இஸ்லாத்தின் பார்வையில் பெண்களுக்கான பொருளாதார உரிமைகள் (பார்வை 06) || MJM. Hizbullah Anwari, (B.Com Reading)

 ஆக்கம்
JM. ஹிஸ்புல்லாஹ் அன்வாரி

மேற்பார்வை 
M. அஹ்மத் அப்பாஸி MA 
02. குடும்ப உறவின் மூலம் கடமையாகும் கொடுப்பனவு

கஷ்டத்திலிருக்கும் தனது குடும்ப உறவுகளுக்கு வசதியுள்ள குடும்ப உறவுகள் கொடுப்பனவுகளைக் கொடுத்து உதவி புரிவது கட்டாயக் கடமையாக இருக்கிறது. அவசியம் கொடுப்பனவுகள் கொடுத்தே ஆக வேண்டிய குடும்பத்தினர் யார் என்பதில் இஸ்லாமிய அறிஞர்களிடையே பல கருத்துக்கள் நிலவுகின்றன. மாலிக் மத்ஹப் அறிஞர்கள் உடன் பிறப்புக்கள் என வரையறை செய்கின்றனர். ஷாபிஈ மத்ஹப் அறிஞர்கள் பிறப்பால் உறவினர் எனும் வட்டத்திற்குள் வந்த அனைவரும் என வரையறுக்கின்றனர், ஹனபி மத்ஹப் அறிஞர்கள் திருமணம் முடிப்பதற்கு யாரெல்லாம் தடுக்கப்பட்டுள்ளனரோ அவர்கள் என வரையறுக்கின்றனர். ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள் ஒருவரின் சொத்தை அனந்தரமாகப் பெறுவதற்கு யாரெல்லாம் தகுதிபடைத்தவர்களோ அவர்கள் என வரையறுக்கின்றனர்.

இக் கருத்து வேற்றுமையில் குடும்ப உறவின் மூலம் கொடுப்பனவுகளை அவசியம் பெறவேண்டிய தரப்பினர் ஒருவரின் சொத்தை அனந்தரமாகப் பெறுவதற்கு தகுதிபடைத்தவர்கள் என்ற ஹன்பலி மத்ஹப் அறிஞர்களின் கருத்தையே இஸ்லாமிய அறிஞர்கள் வலுவான கருத்தாக அறிவித்துள்ளனர்.

இவர்களுக்காக அவசியம் செலவளிப்பது ஓர் சில நிபந்தனைகளுடன் கட்டாயக் கடமையாகிறது. அதற்கான ஆதாரங்கள் அல்குர்ஆன், ஸுன்னாவில் நிறைய இருக்கின்றன.

அல்லாஹ் கூறுகிறான், “(பாலூட்டும் தாய்மார்களாகிய) அவர்களுக்கு முறைப்படி உணவளிப்பதும், அவர்களுக்கு உடையளிப்பதும் பிள்ளையின் தந்தை மீது கடமையாகும். எந்தவொரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் சிரமப்படுத்தப்படமாட்டாது. தாய் தன் பிள்ளக்காகவோ, தந்தை தன் பிள்ளைக்காகவோ சிரமத்துக்குள்ளாக்கப்படமாட்டார்கள். (தந்தை மரணித்து விட்டால்) இது போன்ற கடமை அவரது வாரிசுக்கும் உண்டு.” (அல்குர்ஆன் 02:233). மேலும், “அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்” (அல்குர்ஆன் 17:23).

உம்மு ஸலமா y அவர்கள் நபி r அவர்கள் கூறத் தாம் கேட்டதாகக் கூறுகிறார்கள், “யார் இரு பெண்பிள்ளைகள், அல்லது இரு சகோதரிகள், அல்லது உறவினர்களில் இரு பெண்களுக்கு செலவீனங்களை அல்லாஹ் தனது அருளால் அவர்களுக்கு செழிப்பை ஏற்படுத்தும் வரை அல்லது அவர்களுக்கு போதுமான அளவை அடையும் வரை கொடுக்கிறாரோ அவர்கள் இருவரும் இவருக்கு நரகின் திரையாக இருப்பார்கள்” (ஆதாரம்: முஸ்னத் அஹ்மத் 26516).

இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் தனது இஜ்மாஃ எனும் நூலில் பின்வருமாரு குறிப்பிடுகிறார்கள், “எவ்வித சம்பாத்தியமும், வருமானமும் அற்ற பெற்றோருக்கு செலவீனங்களை வழங்குவது பிள்ளைகளுக்கு கட்டாயக் கடமை என்பதில் அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் ஏகோபித்த முடிவில் உள்ளனர். அவ்வாறே சம்பாத்தியம் அற்ற தனது பிள்ளைகளுக்கு செலவு செய்வதும் தந்தையின் மீது கடமையாகும்.”

இது தவிர குடும்ப உறவுகளுக்கு ஸகாத், தான தர்மங்கள், ஏனைய பொருளாதார உதவிகள் போன்றவற்றை வழங்குவது ஒருவருக்கு ஆகுமான காரியமாக இஸ்லாம் ஆக்கியுள்ளது. அவர்களின் தேவை கருதி அவர்களுக்கான பொருளாதார உதவிகளை வழங்குவது குடும்ப உறவை தொடர்ந்தும் பேணுவதற்கு வழிவகுக்கும். இதை கடமையான ஒன்றாக இஸ்லாம் ஆக்காமல் ஆகுமான உதவியாகவே ஆக்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குடும்ப உறவுகளுக்கு கொடுப்பனவுகள் வழங்குவதற்கான நிபந்தனைகள்

கொடுப்பனவுகள் பெறுவதற்குத் தகுதியானவர்கள் குறித்த உறவினரின் அனந்தரச் சொத்தைப் பெறுவதற்குத் தகுதியானவர்களே என்ற இஸ்லாமிய அறிஞர்களின் கருத்திற்கிணங்க அவர்கள் பின்வரும் நிபந்தனைகளைக் குறிப்பிடுகின்றனர்.

1 பொறுப்பாளர் தனது பொறுப்பில் உள்ளவர்களுக்கு செலவு செய்யும் சக்தியைப் பெற்றிருத்தல். தனக்கென ஒரு பகுதியை வைத்து மீதமுள்ளவற்றையே செலவு செய்தல்.

2 செலவைப் பெறுபவர் ஏழ்மையாகவோ, அல்லது சம்பாதிப்பதற்கு இயலாதவராகவோ இருத்தல்,

3 செலவைப் பெறுவர் அனந்தரக்காரராக இருத்தல்.

கொடுப்பனவுகள் எனும் வட்டத்தினுள் உள்ளடங்குபவை

மனைவிக்கும், குடும்ப உறவுகளுக்குமான கொடுப்பனவுகள் என்ன என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் அல்குர்ஆன், ஸுன்னா அடிப்படையில் 3 பிரிவாக வகைப்படுத்துகின்றனர்.

1 உணவு: பொதுவாக அவ் ஊர்வாசிகளின் வழக்கத்திற்கமைய என்ன உணவு நடைமுறையில் உள்ளதோ, அதையும், அதற்குத் தேவையான சமையல் வசதிகளையும், உணவுப் பொருட்களையும் கொடுத்திட வேண்டும்.

2. ஆடை: ஆடை உட்பட அதற்குத் தேவையான அழகுசாதனப் பொருட்கள், சுத்தத்தைப் பேணுவதற்கான பொருட்கள் என அனைத்தும் இதில் உள்ளடங்கும். அதேபோல் காலத்திற்குத் தேவையான ஆடைகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆடையும், அலங்காரப் பொருட்களும் இஸ்லாம் அனுமதித்த வரையரைக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், “பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்” (அல்குர்ஆன் 02:233)

3 உறைவிடம்: வீடும், அதில் வசிப்தற்குத் தேவையான பொருட்களும் அவர்களுக்கு வழங்க வேண்டும். மனைவி தவிர்ந்த பிற உறவினர்களாக இருப்பின் ஆடம்பரம் தவிர்ந்த சாதாரண தளபாடங்களும், வீட்டுக்குத் தேவையானவற்றையும் செய்து தருவதில் குற்றமில்லை. மனைவியர் விடயத்தில் அல்லாஹ் கூறுகிறான், “உங்கள் வசதிக்கேற்ப அவர்களை நீங்கள் குடியிருக்கும் இடத்தில் குடியமர்த்துங்கள்! அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களுக்குத் தீங்கு செய்யாதீர்கள்!” (அல்குர்ஆன் 65:06).

இக் கடமையான கொடுப்பனவுகளை கணவன் மனைவிக்கு வழங்கி, அவளும் மனதார உண்டு, உடுத்தி, கணவனோடு வீட்டில் நிம்மதியாக வசித்து வந்தால் கணவன், தனது மனைவிக்கான சரியான கொடுப்பனவு சார்ந்த உரிமையை நிறைவேற்றியதாக கருதப்படுவார். இது பொதுவான கொடுப்பனவுகள் எனும் வரையறைக்குள் உள்ளடங்குகிறது. கணவன், மனைவிக்கு மத்தியில் பிரச்சினை தோன்றி நீதிபதி வரை சென்றால் அங்கு நீதிபதி நிர்ணயிக்கும் பணத்தொகையை கொடுப்பது கணவனுக்கு கடமையாகிறது. அங்கு தான் விரும்பும் தொகையை வழங்க முடியாது.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget