இஸ்லாத்தின் ஜந்தாவது கடமையான ஹஜ் பகுதி - 03 || Assheikh Ilham (Gafoori,Riyadhi) M.A Reading

பகுதி 03 
அறபு மூலம்: கலாநிதி, யூஸுப் பின் அப்தில்லாஹ் 
தமிழ் மூலம்: இல்ஹாம் அபால்தீன் (ரியாதி) BA Hons, MA Reading 
துல்ஹஜ் எட்டாம் நாள்: 

தமத்துஃ செய்பவர் தான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்தே ஹஜ்ஜுக்காக நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அனைத்து ஹஜ்ஜாஜிகளும் மினாவுக்குச் செல்ல வேண்டும். அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் ஒன்பதாம் நாளின் பஜ்ர் தொழுகைகளையும் மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். தல்பியாவையும் உயர்ந்த சப்தத்தில் முழங்கிய வண்ணம் இருக்க வேண்டும். 

துல்ஹஜ் ஒன்பதாம் நாள் (அறபா தினம்): 

சூரியன் உதயமாகியதும் மினாவிலிருந்து அறபாவுக்குப் புறப்பட வேண்டும். அறபாவுக்குட்பட்ட எந்த இடத்திலாவது ஒருவர் இருந்தால், அவர் அறபாவில் நின்ற நன்மையை அடைந்துகொள்வார். சூரியன் நடு உச்சியிலிருந்து நகர்ந்ததன் பின்னர் ளுஹரையும், அஸரையும் ளுஹரின் ஆரம்ப நேரத்தில் ஒரு அதான், இரு இகாமத்துக்களுடன் சுருக்கியும் சேர்த்தும் தொழ வேண்டும். பின்னர் சூரியன் மறையும் வரை தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து கொண்டே கிப்லாவை முன்னோக்கிய வண்ணம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். 

அறபாவில் தரித்து நிற்பது ஹஜ்ஜின் ருக்குன்களில் ஒன்றாக இருக்கின்றது. இதுவே ஹஜ்ஜின் மிக முக்கிய கிரியையாகவும் கருதப்படுகின்றது. இதன் நேரம் ஒன்பதாம் நாள் சூரிய உதயத்திலிருந்து, பத்தாம் நாள் சூரிய உதயம் வரை நீடிக்கிறது. 

ஒன்பதாம் நாள் சூரியன் மறையும் வேளையில் ஹாஜிகள் அறபாவிலிருந்து முஸ்தலிபா நோக்கி மிகவும் அமைதியாகவும், தல்பியாவை முழங்கிய வண்ணமும், பாவமண்ணிப்பில் ஈடுபட்ட வண்ணமும் செல்ல வேண்டும். முஸ்தலிபாவை அடைந்ததும், மஃரிபையும், இஷாவையும் ஒரு அதான், இரு இகாமத்துக்களுடன் சுருக்கியும், சேர்த்தும் தொழ வேண்டும். 

பின்னர் முஸ்தலிபாவில் இரவைக் கழித்து விட்டு, மறுநாள் சுபஹ் தொழுகையையும் அதன் ஆரம்ப நேரத்தில் முஸ்தலிபாவிலே நிறைவேற்றி விட்டு, வானம் மஞ்சலிக்கும் வரை துஆப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். பின்னர் சூரியன் உதயமாகுமுன்னர் மினாவை நோக்கிப் புறப்பட வேண்டும். 

பெண்கள், சிறுபிள்ளைகள் போன்ற பலவீனமானவர்கள் இருப்பின் அவர்கள் சந்திரன் மறைந்தவுடனே முஸ்தலிபாவில் இருந்து மினாவுக்குப் புறப்படுவது ஏற்றமானதாகும். 

துல்ஹஜ் பத்தாம் நாள் (பெருநாள் தினம்): 

சூரியன் உதிப்பதற்கு முன்னரே அமைதியாக மினாவிற்குப் புறப்பட வேண்டும். முஸ்தலிபாவையும், மினாவையும் பிரிக்கும் முஹ்ஸர் கால்வாய் வந்ததும், சற்று விரைந்து செல்ல வேண்டும். போகும் வழியில் ஜம்ராவில் கல்லெறிவதற்காய் சிறு கற்களை பொருக்கிக் கொண்டு செல்ல வேண்டும். மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபாவை நோக்கிப் புறப்பட வேண்டும். இது மக்கா திசையில் அமைந்துள்ள கடைசி ஜம்ரா (கல்லெறியும் இடம்) ஆகும். அங்கு சென்றதும் ஒன்றன் பின் ஒன்றாக ஏழு கட்கள் எறிய வேண்டும். ஒவ்வொரு தடவையும் கல்லெறியும் போது தக்பீர் சொல்ல வேண்டும். கல்லெறியும் நேரம் மறுநாள் ஃபஜ்ர் உதயமாகும் வரை நீடிக்கும். 

இவ்வாறு கல்லெறிந்ததன் பின்னர் தமத்துஃ மற்றும் கிரான் செய்தவர்கள் தமது அறுப்புப் பிராணியை அறுத்து, அதன் இறைச்சியை விநியோகம் செய்ய வேண்டும். விரும்பினால் தானும் சாப்பிடலாம். 

பின்னர் தன் தலை முடியை மலித்துவிட வேண்டும். அல்லது கத்தரித்துக்கொள்ள வேண்டும். தலை முடியை மலித்துவிடுவதே மிகவும் சிறந்தது. முடியை கத்தரித்தால் தலையின் அனைத்து பாகத்தையும் சமமாகவே கத்தரிக்க வேண்டும். பெண்கள் விரலளவு தமது தலை முடியை கத்தரித்துக் கொள்ள வேண்டும். 

கல்லெறிந்து முடிந்து, தலை முடியை மலித்து அல்லது குறைத்துக்கொண்டதன் பின்னர், பெண்ணைத் தவிர தனக்கு எதுவெல்லாம் தடுக்கப்பட்டு இருந்ததோ அவை அனைத்தும் ஆகுமாக்கப்படும். (இதற்கு ஹஜ்ஜின் முதல் விடுவிப்பு என்று கூறப்படும்). பின்னர் மக்காவிற்குச் சென்று தவாப் ஒன்றை செய்ய வேண்டும். அதற்கு தவாப் இபாழா என்று சொல்லப்படும். 

தவாபுல் குதூமிற்குப் பின்னர் ஸயீ செய்யாதவர்கள் இதன் போது ஸயீ செய்ய வேண்டும். கிரான் மற்றும் இப்ராத் செய்பவர்கள் தவாபுல் குதூமிற்குப் பின்னர் ஸயீ செய்திருந்தால் அவர்கள் மீண்டும் ஸயீ செய்யவேண்டியதில்லை. ஹஜ்ஜாஜிக்கு பூரண விடுவிப்பு, தவாப் செய்ததன் பின்னரே நிகழ்கின்றது. இதன் போது தடுக்கப்பட்ட பெண்ணும் இவருக்கு ஆகுமானவளாக மாறிவிடுவாள். 

ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிதல், அறுத்துப் பலியிடல், தவாப் செய்தல், ஸயீ செய்தல் முதலியவற்றை அடுத்தடுத்து நிறைவேற்றுவது சுன்னத்தாகும். இவ் ஒழுங்கில் ஏதாவது ஒன்று முன்பின் செய்தால் அது குற்றமாகாது. 

தவாபுல் இபாழாவை நிறைவேற்றியதன் பின்னர் மீண்டும் மினாவிற்கே திரும்ப வேண்டும். அங்கு மூன்று இரவுகள் தங்க வேண்டும். ஒவ்வொரு தொழுகைகளையும் அதன் நேரத்தில் சுருக்கித் தொழ வேண்டும். 

துல்ஹஜ் 11,12,13 ஆகிய நாட்கள் (அய்யாமுத் தஷ்ரீக்): 

இத்தினங்களில் சூரியன் நடு உச்சியிலிருந்து சாய்ந்ததன் பின்னர், ஒவ்வொரு நாளும் மூன்று ஜம்ராக்களிலும் கல்லெறிதல் வேண்டும். முதல் ஜம்ராவிலிருந்தே இதனை ஆரம்பிக்க வேண்டும். அதில் ஒன்றன் பின் ஒன்றாக ஏழு கட்களை எறிய வேண்டும். ஒவ்வொரு தடவையும் கல் எறியும் போது “அல்லாஹு அக்பர்” என தக்பீர் கூறிக்கொள்ள வேண்டும். பின்னர் அதிலிருந்து சற்று முன்னே வந்து, கிப்லாவை முன்னோக்கி, தனது இரு கரங்களையும் உயர்த்தி, அதிக நேரம் துஆப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். இவ்வாறே அடுத்து வரும் இரு ஜம்ராக்களிலும் செய்துகொள்ள வேண்டும். இறுதி ஜம்ராவில் –ஜம்ரதுல் அகபாவில்- துஆக் கேட்பதற்காக வேண்டி நிற்கத் தேவையில்லை. 

நோயாளிகள், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாதையில் நெரிசலில் சிக்கித் தவிக்கப் பயப்படுபவர்கள், கல்லெறியும் இடத்தில் ஏற்படும் நெருக்கத்தில் சிக்கித் தவிக்கப் பயப்படுவோர் போன்றவர்கள் கல்லெறிவதற்காய் தமக்குப் பகரமாக வேறு ஒருவரை நியமிக்கலாம். அவ்வாறு பகராமகச் செல்பவர் தனக்காக கல்லெறிந்து விட்டுப் பின்னர் இவர்களுக்காக எறிவார். 

துல் ஹஜ் 12 ஆம் நாள் அன்று, மூன்று ஜம்ராத்துக்களிலும் கல்லெறிந்தோருக்கு அதே தினத்தில் சூரியன் மறைவதற்கு முன்னரே மினாவை விட்டும் வெறியேறி விட முடியும். வெளியேறாமல் இருப்போர் 13 ஆம் நாளும் கல்லெறிந்து விட்டே வெளியேற வேண்டும். இதுவே மிகச் சிறந்த ஒன்றுமாகும். 12 நாள் சூரியன் மறைவதற்கு முன்னர் ஒருவருக்கு மினாவை விட்டும் வெளியேற முடியவில்லையாயின், அவர் மினாவில் தங்கி, 13 ஆம் நாளும் கல்லெறிந்து விட்டே மினாவிலிருந்து வெளியேறிவிட வேண்டும். 

ஒரு பெண்ணுக்கு, ஹஜ்ஜுக்காக நிய்யத் வைப்பதற்கு முன்னர் மாதவிடாய், அல்லது மகப்பேற்று இரத்தம் வெளியேறினாலோ, அல்லது நிய்யத் வைத்ததன் பின்னர் வெளியேறினாலோ அவளின் நிய்யத் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனையோரைப் போன்று ஹஜ்ஜின் அனைத்துக் கிரியைகளையும் மேற்கொள்வாள். ஆனால் கஅபாவை மாத்திரம் அவளால் தவாப் செய்ய முடியாது. அவ்வாறு தவாப் செய்வதற்கு, தான் அதிலிருந்து சுத்தமாகும் வரை காத்திருக்க வேண்டும். 

பிரியாவிடைக்கான தவாப் (தவாபுல் வதாஃ): 

மக்காவை விட்டு வெளியேற விரும்பும் ஓர் ஹாஜி, தவாபுல் வதாஃ வை நிறைவேற்றிய பின்னரே தனது பிரயாணத்தை ஆரம்பிக்க வேண்டும். ஆனால் மாதவிடாய் ஏற்பட்ட பெண் இத் தவாபை செய்ய வேண்டியதில்லை. 

முற்றும்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget