மீலாத் விழா கொண்டாடுவது குற்றமா? || As-sheikh M Ahmedh (Abbasi, Riyadhi) MA Reading

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் 
ஆக்கம் : எம். அஹ்மத் (அப்பாஸி) 

அறிமுகம் 
இஸ்லாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதம் ரபீஉல் அவ்வல் மாதமாகும். ரபீஃ என்ற அரபுமொழிச் சொல் வசந்தம் எனும் பொருளைக் கொண்டது. மாதங்களுக்குப் பெயர் வைக்கும் ஆரம்ப காலத்தில் இம்மாதமும் இதற்கடுத்த மாதமும் வசந்த காலத்தில் சந்தித்துக் கொண்டதால் ரபீஉல் அவ்வல், ரபீஉஸ்ஸானீ அல்லது ரபீஉல் ஆகிர் எனப் பெயரிட்டனர். ஆங்கில மாதங்களும், ஹிஜ்ரி மாதங்களும் சுழற்சி முறையில் வரும்போது மாறுபடுவதால் எல்லா வருடங்களும் வசந்த காலத்தில் ரபீஃவுடைய இரு மாதங்களும் நிகழமாட்டாது. பருவ காலங்களில் ஒன்றான வசந்த காலத்திற்கும் ரபீஃ என்றே பயன்படுத்தப்படுகின்றது. 

வரலாற்றில் ரபீஉல் அவ்வல் 
இஸ்லாமிய வரலாற்றில் ரபீஉல் அவ்வல் மாதத்தில் சில முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பின்வரும் மூன்று அம்சங்களும் பிரதானமானதாகும் : 

1. நபி ஸல் அவர்களின் பிறப்பு. 
2. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரிக்கும் நபியவர்களின் ஹிஜ்ரத் பயணம். 
3. நபி ஸல் அவர்களின் வபாத் ஹிஜ்ரி 11. 

இவையல்லாமல் மேலும் பல நிகழ்வுகள் இம்மாதத்தில் நடைபெற்றுள்ளன. அவற்றை சுருக்கமாக நோக்குவோம் : 

· புவாத், மற்றும் முதலாம் பத்ருப் போர் (சிறிய பத்ர் போர்). இவையிரண்டும் ஹிஜ்ரி 2ம் ஆண்டு நடைபெற்றது. 

· தூமதுல் ஜன்தல் (மதீனாவிலிருந்து சுமார் 600 கி.மீ தொலைவில் ஸிரியாத் திசையில் தற்போதய ஜோப் மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்) எனும் போர் ஹிஜ்ரி 5ம் ஆண்டு இதே மாதத்தில் நடைபெற்றது. 

· அபூபக்ர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 11ம் ஆண்டு இதே மாதம்தான் இஸ்லாத்தின் முதல் கலீபாவாக தேர்வுசெய்யப்பட்டார்கள். 

· ரோம் பிரதேசத்திற்கு உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களின் தலைமையில் ஒரு படை ஹிஜ்ரி 11ம் ஆண்டு அபூபக்ர் (ரலி) அவர்களால் அனுப்பப்பட்டது. இது ஏற்கனவே நபியவர்களால் தயார்படுத்தப்பட்ட படை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

· ஹிஜ்ரி 12ம் ஆண்டு காலித் இப்னுல் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் இராக் நாட்டின் முதல் நகரம் ஹைரா வெற்றி கொள்ளப்பட்டதும் இம்மாதத்தில்தான். 

· ஸ்பைன் நாட்டில் முஸ்லிம்கள் வசமிருந்த கடைசி ஊரான குர்னாதா பரிபோன சோகச் சம்பவமும் ஹிஜ்ரி 897ல் இதே மாதத்திலேயே நிகழ்ந்தது. 

ரபீஉல் அவ்வலில் புகுந்தவை 

முஹர்ரம், ஷஃபான், ரமழான், துல்ஹிஜ்ஜா மாதங்கள் பற்றியும், அவற்றில் நாம் செய்ய வேண்டிய நற்காரியங்கள் பற்றியும் நபிமொழிகள் இடம்பெற்றிருப்பது போல ரபீஉல் அவ்வல் மாதத்திற்கென எந்தவொரு தனிச்சிறப்பும் அல்குர்ஆனிலோ, ஸஹீஹான நபிமொழிகளிலோ இடம்பெறவில்லை. 

பிற நபிமார்களுடைய சில சம்பவங்களின் பின்னனியில் ஹஜ், ஆஷூரா நோன்பு போன்ற வணக்கங்களை அறிமுகப்படுத்திய எமது நபி (ஸல்) அவர்கள், தான் பிறந்த மாதத்திற்கென எந்தவொரு தனிச்சிறப்பும் கூறாமலிருப்பதே இந்த மார்க்கம் அல்லாஹ்விடம் இருந்துதான் வந்துள்ளது. நபியவர்கள் அதில் எந்தவொரு கூடுதல், குறைவுமின்றி சமூகத்திற்கு எத்தி வைத்துள்ளார்கள் என்பது இங்கு நிரூபணமாகின்றது. 

எனினும் நபியவர்களுடைய காலம், ஸஹாபாக்கள், தாபிஈன்கள், இமாம்களுடைய காலங்களையெல்லாம் கடந்து, பிற்காலத்தில் உருவான உபைதுல் கத்தாஹ் என்பவனின் வழித்தோன்றலான “பாதிமிய்யாக்கள்” எனத் தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் ஒரு கூட்டத்தினரால் மீலாத் எனும் பெயரில் நபியவர்களின் பிறந்த தினக் கொண்டாட்டம் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்டது. ஷீஆக்களின் ஒரு பிரிவினரான இவர்கள் நபி (ஸல்) அவர்கள் உட்பட அலீ (ரலி), பாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி), மற்றும் அவர்களின் நடப்புத் தலைவர் போன்றவர்களின் பிறந்த தினங்களைக் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டவர்கள். அந்த வகையில்தான் இதனையும் அவர்கள் மார்க்கத்தில் உட்புகுத்தினார்கள். 

ஒரு வாதத்திற்கு மீலாத் கொண்டாடுவதென வைத்துக் கொண்டாலும் முதலில் நபியவர்கள் பிறந்தது ரபீஉல் அவ்வல் 12ல் தானா? என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. நபியவர்கள் பிறந்ததும், இறந்ததும் ரபீஉல் அவ்வல் மாதத்தில் ஒரு திங்கட்கிழமையில் என்பது உறுதியானது. அவர்கள் இறந்தது 12ம் நாள் என்பதும் உறுதியானது. ஆனால் பிறந்தது 12ல் தானா? என்பதுதான் இப்போது சர்ச்சைக்குரிய விடயமாகும். நாட்காட்டி ஆய்வாளர்களின் கருத்துப்படி ஒரு வருடத்தில் ஒரு மாதத்தில் திங்கட்கிழமை 12வது நாளாக இருந்து, அதற்கு 63 வருடங்களுக்கு முன்னர் அதே மாதத்தில் வரும் திங்கட்கிழமை 12க வரமுடியாது, 2 அல்லது 9ஆகத் தான் இருக்க முடியும் என்பது அவர்களது ஆய்வின் முடிவு. அதனடிப்படையில் நபி ஸல் அவர்கள் இறந்தது 12 என உறுதியாக இருக்கும் போது பிறந்தது ரபீஉல் அவ்வல் 2 அல்லது 9ம் நாளாகத்தான் இருக்க முடியும். நபியவர்கள் எப்போது பிறந்தார்கள் என்ற கருத்து வேற்றுமையில் இக்கருத்தையும் சில அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

மீலாத் விழா கொண்டாடினால்தான் என்ன? 

மீலாத் விழா கொண்டாடுவது ஒரு நல்ல விடயம்தானே, எமக்கு நேர்வழிகாட்ட வந்த, அல்லாஹ்வின் உதவியால் நரகை விட்டும் பாதுகாக்க வந்த உத்தமரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதால் அப்படி என்னதான் ஆகப் போகின்றது? என்று சிலர் சிந்திக்கலாம். நாம் அவ்வாறு மீலாத் விழா கொண்டாடுவதால் மார்க்க ரீதியாக நாம் என்னென்ன விபரீதங்களை சந்திக்கின்றோம் என்பதைக் கீழே காண்போம். 

1. நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு முறையைப் புதிதாக உருவாக்கி அதன் மூலம் அல்லாஹ்வை வணங்குகின்றோம். நன்மை நாடி செய்யப்படுவதெல்லாம் வணக்கமே, அந்த வணக்கமெல்லாம் நபியவர்கள் காட்டித்தந்த பிரகாரம் அமைய வேண்டும். இல்லாவிடில் அது பித்அத்தாக மாறிவிடும். 

2. மார்க்கத்தில் அல்லாஹ்வால் பூரணப்படுத்தப்படாத ஒரு பகுதியும் இருக்கின்றது, அதனை நாம் பூரணப்படுத்துகின்றோம் என்று கூறுவது போலாகின்றது. இது “இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்களது மார்க்கத்தைப் பூரணப்படுத்தி விட்டேன்” (அல்குர்ஆன் 5 : 3) என்ற அல்குர்ஆன் வசனத்திற்கு முரணாகின்றது. 

3. நபி (ஸல்) அவர்கள் இம்மார்க்கத்தை எத்தி வைப்பதில் மோசடி செய்துள்ளார்கள், மீலாத்விழா, மௌலித் போன்ற நல்ல விடயங்களை எம்மிடமிருந்து மறைத்துள்ளார்கள், நாம்தான் அதனைக் கண்டுபிடித்துள்ளோம் என்று கூறுவது போலாகி விடுகின்றது. 

4. ஸஹாபாக்கள் போலித்தனமாகத்தான் நபி (ஸல்) அவர்களை நேசித்துள்ளார்கள். சிலை வணக்கத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்த அந்த நபியின் பிறந்த தினத்தைக் கொண்டாடாமல் விட்டுவிட்டார்கள் என்று கூறுவது போலாகிவிடுகின்றது. 

5. பிறந்ததினக் கொண்டாட்டம் அடிப்படையில் கிறிஸ்தவர்களின் கலாச்சாரம். அவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களுடைய பிறப்பை கிறிஸ்மஸ் என்று கொண்டாடுவது போல் நாமும் மீலாத் நபி விழா கொண்டாடி அவர்களுக்கு ஒப்பாகின்றோம். 

7. எந்த சிலை வணக்கத்தைத் தகர்க்க நபியவர்கள் இவ்வுலகிற்கு வந்தார்களோ அதே சிலை வணக்கத்தில் மூழ்கியிருக்கும், அவர்களுடைய எதிரிகளான காபிர்களை சிறப்பு அதிதிகளாகவும், கௌரவ அதிதிகளாகவும் வரவழைத்து நபி (ஸல்) அவர்களை அசிங்கப்படுத்தும் நிலையும் இன்று பரவலாக உள்ளது. 

6. மீலாத் விழா என்று நாம் கொண்டாடுவது நபி (ஸல்) அவர்கள் இறந்த தினத்தைத் தானே தவிர, பிறந்த தினத்தையல்ல. உலகவழமையில் கூட ஒருவருடைய பிறந்த தினம் அவர் உயிருடனிருக்கும் போதுதான் கொண்டாடப்படுவது வழமை, மரணித்த பின் அவருடைய நினைவு தினம்தான் அனுஷ்டிக்கப்படுகின்றது. அதுவும் கூட இஸ்லாம் காட்டித்தராத ஒன்று என்பத்தை நினைவில் கொள்ள வேண்டும். 

மீலாதை முன்னிட்டு போட்டிகள் நடாத்தலாமா? 

மீலாத் விழாவை முன்னிட்டு விழாக்கள் நடத்தாமல், கந்தூரி, மௌலித்கள் ஓதாமல் நபி (ஸல்) அவர்களை நினைவு கூறும் விதத்தில் கல்வி, போட்டி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாமே, அதனால் முஸ்லிம் சமூகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்தலாமே என்றும் சிலர் சம காலத்தில் கூறுவதைக் காணலாம். 

நபியவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு செய்யும் எந்த நற்காரியமாக இருந்தாலும் அது மீலாத் கொண்டாடுவதாகவே அமைகின்றது. இதே தேவை நபியுடைய காலத்திலும் இருக்கத்தான் செய்தது. எழுத, வாசிக்கத் தெரியாமலிருந்த பல நபித்தோழர்களுக்கு அதனைப் போதிக்கும் தேவையிருந்தது. குதிரை வீரம், வாள்வீச்சு, அம்பெறிதல் போன்ற இளம் நபித்தோழர்களைப் பயிற்றுவிக்கும் பல அத்தியாவசியக் கலைகள் இருந்தன. இது போன்ற தேவைப்பாடுகளை மக்காவில் நிறைவேற்றுவதற்குத்தான் பல தடைகள் இருந்தாலும் நபியவர்கள் மதீனா வந்து சுதந்திரமாக இயங்கிய காலப்பகுதிகளில் இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்களது பிறந்த தினத்தையோ, வேறொரு தினத்தையோ குறிப்பிட்டு எழுதும், வாசிக்கும் போட்டிகளையோ, குதிரை வீரம், வாள்வீச்சு, அம்பெறிதல் போன்ற பயிற்சிப் போட்டிகளையோ நடத்தியிருக்கலாம். 

எனவே ஒன்றை செய்வதற்குத் தேவைப்பாடு இருந்து, அதனை மேற்கொள்ள எந்தவொரு தடையும் இல்லாத பட்சத்திலும் நபியவர்கள் அதனைச் செய்யாமல் விட்டால் அதனை நாமும் விடுவதுதான் நபிவழி. அதனைச் செய்வது பித்அத்தாகி விடும். மீலாத் விழாவும், அதனையொட்டி வைக்கப்படும் கலை நிகழ்வுகளும், போட்டி நிகழ்ச்சிகளும் இவ்வாறு தான். 

தேவைப்பாடு : பிறந்த தினம் கொண்டாடப்பட மிகச்சிறப்புக்குரிய நபர் நபி (ஸல்) அவர்கள். காரணம் அவர்கள் தான் நரகின் விளிம்பிலிருந்து சுவனத்திற்கு நபித்தோழர்களை மீட்டெடுத்தவர்கள். குதிரை வீரம், வாள்வீச்சு, அம்பெறிதல் போன்றவற்றில் இளம் சமூகத்தைமேம்படுத்தும் தேவை. 

தடைகள் எதுவுமில்லை : மதீனாவில் தனியாட்சி முஸ்லிம்கள் வசம் இருந்தது. பொருளாதார ரீதியில் மீலாத் விழாவுக்காக செலவளிக்கவும் உஸ்மான் (ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) போன்ற பிரபலமான வியாபாரிகள் உள்ளனர். 

எனவே தேவைப்பாடிருந்தும், தடைகள் நீங்கியும் நபியவர்களோ, நபித்தோழர்களோ மீலாத் விழா, அதனை முன்னிட்டு கல்வி, கலை போட்டி நிகழ்ச்சிகள் எதனையும் செய்யாததால் அது மார்க்கத்தில் இல்லாத பித்அத் என்பது உறுதியாகின்றது. 

நபியவர்களை எவ்வாறு நேசிப்பது? 

நபியவர்களுடனான நேசத்தின் வெளிப்பாடு அவர்கள் தடைசெய்த மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மீலாத், கந்தூரி, மௌலித் போன்ற பித்அத்களை செய்வதில் இருக்கக் கூடாது. மாறாக அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவரச் செய்வதே நபியவர்களுடனான உண்மையான நேசத்தின் வெளிப்பாடு. 

அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் : நபி (ஸல்) அவர்களை ஈமான் கொள்ளுதல், அவர்கள் ஏவியவற்றை எடுத்து நடத்தல், தடுத்தவற்றைத் தவிரந்து கொள்ளல், அவர்கள் கூறிய தகவல்களை உண்மைப்படுத்துதல், அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் மாத்திரமே அல்லாஹ்வை வணங்குதல், அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் சொல்லல், அவர்களுடன் சேர்த்து அன்னாரின் குடும்பத்தாரையும் நேசித்து கௌரவப் படுத்துதல், அவர்கள் விடயத்தில் எல்லை மீறாமல் இருத்தல் என்பனவாகும். 

அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக!

கருத்துரையிடுக...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Note: only a member of this blog may post a comment.

[facebook]

தொடர்பு படிவம்

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget