ஹஜ் ஓர் சுருக்கப் பார்வை - பகுதி 01 | RASIF RIYADHI |

இஹ்ராம் கட்ட வேண்டிய இடங்கள்

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரக்கூடியவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட இடங்களை இஹ்ராம் கட்டுவதற்காக நிர்ணயம் செய்துள்ளனர். அந்த இடங்களை அடைந்ததும் இஹ்ராம் கட்ட வேண்டும்.

மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபா என்ற இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபா என்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில் என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம் (இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும் இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில் வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்ட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.

இலங்கயிலிருந்து செல்பவர்கள் யலம்லம் வழியாகச் செல்வதால் அங்கே இஹ்ராம் கட்ட வேண்டும். ஆடை அணிவதற்குப் பெயர் இஹ்ராம் அல்ல என்பதை நாம் குறிப்பிட்டுள்ளோம். விமானம், கப்பல், போன்றவற்றில் புறப்படுபவர்கள் முன்பே ஆடையை அணிந்து விட்டாலும், அந்த இடத்தை அடையும் போது தல்பியா கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.

துல்ஹுலைஃபா என்ற இடம் மக்காவுக்குத் தெற்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஜுஹ்ஃபாஎன்ற இடம் மக்காவுக்கு வடக்கில் 187 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கர்ன் அல்மனாஸில்என்பது மக்காவுக்குக் கிழக்கில் உள்ள ஒரு மலையின் பெயராகும். மக்காவிலிருந்து 94 கிலோ மீட்டர் தொலைவில் அது அமைந்துள்ளது.

யலம்லம்என்பது மக்காவுக்கு வடக்கே உள்ள ஒரு மலையாகும். இது மக்காவிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இஹ்ராம் கட்ட வேண்டிய காலம்

துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான் ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன என்றாலும், அதற்கு
இரண்டு மாதங்களுக்கு முன்பே ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டலாம். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.
அல்குர்ஆன் 2:197

ஹஜ் ஒரு மாதம் என்று இறைவன் கூறாமல் சில மாதங்கள் என்று பன்மையாகக் கூறுகிறான்.

ஹஜ்ஜின் மாதங்கள் என்பது ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ்ஜின் பத்து நாட்கள் என்று இப்னு உமர் (ரலி) கூறியுள்ளனர்.
புகாரி: 1572

எனவே ஷவ்வால் மாதத்திலோ, துல்கஃதா மாதத்திலோ இஹ்ராம் கட்டலாம். ஷவ்வால் மாதமே இஹ்ராம் கட்டிவிட்டாலும் ஹஜ்ஜின் கிரியைகள் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளிலிருந்து தான் துவங்குவதால், அது வரை தவாஃப் செய்து கொண்டும்  தொழுது கொண்டும் மக்காவிலேயே தங்கிட வேண்டும்.

இஹ்ராம் கட்டுவது

ஒருவர் தொழ நாடினால் அவர் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூற வேண்டும். இதனைத் தொடர்ந்து தனது கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஆரம்பமாகக் கூறுகின்ற இந்த தக்பீர், தஹ்ரீம் என்று குறிப்பிடப்படுகின்றது.
தஹ்ரீம் என்றால்  தடுத்தல், விலக்குதல் என்பது பொருளாகும். அதாவது தொழுகையைத் துவக்குவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்டிருந்த உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற காரியங்கள் இந்த தக்பீர் மூலம் தடுக்கப்படுவதால் அது தஹ்ரீம் எனப்படுகின்றது.

அல்லாஹு அக்பர்என்று கூறுவதற்குத் தான் தக்பீர் என்று பெயர்.
ஆனாலும் நெஞ்சில் கை கட்டுவதையே தக்பீர் என மக்கள் விளங்கியுள்ளனர். * நெஞ்சில் கை கட்டுவது தொழுகையின் ஒரு அங்கம் என்றாலும் அந்தச் செயலை தக்பீர் எனக் கூறக் கூடாது. அல்லாஹு அக்பர் என்று சொல்வதே தக்பீராகும்.

இதைத் தவறாக மக்கள் விளங்கியுள்ளது போலவே இஹ்ராமையும் தவறாக விளங்கியுள்ளனர். இஹ்ராம் என்பது குறிப்பிட்ட சில வார்த்தைகளைக் கூறுவதாகும். அப்போது குறிப்பிட்ட வகையில் உடையணிந்திருக்க வேண்டும். ஆனாலும் மக்கள் குறிப்பிட்ட விதத்தில் அணியும் ஆடையையே இஹ்ராம் என்று விளங்கியுள்ளனர்.

ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும் செய்ய நாடினால்
லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன் (ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.

ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால்

லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூற வேண்டும்.
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் லப்பைக்க உம்ரதன் என்று கூற வேண்டும்.

சிறுவர்கள் ஹஜ் செய்யலாமா?

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் அதைக் காரணம் காட்டி ஹஜ் பயணத்தைத் தள்ளிப் போட வேண்டியதில்லை.
சிறு குழந்தைகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரவ்ஹாஎன்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார்? என்று விசாரித்தனர். முஸ்லிம்கள்!என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் நீங்கள் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். நான் அல்லாஹ்வின் தூதர்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒரு பெண்மணி சிறு பையனை (குழந்தையை) தூக்கிக் காண்பித்து இவனுக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! கூலி உனக்கு உண்டுஎன்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2377, 2378.

நான் ஏழு வயதுடையவனாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் என் தந்தை என்னையும் ஹஜ் செய்ய வைத்தார்கள்

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி) நூல்: புகாரி 1858

சிறு?ுவர்கள் மீது ஹஜ் கடமையில்லாவிட்டாலும் அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

சிறு வயதில் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து ஹஜ் செய்வதற்கான வசதி வாய்ப்பைப் பெற்றால், அப்போது அவர் ஹஜ் செய்வது கடமையாகும். சிறு வயதில் இவனுக்கு ஹஜ் உண்ட? என்ற கேள்விக்கு, ஆம்! உனக்குக் கூலி உண்டுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்துள்ளனர். சிறு வயதில் செய்த ஹஜ்ஜின் கூலி அவரை அழைத்துச் சென்ற பெற்றோருக்குச் சேர்வதால் சிறுவரின் கணக்கில் அது சேர்க்கப்படவில்லை என்று அறியலாம்.

ஹஜ்ஜுக்குரிய கூலியை அவர் அடைய வேண்டுமானால் பருவ வயதை அடைந்த பிறகு அவர் வசதி வாய்ப்பைப் பெற்றால் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்தாக வேண்டும்.

முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா?

ஆரம்பமாக நாம் குறிப்பிட்ட வசனத்தில்
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமைஎன்று கூறப்படுகிறது. சென்று வரும் சக்தி என்பது வெறும் பொருளாதார வசதி மட்டுமல்ல. பிரயாணம் செய்வதற்கான உடல் நிலையையும் உள்ளடக்கியதாகும்.

பிரயாணமே செய்ய முடியாத முதியவர்கள், நோயாளிகள் போன்றோர் எவ்வளவு வசதிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் மீது ஹஜ் கடமையாகாது என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒருவர் இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும் போது
ஏழையாக இருந்து, தள்ளாத வயதில் பொருள் வசதியைப் பெற்றால் அவர் மீதும் ஹஜ் கடமையாவதில்லை.

இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும் போது
பொருள் வசதியைப் பெற்றவர், வேண்டுமென்றே தாமதப்படுத்தி முதிய வயதை அடைந்தால் அவர் மீதுள்ள ஹஜ் கடமை நீங்கி விடாது. அல்லாஹ் மன்னிக்கவில்லையானால் அவர் குற்றவாளியாக இறைவனைச் சந்திக்க நேரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது போல் ஒருவருக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமையாவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டே ஹஜ் செய்யாமல் மரணிப்பதற்குள் அதைச் செய்து விட அவருக்கு அவகாசம் உள்ளது என்றாலும் தாமதப்படுத்தக் கூடாது.

ஏனெனில், அடுத்த ஆண்டு வருவதற்குள் அவருக்கு மரணம் ஏற்படலாம். அல்லது பயணம் மேற்கொள்ள இயலாத அளவுக்கு அவர் பலவீனப்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் கடமையான பின்பும் அதை நிறைவேற்றத் தவறிய குற்றம் அவரைச் சேரும். நல்ல பலத்துடன் இருக்கும் போதே அவர் மீது ஹஜ் கடமையாகி விட்டால் இப்போதைய பலவீனம் அவருக்கு எந்தச் சலுகைகளையும் தராது.

முதிய வயதில் தான் ஹஜ் செய்ய வேண்டுமா?

முதிய வயதில் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்ற தவறான நம்பிக்கை பலரிடம் நிலவுகின்றது. பல லட்சம் மக்கள் கூடும் அந்தச் சமயத்தில் இளமையானவர்கள் தான் எல்லாக் காரியங்களையும் சரியாகச் செய்ய முடியும்.
முதிய வயதில் பல காரியங்களைச் சரியாகச் செய்ய முடிவதில்லை.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு
ஹஜ் கடமையானவுடனேயே அதை நிறைவேற்றும்  முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஹஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டால்?

இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும்என்று கங்கணம் கட்டியுள்ள நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழலாம். அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அந்த நாடுகளால் அல்லது வேறு சக்திகளால் தடுக்கப்படலாம். இத்தகையவர்கள் மீதும் ஹஜ் கடமையாகாது. சென்று வர சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும்என்று இறைவன் கூறுவதிலிருந்து இதனை நாம் அறியலாம்.

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget