ரமழான் ஓர் அருட்கொடை - Mhm. Waseem



இஸ்லாமிய மார்க்கத்தில் நான்காவது முக்கிய தூணாக நோன்பு காணப்படுகின்றது. நோன்பு என்பது ஏனைய வணக்கங்களை விட அதிக சிறப்பு வாய்ந்த அம்சங்களைப் பொதிந்துள்ள ஓர் வணக்கமாகும். அந்த வகையில் முஸ்லிமாக பிறந்த ஒவ்வொரு மனிதனும் அதனைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். 


நோன்பு என்றால் என்ன? 

மொழிரீதியில் - கட்டுப்படுதல் என்பது பொருளாகும். 

இஸ்லாமிய பரிபாஷையில் - அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு, ஃபஜ்ர் உதயமாகியிருந்ததிலிருந்து, சூரியன் மறையும் வரை உண்ணல், பருகல், ஏனைய நோன்பை முறிக்கும் காரியங்களில் கட்டுப்பாட்டோடு இருத்தலை குறிக்கின்றது. 


நோன்பின் வகைகள்: 

இஸ்லாம் மனிதர்களுக்கு ஏவிய அடிப்படையிலும், விலக்கிய அடிப்படையிலும் நோன்பை இரு வகையாக பிரித்து நோக்கலாம். 

01. மார்க்கம் கட்டாயப்படுத்தியுள்ள நோன்பு. 

02. மார்க்கம் தடைசெய்துள்ள நோன்பு. 


01. மார்க்கம் கட்டாயப்படுத்தியுள்ள நோன்பு: 

மார்க்கம் கட்டாயம் ஒருவர் நிறைவேற்ற வேண்டும் என வலியிருத்தியுள்ள நோன்புகளை இது குறிக்கும். இதுவும் இரு வகைப்படும். 

01. வாஜிபான நோன்பு. 

01. அடிப்படையில் இஸ்லாம் வாஜிப் (கடமை) ஆக்கியுள்ள நோன்பை இது குறிக்கும். இந் நோன்பு கடமையானவர்கள், அதை நிறைவேற்றாமல் இருக்க எக்காரணமும் கூற முடியாது. உதாரணம்: ரமழான் மாத நோன்பு. இது யாருக்கு கடமையோ, அவர் அந்நோன்பை விடுவதற்கு எந்தக் காரணமும் கூறாமல் நிறைவேற்றுவது அவருக்கு கடமையாகும் (வாஜிபாகும்). 

02. நோன்பு பிடிப்பது கடமையான ஒருவர் தனக்கு கடமையாக்கிக் கொள்ளும் நோன்புகள். ஒருவர் நோன்பு நோற்க அனைத்துத் தகுதிகளையும் பெற்றிருப்பார். ஆனாலும் இஸ்லாம் கடமையாக்காத நோன்பை தாண்டி, சில காரணங்களுக்காக அவர் அந்த நோன்பை தனக்கு தானே நோற்க கடமையாக்கிக் கொள்வார். உதாரணமாக நேர்ச்சை நோன்பு, குற்றப்பரிகார நோன்பு, ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்பு. இந்த நோன்புகள் ஒருவருக்கு வாஜிபானது கிடையாது. ஆனால் முன்னர் கூறிய காரியங்கள் மூலமாக அந்த நோன்பு அவருக்கு வாஜிபாக மாறுகின்றது. அப்படியான நோன்பை விடுவது கூடாது. 


02. சுன்னத்தான நோன்பு 

01. நேரம் குறிப்பிடப்படாத நோன்பு. தடுக்கப்பட்ட காலங்கள் அல்லாத ஏனைய எல்லாக் காலங்களிலும் பிடிக்க முடியுமான நோன்புகளை இது குறிக்கிறது. அதனை எந்த வேளைகளிலும் நோற்பது ஆகுமானதாகும். 

02. நேரங் குறிப்பிடப்பட்ட நோன்பு. குறித்த நேரங்களில் மாத்திரமே நிறைவேற்ற வேண்டும் என குறிப்பாக்கப்பட்ட சுன்னத்தான நோன்புகளை இது குறிக்கும். உதாரணமாக ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், திங்கள், வியாழன் நோன்புகள், அரபா நோன்பு, ஆஷூரா, தாஷூஆ நோன்புகள். 

02. மார்க்கம் தடைசெய்த நோன்பு 

இது இஸ்லாம் தடை செய்துள்ள நோன்பு முறைகள் எனலாம். 

01. ஹறாமான நோன்பு - இரு பெருநாட்களில் நோற்கப்படும் நோன்பு, சந்தேகத்திற்குரிய நாட்களில் நோற்கும் நோன்பு. 

02. வெறுக்கத்தக்க நோன்பு - இது வெறுக்கத்தக்க நோன்புகளை குறிக்கும். உதாரணம் ஹாஜிகள் அரபாவில் நோன்பு நோற்றல், தொடர்ந்தேச்சியாக நோன்பு நோற்றல். 


நோன்பின் சிறப்புகள் 

01. நோன்பிற்கு ஒப்பாக எந்த வணக்கமும் இல்லை. 

அபூ உமாமா அல்பாஹ்லி (ரழி) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் ஏவியுள்ள, பயனுள்ள ஓர் அமலை எனக்கு அறிவித்து தாருங்கள்’ என கேட்டேன். அதற்கு நபியவர்கள் “நோன்பு நோற்பீராக! அதற்கு ஒப்பாக எந்த வணக்கமும் இல்லை” என்று கூறினார்கள். (ஆதாரம் - நஸாயி 4-165, அஹ்மத் 5-249, பைஹகீ 4-301). 


02. அல்லாஹ்வே கூலி வழங்குகிறான். 

அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு(மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! (ஆதாரம் - புஹாரி - 1904, முஸ்லிம் - 1151). 

மேலுள்ள செய்தியில் அல்லாஹ் நோன்பு எனக்குரியது எனவும், அதற்கு நானே கூலி வழங்குகிறேன் என்றும் கூறுகின்றான். ஏனெனில் நோன்பானது மனிதனுக்கும், அல்லாஹ்வுக்கும் இடையே உள்ளதாகும். ஒரு நோன்பாளி தான் நோன்போடு உள்ளேனா? இல்லையா? என்பதை அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன். அதே போல அல்லாஹ்வுக்காக அவன் நோன்பு இருப்பது அவனது உளத்தூய்மையை காட்டுகின்றது. 


03. பொறுமையின் மூன்று வகையும் நோன்பின் மூலம் ஒரு சேர கிடைக்கின்றன. 

ஒரு மனிதன் நோன்பாளியாக இருக்கின்ற போது அவனிடம் இயல்பாக பொறுமையுணர்வு ஏற்படுகின்றது. இதை பின்வருமாறு நோக்கலாம்: 


01. அல்லாஹ்வை வணங்குவதில் பொறுமையாக இருத்தல். 

02. பாவம் செய்வதில் இருந்து பொறுமையாக இருத்தல். இது ஓர் நோன்பாளி தனக்கு தடுக்கப்பட்டதை செய்வதிலிருந்து அவனைத் தடுக்கின்றது. 

03. அல்லாஹ்வின் நாட்டத்தில் பொறுமையாக இருத்தல். அதாவது உண்ணாமலும், பருகாமலும் இருந்து, அல்லாஹ்வின் ஏற்பாட்டை பொருந்திக்கொண்டு, பொறுமையாக இருப்பதை இது குறிக்கிறது. 

இப்படிப்பட்ட பொறுமையாளர்களே வெற்றியாளர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 


04. நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் ஷபாஅத் செய்யக் கூடியது. 

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் நபியவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள். “நோன்பும், அல்குர்ஆனும் அல்லாஹ்விடத்தில் அடியார்களுக்காக ஷபாஅத் செய்யும். நோன்பு கூறும் “இறைவா! பகல் வேளைகளில் அடியானின் உணவுகளையும், இச்சைகளையும் நான் தடுத்தேன். ஆகவே அதற்காக வேண்டி சிபாரிசை ஏற்றுக் கொள்வாயாக! அதே போன்று அல்குர்ஆனும், “இரவிலே அவனது தூக்கத்தை தடுத்தேன். எனக்காக வேண்டி ஷபாஅதை ஏற்றுக் கொள்வாயாக!” எனக் கூறும். அவை இரண்டினதும் ஷபாஅத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். (ஆதாரம் - அஹ்மத் - 6626, தபரானி - 14-72, ஹாகிம் - 2036). 


05. பாவமன்னிப்பையும், மகத்தான கூலியையும் பெற்றுத் தரும் வணக்கம். 

அல்லாஹ் கூறுகிறான் - “நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், விசுவாசிகளான பெண்களும், (அல்லாஹ்வுக்கு) வழிபாடு செய்பவர்களான ஆண்களும், வழிபாடு செய்பவர்களான பெண்களும், உண்மையே கூறுபவர்களான ஆண்களும், உண்மையே கூறுபவர்களான பெண்களும், பொறுமையாளர்களான ஆண்களும், பொறுமையாளர்களான பெண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் ஆண்களும், உள்ளச்சத்தோடு (அல்லாஹ்வை) பயந்து நடக்கும் பெண்களும், தானம் செய்பவர்களான ஆண்களும், தானம் செய்பவர்களான பெண்களும், நோன்பு நோற்பவர்களான ஆண்களும், நோன்பு நோற்பவர்களான பெண்களும், தங்கள் மர்மஸ்தானங்களைக் காத்துக் கொள்பவர்களான ஆண்களும், (மர்மஸ்தானங்களைக்) காத்து கொள்பவர்களான பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுபவர்களான ஆண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூறுபவர்களான பெண்களும்_(ஆகிய) இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான (நற்)கூலியையும் தயார் செய்து வைத்திருக்கிறான்.” (அல்குர்ஆன் - 33-35). 


06. நோன்பானது பாவங்களுக்கும், தவறுகளுக்கும் பரிகாரமாகும். 

நபியவர்கள் கூறியதாக ஹுதைபா (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள் - “ஒரு மனிதன் தன் குடும்பத்தினரிடமும் தன் சொத்துக்களிலும் தன் குழந்தைகளிடமும் தன் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும்” ஆதாரம் - புஹாரி - 525,3587, முஸ்லிம் - 144). 



07. நோன்பு ஓர் கேடயமாகும். அது நரகில் இருந்து பாதுகாக்கிறது. 

நபியவர்கள் கூறினார்கள்- “நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்”. (ஆதாரம் புஹாரி - 1894, முஸ்லிம் - 1151) 

நோன்பு கேடயம் என்பதன் அர்த்தம் யாதெனில், யார் அல்லாஹ்வுக்காக நோன்பிருப்பதன் மூலம் இவ்வுலகில் தமது இச்சைகளை கட்டுப்படுத்தி தனது உள்ளத்தை கட்டுப்படுத்துகிறாரோ, அவரை அந்நோன்பானது நரகில் நுழையவிடாமல் தடுக்கும். (பார்க்க - பத்ஹூல் பாரி - 4-104). 


08. நோன்பு சுவனத்திற்குள் நுழைவிக்கும் காரணியாகும். 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :‘சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!’ (ஆதாரம் - புஹாரி - 1896, முஸ்லிம் - 1152) 


09. நோன்பு இரண்டு சந்தோசத்தை ஏற்படுத்துகின்றன. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :‘நோன்பாளிக்கு இரண்டு (இடங்களில்) சந்தோசமடைகின்றான். அவை நோன்பு திறக்கும் போதும், மறுமையில் அல்லாஹ்வை காணும் போதும் (ஆகும்). ஆதாரம் (புஹாரி - 1954, முஸ்லிம் - 1151) 

ஒரு நோன்பாளியின் இந்த சந்தோசம் உண்மையில் இயற்கையான ஒன்றாகும். ஏனனின் பகலெல்லாம் நோன்பிருந்து, அவனுக்கு நோன்பு திறக்க அனுமதிக்கப்பட்டு, அவனது தாகமும், பசியும் நீங்கும் போது, அது அவனுக்கு பெரும் மகிழ்ச்சியை வழங்குகின்றது. அதன் காரணமாக அவனது நோன்பு முடிவுக்கு வருகின்றதோடு, அவனது வணக்கமும் நிறைவுக்கு வருவதையும், அதனால் அதனை நிறைவேற்றிய சந்தோசமும் ஏற்படுத்துகின்றது. அந்த நிலை தொடராக நோன்பு நோற்க அவனுக்கு உதவி புரிகின்றது. 

அதே போல அல்லாஹ்வை காணும் போது என்பது, அல்லாஹ் அவனது பாவங்களை மன்னித்து சுவர்க்கத்திற்கு அனுப்புவதில் ஏற்படும் சந்தோசத்தையும், நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும் போது ஏற்படும் சந்தோசத்தையும் குறிக்கின்றது. 


10. நோன்பாளியின் வாயிலி்ருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியின் வாசத்தைப் போன்றது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :‘முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும்.ஆதாரம் புஹாரி 1904, முஸ்லிம் 1151) 


11. நோன்பானது குரோதம் பொறாமை என்பவைகளை போக்குகின்றது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பொறுமையின் மாதத்தில் (ரமழான் மாதத்தில்) நோற்கும் நோன்பும், ஒவ்வொரு மாதமும் நோற்கும் மூன்று நோன்புகளும் உள்ளத்திலிருந்து பொறாமை (வஞ்சகம், வீண் சந்தேகம்) என்பவற்றை போக்குகின்றன. (ஆதாரம் - அஹ்மத் - 23070, முஸ்னத் இப்னு அபீ ஷைபா - 37790) 


நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கங்கள். 

இஸ்லாம் மார்க்கம் நோன்பின் மூலம் பல எண்ணற்ற நன்மைகளையும், அல்லாஹ்வின் அருள், அவனின் நலவு, பாவங்களிலிருந்தும், நரகில் இருந்துமான பாதுகாப்பு போன்ற அம்சங்களை ஒரு மனிதனுக்கு வழங்குகிறது. ஒரு நோன்பாளி அனுபவ ரீதியாகவும், இயற்கையான அமைப்பிலும் அதன் பயன்களை அனுபவிக்கிறான், அல்லது புரிந்து கொள்கிறான். அதனடிப்படையில் இந் நோன்பில் உள்ள நுட்பமான விடயங்களையும், அதன் பயன்களையும் நாம் அறிந்து, அதப்படி செயலாற்றுவது அவசியமாகும். 

01. நோன்பானது தக்வாவை அதிகரிக்கின்றது. 

ஒரு நோன்பாளி நோன்பு காலங்களில் தனக்கு அனுமதிக்கப்பட்பட்டை நிறைவேற்றுவதில் இருந்து தடுக்கப்படுகின்றான். அதன் காரணமாக அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, அவனுக்கு முற்று முழுதாக அடிபணிந்து நடக்கிறான். 

அல்லாஹ் கூறுகிறான். “விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது; (அதனால்) நீங்கள் (உள்ளசுத்தி பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம்.” (அல்குர்ஆன் 2:183) 

02. நோன்பாளி அல்லாஹ்வின் அருட்கொடைகளை உணர்கிறான். 

03. நோன்பாளியின் உள்ளத்தை நோன்பு பண்படுத்துகின்றது. 

04. ஏழைகளின் பசி, தேவைகள் போன்றவற்றை நோன்பிருப்பவருக்கு இது உணர்த்துகின்றது. 

05. உடலியல் நோய்கள் குணமாக்கப்பட்டு, தேகாரோக்கியம் நோன்பினால் கிடைக்கிறது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget