இஸ்ரேல் - ஸஊதி உறவு பற்றி ஷேஹ் சுதைஸ் கூறியது என்ன? புனித மக்கா ஜும்ஆப் பேருரையின் தமிழாக்கம் - (2020/09/04) - MJM. Hizbullah Anvari (B.Com Red)தலைப்பு: ஹிஜ்ரி ஆண்டுக்கான சில உபதேசங்கள். 

உரை நிகழத்தியவர்: அஷ்ஷேக் அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் அஸீஸ் அஸ்ஸுதைஸ். 

திகதி: 1442/01/16 – 2020/09/04 

முதல் பிரசங்கம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. இறைவா! உன்னை நாம் புகழ்கிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம், உன்னிடமே பாவமன்னிப்பு கேட்கிறோம். அனைத்து நலவுகளையும் கொண்டு உன்னை பெருமைப்படுத்துகிறோம். உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை எனவும், அவனுக்கு இணையாக எவருமில்லை எனவும் நான் சாட்சி கூறுகிறேன். அவன் அடியார்களைப் படைத்து, அவர்களுக்கு சரியான செயற்பாடுகளையும், கொள்கைகளையும் தெளிவுபடுத்தினான். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடியாரும் இறுதித் தூதருமாவார்கள் என நான் சாட்சி கூறுகிறேன். அவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் சிறந்தவர். உண்மையையும், நேர்வழியையும் தெளிவுபடுத்தியவர். அவர் மீதும், அவரின் குடும்பத்தார்கள், தோழர்கள், இறுதி நாள் வரை அவரை சரியாகப் பின்பற்றும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் அருளும், ஈடேற்றமும் உண்டாவதாக!

அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் இறைவனைப் பயந்து, அவனையே வணங்குங்கள். அவனுக்கு வழிபட்டு, அவனை மாத்திரமே ஒருமைப்படுத்துங்கள். அவனைத் தவிர வேறு கடவுள்கள் உங்களுக்குக் கிடையாது. உண்மையாக வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் அவனைத் தவிர வேறு யாரும் கிடையாது. ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.” (அல்குர்ஆன் 51:56).

கட்டளைப்படி வணங்குவது இறைவனுக்கானது

ஆசைப்படி வணங்குவது ஷைத்தானுக்கானது

இணைவைக்க மறுப்பது இரண்டாவது கட்டளை

வெற்றியை வழங்குகிறது இவ் இரு கட்டளை.

முஸ்லிம்களே! ஹிஜ்ரி ஆண்டு நம்மை வந்தடைந்துள்ளது. இவ் ஹிஜ்ரி ஆண்டை தவறுகள், தீமைகளை விட்டும் பாவமன்னிப்புக் கேட்ட வண்ணம் துவக்கி வையுங்கள். நல்ல செயல்களை செய்வதில் தொடர்ச்சியைக் கையாழுங்கள். வணக்க வழிபாடுகளை அதிகமாக செய்யுங்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ரமழானுக்குப் பின் (நோற்கப்படும்) சிறந்த நோன்பு அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்திலாகும்” (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் 1163). வருடங்கள் கடந்து செல்வதில் படிப்பினைகளையும், நல்லுணர்வுகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

மானிடரை சந்திக்கும் புதியதோர் ஆண்டு இது

யாவருக்கும் ஒரு திருநாள் இவ்வையகத்தில் உண்டு

மனித இலட்சியங்கள் புதிய ஆண்டை ஆரவம் செய்ய

தொலை தூரத்தில் அதை எண்ணி, எம் மனங்களும் ஏங்குது.

இறைவா! இம் மாதத்தை பாதுகாப்பு, இறைவிசுவாசம், சாந்தி, சமாதானம் போன்ற அனைத்தும் நிறைந்த மாதமாக எமக்கு ஆக்குவாயாக! இதில் நீ விரும்பக் கூடிய செயல்களை செய்பவர்களாக எம்மை மாற்றுவாயாக!

ஓரிறைக் கொள்கையின் சமுதாயமே! புது வருடம் பிறந்திருக்கும் இத்தருணத்தில் குறிப்பாக சிந்தனைச் சிதைவுகள், கொள்கை நெறிபிறழ்வுகள் அதிகம் இடம் பெறும் இக்காலத்தில், அல்லாஹ்வை ஒருமைப்படுத்தும் விடயத்தை உள்ளங்களுக்கு உபதேசமாக வழங்குவதே பொறுத்தமான ஒன்றாக இருக்கிறது. எதிர்காலத்தை செப்பனிட்டு, தூர நோக்கோடு செயற்படவும், தூய இஸ்லாமிய கொள்கையின் ஒளியில், அதன் ஆழம் வரை சென்று, சந்தேகங்களுக்கான தெளிவுகளைக் காணவும் நாம் உறுதியுடன் செயற்பட வேண்டும். அல்லாஹ் அல்லாத வேறு கடவுள்களை வணங்குவதில் அடிமைப்பட்டுக் கிடந்த உள்ளங்களுக்கு விடுதலையளிக்கவும், அவ் உள்ளங்களை கண்ணியம் பொருந்தியதாக மாற்றுவதற்கும், நாத்திகம், சிலை வழிபாடு, பலகடவுள் கொள்கை போன்றவற்றிலிருந்து அவற்றைப் பாதுகாக்கவும், மூடநம்பிக்கைகள், கட்டுக் கதைகள் போன்றவற்றுக்கு எதிராக அவை இருப்பதற்கும், இஸ்லாம் தூய ஓரிறைக் கொள்கையை உலகுக்கு கொண்டு வந்தது. கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.” (அல்குர்ஆன் 39:03).

எவ்வளவு தான் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தூய ஓரிறைக் கொள்கை யாருக்கும் விலை போகாது. சவால்களும், இஸ்லாத்திற்கு எதிரான மாநாடுகளும் எவ்வளவுதான் விரிந்து சென்றாலும், அடிப்படைக் கொள்கையிலிருந்து அது இறங்கிவருவது கிடையாது. இதனால் தான் எமது முன் சென்ற அறிஞர்களுக்கு அவர்களது உள்ளத்தில் இறை விசுவாசத்தை சரியாகப் பாதுகாக்க முடிந்தது. முஸ்லிம் சமூகம் அவர்களை கண்ணியப்படுத்தி, தலையில் வைத்துக் கொண்டாடியது. நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது” (அல்குர்ஆன் 30:47).

ஈமானிய சகோதரர்களே! அல்லாஹ் தன் அடியார்களை தனக்கு இணைவைக்காத வகையிலே படைத்தான். ஷைத்தான் அவர்களது மார்க்கத்தை விட்டும் அவர்களை திசை திருப்பி, நெறிபிறழ்வு, வழிகேடு போன்றவற்றை அவர்களுக்கு அழகாக்கிக் காண்பித்தான். ஹதீஸுல் குத்ஸியில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான், நான் என் அடியார்கள் அனைவரையும் (இயற்கையிலேயே) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன். (ஆயினும்) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச்செய்துவிட்டான். நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடைசெய்யப் பட்டவையாக ஆக்கிவிட்டான்; நான் எனக்கு இணை கற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் இறக்காத நிலையில் எனக்கு இணை கற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டான்.” (அறிவிப்பவர்: இயாழ் இப்னு ஹிமார் (ரழி), நூல்: முஸ்லிம் 2865).

எனவே உண்மையான மார்க்கத்தை விட்டும், சரியான ஓரிறைக் கொள்கையை விட்டும் ஒரு அடியான் தேவையற்று, விலகியிருக்க முடியாது. அல்லாஹ்வின் இறைமைக் கோட்பாட்டிலும், பரிபாலணக் கோட்பாட்டிலும், பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றிய கோட்பாட்டிலும் அவனை ஒருமைப்படுத்த வேண்டும். அவ்வாறே அவனுக்கு மாத்திரமே தனது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொண்டு, அவனது மார்க்கத்தின் அடிப்படையில் மாத்திரமே அனைத்துக்கும் தீர்வு காண வேண்டும். இவை நபி (ஸல்) அவர்களின் சொல், செயல் சார்ந்த வழிகாட்டலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாழ்வு உயிரோட்டமுள்ள படமாகவும், பணிவு, அச்சம், அல்லாஹ்விடம் மாத்திரம் தேவை கண்டு, அவனிடம் மாத்திரம் சரணடையக் கூடிய பண்பு போன்றவற்றைக் குறித்து பேசக் கூடிய வகையிலும் இருக்கிறது.

ஓரிறைக் கொள்கையை ஓர் படத்தில் வரைந்தாய் முழுவதுமாய்

வீண் சந்தேகங்களை அது தூசு தட்டியது பார்

எம் எதிர்பார்ப்பும், வேண்டுதலும், நம்பிக்கையும் என

எம் கட்டுப்படுதலும் அந்த ஓரிறைவனுக்கே என்பாய்

எனது தொழுகை, எனது வணக்கமுறை, எனது வாழ்வு, எனது மரணம் யாவும் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியன; அவனுக்கு நிகரானவன் இல்லை” (அல்குர்ஆன் 06:162,163).

கொள்கையுள்ள சமுதாயமே! ஏகத்துவத்தை பாதுகாக்கவும், ஓரிறைக் கொள்கையில் சரியாக இருப்பதற்கும், உறுதியான நம்பிக்கை வைப்பதற்கும், அல்லாஹ்விடம் மாத்திரம் அனைத்தையும் பொறுப்புச் சாட்டுவதற்கும் இஸ்லாம் தன்னைப் பின்பற்றுவோரை வளர்த்தெடுக்கிறது. புத்தியைப் பாதித்து, உண்மைக்குப் புரம்பாக சிந்தனையை மாசுபடுத்துகின்ற மாயைகள், வீண் சந்தேகங்கள், கற்பனைகள் போன்றவற்றிலிருந்து அவர்களைத் தூரமாக்குகிறது. மரணித்தவர்கள், நல்லடியார்கள் போன்றோரிடம் உதவி தேடுதல், கப்றுகளை முத்தமிட்டு, அதன் கட்டிடங்களை தடவி, பரக்கத் வேண்டுதல் போன்ற, ஏகத்துவத்தையும், இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையையும் பாதிக்கின்றவற்றை செய்வதை விட்டும் அவர்களைத் தடுக்கிறது. சில பக்தர்கள் கப்றுகளுக்கு அருகாமையில் வந்து, கப்றில் இருப்போரிடம் தமது அந்தஸ்த்தை உயர்த்துமாறும், தமது துன்பங்களை நீக்குமாறும், தமது தேவைகளை நிறைவேற்றி வைக்குமாறும், நோய் நொடிகளைக் குணமாக்குமாறும் பிரார்த்தனை புரிகின்றனர். அல்லாஹ் தன் அடியார்களின் தேவைகளை நிறைவேற்றும் வாயிலை அடைத்துவிட்டான் எனும் அளவுக்கு, கப்றுகளில் தாம் கேட்ட கோரிக்கைகள் நிறைவேறும் எனவும், இனி பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் அவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். அவர்கள் கூறுவதை விட்டும், செய்பவற்றை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன்.

உதவி தேடுதல் என்பது அல்லாஹ்விடம் மாத்திரமே இருக்க வேண்டும். அது அல்லாஹ்வுக்கு உரிய ஒன்றாகும். அல்லாஹ் கூறுகிறான், அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.” (அல்குர்ஆன் 07:180). அல்லது நல்ல செயல்கள் மூலமும், அல்லாஹ்வின் மீதும், அவனது தூதர் மீதும் அன்பு வைப்பதன் மூலமும் அல்லாஹ்விடம் உதவி தேட முடியும். அல்லாஹ் கூறுகிறான், “"எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!'' என்று அவர்கள் கூறுவார்கள்” (அல்குர்ஆன் 03:16).

பூரண அறிவு, முழுமையான ஆற்றல், எப்போதும், எதிலும் தேவையற்ற தன்மை போன்ற அனைத்தும் அல்லாஹ்விடம் இருப்பதால் உதவி தேடுவதற்கும், ஆதரவு வைப்பதற்கும், அடைகளம் தேடுவதற்கும் அவன் ஒருவனே தகுதியானவன். இதுவிடயத்தில் அவனைத் தவிர அவனது மலக்குமார்களோ, அவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களோ, நல்லடியார்களோ எவரும் தகுதியற்றவர்கள். தொழுகை அல்லாஹ்வுக்கு மாத்திரமுரியது, பிரார்த்தனை அல்லாஹ்வுக்கு மாத்திரமுரியது, அறுத்துப் பலியிடுவது அல்லாஹ்வுக்கு மாத்திரமுரியது, நேர்ச்சையும் அல்லாஹ்வுக்கு மாத்திரமுரியது. உதவி தேடுவதும், பாதுகாப்பு தேடுவதும், சத்தியம் செய்வதும் அல்லாஹ்வைக் கொண்டு மாத்திரமே. அனைத்து காரியங்களையும் பொறுப்புச் சாட்டுவதும் அல்லாஹ்விடம் மாத்திரமே. பயமும், எதிர்பார்ப்பும் அவனுக்கு மாத்திரமே. தேவைகளை நிறைவேற்றுவதற்கும், மறைவானவரின் அழைப்புக்கு பதில் அளிப்பதற்கும், நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கும் அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் முடியாது.

அல்லாஹ்வைத் தவிர மற்றும் சிலரால் நன்மைகளை உண்டு பண்ணவும், தீங்குகளைத் தடுக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும், தேவைகளை நிவர்த்தி செய்யவும் முடியும் என ஒருவர் நம்பினால் அவர் அல்லாஹ்வின் மீது அபாண்டமான பொய்யைக் கூறி, வழிகெட்டுப் போய்விடுவார். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.” (அல்குர்ஆன் 04:116).

அவ்வாறே ஒருவர் அவருக்கும் அல்லாஹ்வுக்கு இடையில் இடைத்தரகரை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களிடம் பிரார்த்தித்து, உதவி தேடி, தேவைகளைக் கேட்டு, அவற்றை அல்லாஹ்விடம் பரிந்துரைக்குமாறு கூறினால், அவரும் அல்லாஹ்வுக்கு இணைவைத்துவிட்டார். அல்லாஹ் கூறுகிறான், அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!” (அல்குர்ஆன் 10:18). அவர்களின் தெய்வங்களில் அவர்களுக்காகப் பரிந்து பேசுவோர் இருக்க மாட்டார்கள். அவர்கள் தம் தெய்வங்களையும் மறுப்பார்கள்.” (அல்குர்ஆன் 30:13).

இவ்வாறு பரிந்துரை பேசுவோர் நன்மை, தீமை, மரணம், வாழ்வு, மீள எழல் என எதிலும் சுய சக்தியோ, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றலோ அற்றவர்கள். அல்லாஹ் கூறுகிறான்,  “"அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உரிமையற்றவர்களாகவும், விளங்காதவர்களாகவும் இருந்தாலுமா?'' என்று கேட்பீராக! "பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே'' என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!” (அல்குர்ஆன் 39:43,44).

உலக மக்களில் சிறந்தவரும், அல்லாஹ்விடத்தில் அதி சிறப்புக்குரியவரும், நபிமார்களில் இறுதியானவருமான முஹம்மத் (ஸல்) அவர்களைப் பார்த்து அல்லாஹ் பின்வருமாறு கட்டளையிடுகிறான், “"அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ, நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெறமாட்டேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!” (அல்குர்ஆன் 10:49), “"நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெறமாட்டேன்" என்றும் கூறுவீராக! "அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்'' என்றும் கூறுவீராக!” (அல்குர்ஆன் 72:21,22), அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது.” (அல்குர்ஆன் 10:107). படைப்புகளிலே கண்ணியமிக்க, அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய அடியானுக்கே இந்நிலை எனில், அவரை விட கீழ் நிலையில் இருக்கும் மற்றவர்கள் மட்டும் எம்மாத்திரம். எனவே நன்மை, தீமை போன்றவற்றுக்கான அதிபதி அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கிடையாது. அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை.” (அல்குர்ஆன் 22:62).

இஸ்லாமிய சகோதரர்களே! இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையில் நாம் தெளிவுபெற வேண்டிய, அநேகமானோர் சரியான முறையில் விளங்கிக்கொள்ளாமல் போயுள்ள மற்றொரு பகுதி, முஸ்லிமல்லாதவர்களுடன் நல்ல விடயங்களில் சேர்ந்து நடத்தலும், பாவகாரியங்களில் அவர்களை விட்டும் பிரிந்து நடத்தலும் (அல்வலாஉ வல்பராஉ) எனும் பகுதியாகும். இதனாலே உள நம்பிக்கைக்கும், தனிப்பட்ட, சர்வதேச தொடர்புகளைப் பேணுவதற்கும் மத்தியில் குழப்ப நிலை காணப்படுகிறது. இக் குழப்ப நிலைக்கான தீர்வு, மக்களைக் கண்காணிக்கும் விடயத்திலும், இஸ்லாமிய அரசியலிலும், மனித நலத்தைப் பேணுவதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான், மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.” (அல்குர்ஆன் 49:13).

முஸ்லிம் அல்லாதோரின் உள்ளம் ஈர்க்கப்பட்டு, இஸ்லாத்தில் அவர்கள் நுழையும் அளவுக்கு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது, சேர்ந்து நடத்தல் (அல்வலாஉ) எனும் பகுதியோடு என்றும் முரண்படுவதில்லை. முஸ்லிம் அல்லாதவர் இஸ்லாத்துக்கு சார்பாக இருக்கும் அளவுக்கு ஓர் முஸ்லிம் அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான், மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.” (அல்குர்ஆன் 60:08). உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு'' எனக் கூறுவீராக” (அல்குர்ஆன் 109:06). இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை” (அல்குர்ஆன் 02:256). மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்” (அல்குர்ஆன் 02:83).

மக்களிடம் அழகானதைப் பேசுங்கள் என்பது அனைத்து மக்களுடனும் அழகானதைப் பேச வேண்டுமென்பதைக் குறிக்கிறது. அஸ்மா பின்த் அபூ பக்ர் (ரழி) கூறினார்கள், என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், 'என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், 'ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்ர் (ரழி), நூல்: புஹாரி 2620, முஸ்லிம் 1003). இவரின் உள்ளத்தில் தன் தாய் இணைவைப்பாளராக உள்ளாரே எனும் கோபம் இருந்தும், தாய் எனும் உறவைப் பேணி, அவருடன் மனம் குளிரும் வகையில் நல்ல முறையில் நடந்துகொண்டுள்ளார். அல்லாஹ் கூறுகிறான், இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்ளுங்கள்!” (அல்குர்ஆன் 31:15).

நபி (ஸல்) அவர்கள் இணைவைக்கும் பெண்ணின் தோல்பையில் இருந்த தண்ணீரால் வுழூ செய்துள்ளார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் இப்னுல் ஹுஸைன் (ரழி), நூல்: புஹாரி 344). அவரின் கேடயம் ஓர் யூதனிடம் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்தார்கள். (அறிவிப்பவர்: ஆஇஷா (ரழி), நூல்: புஹாரி 4467). (கைபரை வெற்றிகொண்ட பிறகு) கைபர் பகுதியில் வசித்து வந்த யூதர்களின் விளைச்சலில் கிடைக்கும் பயிர்களிலும், பழங்களிலும் அவர்களுடன் உடண்படிக்கை செய்துகொண்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), நூல்: புஹாரி 2730). இஸ்லாத்தை ஏற்கும் அளவுக்கு தனது அண்டைவீட்டு யூதருடன் நல்ல முறையில் நடந்துகொண்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி), நூல்: புஹாரி 1356, அஹ்மத் 13565).

இது போன்று பல நிகழ்வுகள் உள்ளன. அவை அனைத்தும் (முஸ்லிம் அல்லாதவர்களுடன் நல்ல விடயங்களில் மாத்திரம் சேர்ந்து நடப்பதற்கான) தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறன. அறிவு, புத்தி, தெளிவான சிந்தனை, நிதானம் போன்ற அனைத்திலும், தாண்டவமாடுகிற உணர்ச்சிகளையும், பொங்கியெழுகிற ஆவேசங்களையும் தகர்த்தெறியும் இவ் ஒளிமயமான நபியவர்களின் வழிமுறை எங்கே? மனித உரையாடல்களில் இவை மறக்கடிக்கப்படும் போது நாகரீக மோதல்களும், பகைமையும், குரோதமும், வெறுப்புணர்வுகளும் மாத்திரமே எப்போதும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.

இஸ்லாமிய சமுதாயமே! இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய மிக முக்கிய இன்னொரு விடயம் கூட்டாக இருப்பதாகும். கூட்டாக இருந்து, தலைவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அனைத்திலும் பகுத்தறிவை முற்படுத்தி, தலைவர்களை இறைநிராகரிப்பாளர்கள் என மார்க்கத்தீர்ப்பு வழங்கி, அவர்களுக்கு எதிராக கிளர்ந்தெழுத்து, பலரைக் கொன்றுகுவித்த, ஹவாரிஜ் குழுவினர், விபச்சார வர்க்கத்தினர், வழிகெட்ட பிரிவினர், ஆயுதத்தால் குரோதங்களை உண்டுபன்னுபவோர், பிரிவினைவாதிகள் போன்றோருக்கு எப்போதும் மாறு செய்ய வேண்டும். இன்று அவர்கள் சமூக வலைத்தளங்களுக்குப் பின்னால் மறைந்திருந்து, அதிகமாக பொய்ப்பிரச்சாரங்களில் ஈடுபட்டு, மக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றனர். நடுநிலைவாதிகளே! இவர்கள் விடயத்தில் எச்சரிக்கையாகவும், புத்திசாலித்தனமாகவும் இருங்கள். அவர்கள் செல்லும் மோசனமான வழிகளில் நீங்களும் பயணிப்பதிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள். இவ்வாறான அத்துமீறல்கள் பல நாடுகளிலும், சமூகங்களுக்கு மத்தியிலும் பொருளாதார நெருக்கடிகளையும், வீழ்ச்சிகளையும் உண்டுபன்னியுள்ளதை நாம் அதிக ஆய்வறிக்கைகள் மூலமாக அறிந்துகொள்கிறோம். தூய இஸ்லாமிய போதனைகளை தவறுதலாக விளங்கி, இவ்வாறான மாயைகளுக்கு ஏமாறுவோரை இனம் கண்டு, அவர்களுக்கு தெளிவான, தூய இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாட்டை விளக்கி, அவர்களை நெறிபிறழ்வுகளிலிருந்து பாதுகாப்பது எமது சமுதாயத்தின் கடமையாகும்.

அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சி நடந்திடுங்கள். இங்கு குறிப்பிடப்பட்ட இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையின் சில முக்கிய விழிப்புணர்ச்சிகளை உங்கள் வாழ்வுக்கான ஒளி விளக்காக எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன். அல்லாஹ் கூறுகிறான், ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம். அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.” (அல்குர்ஆன் 16:97).

இறைவா! எங்களுக்கு அல்குர்ஆனில் பரக்கத்தை ஏற்படுத்துவாயாக! நபிமார்களுக்கெல்லாம் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டலில் எமக்கு நலவைத் தருவாயாக! நேரான பாதையில் எம்மை உறுதியோடு பயணிக்கச் செய்வாயாக! எனக்கும், உங்களுக்கும், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அல்லாஹ் பாவமன்னிப்பைத் தருவானாக! அவனிடமே பாவமன்னிப்புத் தேடுங்கள். அவன் அனைவரையும் மன்னிப்பவனாக இருக்கிறான்.

 

இரண்டாம் பிரசங்கம்

மிகையான, சிறந்த, பரக்கத் பொருந்திய புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானது. உண்மையாக வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை எனவும், அவனுக்கு இணை இல்லை எனவும் நான் சாட்சி கூறுகிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதருமாவார்கள் எனவும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் அருளும், சாந்தியும் அவர் மீதும், அவரது குடும்பத்தார்கள், தோழர்கள், மறுமை நாள் வரைக்கும் அவரைப் பின்பற்றுகின்ற அனைவருக்கும் உண்டாவதாக.

அல்லாஹ்வின் அடியார்களே! தனிமையிலும், மக்கள் மன்றத்திலும் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள். உங்களுக்கு மார்க்கமாக அவன் வழங்கியுள்ளவற்றுக்கு அவனைப் புகழ்ந்து, என்றும் அவனுக்கு நன்றிதெரிவித்துக் கொண்டே இருங்கள். அப்போதே நீங்கள் அவனின் திருப்பொருத்தத்தையும், அருளையும் அடைந்துகொள்ள முடியும்.

ஈமானிய சகோதரர்களே! வெற்றிக்கு வழிவகுக்கக்கூடிய, பாதுகாப்பைத் தரக்கூடிய, சிந்தனைச் சிதறல்களிலிருந்தும், சமூகத்தை பலவீனமாக்கி, தவிடுபொடியாக்கும் பிரிவினை வாதத்திலிருந்தும் உங்களைப் பாதுகாக்கும் அரணாக இருக்கக்கூடியது அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத்தினரே. அவர்களின் கொள்கையில் உறுதியாய் இருப்பதே இஸ்லாத்தின் அடிப்படைகளில் மிக முக்கிய ஒன்றாகும். இக்காலத்தில் சீரான இஸ்லாமிய ஓரிறைக் கொள்கையில் பயணிக்கும் மார்க்க அறிஞர்கள், சொற்பொழிவாளர்கள், சீர்திருத்தவாதிகள், தலைமைத்துவத்தில் இருப்போர் என அனைவருக்கும், தமது சமூகத்தையும், வழித்தோன்றல்களையும் சரியான இஸ்லாமிய கொள்கையின் பக்கம் வழிகாட்டிச் செல்வது பொறுப்பாகவும், அமானிதமாகவும் மாறியுள்ளது. சமுதாயத்தின் நிலைமைகளை சீர்செய்வதற்கும், அவற்றின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கும், அதன் சரியான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கும், ஏகத்துவத்திலிருந்து சிறந்த வழிகாட்டுதல்களையும், போதனைகளையும் பெற வேண்டும்.

குறிப்பாக இன்று சமூகத்தின் மாபெரும் பிரச்சினையாக இருக்கும் விடயங்களில் எமது கவனத்தைச் செலுத்த வேண்டும். அதில் தலையாய அம்சமாக பலஸ்தீனும், மஸ்ஜிதுல் அக்ஸாவும் திகழ்கிறது. ஊடக திரிபுகள், பத்திரிகை அத்துமீறல்கள், இலத்திரணியல் யுத்தங்கள் போன்றவற்றில் குறிப்பிடப்படுவது போல் அல்லாமல், எமக்குள் இருக்கும் மோதல்களையும், பிரிவினையையும் மறந்து, இதை, முதல் இஸ்லாமிய விடயமாகக் கருத வேண்டும்.

இஸ்லாத்தின் கொடியை நீதமாகப் பறக்கவிட

புகழ்பெருமையை உறுதியாக பாதுகாத்திட

சிறந்த அணுகுமுறையால் அல்லாஹ்வின் கயிற்றை

பலமாகப் பிடிக்கும் நேரம் இதோ வந்துவிட்டது.

தன் வாக்கை நிறைவேற்றும் முகமாக அல்லாஹ் அவனது ஒளியை பூர்த்தியாக்கி, முஸ்லிம் சமூகத்துக்கு வெற்றியைத் தராமல் இருக்க மாட்டான். அல்லாஹ் கூறுகிறான், நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.” (அல்குர்ஆன் 06:82).

சரியான இஸ்லாமிய கொள்கையை அறிவதற்கு உதவக்கூடிய ஓர் வழிதான் கற்றலிலும், கற்பித்தலிலும் கவனம் செலுத்துவது. அதுவே ஒருவருக்கு நற்செய்திகளையும், நம்பிக்கையையும் ஊட்டுகிறது. பல எதிர்பார்புகளோடு நாம் புதிய ஹிஜ்ரி ஆண்டை அடைந்திருக்கும் இந்நிலையில், தொற்று நோயின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் எமது பிள்ளைகள் கல்வி நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் தொலைதூரக் கல்வி கட்டாயமாக்கப்பட்டு, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். பிள்ளைகள் சிந்தனை ரீதியான சிதறல்களில் அகப்படாமல் இருக்க, எதிர்காலத்தை சிறந்த முறையில் திட்டமிட, குடும்பத்தார்கள் பாடசாலையுடனும், பல்கலைக்கழகத்துடனும் ஒத்துழைத்து, அவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கண்ணியத்திற்குரிய பெற்றோர்களே! ஆசிரியர்களே! உங்களைக் கண்டு நாம் பெருமைப்படுகிறோம். உங்கள் முயற்சிகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். கல்வி நடவடிக்கைகளிலும், வழிகாட்டுதலிலும் உங்கள் விடாமுயற்சியைக் கைவிடாது, சிறந்த சதந்ததியினரை உருவாக்குவதில் நீங்கள் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும். மார்க்கத்துக்காகவும், தாய்நாட்டிற்காகவும் அரசாங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒத்துழைக்கும் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக. இக்கட்டான சூழ்நிலையிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரும் பங்காற்றுகின்ற கல்வி ஊழியர்களுக்கு அல்லாஹ்வின் அருளும், எமது நன்றிகளும் விசேடமாக தெரிக்கப்பட வேண்டும். அல்லாஹ்வே அனைத்திற்கும் போதுமானவன். அல்லாஹ் எம் அனைவருக்கும் பிரயோசனமான அறிவையும், அதன் படி செயல்படுவதற்கும் அருள்பாலிப்பானாக! அல்குர்ஆனையும், ஸுன்னாவையும் சீரிய முறையில் பின்பற்றுவதற்கு அருள்புரிவானாக! எமது முஸ்லிம் சமூகத்தை விட்டும் சோகங்களை நீக்கிவிடுவானாக! அவன் கொடையாளனாகவும், அருள்புரிபவனாகவும் இருக்கிறான்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அதிகம் ஸலவாத்துக் கூறுங்கள். அல்லாஹ் கூறுகிறான், அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்” (அல்குர்ஆன் 33:56). நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யார் என்மீது ஒரு தடவை ஸலவாத் கூறுவாறோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை ஸலவாத்துக் கூறுகிறான்” (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி), நூல்: முஸ்லிம் 384).

(துஆப் பிரார்த்தனை)

அதில் ஒரு பகுதி

இறைவா! முஸ்லிம்களின் இரத்தங்களைப் பாதுகாப்பாயாக! இறைவா! முஸ்லிம்களின் இரத்தங்களைப் பாதுகாப்பாயாக! அவர்களின் நிலைகளை சீர்செய்வாயாக! கண்ணியமும் சங்கையும் பொருந்தியவனே! அனைத்து இடங்களிலுமுள்ள முஸ்லிம்களின் நிலைகளை சீர்செய்வாயாக! இறைவா! மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாப்பாயாக! இறைவா! மஸ்ஜிதுல் அக்ஸாவைப் பாதுகாப்பாயாக! இறைவா! கண்ணியமும் சங்கையும் பொருந்தியவனே! மறுமை நாள் வரை அதை கண்ணியம் பொருந்தியதாக ஆக்கி வைப்பாயாக! நித்திய ஜீவனே! என்றும் நிலைத்திருப்பவனே! உனது அருளைக் கொண்டு உன்னிடம் உதவி தேடுகிறோம். கண்மூடித் திறக்கும் நேர அளவில் கூட எமக்கு எதிராக எப்போதும் இருந்துவிடாதே!...

முற்றும்

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget