குடித்து மகிழ்ந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். அதனால் தான் நபியவர்கள் அத்தினங்களில் நோன்பு பிடிப்பதை தடை செய்திருக்கிறார்கள். நண்பர்களுக்கு மத்தியில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவேண்டும். குடும்ப உறவுகளை புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக அத்தினத்தில் யாரும் பகைமை பாராட்டக்கூடாது. இச்சந்தர்ப்பத்தில் அதிகமதிகம் நமக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை முற்று முழுதாக நம்மை விட்டும் ஒழிய வேண்டுமென பிரார்த்திக்க வேண்டும். 

உண்மையில் சிலர் இவ்வளவு நாளும் நாம் பெருநாள் தொழுகையை சரியான முறையில் தொழுது வந்திருந்தோம். இன்று அவ்வாறு தொழ முடியாமல் இருக்கிறோம் என்று மனக்கவலை கொள்கிறார்கள். யதார்த்தம் அவ்வாறல்ல நாம் தகுந்த காரணங்களினால் தொழ முடியாதவர்களாக இருக்கிறோம். அடுத்தவருக்கு தீங்கு இழைக்கக்கூடாது என்பதற்காக தமது வீடுகளில் முடங்கி இருக்கிறோம். இதுவும் நன்மையான காரியமாகும். தமது எண்ணம் சரியாக இருக்குமானால் அல்லாஹ் அதற்கு கூலி வழங்குகிறான். 

நபியவர்கள் கூறினார்கள்: ஒரு அடியான் நோய்வாய்ப்பட்டால் அல்லது பிரயாணம் செய்தால் அவன் ஊரிலே சுகதேகியாக இருக்கும் போது செய்த அமல்களுக்கு கூலி கொடுக்கப்பட்டதை போன்று கூலி கொடுக்கப்படுகிறான். (புஹாரி: 90) 

மேற்கூறப்பட்ட ஹதீஸின் விளக்கம் யாதெனில் ஒருவர் தனது வாழ்நாளில் தஹஜ்ஜுத் தொழுகையை தொடராக தொழுது வருகிறார் எனின் அவர் நோய்வாய்ப்படும் போது அவ்வாறு அவரால் தொழ முடியாமல் போனால் அவர் முன்னர் செய்த அமலுக்கு கூலி கொடுக்கப்பட்டவர் போன்று இப்பொழுதும் நன்மை செய்து கொண்டிருப்பவராக கருதப்படுகிறார். அவர் தொழாமல் இருந்ததற்கான காரணம் அவருக்கு ஏற்பட்ட நோய். அவர் குணமடையும் போது மீண்டும் தஹஜ்ஜுத் தொழுகையை தொழுது கொள்வார். 

அது போன்றுதான் பிரயாணி ஒருவர் பயணம் செய்யும் போது அதன் சிரமத்தினால் சுன்னத்தான வணக்கங்கள் செய்ய கஷ்டமாக இருக்கும். இதற்கு முன் அவர் தொடராக சுன்னத்தான காரியங்களில் ஈடுபட்டு வந்திருப்பாரானால் அவர் பிரயாணத்தில் இருந்து கொண்டிருந்தாலும் நன்மைகளை கொள்ளையடித்த மனிதராக மாறுவார். இவ்வாறு அல்லாஹ் தன் அடியார்களுக்கு கூலி வழங்குகிறான். அவன் தன் அடியார்களோடு மிகுந்த அன்பு கொண்டவன். 

இந்த சோதனை காலத்திற்கு முன் நாம் பெருநாள் தொழுகைகளை தொழுதுவந்திருந்தால் இந்த காலத்திலும் நாம் பெருநாள் தோழிக்காயை உரிய முறையில் தொழுத மக்களாக கணக்கிடப்பட்டு அதற்கு கூலி வழங்கப்பட்ட மக்களாக மாறுவோம். அல்லாஹ் அந்த நல்லடியார்களில் நம் அனைவரையும் சேர்ப்பானாக. 

எனவே இவ்வாறு இஸ்லாம் கூறிய முறையில் இவ்ஈகை திருநாளை சந்தோசமாக கழிக்க இறைவன் நமக்கு அருள் புரிவனாக... ஆமீன் 

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget