தவ்ஹீத் என்பது இஸ்லாத்தின் மூலமாகும். அது தனி பிரிவோ அல்லது அமைப்போ கிடையாது. அது நம்பிக்கையோடு தொடர்பான அம்சமாகும். அது முழுக்க முழுக்க அல்லாஹ்வை ஒருவர் அறிந்து கொள்வதற்கான வழியே தவிர அப்பதத்திற்கு வேறெந்த நிலைகளும் கிடையாது. இந்த விளக்கமின்மையால் தவ்ஹீத் என்ற சொல்லே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தவ்ஹீத் என்ற பதம் அல்லாஹ்வை ஈமான் கொள்ளும் ஒருவருக்கு இலகுவாக அதனை புரியவைக்கும் ஓர் முறை என்பதை அறியவில்லை என நினைக்கிறேன். அதே போல முழு உலகிலும் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் தவ்ஹீத் என்பது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளும் ஓர் அம்சம் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மொழி ரீதியில் தவ்ஹீத் என்பது –
“வஹ்ஹத என்ற என்ற சொல்லில் இருந்தே தவ்ஹீத் என்பது வந்துள்ளது. அதாவது ஒன்றை “ஒருமைப்படுத்துவதை” குறிக்கும்.
இஸ்லாமிய வழக்கில்
“அல்லாஹ்வே படைப்பாளன், பராமரிப்பாளன், வணக்க வழிபாடுகளில் அவனை ஒருமைப்படுத்துவதை குறிக்கின்றது. அவனுக்கு மாத்திரமே வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். அவனுக்கு இணையாக்குவதை விட்டு விட வேண்டும். அதே போன்ற உயர்ந்த அவனது பெயர்கள் மற்றும் பண்புகளை உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும். இதுவே தவ்ஹீத் எனப்படுவதாகும்.
தவ்ஹீத் என்பது மறுப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகிய இரு அம்சங்களையும் கொண்டுள்ளது. அது தவ்ஹீதின் (ருக்ன்) மூல அம்சமாக அமைந்துள்ளது. அதில் உள்ள ( لا إله ) என்பது வணங்கப்படுகின்ற அனைத்தையும் மறுப்பதை குறிக்கின்றது. ( إلا الله ) என்பது அவன் மாத்திரமே வணங்க தகுதியானவன் என்பதை உறுதிப்படுத்துகின்றது. “அதாவது உண்மையாக வணங்கி வழிபடத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.” என்பதை தவ்ஹீத் பொதிந்துள்ளது.
அதே போல தவ்ஹீத் என்பது ருபூபிய்யத், உலூஹிய்யத், அஸ்மா வ ஸிபாத் ஆகிய அம்சங்களில் அல்லாஹ்வை அவனுடைய கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் ஏற்றாற் போல ஒருமைப்படுத்துவதை குறிக்கின்றது. அதே போல அவற்றில் இன்னொருவரை உதாரணமாக கூறக்கூடாது. குறிப்பாக அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளை அல்லாஹ்வும் அவனைப்பற்றி எவ்வாறு கூறியுள்ளானோ அவ்வாறும், நபியவர்கள் அல்லாஹ்விற்கு இருப்பதாக கூறிய, அவனுக்கு இல்லை என மறுத்துக் கூறிய விடயங்களையும் அவ்வாறே நம்பிக்கை கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகின்றான் “ அவனைப் போல் எதுவுமில்லை. அவனே கேட்பவன், பார்ப்பவன் (அஷ்ஷூறா)
தவ்ஹீதின் வகைகள்
இது மூன்று உட்கூறுகளை கொண்டுள்ளது. அவையாவன
1. தவ்ஹீதுர் ருபூபிய்யா
2. தவ்ஹீதுல் உலூஹிய்யா
3. தவ்ஹீதுல் அஸ்மா வ ஸிபாத்
1. தவ்ஹீதுர் ருபூபிய்யா -
இது செயற்பாட்டு ரீதியாக அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதை குறிக்கின்றது. அந்த செயற்பாடுகளில் அவனுக்கு இணையாக எதனையும் ஆக்காமல் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்பதை குறிக்கின்றது.
இது அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தான் என்பதை ஈமான் கொள்ள வேண்டும் என்பதை குறிக்கின்றது. அவனல்லாத இன்னொரு படைப்பாளன் இருப்பதாக அவனுக்கு இணையாக்க கூடாது என்பதையும் குறிக்கின்றது. எனவே உலகம், அதில் உள்ளவைகள், அதற்கு வெளியில் உள்ள அண்டங்கள் அனைத்தையும் அல்லாஹ் மாத்திரமே படைத்தான் என நம்பிக்கை கொள்வதை ருபூபிய்யத் குறிக்கின்றது. எனவே ருபூபிய்யத் குறித்து நிற்கும் சில அம்சங்களையும் அதற்கான அல்குர்ஆன் ஆதாரங்களையும் நோக்குவோம்.
அல்லாஹ்வே அனைத்தையும் படைத்த படைப்பாளன் ஆவான். அல்லாஹ் கூறுகிறான்
اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ
“அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தான். அவனே அனைத்திற்கும் பொருப்பாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 39 - 62)
அல்லாஹ் மாத்திரமே அனைத்திற்கும் உணவளிக்கிறான் என அவனை ஒருமைப்படுத்தல். அல்லாஹ் கூறுகின்றான்
“ﭐ وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَاؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ
உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத யாதொரு உயிரினமும் பூமியில் இல்லை. அவை (வாழ்ந்து) இருக்குமிடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூல் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன. (அல்குர்ஆன் 11 – 06 )
அவனே ஆட்சியாளர்களுக்கெல்லாம் ஆட்சியாளன். உலகின் சகல விடயங்களிற்கும் அவனே பொறுப்பாக இருக்கின்றான். அவனே அனைத்தையும் கொடுப்பவன். அதே போல அனைத்தையும் தடுப்பவன். அவனே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறான். அவன் உயிர்ப்பிக்கவும் மரணிக்கச் செய்யவும் சக்தி பெற்றவன் என நம்பிக்கை கொள்வதோடு அதில் அவனை ஒருமைப்படுத்தவும் வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்.
قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ. وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ ؕ بِيَدِكَ الْخَيْرُؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ . تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ. وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
(நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
நீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீதான் பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கின்றாய்." (அல்குர்ஆன் - 03 – 26,27 )
அதே போல மேலுள்ள விடயங்களில் அவனுக்கு இணையாக வேறொன்றை ஆக்குவதை அல்லாஹ் மறுப்பதையும் இதனைப்பற்றி அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
(ஆகவே, நபியே! நீங்கள் அவர்களை நோக்கிக் கூறுங்கள்:) "இவை அனைத்தும் அல்லாஹ் படைத்தவைகளாகும். அவனை யன்றி (நீங்கள் தெய்வங்கள் என்று கூறும்) அவைகள் எதனை படைத்திருக்கின்றன என்பதை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள். அவ்வாறு (ஒன்றும்) இல்லை. (அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை வணங்கும்) இந்த அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 31 – 11)
يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ
மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது: அதனைச் செவி தாழ்த்திக் கேளுங்கள். அல்லாஹ் அல்லாத எவற்றை நீங்கள் (தெய்வங்களென) அழைக்கின்றீர்களோ அவை யாவும் ஒன்று சேர்ந்(து முயற்சித்)த போதிலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. (ஈயைப் படைப்பதென்ன!) ஒரு ஈ அவற்றினுடைய யாதொரு பொருளை எடுத்துக் கொண்டபோதிலும் அந்த ஈயிடமிருந்து அதனை விடுவிக்கவும் அவைகளால் முடியாது. (அவர்கள் தெய்வங்களென அழைக்கும்) அவை அவ்வளவு பலவீனமானவை! ஆகவே, அவற்றை(த் தெய்வங்களென) அழைப்பவர்களும் பலவீனமானவர்களே! (அல்குர்ஆன் 22-73)
இப்படி புகழுக்குரியவன் அல்லாஹ், அவனே அனைத்திலும் சக்தியுள்ளவன் என்பதை நம்பிக்கை கொள்ள வேண்டும். இதனையே ருபூபிய்யத் குறிப்பிடுகின்றது.
ருபூபிய்யத்தை உலகில் எல்லோரும் ஏற்றுள்ளனர். குறிப்பாக ஜாஹிலிய்யா காலத்தில் உள்ள இணைவைப்பாளர்களும் கூட அல்லாஹ்தான் அனைத்திற்கும் பொறுப்பானவன் என்பதை ஏற்றிருந்தனர். அனால் பிர்அவ்ன் தன்னை கடவுளாக அறிவித்து ருபூபிய்யத்தை மறுத்தான் என அல்லாஹ் அல்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். அதே போல நாத்திகர்களும் அல்லாஹ்வை மறுக்கின்றனர். மற்றைய ஒட்டுமொத்த மனித வர்க்கமும் இயல்பாகவே அல்லாஹ்வை ஏற்றிருப்பதாக அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவுபடுத்துகின்றான்.
எனவே ருபூபிய்யத் விடயத்தில் நாம் சரியான நம்பிக்கையில் இருக்கின்ற போது தான் அந்த நம்பிக்கை பிரகாரம் வணக்க வழிபாடுகளும் அமையும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
கருத்துரையிடுக...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.
Note: only a member of this blog may post a comment.